Published:Updated:

“வாயாலேயே நடிக்கிறேன்னு சிம்பு கலாய்ப்பார்!”

காளி வெங்கட்
பிரீமியம் ஸ்டோரி
காளி வெங்கட்

நாலு நாள் பகலெல்லாம் வேற படத்தோட ஷூட்டிங். நைட்டெல்லாம் ‘கார்கி' கோர்ட் சீன். தொடர்ந்து நாலு நாள்கள் தூங்காமல் நடிச்சதுல, டயலாக் பேசும்போது மனசுல நிற்கல. ரொம்ப சிரமப்பட்டேன்.

“வாயாலேயே நடிக்கிறேன்னு சிம்பு கலாய்ப்பார்!”

நாலு நாள் பகலெல்லாம் வேற படத்தோட ஷூட்டிங். நைட்டெல்லாம் ‘கார்கி' கோர்ட் சீன். தொடர்ந்து நாலு நாள்கள் தூங்காமல் நடிச்சதுல, டயலாக் பேசும்போது மனசுல நிற்கல. ரொம்ப சிரமப்பட்டேன்.

Published:Updated:
காளி வெங்கட்
பிரீமியம் ஸ்டோரி
காளி வெங்கட்

இயல்பாக நடிப்பவர்களில் காளி வெங்கட்டுக்குத் தனி இடமுண்டு. சமீபத்தில் வெளிவந்த ‘கார்கி', அவரது நடிப்புப் பயணத்தில் முக்கியமான படம். அதில் சாய்பல்லவியின் வழக்கறிஞர் இந்திரன்ஸ் கலியபெருமாளாக மிரட்டியிருந்தார். அடுத்து, வசந்தபாலனின் ‘அநீதி'யில் அசத்த ரெடியாகிவிட்டார்.

``எப்படி இருந்தது ‘கார்கி' அனுபவம்..?’’

‘‘கலையரசன்தான் எனக்கு போன் செய்து ‘கார்கி'ன்னு ஒரு படம் இருக்கு, ‘ரிச்சி' இயக்குநர் கௌதம் உனக்கு போன் பண்ணுவார்னு சொன்னார். அதே மாதிரி போன் செய்தார். ஒரு காபி ஷாப்ல சந்திச்சு எனக்குக் கதை சொன்னார். முதல் பாதியைக் கேட்டதும் பதறிட்டேன். க்ளைமாக்ஸைக் கேட்டு நடுங்கிட்டேன். கதை கேட்டும் ரெண்டு மூணு நாள் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு. கண்டிப்பா இந்தப் படத்தை மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு தோணிக்கிட்டே இருந்துச்சு. என் கேரக்டர் ஸ்கெட்ச்சை அவர் நல்லா எழுதியிருந்தார். பொதுவா சினிமாவுக்கென ஒரு பேட்டர்ன் இருக்கு. ஆனா, ‘கார்கி’ அதுக்குள்ளேயே இல்ல. அடிப்படையில் அவர் ஒரு அட்வகேட் என்பதால, பாயின்ட்ஸை தெளிவா எழுதியிருந்தார். குற்றம் சாட்டப்பட்ட ஒருத்தரின் வீட்டுக்குள் இருந்து பார்க்கற பார்வையா இருந்துச்சு. கோர்ட் சீன் மட்டும்தான் என்பதால, கோர்ட் மட்டும்தான் செட் போட்டிருந்தாங்க. கோர்ட்டைச் சுத்தியும் கதவு, ஜன்னல்களை அடைச்சிருந்ததால, காத்து வராமல் ஒரே புழுக்கம். லைவ் சவுண்ட். ஏசி போட்டால், அந்த சவுண்ட் பதிவாகிடும்னு ஏசியும் போடல. செட்டுல எல்லாருக்கும் வெந்து ஊத்துது. படத்துல நீங்க அந்த சீன்ல பார்க்குறது உண்மையான வியர்வை. ஸ்பிரே அடிச்சிட்டு நடிக்கல. எல்லோரோட மனப்புழுக்கமும் கலந்து அந்த சீன் உண்மையாகவே அமைஞ்சது.

நாலு நாள் பகலெல்லாம் வேற படத்தோட ஷூட்டிங். நைட்டெல்லாம் ‘கார்கி' கோர்ட் சீன். தொடர்ந்து நாலு நாள்கள் தூங்காமல் நடிச்சதுல, டயலாக் பேசும்போது மனசுல நிற்கல. ரொம்ப சிரமப்பட்டேன். ஆனாலும் என் சீன்களில் நீளம் கருதி ஆறேழு சீன்கள் இல்லாமப்போயிடுச்சு. இந்தப் படத்தை சூர்யா வெளியிட்ட பிறகு படத்துக்கு வேறொரு உயரம் கிடைச்சது. எல்லாருமே ஒரு படத்தை அள்ளி அரவணைச்சுக் கொண்டாடுறது எப்பவாவதுதான் அமையும். ‘கார்கி’க்கு அப்படி அமைஞ்சிருக்கு.''

“வாயாலேயே நடிக்கிறேன்னு சிம்பு கலாய்ப்பார்!”

``என்ன சொல்றாங்க சாய்பல்லவி..?’’

