சன் மியூசிக் மூலம் மீடியாவுக்குள் அறிமுகமானவர் லிங்கேஷ். அப்போது லிங்கேஷாக இருந்தவர் இப்போது சினிமாவுக்காக லிஜீஷாக மாறியிருக்கிறார். 'கபாலி' படத்தில் ரஜினிக்கு எதிராக நடித்தவர், 'பரியேறும் பெருமாள்' படத்தில் கவனிக்க வைத்தார். இப்போது வரிசையாகப் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் லிஜீஷிடம் பேசினேன்.
''என் அப்பா ஒரு போலீஸ் அதிகாரி. வீட்ல செம ஸ்ட்ரிக்ட். போலீஸ் யூனிபார்ம் போட்டுட்டா அவரோட பைக்லகூட யாரையும் ஏத்த மாட்டார். அப்பா பத்தி ஏன் பேசுறேன்னா 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்துல போலீஸா நடிச்சிருக்கேன். படத்துல நடிக்கிறப்போ அப்பாவுடைய பாடி லாங்குவேஜை எனக்குள்ளும் உணர முடிஞ்சது'' என்றவரிடம் சினிமாவுக்குள் வந்த கதையைக் கேட்டேன்.

''லயோலா காலேஜ்ல படிச்சப்போ சினிமா ஆர்வம் ரொம்ப அதிகமாகிருச்சு. எனக்கு முன்னாடி இருந்த எல்லா பசங்களும் திறமைசாலிகளா இருந்தாங்க. அதனால நானும் ஏதாவது பண்ணணும்னு எனக்குள்ள ஒரு பயம் வர ஆரம்பிச்சிருச்சு. சீரியல் இயக்குநர் கவிதா பாரதியிடம் உதவி இயக்குநரா வேலைக்குப் போனேன். அதுக்கு அப்புறம் 'சச்சின்' படத்துக்காக ஆடிஷன் நடந்தது. நமக்கு ஏதாவது ரோல் கிடைக்குமானு ஊட்டிக்கே போயிட்டேன். கிட்டத்தட்ட 200 பேர் அங்கே இருந்தாங்க. நினைச்ச மாதிரி எதுவும் செட்டாகல. திரும்பி வந்துட்டேன்.
அதுக்கு அப்புறம்தான் சன் மியூசிக் தொகுப்பாளார் வாய்ப்பு. இப்போ இருக்குற தொகுப்பாளர்களுக்கு கிடைக்குற வாய்ப்புகள் மாதிரி அப்போ எங்களுக்குக் கிடைக்கல. நாங்க வேலைக்குச் சேர்ந்த உடனே ஒப்பந்தம் போட்டுருவாங்க. ஃப்ரீ லான்ஸராகூட எங்களால் வெளியே எங்கேயும் வேலை பார்க்க முடியாது. நமக்கு கிடைச்சிருக்குற கொஞ்சம் புகழை வெச்சு சினிமால முயற்சி பண்ணலாம்னு நினைச்சா, 'டிவி முகம் சினிமாவுக்கு வேண்டாம்'னு தவிர்த்துருவாங்க. சினிமாவுக்குள்ள நுழையவே ரொம்ப சிரமப்பட்டேன்.

இந்த நேரத்துலதான் இயக்குநர் பா.இரஞ்சித் அண்ணன் டீம்ல சேர்ந்தேன். அதுக்கு அப்புறம்தான் லைஃப் மாற ஆரம்பிச்சது. 'பரியேறும் பெருமாள்' படத்தை இரஞ்சித் அண்ணன் தயாரிச்சப்போ நான் புரொடக்ஷன்ல இருந்தேன். 'படத்துல நீ நடி'னு அவர்தான் சொன்னார். இந்தப் படத்துல என்னோட கேரக்டர் எங்க வீட்டுல யாருக்கும் பிடிக்கல. 'எதுக்கு இப்படி நெகட்டிவ் கேரக்டர்'ல நடிச்சனு கேட்டாங்க. ஆனா, சங்கரலிங்கம் கேரக்டர் எனக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுத்துச்சு.
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்ல இருந்து இப்போ வரைக்கும் சினிமா எனக்கு நிறையவே கத்துக்கொடுத்திருக்கு. படத்துல வேலை பாக்குற லைட் மேன்கிட்ட இருந்துகூட கத்துக்க நிறைய இருக்கும். சின்ன வயசுல ரொம்ப அடம்பிடிப்பேன். அதனால அப்பா என்னைக் கொண்டுபோய் குங்ஃபூ கிளாஸ்ல சேர்த்துவிட்டார். இந்தப் பயிற்சி எனக்கு ரஜினி சார்கூட 'கபாலி' படத்துல நடிச்சப்போ உதவியா இருந்துச்சு. சொல்லப்போனா 'கபாலி' படத்துல நடிச்சவுடனே சினிமா போதும்னு தோணுச்சு. ஏன்னா, 'ரஜினி சார் கூடவே நடிச்சிட்டோம். இதுக்கு மேலே இந்த சினிமால என்ன இருக்கு'னு நினைச்சேன். ரஜினி சார்கூட நடிச்ச காட்சி எடுத்தப்போ எனக்குள்ள பெரிய தயக்கமும் பயமும் இருந்துச்சு. திரையில் அவரையும் தாண்டி நானும் தெரிய மனசளவுல முதல்ல ரெடியானேன்.
ஒரு சீன்ல அவரை ரொம்ப நக்கலா பார்க்கணும். ஆனா, என்னால ரஜினி சாரை அப்படிப் பார்க்க முடியல. ஆனா, இரஞ்சித் அண்ணண்தான் பயப்படாம நடின்னு சொன்னார். 'நீ நடிப்புல கவனத்தைச் செலுத்து. அவர் இருக்கார்னு பயப்படாத உன்னோட டயலாக்ஸை மட்டும் தனியா வொய்ட்ல எடுத்துக்கலாம்'னு தைரியம் கொடுத்தார். அப்புறம்தான் எந்தளவுக்கு நக்கலாப் பார்க்க முடியுமோ அந்த அளவுக்கு நக்கலாப் பார்த்தேன். இரஞ்சித் அண்ணன் சப்போர்ட் இல்லாம என் வாழ்க்கையில எதுவும் நடந்திருக்காது. ஏன்னா, சூப்பர் ஸ்டார் படத்துல அவருக்கு சரிசமமா நிக்க வெக்கிறதுக்கு எல்லாம் பெரிய மனசு வேணும்.

இப்போ தொடர்ந்து சில படங்கள்ல நடிச்சிட்டு வர்றேன். கதிர்கூட 'ஜடா' படத்துல நடிச்சிருக்கேன். முக்கியமான கேரக்டர். நான் நடிச்சிருக்குற சீக்வென்ஸ் பெரிய ஸ்டார் ஒருவர் பண்ண வேண்டியது. அவரால ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர முடியல. அப்போ இயக்குநர் குமரன், 'நீ இந்த ரோல்ல நடிக்கணும்... முடியுமா'னு கேட்டார். ஆடிஷன் போயிட்டு வந்து நடிச்சேன். எனக்குப் படத்துல மொத்தமே மூணு காட்சி. மூணுமே ஸ்கோப் இருக்குற காட்சிகள்தான். இப்போ நிறைய படங்கள்ல நடிச்சாலும் ஏதோ மிஸ் ஆகுற மாதிரி தோணுது. அதனால கொஞ்சம் வருத்தமும் இருக்கு. இதுக்கு அப்புறம் சினிமா வேறொரு பயணத்தை கொடுக்கும்னு நினைச்சு காத்திட்டிருக்கேன்'' என்கிறார் லிஜீஷ்.