கல்யாண களைகட்டும் விஜய் வீடு... 2500 பேருக்கு விருந்து... எங்கே, எப்படி?! #SnehaWedsAkash

ஆகாஷும், சினேகாவும் சிங்கப்பூரில் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அங்கு நட்பு காதலாகி தற்போது இருவீட்டு சம்மதத்தோடு திருமணம் நடைபெறுகிறது.
லாக்டெளனில் நடக்கும் மிக முக்கியத் திருமணமாக நாளை சென்னையில் நடக்கிறது விஜய் வீட்டு கல்யாணம். 'மாஸ்டர்' படத் தயாரிப்பாளரும், இன்டெவ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சேவியர் பிரிட்டோவின் மகளும், எஸ்.ஏ.சந்திரசேகரின் பேத்தியுமான சினேகா பிரிட்டோ, நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷை மணக்கிறார். நாளை (24-08-2020) சென்னையில் உள்ள ஒரு ரெஸார்ட்டில் திருமணம் நடைபெற இருக்கிறது.
முன்னதாக 2019 டிசம்பர் 6-ம் தேதி சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஆகாஷும், சினேகாவும் சிங்கப்பூரில் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அங்கு நட்பு காதலாகி தற்போது இருவீட்டு சம்மதத்தோடு திருமணம் நடைபெறுகிறது. நிச்சயதார்த்தம் நடந்த போது 2020 ஏப்ரல் போல திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்திருந்தார்கள். ஆனால் தேதியை முடிவு செய்வதற்குள்ளேயே கொரோனா வந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விட்டதால், திருமணம் தள்ளிப்போனது.

நாளைய திருமண நிகழ்வுக்கு நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே திருமண நிகழ்வில் இருப்பார்கள் எனத் தெரிகிறது. நண்பர்கள், உறவினர்கள் சினிமாத்துறையினர் அனைவருக்குமே பிரிட்டோ மற்றும் முரளி குடும்பத்தின் சார்பாக கடந்தவாரம் மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டது.
அதில், ''கடவுள் மற்றும் எங்களது பெற்றோரின் ஆசியுடன் ஆகாஷ்- சினேகா திருமணம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெறுகிறது. கோவிட் சூழல் காரணமாக எல்லோருடைய பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்தத் திருமணத்தை இரண்டு தரப்பு குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் மட்டுமே நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் அனைவரும் நேரில் வந்து வாழ்த்தக்கூடிய சூழல் இப்போதில்லை என்பது வருத்தமாகவே இருக்கிறது. ஆனால், உங்களின் ஆசிர்வாதம் இந்த இளம் தம்பதியினருக்கு நிச்சயம் கிடைக்கும். இந்தக் கொரோனா சூழல் சரியானதுமே நடைபெற இருக்கும் ஆகாஷ்-சிநேகா திருமண வரவேற்பில் உங்கள் அனைவரையும் சந்திப்போம்'' எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.

திருமணத்தில் விஜய் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். திருமணத்தை முன்னிட்டு சென்னை முழுக்க ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கியிருக்கும் 2500 பேருக்கு நாளை மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.