Published:Updated:

"பாசிட்டிவ் எனர்ஜி, பூஜையறை வாசனை, எனக்காகக் காத்திருந்த முகம்!" - கிரேஸி மோகன் குறித்து ஜெயராம்

நடிகர் ஜெயராம்
நடிகர் ஜெயராம்

கிரேஸி மோகனின் படங்களில் ஒன்றாக சேர்ந்து வேலைப் பார்த்த நடிகர் ஜெயராம் அவரின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டார் .

தமிழ் சினிமா காமெடியில் முக்கியமான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டவர், கிரேஸி மோகன். எண்ணற்ற மேடை நாடகங்களை அரங்கேற்றியுள்ள இவர், தமிழில் வெண்பாக்களையும் இயற்றியுள்ளார். இவரது நாடகங்கள் பல தமிழ் ரசிகர்கள் பலராலும் பாராட்டப் பெற்றது. சினிமாவில் 'அவ்வை சண்முகி', 'அருணாச்சலம்', 'தெனாலி', 'பஞ்சதந்திரம்' உள்ளிட்ட பல படங்களுக்குக் கதையாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியிருக்கிறார். மாரடைப்பால் காலமான கிரேஸி மோகனின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும், இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். கிரேஸி மோகனுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார், நடிகர் ஜெயராம்.

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்

"நடிகர் கமல் ஹாசன் மூலமாகத்தான் எனக்கு கிரேஸி மோகனைத் தெரியும். நல்ல மனிதர். 'தெனாலி' படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் அவரை முதலில் ஏவி.எம் ஸ்டுடியோவில் பார்த்தேன். சினிமாவில் இத்தனை வருடங்களாக இருக்கிறேன். பாசிட்டிவ் எனர்ஜி கொண்ட நபர்களைப் பார்ப்பது அரிது. எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜியுடனே இருக்கக்கூடிய நபர், கிரேஸி மோகன். 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங்கின்போது எப்போதும் எங்ககூடவே இருந்தார். அவர் பேசுறதைக் கேட்கும்போது, இதுல என்ன ஹியூமர் இருக்குனு முதலில் தோணும். ஆனா, அதுக்குப் பிறகுதான் அதுல இருக்கிற காமெடி புரியும். முக்கியமா, கமலும் மோகனுக்கு சமமா பேசுவார். ரெண்டுபேரும் பேசிக்கிறதைக் கேட்கும்போது, பக்கத்தில் இருக்கிற நமக்கு சிரிப்பு தாங்காது. 'என்ன ஜெயராம்.. ஷாட் எடுக்கணும், நீங்க இப்படிச் சிரிச்சுக்கிட்டே இருந்தா எப்படி' கே.எஸ்.ரவிக்குமார் சார் சொல்வார். அந்தளவுக்கு அந்த ஷூட்டிங் ஸ்பாட் எப்போவும் ஜாலியா இருக்கும்.

வெத்தலை - பாக்கு போடுறவங்க பக்கத்துல போனாலே நமக்குப் புகையிலை வாசனை வரும். ஆனா, கிரேஸி மோகன் பல வருடங்களாக வெத்தலை - பாக்கு போடுபவர். அவர் பக்கத்துல போனா, தெய்வீகமான ஒரு வாசனைதான் வரும். ஏதோ பூஜை அறைக்குள் போன மாதிரி ஒரு ஃபீல் ஆகும். அவர்கிட்ட, 'எப்படி, நீங்க போடுற வெத்தலை - பாக்கு மட்டும் இவ்வளவு வாசனையோடு இருக்கு?'னு கேட்டிருக்கேன். கும்பகோணத்திலிருந்து ஒரு இடத்தில் பாக்கு வரவழைத்து, அதை வீட்டில் வறுத்து கற்பூரமெல்லாம் சேர்த்து இவருக்கென தயார் பண்ணுவாராம். 'உங்களுக்கும் ஒரு பாட்டில் தர்றேன் ஜெயராம்'னு சொல்வார். ஆனா, கடைசி வரைக்கும் தராமலே போயிட்டார்.

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்

அவர் என்னைவிட வயதில் மூத்தவர். அதனால், 'மோகன் அண்ணா'னுதான் கூப்பிடுவேன். 'டேய்.. டோன்ட் கால் மீ மோகன் அண்ணா, கால் மீ மோகன்'னு சொல்வார். அவருடைய மேடை நாடகங்களை நான் தவிர்க்காம பார்ப்பேன். அவரும் ஒவ்வொரு மேடை நாடகத்துக்கும் என்னை அழைப்பார். அவர் இறந்த செய்தியைக் கேட்டு, மனசு பாரமாகிடுச்சு. கமல் நேற்று அழைத்துப் பேசினார். கிரேஸி மோகனின் மறைவு, கமலுக்குப் பேரிழப்பாக இருக்கும். அவருடைய இறுதிச் சடங்கில் கலந்துகொண்டேன். அவருடைய முகத்தைப் பார்த்த இரண்டாவது நிமிடம் அவர் முகத்தை மூடி, அடக்கம் செய்வதற்காக எடுத்துட்டுப் போயிட்டாங்க. எனக்காகவே அவர் காத்திருந்ததுபோல இருந்தது. அவருடன் நான் பழகிய நாள்கள் குறைவாக இருக்கலாம். ஆனா, நிறைவான நாள்கள் அவை!" என்கிறார், ஜெயராம்.

அடுத்த கட்டுரைக்கு