Published:Updated:

`நானும் விவேக்கும் ஒண்ணாதான் தடுப்பூசி எடுத்துக்கிட்டோம்; அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல!' - மனோபாலா

மனோபாலா
மனோபாலா

``விவேக் ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்புறது ஒண்ணுதான். விவேக் ரொம்ப தைரியசாலி. இதுக்கெல்லாம் பயப்பட மாட்டார். சீக்கிரமே திரும்பி வருவார்". - - மனோபாலா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனாவுக்கான தடுப்பூசியை நேற்று எடுத்துக்கொண்ட நிலையில் இன்று நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், நேற்று கொரோனா முதல் டோஸ் தடுப்பூசியை நடிகர் விவேக் எடுத்துக் கொண்டார். இதனையடுத்து, `மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்’ என வலியுறுத்தினார்.

Actor Vivek
Actor Vivek
நடிகர் விவேக் மாரடைப்புக்கும் கோவிட் தடுப்பூசிக்கும் தொடர்பிருக்கிறதா? மருத்துவர் விளக்கம்

மேலும், ``அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு இருக்கும் அச்சத்தைப் போக்கவும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவுமே இங்கு தடுப்பூசி எடுத்துக்கொண்டேன். தடுப்பூசி குறித்து எந்த விதமான பயமும் தேவையில்லை. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்பும் கொரோனா வரலாம். ஆனால் உயிரிழப்பு போன்ற பெரிய பாதிப்பு இருக்காது. முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் திறமைசாலிகள்’’ என்று மக்களுக்குத் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகப் பேசியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், `கொரோனா தடுப்பூசிதான் மாரடைப்புக்குக் காரணமா?’ என மக்களிடையே கேள்விகள் எழ, மருத்துவமனை தரப்பு அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

`எக்மோ கருவி உதவியுடன் நடிகர் விவேக்கின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆஞ்சியோபிளாஸ்டி செய்து அவருக்கு இதயக் குழாய் அடைப்பும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டது காரணமல்ல’ என தெளிவுபடுத்தப்பட்டது.

இந்லையில், நடிகர் விவேக்கின் நண்பரும் நடிகருமான மனோபாலாவை தொடர்பு கொண்டோம். ``நானும் விவேக்கும்தான் நேத்து ஒண்ணா போய் தடுப்பூசி போட்டுக்கிட்டோம். நான் என்னோட ரெண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கிட்டேன். விவேக் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கிட்டார். எனக்கு இப்போ சோர்வாவும் லேசான காய்ச்சலும் இருக்குறதால ஓய்வுல இருக்கேன்.

Manobala
Manobala
`திடீர் கார்டியாக் அரெஸ்ட், தடுப்பூசி காரணமல்ல!' - விவேக் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம்

அதனால, விஷயத்தை கேள்விப்பட்டதும் நேரடியா மருத்துவமனைக்குப் போய் விவேக்கை பார்க்க முடியலை. அவர் கூடவே இருந்த நண்பர் உதய்கிட்டதான் அவருடைய உடல்நிலை பத்தி விசாரிச்சேன். கொஞ்சம் க்ரிடிக்கல் கண்டிஷன்னு சொல்றாங்க. சிகிச்சையில் இருக்கார்.

நேத்து நான் கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்தபோது, என்னை கிண்டல் பண்ணிட்டு ஜாலியா இருந்தாரு விவேக். மாரடைப்புங்கிறது யாருக்கு எப்போ வரும்னு நம்மால கணிக்கவே முடியாதுல்ல?

`தடுப்பூசிதான் விவேக்கு மாரடைப்பு ஏற்பட்டதுக்குக் காரணமா?’னு ஒரு பேச்சு போயிட்டு இருக்கு. அதுக்கும் இதுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. விவேக் ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்புறது ஒண்ணுதான். விவேக் ரொம்ப தைரியசாலி. இதுக்கெல்லாம் பயப்பட மாட்டார். சீக்கிரமே திரும்பி வருவார்”.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு