Election bannerElection banner
Published:Updated:

"தமிழ் சினிமா மாதிரி கேரளாவுல நடந்தா மக்கள் சோலியை முடிச்சிடுவாங்க" - `கர்ணன்' லால்!

லால்
லால் ( dev )

இந்தியாவின் தேசிய விருதுபெற்ற நடிகர் லால். மலையாளத்தில் முக்கிய நடிகராக பல பிரமாதமான கேரெக்டர்களில் நடித்திருக்கும் லால் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வில்லனாகவே நடித்திருக்கிறார். ஆனால், இப்போது 'கர்ணன்' படத்தில் காலத்துக்கும் நிற்கும் கதாபாத்திரம். அவரிடம் பேசினேன்.

" 'கர்ணன்' படத்தோட ஷூட்டிங் திருநெல்வேலில நடந்தது. படத்தோட ஷூட்டிங் போனப்போ பெரிய ஷாக்கா இருந்தது. ஏன்னா, அங்க ஊர்ல வாழ்ந்துட்டு வர்ற மக்களையும் நடிப்புல பயன்படுத்தியிருந்தார் மாரி செல்வராஜ். அவங்கிட்ட சீன்ஸ் பற்றி சொன்னவுடனே அவ்ளோ இயல்பா நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களுடைய நடிப்பைப் பார்க்க ஆச்சர்யமா இருந்தது. மாரி செல்வராஜும் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதால ஊர் பற்றி எல்லா விஷயத்தையும் தெரிஞ்சி வெச்சிருந்தார். முக்கியமா, எந்த பாடிலாங்குவேஜ்ல எப்படி பேசணும்னு தெரிஞ்சதுனால அவருக்கு என்ன வேணுமோ அதை சரியா ஆர்ட்டிஸ்கிட்ட வாங்கிட்டார். எப்பவுமே எனக்கொரு பழக்கமுண்டு. படத்தோட ஷூட்டிங்குக்கு போறதுக்கு முன்னாடியே அடுத்த நாள் ஷூட்டிங்ல நடக்கப்போற காட்சியோட டயலாக் ஷீட் வாங்கி படிக்க ஆரம்பிச்சிருவேன். ஏன்னா, என்னால ஷூட்டிங் ஸ்பாட்ல எந்த தாமதமும் ஏற்பட்டுறக்கூடாது. 'கர்ணன்' படத்தை பொருத்தவரைக்கும் காலையில ஸ்பாட்டுக்கு போயிட்டா முன்நாள் இரவு நான் படிச்ச ஒரு டயலாக் கூட இருக்காது. ஏன்னா, ஷூட்டிங் ஸ்பாட்ல மாரிக்கு என்ன தோணுதோ அதுக்கு ஏத்த மாதிரி டயலாக்ஸ் மாத்தியிருப்பார். பெரிய சவாலா இருந்தது இது. முதல் ரெண்டு நாள் பிக்கப் பண்ண கொஞ்சம் கஷ்டப்பட்டேன். அப்புறம் பழகிருச்சு.''

தமிழ்ல இன்னும் நல்ல கேரக்டர்ஸ் பண்ணியிருக்கலாம்னு நினைச்சது உண்டா?

''அதிகமா தமிழ்ல வில்லன் ரோல்லதான் நடிச்சிருக்கேன். கண்ணாடில என்னை பார்த்தாலே பயங்கரமா இருப்பேன். 'சண்டக்கோழி' படத்துல பெரிய வில்லனா நடிச்சிருந்தேன். அதுக்குப் பிறகு தொடர்ந்து வில்லனா நடிக்க கேட்டுட்டே இருந்தாங்க. வில்லனா நடிக்குறதையே நிறுத்திட்டேன். ஹ்யூமர் மற்றும் குணச்சித்திர கேரக்டர்ஸ் மட்டும் செலக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஆனா, என் கரியர்ல நான் தமிழ் படங்களுக்குத்தான் பெரிய முக்கியத்துவம் கொடுத்திருக்கேன். ஏன்னா, பாசில் சார்கிட்ட அசோசியேட் டைரக்டரா இருந்தப்போ சென்னையிலதான் எல்லா வேலைக்காகவும் வருவேன். அப்போல இருந்தே தமிழ்மேல பெரிய ஈர்ப்பு இருந்துட்டு இருக்கு.''

இயக்குநர் சித்திக்குக்கும் உங்களுக்குமான நட்பு?

