Published:Updated:

`சாரி சார்.. அது பற்றி எனக்குத் தெரியாது' - ரசிகர்களுக்காக மன்னிப்புக் கேட்ட மம்மூட்டி!

மலையரசு

பெயர் இல்லை என்று தெரிந்ததுமே ராகுல் ராவிலின் பேஸ்புக் பக்கத்தை அவரது ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்க தொடங்கினர்.

மம்மூட்டி
மம்மூட்டி

66வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மஹாநடி, கே.ஜி.எஃப், பாரம் என பல்வேறு படங்கள் விருதுகளுக்கு தேர்வாகின. சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே, இந்த விருது அறிவிப்புகள் வெளியானதும் மம்மூட்டி ரசிகர்கள், தேர்வுக்குழுத் தலைவர் ராகுல் ராவிலின் பேஸ்புக் பக்கத்தில் படையெடுக்க தொடங்கினர். கடந்த வருடம் மம்மூட்டி நடிப்பில் வெளியான `பேரன்பு' நல்ல விமர்சனங்களை பெற்று நன்றாக ஓடியது. இதில் மம்மூட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

ராகுல் ராவில்
ராகுல் ராவில்

இதனால் இந்தப் படத்துக்கு விருது கிடைக்கும் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் விருது பட்டியலில் மம்மூட்டி பெயர் இல்லை என்று தெரிந்ததுமே ராகுல் ராவிலின் பேஸ்புக் பக்கத்தை அவரது ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்க தொடங்கினர். கடும் சொற்களை பயன்படுத்தி ராகுல் ராவிலை வசைபாடினர். இதனால் ராகுல், மம்மூட்டிக்கு ஒரு கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில், ``மிஸ்டர் மம்மூட்டி உங்கள் ரசிகர்கள் என்னை நோக்கி வெறுப்பான சொற்களை பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் பேசுவது அனைத்தும் மோசமான வசைபாடும் சொற்கள்.

`பேரன்பு' படத்துக்கு தேசிய விருது கொடுக்கவில்லை என என்னைக் கேள்வி கேட்டு வருகின்றனர். அதற்கு விளக்கம் அளிக்கிறேன். முதலில் ஒன்றை சொல்கிறேன். நடுவரின் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதேநேரம் உங்களின் `பேரன்பு' திரைப்படம் பிராந்திய குழுவினராலே நிராகரிக்கப்பட்டதால் மத்திய குழுவின் பரிசீலனைக்கு வரவில்லை. இதுபுரியாமல் இழந்த ஒன்றுக்காக உங்களின் ரசிகர்கள் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள்" எனப் பதிவிட்டார்.

`சாரி சார்.. அது பற்றி எனக்குத் தெரியாது' - ரசிகர்களுக்காக மன்னிப்புக் கேட்ட மம்மூட்டி!

இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே அடுத்து ஒரு பதிவையும் இட்டார். ரசிகர்களின் செயலுக்கு மன்னிப்பு கேட்டு மம்மூட்டி அனுப்பியிருந்த பதில்தான் அந்தப் பதிவு. அதில், ``மன்னித்துக் கொள்ளுங்கள் சார். இது பற்றி எனக்குத் தெரியாது. இருந்தாலும் நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியிருந்தார். இந்த விவகாரம் மலையாள சினிமா உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.