Published:Updated:

`இந்தியன் 2 விபத்தில் எனக்கு தெரிந்ததை எடுத்துக் கூறினேன்!' - நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்

`` `இந்தியன் - 2' படப்பிடிப்பில் நடந்த விபத்தில் எனக்குத் தெரிந்ததை போலீஸாரிடம் கூறினேன்'' என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

`இந்தியன் 2' படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட செம்பரம்பாக்கம் ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்தது. 19.2.2020-ம் தேதி இரவு 9 மணியளவில் நடந்த படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா (34), தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் (27), ஆர்ட் உதவியாளர் சந்திரன் (58) ஆகிய 3 பேர் இறந்தனர். மேலும், 10 பேர் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிந்து விசாரித்துவருகிறார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் உயிர்தப்பினர்.

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்
இந்தியன் - 2 விபத்தில் 3 பேர் உயிரிழந்தது எப்படி?!- போலீஸாரிடம் விவரித்த இணை இயக்குநர்

இந்த விபத்து குறித்து நசரத் பேட்டை போலீஸார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. நசரத்பேட்டை போலீஸார் நடத்திய விசாரணை அறிக்கையும் மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து நடந்தவர்களிடம் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்தனர். நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் சிலருக்கு சம்மன் அனுப்பி வைத்தனர். இயக்குநர் ஷங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையை நடத்தினர்.

இதையடுத்து, நடிகர் கமல்ஹாசனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பிறகு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ``கமிஷனர் அலுவலகத்தில் நடந்த சம்பவங்களின் விவரங்களை அறிய வேண்டும் என்று விரும்பினார்கள். இந்த விபத்தில் கிட்டத்தட்ட சிக்குண்டவர்களில் பலரில் அடிபடாமல் தப்பித்தவர்களின் நானும் ஒருவன்.

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்

இழந்த 3 சகோதர்களுக்கு நான் செய்யும் கடமையாக எண்ணி, காவல்துறையிடம் நடந்த சம்பவத்தை எனக்குத் தெரிந்த அளவில் எடுத்துச் சொல்வதற்கும், எங்கள் துறையில் இனி இதுபோன்ற விபத்துகள் நேராமல் இருப்பதற்கு நாங்கள் எடுக்கும் முயற்சிகளின் முதற்கட்ட முயற்சியாகவே இந்தக் கலந்துரையாடலைக் கருதுகிறேன். நேற்று, சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் என்னுடைய அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் இதுபற்றி பேசினோம். அதன் தொடர்ச்சியாக காவல்துறைக்கு அங்கு நடந்த சம்பவங்களைக் கூறினேன். இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கு காவல்துறை பரிந்துரைக்கும் கருத்துகளை நாங்கள் கேட்போம். கூடிய விரைவில் எங்கள் துறையைச் சேர்ந்தவர்கள் சந்திக்கவுள்ளோம். அந்தச் சந்திப்பில் விவரங்களைத் தெரிவிக்கிறேன்" என்றார்.

நடிகர் கமல்ஹாசனிடம் துணை கமிஷனர் நாகஜோதி, ஒரு மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினார். விசாரணையின்போது நடிகர் கமல்ஹாசன் கூறிய தகவல்கள் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு