Published:Updated:

`` `பிகில்'ல நடிச்சிருக்கேன்; ஆனா, படத்துல வருமானு தெரியல!" - மனோபாலா

Manobala
Manobala

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல பரிணாமங்களில் கலக்கிய மனோபாலா, தற்போது இளசுகளைக் கவர இணையதளத்துக்கும் குடியேறியிருக்கிறார். "மனோபாலா’ஸ் வேஸ்ட் பேப்பர்" என்ற யூடியூப் சேனலைத் தொடங்கி, பல வீடியோக்களைப் பகிர்ந்து வருபவரை சந்தித்துப் பேசினோம்.

``யூடியூபிலும் கலக்குறீங்களே?"

``வாழ்க்கையில எதுவுமே வேஸ்ட் கிடையாதுங்கிற கான்செப்ட்ல ஒரு படம் பண்ணி, அதுக்கு `வேஸ்ட் பேப்பர்’னு பெயர் வைக்கலாம்னு இருந்தேன். ஆனால், யூடியூப் சேனல் தொடங்கலாம்னு தோணுனதுக்குப் பிறகு, அந்தப் பெயர் சேனலுக்கு நல்லாயிருக்கும்னு நினைச்சேன். அதனால, அதையே பெயரா வெச்சு சேனலை ஆரம்பிச்சுட்டேன். சமூகத்தைப் பற்றிய கருத்துகள், சினிமாவில் நான் கடந்துவந்த விஷயங்கள்னு எல்லாத்தையும் இந்த சேனல் மூலமா பதிவு பண்ணுறேன்." 

``படங்களுக்கு விமர்சனமும் பண்றீங்களே?"

Manobala
Manobala

``எல்லாப் படங்களுக்கும் பண்றதில்லை. என் மனசைப் பாதிச்ச படங்களுக்கு மட்டும்தான் விமர்சனம் பண்ணிக்கிட்டு இருக்கேன். முதலில் ’ஒத்த செருப்பு’ படத்துக்குப் பண்ணினேன். இப்போ அசுரனுக்குப் பண்ணியிருக்கேன். ஏன்னா, `அசுரன்’ படம் பார்த்துட்டு கொஞ்சநேரம் நான் யார்கிட்டேயும் பேசல. அசுரன் படம் மட்டும் இந்தப் பாதிப்பை ஏற்படுத்தல, பூமணி எழுதின ’வெட்கை’ நாவலை அவர் எழுதுன காலத்திலேயே நான் படிச்சிருக்கேன். அதைப் படிச்சுட்டு மூணு நாள் யார்கிட்டேயும் பேசல. அந்தத் தாக்கம் அப்படியே இருந்துச்சு. பூமணியோட நாவலை ரொம்பப் பிரமாதமா பண்ணியிருந்தார் வெற்றி மாறன். இப்படிப்பட்ட படங்களுக்குத் தொடர்ந்து விமர்சனம் பண்ணிட்டுத்தான் இருப்பேன்.’’

`` `பிகில்’ டிரெய்லரை விமர்சனம் பண்ணதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?

Manobala with vijay at Nanban Movie shooting spot
Manobala with vijay at Nanban Movie shooting spot

``எனக்கு விஜய், அஜித் ரெண்டுபேரையும் பிடிக்கும். ஏன்னு தெரியல, விஜய்யை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் கொஞ்சம் சோர்வா இருந்தேன்னா, அவரோட பாட்டைக் கேட்பேன். ஏதோ தெளிவு கிடைச்ச மாதிரி இருக்கும். விஜய்யும் என்கிட்ட ரொம்ப நல்லா பழகுவார். அவர் அண்ணான்னு கூப்பிடுறதுல அவ்வளவு அன்பு இருக்கும். ஒரு கமர்ஷியல் ஹீரோ என்பதைத் தாண்டி, அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு படம் பண்ணியிருக்கார். அதைப் பெருமைப்படுத்த நினைச்சுதான் டிரெய்லரை விமர்சனம் பண்ணி, முடிவுல `விஜய் தமிழ் சினிமாவுக்குக் கிடைச்ச ஒரு பெருமை’ன்னு சொன்னேன். நான் சொன்ன இந்த வார்த்தை மிகப்பெரிய உண்மை. அவர் எப்படி சினிமாவுக்குள்ளே வந்தார்னு எல்லோருக்கும் தெரியும். அவர் வந்த நிலையிலிருந்து இப்போ எந்த நிலைக்கு உயர்ந்திருக்கார்னு பார்க்கும்போது, பிரமிப்பா இருக்கு. ஆனா, அவர் படத்துக்கு மட்டும் அடிக்கடி ரிலீஸ்ல பிரச்னை வருவது ஏன்னு தெரியல."

`` `பிகில்’ படத்தில் உங்க ரோல் என்ன?

``கல்லூரிப் பேராசிரியரா நடிச்சிருக்கேன். ஆனா, அது படத்துல வருதான்னு தெரியல. ஏன்னா, பொதுவாகவே பெரிய ஹீரோ படங்களில் நடிக்கும்போது, ஹீரோவுக்குத்தான் ஃபுல் ஃபோக்கஸும் இருக்கும். சின்னச் சின்ன கேரக்டர்களெல்லாம் அடிவாங்கிடும். 100 நாள் கால்ஷீட் கொடுத்த யோகி பாபுவே 6 நாள்தான் நடிச்சாராம். நான் ஒரு சின்ன போர்ஷன்தான் நடிச்சிருக்கேன். நான், விஜய், நயன்தாரா, கதிர், யோகி பாபு எல்லோருக்கும் ஒரு வகுப்பறை காட்சி இருந்தது. படத்தோட எடிட்டர் ரூபன்கிட்ட, ‘என் சீன் கட்ல போயிடாம காப்பாத்துப்பா’ன்னு சொல்லியிருக்கேன்."

``உங்களோட குருநாதர் பாரதிராஜாவும் உங்களை மாதிரியே யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்காரே?"

Manobala, Bharathiraaja
Manobala, Bharathiraaja

``பெரிய பெரிய நடிகர்கள், அரசியல்வாதிகள்னு பலருடன் பழகியிருக்கார். சமூகத்தின்மேல் பெரிய அக்கறை கொண்டவர். அதையெல்லாம் பகிர்ந்துக்க, ‘என் இனிய தமிழ் மக்களே’ன்னு ஒரு சேனல் ஆரம்பிச்சிருக்கார். ரொம்ப நல்ல விஷயம்தான்.’’

``நீங்க தயாரிச்ச `சதுரங்கவேட்டை 2’ இன்னும் ரிலீஸாகாம இருக்கே... என்ன பிரச்னை?"

``பணம்தான் பிரச்னை. சினிமா முன்னமாதிரி இல்லை. ரொம்ப மாறிடுச்சு. அதையெல்லாம் சமாளிச்சு, ஒரு படத்தை ரிலீஸ் பண்றது ரொம்பவே சிரமமா இருக்கு. நவம்பர் மாதம் ரிலீஸ் பண்ணணும்னு முடிவு பண்ணிட்டு, அதுக்கான வேலைகளில் இருக்கோம்.’’

அடுத்த கட்டுரைக்கு