Published:Updated:

``கைக்கட்டை கழட்றதுக்கு தூக்குலே இருக்கலாம்னு முடிவு பண்ணேன்!" - `விசாரணை' கிஷோர்

நடிகர் கிஷோர்
நடிகர் கிஷோர்

`விசாரணை' வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அது தொடர்பாக நடிகர் கிஷோரிடம் பேசினோம்.

`அஞ்சலி', `குருதிப்புனல்', `நாயகன்', `தேவர்மகன்', `இந்தியன்', `ஜீன்ஸ்', `ஹேராம்' போன்ற படங்கள் வரிசையில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட தமிழ் திரைப்படம், `விசாரணை'. வெற்றிமாறன் இயக்கியிருந்த இப்படத்தில், தினேஷ், கிஷோர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் திரைக்கு வந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், படம் குறித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் நடிகர் கிஷோர்.

விசாரணை
விசாரணை

``இந்தப் படத்தோட ஷூட்டிங் 70 சதவிகிதம் முடிஞ்சிருந்த நிலையிலதான் `விசாரணை' படத்துக்குள்ள போனேன். ஒரு படத்துல கமிட்டாகும்போது, வெற்றிமாறன் அதோட கதையை நம்மகிட்ட சொல்வார். இந்தப் படத்துல என்னோட `கே கே' கேரக்டர் பத்தி சொன்னார். பணமில்லாத பசங்க போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டா என்ன நடக்கும்; அதே நேரத்துல, அதிக பணம் இருக்கிற ஒருத்தனும் போலீஸ் கஸ்டடிக்குள்ள வந்தா எப்படி இருக்கும்னு வெற்றி சொன்னார். ஆனா, `லாக்கப்' நாவல்ல என்னோட கேடக்டர் கிடையாது. வெற்றி, அவரோட ஸ்டைல் ஆஃப் சினிமாவுக்காகவே என்னோட கேரக்டரை உருவாக்கினார்."

இந்தப் படம் என்ன மாதிரியான அனுபவத்தை உங்களுக்குக் கொடுத்தது?

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

``வெற்றி, இந்தப் படத்துல நடிக்கக் கேட்டப்போ பாண்டிச்சேரியில வேற ஒரு ஷூட்டிங்ல இருந்தேன். அதனால கொஞ்சம் யோசிச்சேன். `நைட் டைம் ஷூட்டிங் மட்டும் வந்துட்டுப் போங்க'ன்னு சொன்னார். சரின்னு சொல்லிட்டேன். அதுவரை எடுத்திருந்த காட்சிகளை எனக்கு போட்டுக் காட்டினார் வெற்றி. `ஏன்டா ஓகே சொன்னோம்'னு யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். ஏன்னா, `அட்டக்கத்தி' தினேஷ், படத்துல ரொம்ப அடி வாங்கியிருப்பார். பார்க்கவே அதிர்ச்சியா இருந்தது. படத்துல நடிக்கும்போதும் சரி, முடிஞ்ச அப்புறமும் சரி, இந்தப் படம் ஒரு விதமான அழுத்தத்தைக் கொடுத்தது. இதுல கமிட்டாகுறதுக்கு முன்னாடியே, `இந்தப் படம் எல்லாருக்கும் மோசமான அனுபவத்தைக் கொடுக்குது'னு சொன்னார் வெற்றி. அப்போ நான் நம்பலை. கையைப் பின்னாடி கட்டிப்போட்டு தூக்குல தொங்கவிட்டப்போதான், வெற்றி சொன்ன அந்த `மோசமான அனுபம்' புரிஞ்சது. நான் தூக்குல தொங்கின அந்தக் காட்சியை என்னோட ஒரே கால்ஷீட்ல எடுத்தாங்க. சாயங்காலம் ஆறு மணியில இருந்து காலையில ஆறு மணி வரைக்கும் அந்த ஷூட் போனது. என் மனசுல, `என்னோட இந்தக் காட்சியை இப்பவே முடிச்சிட்டா போதும்'ங்கிற மனநிலையிலதான் இருந்தேன். ப்ரேக் அப்போ, கைக்கட்டை கழற்றிவிடுறேன்னு சொன்னாங்க. `வேண்டாம் பா இப்படியே இருக்கட்டும். சீக்கிரம் ஷாட் எடுத்து முடிச்சிட்டா போதும்'னு சொன்னேன். வெற்றிகிட்ட, `இந்தப் படம் கெட்ட கனவு மாதிரி இருக்கு. படத்தைப் பார்க்காம இருக்கவும் முடியலை, படத்தை விட்டு ஓடவும் முடியலை'னு சொன்னேன். சில சமயம், படத்தை எடுத்துட்டிருக்கும்போதே வெற்றிக்கே முடியாம `பேக் அப்' சொல்லிடுவார்."

`சமுத்திரக்கனிகூட இருந்த ஷாட்?'

``கைக்கட்டை கழட்றதுக்கு தூக்குலே இருக்கலாம்னு முடிவு பண்ணேன்!" - `விசாரணை' கிஷோர்

``சமுத்திரக்கனி சாருக்கு என் மேல சாஃப்ட் கார்னர் இருந்தது. என்னை அடிக்கிற மாதிரியான காட்சிக்கு ரொம்பவே யோசிச்சார். `இந்த மனுஷன் இப்படி வருத்தப்படுறாரே... எப்படி நம்மள அடிக்கப்போறார்'னு பயந்துட்டே இருந்தேன். ஆனா, எனக்குக் கொஞ்சம்கூட அடிபடாம அடிச்சார். என்னைவிட படத்துல அதிகமா அடி வாங்கினது தினேஷ் கேங். நான் ஷூட்டிங் ஸ்பாட் உள்ள போகும்போதே, `அதான் நீங்க வந்துட்டீங்களே... இனி எங்களை அடிக்க மாட்டாங்க'ன்னு சந்தோஷம் ஆகிடுவாங்க. `துரத்தித் துரத்தி அடிக்கிறாங்க சார்'னு தினேஷ் விளையாட்டா சொல்வார்."

எடிட்டர் கிஷோர்?

கிஷோர்
கிஷோர்

``இந்தப் படம் எடிட்டர் கிஷோருக்குக் கடைசி படமா இருந்ததுதான் வருத்தமா இருந்தது. வெற்றிக்கும் அவருக்கும் ஒருமித்த சிந்தனை இருக்கும். வெற்றியோட முதல் படத்துல இருந்து கூடவே இருந்தவர். என்னோட பெயர்தான் அவருக்கும். நிறைய பேசியிருக்கோம். எப்போவாவது ஷூட்டிங் ஸ்பாட் வருவார். பொதுவா வெற்றியோட படத்தை எடிட் பண்றது ரொம்பவே கஷ்டம். இதை வெற்றியே சொல்வார். `ஆடுகளம்' படத்தோட நீளம் ரொம்ப அதிகம். அதைச் சுருக்கி அழகான படைப்பா கொடுத்ததுல கிஷோரோட உழைப்பு பெருசு."

தயாரிப்பாளர் தனுஷ்?

தனுஷ்
தனுஷ்

``வெற்றியும் தனுஷும் சேர்ந்துதான் இந்தப் படத்தைத் தயாரிச்சாங்க. பெரிய ஸ்டார் இல்லைன்னா இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கவே முடியாது. `நெடுஞ்சாலை', வெற்றியோட தயாரிப்புல முதல் படமா வந்திருக்கவேண்டியது. தனுஷ் ஹீரோ, நான் போலீஸாவும் நடிக்க வேண்டியது. ஆனா, நடக்காம போயிடுச்சு. இருந்தும், தனுஷ் தொடர்ந்து வெற்றியை சப்போர்ட் பண்ணிட்டிருந்தார். `பொல்லாதவன்' படத்துல செல்வம் கேரக்டருக்குத்தான் ஹீரோயிஸம் இருக்கும். தனுஷ் கேரக்டருக்கு கிளைமாக்ஸ்லதான் ஸ்கோப் இருக்கும். `ஆடுகளம்'லேயும் பேட்டக்காரனுக்குத்தான் லீடு ரோல். மத்த ரோல்லாம் அவரைச் சுத்திதான் இருக்கும். இப்படி இருந்தும் தனுஷ், ஸ்டார் வேல்யூ பார்க்காம ரிஸ்க் எடுத்து நடிச்சார். இதை வெற்றியே சொல்லியிருக்கார்" என்று முடித்தார்.

"ப்ச்... சில விஷயங்களைச் சீக்கிரம் செஞ்சிரணும் சார்!'' - 'பொல்லாதவன்' வெற்றிமாறன் #VikatanVintage
அடுத்த கட்டுரைக்கு