Published:Updated:

`` `ஜெயம்' பயம், விஜய் மேனேஜர் சர்ச்சை, சுஷாந்த் தற்கொலை!'' - `ஜெயம்' ரவி #17YearsOfJayam #Exclusive

மோகன் ரவி 'ஜெயம்' ரவியாக மாறிய கதையைக் கேட்க நாயகனிடம் பேசினேன்.

சகோதரர்கள் ஒன்றுசேர்ந்து ஹிட் கொடுப்பது என்பது தமிழ் சினிமாவுக்கு ஆபூர்வம். அப்படி ஒரு அபூர்வ ஹிட் காம்போ தொடங்கி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. ஆமாம் 'ஜெயம்' படத்துக்கு இன்று 17-வது பிறந்தநாள். மோகன் ரவி 'ஜெயம்' ரவியாக மாறிய கதையைக் கேட்க நாயகனிடம் பேசினேன்.

உங்கள் அப்பா தெலுங்கு சினிமாவில் பெரிய தயாரிப்பாளர்; அண்ணனும் முதல் படத்தை தெலுங்கில்தான் இயக்கினார். ஆனால், நீங்கள் மட்டும் முதலில் தமிழில் அறிமுகமாக வேண்டும் என எப்போது முடிவெடுத்தீர்கள்?

Jayam
Jayam

``முதல்ல எல்லோருமே எங்க அப்பாவை தெலுங்கர்னுதான் நினைப்பாங்க. ஆனால், எங்க அப்பா மதுரையில பிறந்த தமிழர். அவர் முதலில் தமிழிலில்தான் படம் தயாரிச்சார். அதுக்கப்புறம்தான் தெலுங்குல படம் தயாரிக்கப்போனார். அங்க நல்ல வரவேற்பு கிடைச்சதுனால தொடர்ந்து படங்கள் பண்ணிட்டு இருந்தார். இருந்தாலும் எங்களுக்கு தமிழ்ல படம் பண்ணணும்னுதான் ஆசை. அப்பாவும் என்னோட முதல் படத்தை தமிழ்ல பண்ணணும்னுதான் முடிவெடுத்திருந்தார். இருந்தாலும் என்கிட்ட `நீ தமிழில் நடிக்கிறீயா, இல்ல தெலுங்குல நடிக்கிறீயா’னு கேட்டார். `தமிழ்’னு சொன்னதும், தெலுங்கு சினிமாவில் அவர் சம்பாரிச்ச பெயரை எல்லாம் விட்டுட்டு, எங்களுக்காக மறுபடியும் தமிழில் படம் தயாரிக்க வந்தார்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

’ஜெயம்’ படம்தான் உங்களோட முதல் படத்துக்கு சரியா இருக்கும்னு எப்படி முடிவு பண்ணீங்க?

Jayam Ravi and mohan raja
Jayam Ravi and mohan raja

`` `ஜெயம்’ படத்தோட கதையே ஒரு சாதாரண இளைஞன், ஹீரோவா உருவாகி வர மாதிரிதான் இருக்கும். ஆரம்பத்தில் டீன் ஏஜ் பையனா இருப்பான். படம் போக, போக அவனுக்குள்ள மாற்றங்கள் வந்து, க்ளைமாக்ஸில் சண்டைபோட்டு ஒரு ஹீரோவா வளர்ந்து நிப்பான். அதுதான் எங்களுக்கும் தேவைப்பட்டுச்சு. முதல் படத்திலேயே பத்து பேரை அடிக்கிற மாதிரி ஓப்பனிங் சண்டைலாம் வெச்சு படம் பண்ணியிருந்தால், மக்கள் ஏத்துக்க மாட்டாங்க. `ஜெயம்’ ஒரு புது ஹீரோவுக்கு ஏற்ற கதையா இருந்ததால்தான், அந்தப் படத்தை ரீமேக் பண்ணலாம்னு முடிவு பண்ணோம். என்னோட ரெண்டாவது படமான `எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தைப் பார்த்தீங்கன்னா, முதல் சீனில் இருந்தே ஹீரோவா இருந்திருப்பேன். ரெண்டாவது படமா இருந்ததுனால அதை மக்கள் ஏத்துக்கிட்டாங்க. எங்க அப்பா இப்பவும், ‘எம்.குமரன் படத்தை முதல் படமா பண்ணியிருந்தால் மக்கள் ஏத்துக்காம போயிருப்பாங்க’னு சொல்வார்.’’

சினிமாவுக்குள் ஒரு ஹீரோவாக நுழைவதற்கு உங்களை நீங்கள் எப்படி தயார்படுத்திக்கிட்டீங்க?

