Published:Updated:

``ஒரு இறப்பு அவ்ளோ கொண்டாட்டமா இருக்கும்னு அப்பதான் தெரியும்!" - முதல் பட அனுபவம் பகிரும் கதிர்

நடிகர் கதிர்

`எழவு வீட்டு சீனை மட்டும் 17 நாள் எடுத்தாங்க. ஒரு இறப்பை இவ்ளோ கொண்டாடுவாங்கன்னு எனக்கு அப்பதான் தெரியும்.’

``ஒரு இறப்பு அவ்ளோ கொண்டாட்டமா இருக்கும்னு அப்பதான் தெரியும்!" - முதல் பட அனுபவம் பகிரும் கதிர்

`எழவு வீட்டு சீனை மட்டும் 17 நாள் எடுத்தாங்க. ஒரு இறப்பை இவ்ளோ கொண்டாடுவாங்கன்னு எனக்கு அப்பதான் தெரியும்.’

Published:Updated:
நடிகர் கதிர்

`மதயானைக்கூட்டம்' மூலம் அறிமுகமான கதிர், இன்று தமிழ் சினிமாவில் வெரைட்டிகள் காட்டும் முக்கியமான நடிகர். `பரியேறும் பெருமாள் ' படத்தில் ஹீரோவாகவும் நடிப்பார், அதே சமயம் `பிகில்' படத்தின் கேரக்டர் ரோலிலும் நடிப்பார். கதிரிடம் அவரின் முதல் பட அனுபவம் குறித்துப் பேசினோம்.

``எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமே இல்லை. அதுல பெருசா ஆர்வமும் இருந்ததில்லை. ஆனா, என் அப்பாவுக்கு சினிமா மேலயும், படங்கள் தயாரிக்கிறதுலயும் ஆசை உண்டு. நான் சினிமாவுக்குள்ள வந்தது எதிர்பாராதது. என் சொந்தக்காரர் ஜெகதீஷ், அப்போ ஜி.வி.பிரகாஷ்கூட வொர்க் பண்ணிட்டு இருந்தார். இப்ப அவர் விஜய்-யின் மேனேஜரா இருக்கார். அவர்தான் நான் காலேஜ் ஃபைனல் இயர் படிச்சுட்டு இருக்கும்போது, `வெற்றிமாறன் சார் அசிஸ்டென்ட் ஒரு படம் பண்றார், புதுமுகங்கள்தான் கேட்குறாங்க. நீ வேணா ஆடிஷன் போயிட்டு வா'னு சொன்னார். அவர் சொன்னதாலதான் நான் அந்த ஆடிஷனுக்குப் போனேன். அவங்க சொல்றதையெல்லாம் அப்படியே திருப்பி சொல்லச் சொன்னாங்க, எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக்கச் சொன்னாங்க, அவ்ளோதான். தென் மாவட்டத்து பையன் லுக் இருக்கணும்னு நினைச்சாங்க. ஆடிஷன் முடிஞ்சு நான் செலெக்ட் ஆனதும் பெரிய வொர்க் ஷாப் நடந்தது. எனக்கு சினிமா பத்தி எதுவும் தெரியாது. அந்த வொர்க் ஷாப்ல டைரக்‌ஷன் டீம்ல என்ன சொல்றாங்களோ அதைச் செய்வேன். ஷூட்டிங் போறதுக்கு 5 மாசமாச்சு.

'மதயானைக்கூட்டம்'
'மதயானைக்கூட்டம்'

`கோணக்கொண்டக்காரி' பாட்டுல நான் படில இருந்து பார்க்குற ஷாட்தான் என்னுடைய முதல் ஷாட். ஆனா, நான் டயலாக் பேசின முதல் ஷாட் ஓகே ஆகுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. தங்கச்சியை காலேஜ்ல விட்டுட்டு ஒரு டயலாக், அப்புறம் நடந்து வந்து திரும்பி பைக்ல ஏறின பிறகு ஒரு டயலாக் சொல்லிட்டுப் போகணும். திரும்புறதுக்குள்ள டயலாக் மறந்துடும். அப்படி இப்படினு 27 டேக் போயிடுச்சு. அந்த ஷாட்டை என்னால மறக்கவே முடியாது. விஜி சந்திரசேகர் மேடம்கிட்டதான் அப்பப்போ நிறைய கேட்டு தெரிஞ்சுக்குவேன். அவங்கதான் எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தாங்க.

எழவு வீட்டு சீனை மட்டும் 17 நாள் எடுத்தாங்க. ஒரு இறப்பை இவ்ளோ கொண்டாடுவாங்கன்னு எனக்கு அப்பதான் தெரியும். அந்த செட்டப்ல எடுத்த எல்லா ஷாட்டையும் நான் நல்லா கவனிச்சிட்டே இருந்தேன். 'மதயானைக்கூட்டம்' படத்துக்குள்ள நான் வந்ததுல இருந்து படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் ஒவ்வொரு நாளும் அவ்ளோ கத்துக்கிட்டேன். இன்னும் கத்துக்கிட்டே இருக்கேன். நான் `பரியேறும் பெருமாள்' பண்ணும்போது, அந்த ஊர்ல இருந்த எழவு வீட்டுல `மதயானைக்கூட்டம்' பாட்டுதான் பாடிட்டு இருந்தது. அதே மாதிரி கொண்டாட்டத்துக்கான பாடலா 'கோணக்கொண்டக்காரி' இருக்கு.