‘‘கூட நடிக்கறவங்க நல்லா நடிக்கறப்பதான், ஒரு சீன்ல நம்மளோட நடிப்பு முழுமையா வெளிப்படும்னு நம்புவேன். சாய்பல்லவியோட நடிச்சது மிரட்டலான அனுபவம். அவ்ளோ நுணுக்கமா நடிக்கறாங்க. எனக்கு வசனம் நிறைய இருக்கும். அவங்களுக்கு டயலாக் இல்லாமல் ஒரு ரியாக்‌ஷன் ஷாட்தான் இருக்கும். ஆனா, அந்த ரியாக்‌ஷன்தான் நம்ம மனசுல நிற்கும். அப்பா இப்படி ஒரு சூழல்ல இருக்காரேன்னு கவலையும் பரிதவிப்புமா அவங்க நடந்து வர்ற சீனைப் பார்த்து மிரண்டுட்டேன். அத்தனை உணர்வையும் ஒரு சின்ன நடையில வெளிப்படுத்தியிருந்தாங்க.''

`` ‘கடல்'ல நடிக்கும்போதே சுதா கொங்கரா உங்களுக்கு அறிமுகமானாங்களா?’’

‘‘இல்ல. ‘கடல்' படத்துல நான் மூணு சீன்ல மட்டுமே வருவேன். எந்தக் காட்சியில வருவேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். ஆனா, டைட்டில்ல என் பெயரும் வரும். முனீஷ்காந்தும் அதுல வருவார். மணி சாரோட ‘கடல்' ஸ்பாட்ல அவ்ளோ டிசிப்ளின் இருக்கும். வருகைப் பதிவேடு வச்சிருப்பாங்க. டெக்னீஷியனா இருந்தாலும் நடிகரா இருந்தாலும் எல்லாரும் அதுல கையெழுத்து போடணும். அந்த டிசிப்ளின் சுதா மேம் ஸ்பாட்லேயும் இருக்கும். ‘இறுதிச்சுற்று' ஆடிஷன் அப்போதான் அவங்கள முதன்முதலா பார்த்தேன்.''

``உங்களுக்கு ரொம்ப பெக்யூலியரான குரலாச்சே?’’

‘‘சமீபத்துல ‘கார்கி' படப்பிடிப்பில் லைவ் சவுண்ட் எடுத்த ராகவ் என்னைக் கூப்பிட்டு ஒரு மைக்கைக் காட்டி ஒரு விஷயம் சொன்னார். ‘ரொம்ப நுணுக்கமான சவுண்டா இருந்தாக்கூட இந்த மைக் கேட்ச் பிடிச்சிடும். இதுல காக்காவோட வாய்ஸை மட்டும் கண்ட்ரோலே பண்ணமுடியாது. எங்கிருந்தாலும் அது ரிசீவ் ஆகிடும். அதுக்கடுத்து உங்க வாய்ஸ்தாண்ணே'ன்னு சொன்னார். அப்படி ஒரு வாய்ஸ்னு சந்தோஷப்பட்டுக்கலாம். என் கரியர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகத்தான் தொடங்குச்சு. ஷார்ட் பிலிம்ஸிலிருந்துதான் டப்பிங் பேச ஆரம்பிச்சேன். ‘அயலான்' ரவிகுமாரோட ‘போஸ்டர்' ஷார்ட் பிலிம்லதான் சென்னை ஸ்லாங் பேசினேன். அப்புறம் ‘முண்டாசுபட்டி' ராம்குமாரோட குறும்படங்கள்லயும் பேசினேன். நடிக்க ஆசைப்பட்டு வந்த நான், டப்பிங் பேச ஆரம்பிச்சேன். அப்புறம்தான் நடிக்கற வாய்ப்பு அமைஞ்சது. விஜய்சேதுபதி சாரே நிறைய இடங்களுக்குச் சொல்லிவிட்டிருக்கார். இப்பவும் டப்பிங் யூனியன்ல உறுப்பினரா இருக்கேன். என்னோட வாய்ஸ் மாடுலேஷன் சிம்பு சாருக்கு ரொம்பப் பிடிக்கும். ‘ஈஸ்வரன்'ல அவரோட நடிக்கும்போது, ‘இவர் வாயாலேயே நடிக்குறாருங்க'ன்னு ஜாலியா கலாய்ப்பார்.''

“வாயாலேயே நடிக்கிறேன்னு சிம்பு கலாய்ப்பார்!”

``நீங்க ரொம்பவும் தேர்ந்தெடுத்து நடிக்கிறீங்களா? இல்ல, வாய்ப்பு வர்றதே அப்படித்தான் இருக்குதா?’’

‘‘ரெண்டாவது சொன்னதுதான் நடக்குது. கூப்பிட்டுக் கொடுக்கற வாய்ப்பை கிஃப்ட்டா நினைக்கறேன். நான் கேரக்டர்களை செலக்ட் பண்ற இடத்துல இல்ல. வர்ற எல்லாப் படங்கள்லேயும் நடிச்சாதான் சர்வைவ் ஆக முடியும். இதுல சந்தோஷமான விஷயம், எனக்குக் கிடைக்கற படங்கள் நல்ல படங்களா இருக்கு. ‘கார்கி' விகடன் விமர்சனத்துலகூட இது என் பயணத்தில் முக்கியமான படம்னு பாராட்டினது சந்தோஷமா இருக்கு. இப்ப வசந்தபாலன் சாரோட ‘அநீதி'யில சவாலான ரோல்ல நடிச்சிருக்கேன். பேசப்படும். இனி வர்ற படங்கள்லகூட எக்ஸ்பரிமென்ட்டான கேரக்டர்கள்ல எதிர்பார்க்கலாம்.''