ஒவ்வொரு முறையும் பேட்டிக்காகப் பேசும்போதெல்லாம், ``என் பேரை ஜனனின்னு மட்டும் போடுங்க ப்ளீஸ். அந்த ஐயர் வேண்டாமே" என்று ரெக்வெஸ்ட் வைப்பார் நடிகை ஜனனி. அவருடைய வேண்டுகோளை ஏற்று அவள் விகடன் முகநூலில் `நடிகை ஜனனி’ என்று நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். இந்நிலையில், ஜனனி தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலிருந்த `ஜனனி ஐயர்’ என்ற பெயரை ‘ஜனனி ஹியர்’ என்று மாற்றியதோடு, ``மாற்றம் ஒன்றே மாறாதது; என்றும் ஒற்றுமையுடன் ஜனனி" என்கிற கேப்ஷனுடன் தன்னுடைய புகைப்படத்தை அப்லோடு செய்திருக்கிறார்.
ஜனனியை ஃபாலோ செய்பவர்கள், இதை `மரியாதைக்குரிய மாற்றம்’, `மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கிறீர்கள்’, `சிறப்பு, மிகச்சிறப்பு’, `கிரேட்’, `லவ்லி’, `பார்க்கிறதுக்கு மகிழ்ச்சியா இருக்கு’, `நன்றி, இப்படியே தொடருங்கள்’ என்று கைத்தட்டல் எமோஜிகளையும் ஹார்ட்டின்களையும் பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
``மீடியாவுல இன்டர்வியூ கொடுக்கிறப்போ எல்லாம் என் பேரை ஜனனின்னு மட்டும் போடுங்கனு சொல்வேன். ஆனா, ஒரு சிலரைத் தவிர, யாருமே அதைக் கேட்கல. எனக்கு ஒவ்வொருத்தர்கிட்டேயும் சொல்லிக்கிட்டிருக்கவும் முடியலை. சரி, நம்மோட இன்ஸ்டாவுல ஜனனி ஐயர்னு இருக்கிறதால்தான் எல்லோரும் அப்படியே குறிப்பிடுறாங்க. நாம முதல்ல அதை மாத்துவோம்னு முடிவு செஞ்சேன்.
அப்படி பேரை மாத்தினா, என்னை இன்ஸ்டாவுல ஃபாலோ பண்ற ஒரு மில்லியன் மக்களை இழந்துடுவேன்; செலிபிரிட்டிக்கான ஃப்ளூ டிக் வராதுன்னு தெரியும். எல்லாம் இழந்தாலும் பரவாயில்லை. சரியான விஷயத்தை செஞ்சே ஆகணும்னு, பேரை மாத்தினேன். அப்புறம் என்னோட வெல் விஷர்ஸ், ஃப்ரெண்ட்ஸ் உதவியால மறுபடியும் ப்ளூ டிக் வாங்கிட்டேன்.
நான் எல்லாரும் சமம்னு நினைக்கிற குடும்பத்துல பொறந்த பொண்ணு; கிறிஸ்டியன் கான்வென்ட்ல படிச்ச பொண்ணு. இந்த மாதிரி குடும்பத்தோட சர் நேம் பலரை ஹர்ட் பண்றதை நான் கவனிச்சிருக்கேன். நான் ஒரு நடிகை. எல்லா தரப்பினருக்கும் பொதுவான நபர். 2014-ல `தெகிடி’ படம் வந்தப்போவே என் பேரை ஜனனின்னு போட சொல்லிட்டேன். டைட்டில் கார்ட்ல என் பேருக்கு பின்னாடி குடும்ப பெயர் இருக்காது. அப்பவே இந்த முடிவை எடுத்திட்டேன். இப்போ அஃபிஷியலா மாத்திட்டதால, இனிமே நான் எல்லோருக்கும் ஜனனிதான்’’ என்றவர், இதனால் தனக்குக் கிடைத்த ரெஸ்பான்ஸ் பற்றி பகிர்ந்துகொண்டார்.
``முன்னாடி ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ் இருந்தாங்க. என் நடிப்பைப் பார்த்து, என் கேரக்டர் பார்த்து ஃபாலோ செஞ்ச மக்கள். இந்தப் பெயர் மாற்றதுக்கு அப்புறம் நிறைய பேர் பாராட்டுறாங்க; இப்போ இன்னும் நிறைய பேர் இன்ஸ்டாவில் என்னை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. இதையெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்ல. ஆனா, நடந்திருக்கு. அப்பாவும் அம்மாவும் பெருமையான மாற்றம்னு சொன்னாங்க’’ என்றவர், ``நான் செஞ்சது நாலு பேருக்கு இன்ஸ்பயரிங்கா இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்’’ என்று கண்கள் மலர சிரிக்கிறார்.