Published:Updated:

`அன்பான குணம், மறக்கமுடியாத விருந்தோம்பல்!' - கங்கை அமரன் மனைவி குறித்து மனோபாலா

அம்மாவுடன் வெங்கட் பிரபு, பிரேம்ஜி
அம்மாவுடன் வெங்கட் பிரபு, பிரேம்ஜி

``அவரோட வளர்ச்சிக்குப் பக்கபலமா இருந்தாலும், மணிமேகலை அம்மா பெரிசா எந்த சினிமா நிகழ்ச்சியிலயும் கலந்துக்க மாட்டாங்க. சந்திரகாந்தாவோட உறவினரான அவங்க, மேடை நாடகங்கள் பார்க்கவே அதிகம் விரும்பினாங்க".

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன், இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், தொகுப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். இவரின் மனைவி மணிமேகலை உடல்நிலை சரியில்லாமல் நேற்று நள்ளிரவு காலமானார். அவரது மறைவுச் செய்தி கங்கை அமரனின் குடும்பத்தினரை மட்டுமன்றி, அவர்களின் குடும்பத்துடன் நட்பு வட்டாரத்தில் உள்ள பலருக்கும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மனோபாலா
மனோபாலா

கங்கை அமரனுடன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பில் இருக்கும் நடிகர் மனோபாலாவிடம் பேசினோம். ``சமீப காலமாகவே சினிமா துறையினர் பலரையும் இழந்துட்டு இருக்கோம். அந்தச் செய்திகள் மனசை ரொம்பவே பாதிக்குது. 1970-கள்ல இளையராஜா, பாரதிராஜா, கங்கை அமரன், நான் உட்பட பலரும் ஒரே காலகட்டத்துலதான் சினிமா துறைக்கு வந்தோம். அதுலயும் கங்கை அமரன், சந்தான பாரதி, பி.வாசு, நான்னு நாங்க தனி குரூப்பா இருப்போம். பரபரப்பா வேலை செஞ்ச காலத்துல எப்பயாச்சும் ஓய்வுநேரம் கிடைச்சா நாங்க எங்கள்ல இன்னொருத்தர் வீட்டுக்குப் போயிடுவோம்.

அமரன் வீட்டுக்கு நாங்கன்னு இல்ல, வேறு யார் போனாலும் வந்த விருந்தினரைச் சாப்பிட வெச்சு அனுப்புறதுதான் மணிமேகலை அம்மாவோட குணம். குறைந்தபட்சம் அவங்க வீட்டுல காபியாவது குடிச்சுட்டு கிளம்பினால்தான் சந்தோஷப்படுவாங்க. படிப்படியா வளர்ந்து, `கரகாட்டக்காரன்’ படத்துக்குப் பிறகு அமரன் பெரிய அளவுல வளர்ந்தாரு. அவரோட வளர்ச்சிக்குப் பக்கபலமா இருந்தாலும், மணிமேகலை அம்மா பெரிசா எந்த சினிமா நிகழ்ச்சியிலயும் கலந்துக்க மாட்டாங்க. சந்திரகாந்தாவோட உறவினரான அவங்க, மேடை நாடகங்கள் பார்க்கவே அதிகம் விரும்பினாங்க.

அம்மாவுடன் வெங்கட் பிரபு
அம்மாவுடன் வெங்கட் பிரபு

அமரனைப் போலவே, அவரோட மகன்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி மேலயும் அவங்க அதிக அன்பு வெச்சிருந்தாங்க. ரொம்பவே எளிமையான குணம் கொண்டவங்க, எல்லோர்கிட்டயும் அன்பா பழகுவாங்க. அவங்களோட இறப்பு, அமரனோட குடும்பத்தை எப்படி பாதிச்சிருக்கும்னு என்னால நல்லா உணர முடியும். அவருக்கும், அவரோட மகன்களுக்கும் எப்படி ஆறுதல் சொல்றதுனே தெரியல” என்று வருத்தத்துடன் முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு