Published:Updated:

"வலிக்கத்தான் செய்யுது.. ஆனா, அடுத்த சான்ஸ் கிடைக்கிறவரை சமாளிச்சிடுவேன்!" - 'சரவணன் மீனாட்சி' கவின்

வே.கிருஷ்ணவேணி

ஒரு படத்துக்கே மூன்று வருடம் ஆகிடுச்சு. அடுத்த படத்துக்கான வாய்ப்பைத் தேடிக்கிட்டுதான் இருக்கேன். கடந்த மூன்று வருடத்துக்கான சர்வைவல்தான் கஷ்டமா இருந்தது

கவின்
கவின்

``நட்புனா என்னானு தெரியுமா' படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லையென தயாரிப்பாளர்கள் ஒருபக்கம் புலம்பிக்கொண்டிருக்க, தற்போது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது, இந்தப் படம். படத்தின் ஹீரோ, கவின். `சரவணன் மீனாட்சி' வேட்டையனாக நம்மிடையே பரீட்சயமானவர். சினிமாவில் `நட்புனா என்னானு தெரியுமா' இவருக்கு முதல் படம். அவரிடம் பேசினேன்.

கவின்
கவின்

``மூன்று மாதத்தில் படம் எடுத்து, ஆறு மாதத்திற்குள் ரிலீஸ் செய்வதாகத்தான் பிளான். `மேயாத மான்' படம் எங்களுக்குப் பிறகு ஆரம்பித்து ரிலீஸான படம். ப்ரொடக்‌ஷன் பிரச்னைகளால்தான் `நட்புனா என்னனு தெரியுமா' படம் தாமதமானது. 38 நாள்களில் படம் முடிச்சாச்சு. அதுவே இரண்டு வருடம் ஆனமாதிரி இருந்துச்சு. இரண்டு நாள் ஷூட் போவோம். பிறகு, இரண்டு மாசம் ஷூட்டிங் இருக்காது. ஒரு வாரம் ஷூட் போவோம், பிறகு ஆறு மாசம் ஷூட்டிங் நடக்காது. இப்படித்தான் இந்தப் படம் உருவானது. மத்தபடி, தயாரிப்பு தரப்பில் என்ன பிரச்னைனு எனக்குத் தெரியாது." என்று தொடங்கினார், கவின்.

"இது எனக்கு முதல் படம். டெலிவிஷன்ங்கிற சின்ன ஃபேம்தான் இருக்கு. சினிமாவில் என்னை யாரென்றே பலருக்குத் தெரியாது. அப்படி இருக்கிறப்போ, பெரிய தயாரிப்பு நிறுவனத்தைத் தேடிப் போகமுடியாது. ஏற்கெனவே இரண்டு படம் எடுத்து ரிலீஸ் பண்ணியிருக்கார் என்ற நம்பிக்கையில்தான் தயாரிப்பாளருடன் இணைந்து வேலையை ஆரம்பித்தோம். சினிமாவுக்கு வரும் எல்லோருக்கும் இருக்கிற கனவுகள் எனக்கும் இருக்கு. ஆனால், வீட்டுல இருக்கிறவங்களுக்குக் கடந்த மூன்று வருடமா உதவமுடியாம போனதுதான், வருத்தம்." என்பவர், தொடர்ந்தார்.

கவின்
கவின்

''இந்தப் படம் சம்பந்தப்பட்ட யாராலும் எந்தப் பிரச்னையும் கிடையாது. ரம்யா நம்பீசன் அனுபவ நடிகையா இருந்தாலும், நிறைய விஷயங்களில் எங்களுக்கு சப்போர்ட்டிவா இருந்தாங்க. வாரத்துக்கு நான்கு படங்கள் ரிலீஸ் ஆகுது என்பது மாதிரியான நிலை இப்போது இருக்கு. எனக்கு இதெல்லாம் புதுசு, பயமாகவும் இருந்துச்சு.

சின்னத்திரையைப் பொறுத்தவரை, இன்னைக்கு எடுக்கிற சீன் நாளைக்கு டெலிகாஸ்ட் ஆகிடும். சினிமாவில் அப்படிக் கிடையாதே! 2016-ஆம் ஆண்டு ஆரம்பிச்சு, 2019-லதான் ரிலீஸ் ஆகியிருக்கு இந்தப் படம். என் ஃப்ரெண்ட்ஸும் மூன்று படங்களுக்குமேல் நடிச்சுட்டாங்க. வலி கண்டிப்பாகத்தானேங்க செய்யும். நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா, சரி பண்ணிக்கலாம். அப்படி எதுவும் இல்லை. ஒரு படத்துல நடிக்கணும்னு நினைச்சது தப்பா என்ற மனநிலையிலதான் நான் இருக்கேன்.

'ஒரு படத்துக்கே மூன்று வருஷம் ஆகிடுச்சு. அடுத்தப் படத்துக்கான வாய்ப்பை தேடிட்டுத்தான் இருக்கேன். கடந்த மூன்று வருஷத்துக்கான சர்வைவல்தான் கஷ்டமாக இருந்தது
கவின்
கவின்
கவின்

இந்த மூன்று வருடத்துல, முதல் வருடத்தை எப்படியோ சமாளிச்சுட்டேன். அடுத்த இரண்டு வருடம் வீட்டுல இருக்கிறவங்க அவங்களைப் பார்த்துக்கவே ரொம்ப சிரமப்பட்டாங்க. அவங்ககிட்ட எப்படி உதவி எதிர்பார்க்கிறது. அதனால, கடந்த இரண்டு வருடமா என் நண்பர்கள்தான் என் ரூம் வாடகையைக் கொடுத்தாங்க. ஆனா, படத்தின் ரிலீஸ் இந்தக் கவலைகளையெல்லாம் போக்கியிருக்கு.

தியேட்டருக்குப் பத்து பேர், இருபது பேர் வந்தாக்கூட எங்க படத்தைப் பார்த்துட்டு சிரிச்சு சந்தோஷமா போறாங்க. இன்னும் பரவலா மக்கள்கிட்ட போய் சேரலைன்னாலும், வந்தவங்க சந்தோஷமா போறதைப் பார்த்து திருப்தி அடையிறேன். இன்னைக்குக் கிடைக்கிற கைத்தட்டல், விசில் சத்தத்தை எல்லாம் சில வருடத்துக்கு முன்பே தெரிந்தவர்களுக்குப் படத்தைப் போட்டுக் காட்டி கேட்டுட்டோம். அதனால, படத்துல எந்தப் பிரச்னையும் இல்லை. பிசினஸ்லதான் பிரச்னை.

இந்த ஒரு படத்துக்கே மூன்று வருடம் போயிடுச்சு. அடுத்த படத்துக்கான வாய்ப்பைத் தேடிக்கிட்டுதான் இருக்கேன். நான் நல்லா நடிப்பேன்னு காட்டுறதுக்கு இதுவரை சீரியல் மட்டும்தான் இருந்தது; இப்போ சினிமாவும் சேர்ந்திருக்கு. இது போதும்ங்க... அடுத்த சினிமா சான்ஸ் கிடைக்கிறவரை எப்படியாவது சமாளிச்சிடுவேன்!" என வெள்ளந்தியாகச் சிரிக்கிறார், கவின்.