மதயானைக்கூட்டம்
மதயானைக்கூட்டம்

கலையரசன் அண்ணாதான் சினிமாவுல எனக்குக் கிடைச்ச முதல் நண்பர். இப்பவும் சினிமா பத்தி நிறைய விஷயங்கள் பகிர்ந்துக்குவார். இந்தப் படத்துல வொர்க் பண்ண எல்லா நாளும் ஸ்பெஷல்தான். குறிப்பா, ஒரு ஸ்டன்ட் சீக்வென்ஸை மறக்கவே முடியாது. ஸ்டன்ட்ல எப்படி அடிக்கணும், எப்படி வேகமா வந்து மெதுவா அடிக்கணும்னு எல்லாம் எனக்குள்ள ஏற்கெனவே இருந்திருக்கும் போல. அதெல்லாம் சரியா பண்ணிட்டேன். ஒரு ஷாட் பைக்ல வேகமா போயிட்டிருக்கும்போதே எழுந்து எதிர்ல வர்ற ஶ்ரீஜித் சாரோட சட்டையைப் பிடிச்சு கீழ விழுகணும். 'ரோப் இல்லாமல் முயற்சி பண்றீங்களா?'னு கேட்டாங்க. சரினு நானும் ஓகே சொல்லிட்டேன். 'சூப்பரா இருக்கு. அதை இன்னும் கொஞ்சம் இப்படி பண்ணுங்க அப்படி பண்ணுங்க'னு சொன்னாங்க. அதுவும் 'வந்து மானிட்டர் பாருங்களேன்'னு சொல்லி உசுப்பேத்திவிட்டுட்டாங்க. நானும் நடிச்சுக் கொடுத்துட்டேன்.

'சூப்பர், சூப்பர், சூப்பர்... ஒரு லோ ஆங்கிள் வைக்குறேன். இன்னும் கொஞ்சம் உயரமா போய் விழமுடியுமா?'னு கேட்டாங்க. என்மனசு முழுக்க உயரமா போய் விழணும்கிறதுலதான் இருந்தது. நானும் ஒரு வேகத்துல உயரமா போய் யார் மேல விழணுமோ அவங்களைத் தாண்டி முன்னாடி போயிட்டேன். நல்லவேளை அவர் என் சட்டையைப் பிடிச்சு இழுத்துட்டார். இல்லைனா, நிச்சயமா கை கால் உடைஞ்சிருக்கும். கீழே விழுந்ததால முதுகுல நல்ல அடி. மூச்சு விடமுடியலை. எல்லாரும் 'என்னாச்சு?'னு பதறி வர்றாங்க. ஆனா, என்னை இதெல்லாம் பண்ணச் சொன்ன ஸ்டன்ட் மாஸ்டர் பிரபு, மானிட்டரைப் பார்த்துட்டு, 'ஷாட் நல்லா வந்திருக்கு. சூப்பர்'னு சொன்னார். 'அடப்பாவிகளா? இங்க ஒருத்தன் அடிபட்டு கிடக்கிறேன். ஷாட் நல்லா வந்திருக்கு'னு சொல்றாரேனு ஆகிடுச்சு. ஆனா, அந்த சீனை ஸ்கிரீன்ல பார்க்கும்போது நிஜமாவே சூப்பரா இருந்தது.

'மதயானைக்கூட்டம்'
'மதயானைக்கூட்டம்'

விக்ரம் சுகுமாரன் சார் அப்படியே வெற்றிமாறன் சார் மாதிரி. கதைக்குள்ள இறங்கிட்டா எல்லாத்தையும் மறந்துடுவார். நாள் கணக்கா சாப்பிடாம வேலை செய்வாங்க. ரிலீஸுக்கு அப்புறம் படத்தோட வசனங்கள் அதிகமா பேசப்பட்டது. நிறைய சீன் எனக்குப் புரியாமலே நடிச்சேன். மறுபடியும் பார்க்கப் பார்க்கத்தான் ஒவ்வொண்ணா புரிஞ்சது. `மதயானைக்கூட்டம்' பத்தி இப்பகூட நிறைய பேர் எனக்கு மெசேஜ் பண்ணுவாங்க. சினிமாவைப் பொறுத்தவரை கத்துக்க எப்பவும் ரெடியா இருக்கணும். அப்படித் தயாரா இருந்தோம்னா, அதுவே நம்மளை அடுத்த கட்டத்துக்கு கூட்டிட்டுப் போயிடும்.

என்னோட முதல் படத்துல எல்லோரும் டெக்னிக்கலா ரொம்ப ஸ்ட்ராங்கான நபர்கள். அதனால எனக்கு நிறைய கத்துக்க உதவியா இருந்தது. படம் பார்த்துட்டு பாலாஜி சக்திவேல் சார் போன் பண்ணி 40 நிமிஷம் பேசினார். நிறையவே பாராட்டினார். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. எல்லோருக்கும் அவங்களுடைய முதல் படம் நிச்சயம் ஸ்பெஷலாதான் இருக்கும். ஆனா, எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்!"

இன்னும் சிறப்பான படங்களில் நடிக்க வாழ்த்துகள் கதிர்!