Published:Updated:

"பணம் இல்லாம பித்துப் பிடிச்சிருந்தப்பதான்... அந்த வரியைப் படிச்சேன்!" - மதன்பாப் #MondayMotivation

Madhan Bob

கிடார் வாங்கி வாசிக்க ஆரம்பிச்சதுக்குப் பின்னால ஒரு பெரிய கதையே இருக்கு.

"பணம் இல்லாம பித்துப் பிடிச்சிருந்தப்பதான்... அந்த வரியைப் படிச்சேன்!" - மதன்பாப் #MondayMotivation

கிடார் வாங்கி வாசிக்க ஆரம்பிச்சதுக்குப் பின்னால ஒரு பெரிய கதையே இருக்கு.

Published:Updated:
Madhan Bob

வெற்றி என்னும் இலக்கை நோக்கிதான் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், எல்லோராலும் உரிய நேரத்தில் இலக்கை எட்டிவிட முடிவதில்லை. வெற்றிபெற்ற எல்லா மனிதர்களையும் ஏதோ ஒரு தங்க வாக்கியமே அவர்களின் செயல்பாடுகளை மாற்றி, வெற்றியை நோக்கி விரையவைத்திருக்கும். அப்படி தன் வாழ்வை வெற்றியடையச் செய்த வாக்கியம் பற்றிச் சொல்கிறார், நடிகர் மதன் பாப்.

''நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவல்லிக்கேணி. அப்பா சுப்பிரமணியம், சுதந்திரப் போராட்டத்துல பங்கெடுத்தவர். 'மதுரை மித்ரன்'னு பத்திரிகை நடத்திக்கிட்டிருந்தார். திருவல்லிக்கேணி பகுதியில் நல்ல செல்வாக்குமிக்கவர். அவர் சொன்னா, பஜார்ல உள்ள வியாபாரிகள் எல்லாரும் கேட்பாங்க. காமராஜரின் நெருங்கிய நண்பர். அம்மா பொன்னம்மாள், கர்னாடக சங்கீதத்துல ஈடுபாடு உள்ளவங்க. பாட்டு க்ளாஸ் எடுப்பாங்க.

நான் எங்க வீட்டுல எட்டாவது பிள்ளை. அதனால எனக்கு கிருஷ்ணமூர்த்தினு பேர் வெச்சாங்க. ஆனா, 'மதன்'னு கூப்பிடுவாங்க. ஆர்க்கெஸ்ட்ரா ஆரம்பிச்சப்போ, என் தம்பி 'பாபு' பெயருடன் என்னோட 'மதன்' பெயரையும் சேர்த்துகிட்டு பாட்டுக் கச்சேரி பண்ண ஆரம்பிச்சேன். அவன் நல்லா டிரம்ஸ் வாசிப்பான்.

Madhan Bob
Madhan Bob

திருவல்லிக்கேணியிலதான் படிச்சு வளர்ந்தேன். பார்த்தசாரதி கோயில், பைகிராஃப்ட்ஸ் ரோடு, பிரசிடென்சி காலேஜ், மெரினா பீச், ரத்னா கஃபே இதெல்லாம் நான் அன்றாடம் வாசம்செய்யும் இடங்கள். படிச்சிட்டு வேலை தேடிக்கிட்டிருந்த நேரம். ஜிம் போறது, கிதார் வாசிக்கிறதுதான் முழுநேர வேலை. பணத்துக்கு ரொம்பக் கஷ்டமான சூழல்.

கிடார் வாங்கி வாசிக்க ஆரம்பிச்சதுக்குப் பின்னால ஒரு பெரிய கதையே இருக்கு. அப்போ, வீட்டுல எல்லோரும் ஆளுக்கொரு வேலையா பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நான், மியூசிக்ல இருந்த ஆர்வத்துல, 'எனக்கு ஒரு கிடார் வாங்கிக்கொடுங்க'னு கேட்டேன். அம்மா, அக்கம்பக்கத்துல பணம் வாங்கி ஒண்ணு வாங்கிக் கொடுத்தாங்க. யானை வாங்கியும் அங்குசம் வாங்க முடியாத கதையா, ஆம்ப்ளிஃபையரும் ஸ்பீக்கரும் வாங்க வேண்டியதா இருந்துச்சு. அப்புறம், அதை வாங்க பல இடங்கள்ல அலைஞ்சு திரிஞ்சேன். எங்கேயும் பணம் கிடைக்கலை. அப்படியே பித்துப் புடிச்சவன் மாதிரி சுத்திக்கிட்டிருந்தேன்.

Madhan Bob
Madhan Bob

அப்போவெல்லாம் ஏதாவது படிச்சிக்கிட்டே இருப்பேன். இந்தப் புத்தகம்னு இல்லை, 'அம்புலிமாமா'வுலேருந்து 'அகதா கிறிஸ்டி' வரைக்கும் எல்லா புத்தகங்களையும் படிப்பேன். குறிப்பா ரத்னா கஃபேல சாம்பார் இட்லி சொல்லிட்டு, அப்படியே புக்கை படிச்சுக்கிட்டே சாப்பிடுற சுகம் இருக்கே... அடடா! அப்படி ஒரு முறை, 'வாழ்க்கையில் வெற்றிபெற 100 குட்டிக்கதைகள்'ங்கிற புத்தகத்தைப் படிச்சிக்கிட்டிருந்தேன்.

ஒரு ராஜாவுக்கு பழைமையான ஆயிரம் ஓலைச்சுவடிகள் கிடைச்சது. ராஜா அதை தன் ஆஸ்தான புலவர்கிட்ட கொடுத்து, நூறு ஓலைச்சுவடிகள்ல இருக்கிற மாதிரி அதையெல்லாம் சுருக்கச் சொன்னார். புலவரும் அதையே செய்து எடுத்துக்கிட்டு வந்தார். 'இன்னும் ஒரு வாரம் எடுத்துக்கங்க. அதை 10 ஓலைகள்ல சுருக்குங்க'ன்னு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சார் புலவர். திரும்ப, 'அதை ஒரே ஒரு வாக்கியமாக்கிக் கொண்டாங்க'ன்னு சொன்னார். புலவரும் சளைக்காம செஞ்சு கொண்டுவந்து கொடுத்தார். அந்த வாக்கியம் இதுதான்

'இந்த உலகத்தில் எதுவும் சும்மா கிடைக்காது!'

Madhan Bob
Madhan Bob

ஆம்ப்ளிஃபையர் ஸ்பீக்கர் செட் வாங்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்த எனக்கு, மனசுல ஒரு பொறி தட்டுச்சு. 'வீட்டை இனி தொந்தரவு பண்ண வேணாம்'னு முடிவு பண்ணி, வட்டிக்குப் பணம் வாங்கி அந்த செட்டை நானே வாங்கிட்டேன். அம்மா, கிடார் வாங்க பக்கத்துல கடன் வாங்கியிருந்த பணத்தையும் திரும்பக் கொடுத்திட்டேன்.

இப்போ, நான் வாங்கின பணத்துக்கு வட்டி கட்டணும். அது பெரிய போராட்டமா இருந்துச்சு. தினம், கடன் கொடுத்தவரைப் பார்த்தா ஓடி ஒளிய வேண்டியிருந்துச்சு. ஒருவழியா, என்கிட்ட கிடார் கத்துக்க அஞ்சு பசங்க வந்து சேர்ந்தாங்க. மாசம் அஞ்சு ரூபா ஃபீஸ். கொஞ்ச நாள்ல, அஞ்சு பேர் பத்து பேரா ஆனாங்க. பெரிய நட்பு வட்டமும் கிடைச்சது.

Madhan Bob
Madhan Bob

கல்விக்கும் பணத்துக்கும் உள்ள வித்தியாசம் அதுதான். பணம், அடுத்தவங்களுக்குக் கொடுத்தா குறைஞ்சிடும்; அதுவே கல்வி வளர ஆரம்பிச்சிடும். அப்புறம் ஆர்க்கெஸ்ட்ரா, நாடகங்களுக்குப் பின்னணி இசை, சினிமானு வந்து இன்னிக்கு நடிப்பு, பாட்டுக் கச்சேரினு வாழ்க்கை போயிட்டிருக்கு. சமீபத்துல எஸ்.பி.பி-யை வெச்சு ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். ரொம்ப நிறைவா இருந்துச்சு. இத்தனை வருஷ அனுபவத்துல, அந்த தங்க வாக்கியத்துக்கு துணையா வேறு சில விஷயங்களும் புரிந்தது.

அதாவது, இந்த உலகத்துல எதுவும் சும்மா கிடைக்காது. அதனால நமக்குப் பிடிச்ச துறையைத் தேர்ந்தெடுத்து, அதுல கடுமையா உழைக்கணும். அப்படி உழைப்பதையே ரசனையோட செஞ்சோம்னா, வெற்றியும் சீக்கிரம் கிடைக்கும்; இரட்டிப்பு பலன் தர்றதாகவும் இருக்கும்!'' - ஃப்ரெஷ் புன்னகையுடன் முடித்தார் மதன் பாப்.