Jayam
Jayam

``மும்பையில் ஆக்டிங் க்ளாஸ் போனேன். சின்ன வயசுல இருந்தே பரத நாட்டியமும் கராத்தேவும் கத்துக்கிட்டேன். பாண்டியன் மாஸ்டர்கிட்டயும் கனல் கண்ணன் மாஸ்டர்கிட்டயும் ஸ்டன்ட் கத்துக்கிட்டேன். தயாரிப்பாளரோட பையன்னு நான் எந்த விஷயத்திலேயும் அட்வான்டேஜ் எடுத்துக்கலை. ஏன்னா, நான் ஒரு படத்தில் மட்டும் நடிக்கலாம்னு வந்தவன் கிடையாது. சினிமாவை என் கரியர் ஆக்கணும்னு நினைச்சு வந்தவன். அதனால, என்னை முழுக்க முழுக்க தயார் பண்ணிட்டுத்தான் சினிமாவுக்குள்ள வந்தேன்.’’

தெலுங்கு வெர்ஷனின் பாடல்களை அப்படியே தமிழ்ப்படுத்தலாம்னு எப்படி ஐடியா வந்தது?

Jayam
Jayam

’’ஒரு படத்தோட ரீமேக் உரிமத்தை வாங்கியிருக்கும்போது அதில் இருக்கிற நல்ல விஷயங்கள் எல்லாத்தையும் யூஸ் பண்ணிக்கணும்னு நினைச்சோம். தெலுங்கு படத்துல பாடல்கள், பின்னணி இசை எல்லாமே நல்ல ஹிட். அந்தப் பாடல்கள் எல்லாத்தையும் இங்கேயும் ஹிட் பண்ணலாம்னு நம்பிக்கை இருந்துச்சு. அதனாலதான் இசையமைப்பாளர் பட்நாயக்கோட வொர்க்ஸை இந்தப் படத்துக்கும் யூஸ் பண்ணிக்கிட்டோம். அறிவுமதி, பழனிபாரதி மாதிரியான பாடலாசிரியர்களோட வரிகள்தான் பாடல்கள் ஹிட் ஆகக் காரணம். நம்ம தமிழ் ஆடியன்ஸுக்கு கனெக்ட் ஆகுற மாதிரியான வரிகளை எழுதினாங்க. நாங்க எந்தப் படத்தை ரீமேக் பண்ணாலும், தமிழுக்கு எதெல்லாம் செட்டாகுமோ அதையெல்லாம் வெச்சுப்போம். தமிழுக்கு கனெக்ட் ஆகாததை மாற்றிடுவோம். அப்படித்தான் ’ஜெயம்’ படத்துல ஹீரோ ஆஞ்சுநேயர் பக்தரா இருந்ததை, தமிழில் முருக பக்தரா மாற்றினோம். ’எம்.குமரன்’ படத்தோட பாக்ஸிங் போர்ஷனை மலேசியாவுக்கு மாற்றினோம். அதே மாதிரி ஒரிஜினல் வெர்ஷனில் லாஜிக் தவறுகள் இருந்தா அதை திருத்திட்டுத்தான் திரைக்கதையும் எழுதுவோம்.’’

ஜெயம்’ படம் பார்த்துட்டு, ‘அதிகமா செலவு பண்ணியிருக்கீங்களே’னு ரஜினிகாந்த் சொன்னதாக உங்கள் அப்பா விகடன் பேட்டியில சொல்லியிருக்கிறார். அப்பா உங்களை நம்பி அதிக செலவுகள் பண்ணும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

Jayam
Jayam

’’ரொம்பவே பயந்தேன். எங்களுக்கு இந்த ஸ்கிரிப்ட் மேல பெரிய நம்பிக்கை இருந்ததுனால, எனக்கு இருந்த பயத்தை என் ரூமோடு வெச்சிக்கிட்டு பயம் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட் போவேன். ஏன்னா, எங்க அப்பா தயாரிப்பாளரா அவர் வேலையை சரியா பார்த்திடுவார். அண்ணணும் இயக்குநரா அவரோட வேலையை சரியா செஞ்சிடுவார். மற்ற நடிகர்களும் அவங்களோட வேலையை சரியா பார்த்திடுவாங்க. எனக்கு கொடுக்கப்பட்ட வேலை, என்னோட கேரக்டரை நல்லா பண்றது மட்டும்தான். அதனால, எல்லாத்தையும் ஒதுக்கி வெச்சுட்டு தைரியமா நடிக்கப் போனேன்.’’

அப்பா- அண்ணா இருக்காங்க; அவங்க சொல்றதை மட்டும் செய்வோம்னு இல்லாமல் நீங்கள் இந்தப் படத்துக்காக ஏதும் ஐடியாக்கள் கொடுத்தீங்களா?