 லால்
லால்
dev

''நேத்துகூட அவரை சந்திச்சேன். ஆறு படம் வரைக்கும் சேர்ந்து டைரக்ஷன் பண்ணியிருக்கேன். அப்புறம் சித்திக் டைரக்‌ஷன் பண்ண படங்களுக்கு புரொடியூஸ் பண்ணியிருக்கேன். எப்பவும் எனக்கு புரொடியூசர் வேலை பிடிக்கும். படத்தோட பூஜை ஆரம்பிச்சதுல இருந்து ஷூட்டிங் முடியுற வரைக்கும் எல்லா நாளும் ஸ்பாட்ல இருப்பேன். வெறும் காசு மட்டும் கொடுத்துட்டு ஆபிஸ்ல உட்கார்ந்திருக்குற புரொடியூசரா இருந்ததில்ல. டைரக்டர் மற்றும் குழுவுக்கு ஷூட்டிங் ஸ்மூத்தா நடக்குறதுக்கான வேலையெல்லாம் செய்வேன். புரொடியூசர் வேலையும் ஆர்டிஸ்ட் வேலை மாதிரிதான். இதுவரைக்கும் நான் புரொடியூஸ் பண்ண 99 சதவிகித படங்கள் ஹிட். எந்த வேலையா இருந்தாலும் ஆத்ம திருப்தியாட பண்ணுவேன். ''

தயாரிப்பாளரா தமிழ் மற்றும் மலையாள சினிமாவுக்கு இடையில இருக்குற வித்தியாசம் என்னனு நினைக்குறீங்க?

'' தமிழ்லயும் வேலையுல இணைந்து பண்ற புரொடியூசர் இருக்காங்க. ஆனா, ஷூட்டிங் முழுக்க ட்ராவல் ஆகுற புரொடியூசர்ஸ் பார்த்தது இல்ல. தமிழ்ல மாஸ் படங்கள்தான் ஹிட்டாகும். ஆனா, மலையாளத்துல சின்ன சப்ஜெக்ட் படங்களும் ஹிட்டாகியிருக்கு. இருந்தும், தமிழ்ல வர்ற மாதிரியான படங்கள் எடுக்கணும்னு மலையாளத்துல டைரக்ஷன் பண்ணியிருக்காங்க. ஆனா, அந்தப் படங்கள் எல்லாம் ஃப்ளாப் ஆகிருச்சு. சொல்லபோனா மற்ற மொழி படங்கள் எல்லாம் மலையாள சினிமாவை உற்று கவனிச்சிட்டு இருக்காங்க. என்னோட படங்கள் டைரக்‌ஷன் பண்ணுன நேரத்துல ஏ.வி.எம் ஸ்டூடியோல டப்பிங், ரெக்கார்ட்டிங் வேலையெல்லாம் நடந்துட்டு இருக்கும். அப்போ, எல்லா வேலைகளும் முடிச்சிட்டு ஃபர்ஸ்ட் காப்பி பார்க்க பத்து புரொடியூசர் தமிழ்ல இருந்து வந்திருப்பாங்க. படம் பார்த்து முடிச்சவுடனே பிசினஸ் ஆரம்பிச்சிருவோம். அடுத்தநாள் மற்ற மொழிகளுக்கான காப்பி ரைட்ஸ் போன்ற விஷயங்களும் பேசி முடிச்சிருவோம். இப்போ எல்லாம் மாறிருச்சு.''

கலாபவன் மணியை மிஸ் பண்றீங்களா?

''என்ன சொல்லறதுனு தெரியல. அவரோட உழைப்பு காரணமா எல்லாமே இவருக்கு அமைஞ்சது. வாழ்க்கையை பயங்கரமா என்ஜாய் பண்ணுனார். எப்போவும் ஃப்ரெண்ட்ஸ்கூட இருப்பார். ஃபெஸ்ட்டிவல் மாதிரி செலவழிப்பார். அதே மாதிரியே குடும்பத்துக்கு சேர்த்து வெச்சிருக்கார். இருந்தும், இவர் இல்லைங்குற குறை குடும்பத்துல எப்போவும் இருக்கும். அவங்களுக்குத்தான் பேரிழப்பு. சமீபத்துல என்னோட நெருங்கிய நண்பர் சச்சுவும் இறந்துட்டார். 'அய்யப்பனும் கோஷியும்' டைரக்டர். நாங்க நெருங்கிய நண்பர்கள். இதுவும் எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு. ''

'' தமிழ்ல பிடிச்ச ஆளுமைனா யாரை சொல்லுவீங்க?

