Published:Updated:

''கிரேஸி மோகன் தம்பிக்கு ஆறுதல் சொன்னேன். ஆனா, நான்?!" - அமெரிக்காவிலிருந்து இயக்குநர் மெளலி

நடிகர் மெளலி
நடிகர் மெளலி

நடிகர் கிரேஸி மோகன் மறைந்ததையொட்டி, அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார், இயக்குநரும், நடிகருமான மெளலி.

"நான் அமெரிக்காவுல இருக்கேன். இப்போ நேரம் இரண்டு மணி. என்னால தூங்க முடியல. கிரேஸி மோகனின் நினைவுகள் என்னை வாட்டுது!'' - கவலையுடன் பேசுகிறார், இயக்குநரும், நடிகருமான மெளலி.

கிரேஸி மோகன், மௌலி
கிரேஸி மோகன், மௌலி

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர், கதையாசிரியர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்டவர், கிரேஸி மோகன். கமலின் நெருங்கிய நண்பரான இவர், மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்குத் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கிரேஸி மோகனின் ஆரம்ப காலத்திலிருந்து அவரோடு பயணிப்பவர், மெளலி. கிரேஸி மோகனுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

"நான் காலேஜ் படிச்ச காலத்துல இருந்து மோகன் எனக்கு நல்லா பழக்கம். என்னோட ஜூனியர் அவன். காலேஜ் படிக்கும்போது நிறைய நாடகங்கள் போடுவேன். என் நாடகங்களைப் பார்த்து இன்ஸ்பயராகி, தானும் நாடகங்கள் போட்டதா மோகன் சொல்வான். இதை நிறைய மேடைகளிலும் சொல்லியிருக்கான். என்னைவிட ஐந்து வயது சின்னவன். இவ்வளவு சிறிய வயதில் அவன் சாகணுமா?!

எனக்கு அவன் 'மோகனா'தான் பழக்கம். எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாதவன். அவனுக்கு சினிமாவில் நடிக்கணும்னு ஆசை இருந்தது. காலேஜ் படிக்கும்போதே நிறைய நாடகங்கள் எழுதுவான். அவனுடைய தம்பி பாலாஜியுடன் சேர்ந்து நிறைய டிராமா போட்டிருக்கான்.

அவனுடைய நிறைய நாடகங்களைப் பார்த்து ரசிச்சிருக்கேன். நானும், விசுவும் நிறைய நாடகங்கள் போட்டிருக்கோம். நாங்க ரெண்டுபேரும் அதை நிறுத்திட்டு சினிமாவுக்குப் போனோம். அப்போ, நாடக உலகில் இருந்த வெற்றிடத்தை நிரப்பியது, மோகனும், எஸ்.வி.சேகரும்தான்!

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்

அவனுடைய நாடகங்களில் இரட்டை அர்த்த வசனங்களோ, பெண்களைக் கிண்டல் செய்யும் காட்சிகளோ இருக்காது. அவனுடைய குணமே அப்படித்தான். யாரையும் கஷ்டப்படுத்தமாட்டான். யாரையும் கீழ்த்தரமா சிந்திக்கவிடமாட்டான். அவனுடைய நாடகங்களைக் குடும்பத்தோடு, குழந்தைகளோடு போய்ப் பார்க்கலாம். சிலர் கதை, வசனங்கள் எழுதும்போது, 'இது எல்லா மக்களுக்கும் போய்ச் சேருமா?'னு யோசிச்சு எழுதுவாங்க.

மோகன் அப்படிக் கிடையாது. அவனுக்கு என்ன தோணுதோ, அதைத்தான் எழுதுவான். தமிழில் நிறைய வெண்பா எழுதியிருக்கான். இலக்கண மரபுகளை உடைத்துத் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியவன். குறிப்பாக, கலோக்கியல் வார்த்தைகளை அதிகமா பயன்படுத்தியது அவன்தான்.

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்

அவனுடைய நாடகங்கள் பெரும்பாலும் கிரேஸி என்ற பெயருடனே வரும். ஹாலிவுட் சினிமாவில் அப்போது 'கிரேஸி பாய்ஸ்'னு பல சினிமாக்கள் வந்தது. அதைப் பார்த்துதான், கிரேஸி பெயரை அவன் இணைத்துக்கொண்டான். நாடகங்களை அரங்கேற்றம் செய்யும் நேரம்போக, மீதி நேரங்களில் நிறைய மொழி பெயர்ப்புகளில் ஈடுபடுவான்.

அவனுடைய நாடகங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பார்க்கச் சென்றுவிடுவேன். மோகன் மேக்அப் போட்டு ரெடி ஆகும்போது, அவனுடனே இருந்து அரட்டை அடித்துப் பேசிக்கொண்டிருப்பேன். அவனை என் தம்பியாக நினைத்தேன். நான் அமெரிக்காவுக்கு வந்தபிறகு, போன் பண்ணிப் பேசினான். அப்பப்போ ரெண்டுபேரும் போனில் பேசிக்குவோம்.

கிரேஸி பாலாஜி
கிரேஸி பாலாஜி

கமல்தான் எனக்கு இப்போ போன் பண்ணி மோகன் மருத்துவமனையில் இருப்பதைச் சொன்னார். அப்போதே பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு மறுபடியும் கமல் போனில் அழைத்து, மோகன் இறந்த செய்தியைச் சொன்னார். என்னால் பதில் பேச முடியவில்லை. அவனுடைய தம்பிக்கு ஆறுதல் சொன்னேன். ஆனால், நான் தற்போது சறுகாகி, நாள்களைக் கடந்துகொண்டிருக்கிறேன்!" என்று வருத்ததுடன் முடிக்கிறார், மெளலி.

அடுத்த கட்டுரைக்கு