Editor Mohan, Mohan Raja, Jayam Ravi
Editor Mohan, Mohan Raja, Jayam Ravi

’’நாங்க மூணு பேரும் சேர்ந்து பண்ற எல்லாப் படங்களிலும் என்னோட ஐடியாக்களும் இருக்கும். இந்தக் கேள்வியைக் கேட்டதும் எனக்கு டக்குனு ஞாபகத்துக்கு வருவது, ’சந்தோஷ் சுப்ரமணியம்’ க்ளைமேக்ஸ்தான். அந்த 4 நிமிஷ க்ளைமாக்ஸை நான் ஒரே டேக்ல நடிச்சு முடிச்சிட்டேன். அதை எடிட்டிங் டேபிள்ல பார்த்த எங்க அப்பா, ’இந்த ஷாட்டை அப்படியே வெச்சிடலாம். எங்கேயும் கட் பண்ண வேணாம்’னு சொன்னார். அப்போ நான் எங்க அப்பாகிட்ட, ‘இந்த சீனை இந்தப் படத்தில் நடிச்ச ஹீரோவோட அப்பாவா நீங்க பார்க்குறீங்க. ஒரு எடிட்டரா நீங்க பார்க்கலை. ஏன்னா, நீங்கதான் எந்த ஒரு ஆக்‌ஷனுக்கும் ரியாக்‌ஷன் வேணும்னு எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கீங்க. நான் பேசுற இந்த 4 நிமிஷ டயலாக்கோட ரியாக்‌ஷன் பிரகாஷ் ராஜ் சார் கொடுத்திருக்கார். அதனால, இடையில கட் பண்ணி, கட் பண்ணி அவரையும் காட்டணும்’னு சொன்னதும் எங்க அப்பா கோச்சிக்கிட்டார். ’எனக்கே எடிட்டிங் சொல்லிக் கொடுக்குறியா’னு என்னை ஸ்டுடியோ ரூமை விட்டு வெளியே போகச் சொல்லிட்டார். நான் வெளியிலேயே ஒரு மணி நேரம் நின்னேன். திரும்பவும் என்னை உள்ளே கூப்பிட்டு நான் சொன்ன மாதிரி அந்த சீனை எடிட் பண்ணிட்டு, ‘இப்போ பாரு’னு போட்டுக் காட்டினார். நான் சொல்ற நல்ல ஐடியாக்களையும் அவங்க எடுத்துப்பாங்கன்றதுக்கு இது ஒரு உதாரணம்.’’

சமீபத்தில் 'நடிகர் விஜய்யின் மேனேஜரும், 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளருமான ஜெகதிஷ் உங்களுக்கும் மேனேஜரா ஆகிட்டார். அது விஜய்க்கு பிடிக்கலை' எனச் செய்திகள் வந்ததே... கவனிச்சீங்களா?

’’ஜெகதிஷ் எனக்கு ரொம்ப நல்ல நண்பர். என்னோட நலம்விரும்பியா எனக்கு பல முறை உதவியிருக்கார். அவ்வளவுதான். இதுல சர்ச்சையாகுற அளவுக்கெல்லாம் ஒண்ணுமில்லை.''

``சிம்ரன், த்ருவ் பிடிக்கும்... கமர்ஷியல்ல எதெல்லாம் முக்கியம்?'' - ஷங்கர்

நடிகர் சுஷாந்தின் தற்கொலை நடிகர்கள், சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர்களின் மன அழுத்தம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

’’இது எடுக்கக்கூடாத ஒரு முடிவு. நல்ல நடிகராவும் நல்ல மனிதராவும் சமூகத்தில் உயர்ந்து வந்துக்கிட்டு இருந்த சமயத்தில் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்தது ரொம்பவே கஷ்டமா இருக்கு. ஆனால், ஒருத்தர் மனசுல என்ன இருக்குனு இன்னொருத்தருக்கு தெரியாதே. அவர் நல்லா இருக்கார்னு நாம நினைச்சிக்கிட்டு இருப்போம். ஆனால், அவர் மனசுல வேற ஒண்ணு இருக்கும். முடிவுகள் அந்தந்த தனி மனிதர்களைப் பொறுத்ததுதான். ஆனால், வருங்காலத்தில் இப்படிப்பட்ட முடிவுகளை யாரும் எடுக்கக்கூடாதுங்கிறதுதான் என் வேண்டுதல். அது சக நடிகரோ, சக மனிதரோ யாரா இருந்தாலும் இதைப் பண்ணக்கூடாது. ஒரு பாசிட்டிவ் மனப்பான்மை எல்லோருக்கும் இருக்கணும். என்னை இப்போவரைக்கும் வழிநடத்திக்கிட்டு இருக்கிறது, என்னோட பாசிட்டிவ் மனப்பான்மைதான். எனக்கு நிறைய தோல்விகள் இருந்துச்சு; நானும் பல கஷ்டங்களை சந்திச்சிருக்கேன். யாருக்குமே கஷ்டமில்லாத வாழ்க்கை அமையாது. அதை எப்படி கையாளுறோம்றதுதான் முக்கியம். மன அழுத்தம் அதிகமாயிருக்குன்னா அதிலிருந்து நம்மளை வெளிய கொண்டுவரதுக்கு நிறைய ஸ்பெஷலிஸ்ட்கள் இருக்காங்க. அவங்களோட சப்போர்ட்டை எடுத்துக்கோங்கனு தாழ்மையா கேட்டுக்கிறேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு