Published:Updated:

''கடைசியா, சாப்பாட்டுல ஏதோ சரியில்ல, ஃபுட் பாய்சன்னு சொன்னார் நெல்லை சிவா!'' - கலங்கும் மதுரை முத்து

நெல்லை சிவா, மதுரை முத்து
நெல்லை சிவா, மதுரை முத்து

'' ’சில்லுனு ஒரு காதல்’ சீரியல்ல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு காதல் ஜோடிக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கிற சீன் எடுத்தாங்க. அன்னைக்கு ’ஏன்ணே நீங்க கல்யாணம் பண்ணிக்காமலே இருந்திட்டீங்க’னு கேட்டுட்டேன். கொஞ்ச நேரம் யோசிச்சவர்...

''கிணத்தைக் காணோம்னு ஒரு கம்ப்ளெய்ன்ட்டாப்பா... இனி இவன் இருக்கிற ஊர்ல நான் இருக்கவே மாட்டேன்’' என வடிவேலுவுடன் கோபித்துக் கொண்டு போலீஸ் வேலையை உதறிவிட்டுச் செல்லும் காட்சியில் நடித்து புகழ்பெற்றவர் நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா. 60 வயதான இவர் நேற்றைய தினம் மாரடைப்பால் மரணமடைந்தார். திருநெல்வேலி பேச்சுவழக்கை சினிமாவில் கொண்டுவந்து ரசிக்கவைத்த நெல்லை சிவா சமீபமாக டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார்.

தற்போது ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, கலர்ஸ் தமிழின் ‘சில்லுனு ஒரு காதல்’ இரண்டு சீரியல்களிலுமே இவருடைய நடிப்புக்குத் தனி ரசிகர்கள் உண்டு. இரு தினங்களுக்கு முன் ’சில்லுனு ஒரு காதல்’ தொடரில் நடித்ததுதான் இவருடைய கடைசி ஷூட்டிங்.

நெல்லை சிவா, மதுரை முத்து
நெல்லை சிவா, மதுரை முத்து

அந்த ஷூட்டிங்கில் நெல்லை சிவாவுடன் நடித்த நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவிடம் பேசினேன். ‘’ரெண்டு பேருமே ஊரை அடைமொழியா வச்சுப் பிரபலமடைஞ்சவங்கங்கிறதால எங்க ரெண்டு பேரையும் ஒரே இடத்துல பார்க்கிறவங்க அதைச் சொல்லிக் கலாய்ப்பாங்க. ஏற்கெனவே எனக்கு நல்ல அறிமுகம்னாலும் இந்த சீரியல்ல மூணு வாரத்துக்கு முன்னாடிதான் எங்க ரெண்டு பேருக்கும் காம்பினேஷன் சீன் வந்தது. ஆனா, இந்தப் பத்துப் பதினைஞ்சு நாள்லயும் நாங்க பேசிக்கிட்டது என்னவோ நிறைய.

பொதுவா வடிவேலு அண்ணன் டீம்ல இருந்தவங்க பக்கத்துல உட்கார்ந்தோம்னா நிறையக் கதைகள் இருக்கும். பட அனுபவங்களைத் தாண்டி அவங்கவங்க பர்சனல் விஷயங்கள்ல நிறைய சம்பவங்கள் இருக்கும். அடிபட்டு, மிதிபட்டு வந்த கதைகள்லாம் கேக்கறப்ப சில நேரம் கண் கலங்கிடும்.

இவர்கிட்டயும் அந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு. தன்னுடைய மூதாதையர்கள் சுதந்திரப் போராட்டத்துல கலந்து ஜெயிலுக்குப் போனது பத்திச் சொன்னார்.

அடிப்படையில சிவாஜி ரசிகராம். சினிமாவுல முன்னேறி வந்த காலங்கள்ல பட்ட அவமானங்களைப் பத்திப் பேசினார். அவருடைய ஸ்லாங் நல்லா ஃபேமஸ் ஆனதைப் பொறுக்கமாட்டாத சிலர் அவருக்கு டயலாக்கைக் குறைச்சிருக்காங்க. அப்பல்லாம் ‘ஏய்யா சாமிகளா... எனக்கு சினிமாவைத் தவிர வேறெந்த வேலையும் தெரியாதுப்பா, நான் யார் பொழப்பையும் கெடுக்க மாட்டேன். என் பொழப்புல நீங்களும் கை வைக்காதீங்கப்பா’னு சொல்வாராம். எப்படியோ அடிச்சுப் புடிச்சு முன்னேறி சுமார் 500 படங்களுக்கு மேல நடிச்சுட்டார்.

நெல்லை சிவா, மதுரை முத்து
நெல்லை சிவா, மதுரை முத்து

ஷூட்டிங் பிரேக்ல வீரபாண்டியக் கட்டபொம்மன் பேசற வசனத்தை அவர் திருநெல்வேலி ஸ்லாங்லயும், நான் மதுரை ஸ்லாங்லயும் பேசி கூட்டத்தைச் சிரிக்க வெச்சோம்.

’சில்லுனு ஒரு காதல்’ சீரியல்ல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு காதல் ஜோடிக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கிற சீன் எடுத்தாங்க. அன்னைக்கு ’ஏன்ணே நீங்க கல்யாணம் பண்ணிக்காமலே இருந்திட்டீங்க’னு கேட்டுட்டேன். கொஞ்ச நேரம் யோசிச்சவர்... 'அதைப் பேசினோம்னா மணிக்கணக்குல போகும். ஒரு மெகா சீரியலே எடுக்கலாம். அதனால இன்னொரு நாளைக்கு ஆற அமர உட்கார்ந்து போசுவோம்'னார்.

கடைசியாப் பார்த்த அன்னைக்கு ‘சாப்பாட்டுல ஏதோ சரியில்ல, ஃபுட் பாய்சன் ஆகிடுச்சு'ன்னு சொன்னார்.

’உடம்பைப் பார்த்துக்கோங்கண்ணே’னு சொன்னேன். ஆனா, அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங்ல அவரைப் பார்க்க முடியாதுனு ஆகிடுச்சு. அதென்னவோ தெரியல, விவேக் சார், பாண்டு சார், இப்ப இவர்னு வரிசையா காமெடி நடிகர்களா நம்மை விட்டுப் போயிட்டிருக்காங்க. ரொம்பவே வருத்தமா இருக்கு’’ என்று கலங்கினார் மதுரை முத்து.

அடுத்த கட்டுரைக்கு