லால்
லால்
dev

'' மணிரத்னம் சார்தான். என்னோட வாழ்க்கையில ஒரே ஒருத்தர்கிட்டதான் இதுவரைக்கும் வாய்ப்பு கேட்டிருக்கேன். அது மணிரத்னம். எந்த மொழியில யார்கிட்டயும் இதுவரைக்கும் வாய்ப்பு கேட்டதில்ல. அவரோட படத்துல நடிக்கணும்னு பெரிய ஆசை. சுஹாசினி மேடமை ரொம்ப நல்லா தெரியும். ஏன்னா, அவங்க ஹீரோயினா நடிச்ச படத்துக்கு அசோசியேட் டைரக்டரா வேலை பார்த்திருக்கேன். மணி சாருடைய 'கன்னத்தில் முத்தமிட்டால்' படம் பார்த்திருந்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, தமிழ்ல இந்தப் படம் பெருசா ஓடலைனு கேள்விப்பட்டேன். ரொம்ப கவலையாயிருந்தது. உடனே, மணிரத்னம் சார்கிட்ட பேசணும்னு சுஹாசினி மேடம்கிட்ட கேட்டேன். சுஹாசினி போன் கனெக்ட் பண்ணி கொடுத்தாங்க.  என்னோட வருத்தத்தை சொல்லிட்டு, 'உங்க டைரக்‌ஷன்ல நடிக்க விருப்பம்'னு சொன்னேன். அதுக்குப்பிறகு 'கடல்' படத்துக்காக என்னை கூப்பிட்டாங்க. அப்போ மலையாளத்துல ஒரு படத்துல நடிச்சிட்டு  இருந்தேன். அதுக்காக தேசியவிருதும் கிடைச்சது. அதனால 'கடல்' படத்துல கால்ஷீட் பிரச்னை காரணமா நடிக்க முடியல. அப்புறம் இப்போ 'பொன்னியன் செல்வன்' படத்துல நடிச்சிட்டு இருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தா என்னோட கேரக்டர் டிசைன் ஸ்கெட்ச் பண்ணி வெச்சிருந்தாங்க. 'மலையமான்' கேரக்டர்ல படத்துல நடிச்சிருக்கேன். ''

மலையாள மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு இருக்குற வித்தியாசமா எதை சொல்லுவீங்க?

'' 'சண்டக்கோழி' படத்துல விஷால் என்னைப் புரட்டி போட்டு பஸ்ல அடிக்குற காட்சியோட ஷூட்டிங் பாண்டிச்சேரில நடந்தது. கையில ஒரு மைக் லிங்குசாமி சார்கிட்ட இருக்கு. இன்னொரு மைக் ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன்கிட்ட இருக்கு. ஒளிப்பதிவாளர் ஜீவா கையிலயும் மைக் இருக்கு. மூணு பேரும் மக்கள் கூட்டத்தை பார்த்துட்டு 'தள்ளி போங்க'னு கத்துறாங்க. இந்த மாதிரி ஒரு சீன் கேரளா ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்தா சோலி முடிஞ்சிடும். அதுக்குப்பிறகு எப்பவும் ஷூட்டிங் நடத்த விட மாட்டாங்க மக்கள். இங்கே சினிமா மேல பெரிய அன்பு வெச்சிருக்காங்க மக்கள். அதனாலதான் சினிமால இருக்குறவங்க இங்கே நாட்டை ஆள முடிஞ்சிருக்கு. சினிமாகாரங்களைப் பெருசா கொண்டாடுறாங்க. பாசில் சார்கிட்ட வேலைப் பார்த்தப்போ 'பூவிழி வாசலிலே' படத்தோட ஈரோடு விநியோகஸ்த உரிமை எடுத்திருந்தோம். அப்போ தியேட்டர் விசிட்டுக்காக ஈரோடு ராயல் தியேட்டருக்கு போயிட்டு இருந்தேன். தியேட்டர் சீட்டு கிழிச்சு கொடுக்குற ஆள் ஆடியன்ஸை நோக்கி வேகமா கத்தினார். எல்லாரும் உடனே பின்னாடி போனாங்க. எனக்கு பார்க்க ஆச்சரியமா இருந்தது. கேரளாவுல இதுக்கு சான்ஸே இல்ல. இப்படி ஏதாவது நடந்திருச்சுனா ஒரு நாள் ஷோ கேன்சல் பண்ணிருவாங்க. இங்கே இருக்குற ஆடியன்ஸ் சினிமாவை சாப்பாடு மாதிரி நேசிக்குறாங்க. 'எங்கள் அண்ணா' படத்துல நடிச்சு முடிச்சப்போ சென்னை ஏ.வி.எம் ஸ்டூடியோ பக்கத்துல இருந்த ஹாஸ்பிட்டல்ல மனைவியை அட்மிட் பண்றதுக்கு ஆட்டோல போனேன். ஆட்டோ டிரைவர் என்கிட்ட காசு வாங்க மறுத்துட்டார். 'நீங்க கேப்டன் படத்துல நடிச்சிருந்தீங்க, நான் பார்த்திருக்கேன்'னு சொல்லிட்டு காசு வாங்கல. எனக்கு அதிசயமா இருந்தது. ''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு