Published:Updated:

``கொரோனாவை மீறின ஒரு சக்தி இருக்கு; அது என்னன்னா?!" - நட்டி 

நடிகர் நட்டி
நடிகர் நட்டி

சமீபத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான நட்டி, கொரோனாவோடு ஆன்மிகத்தைத் தொடர்புபடுத்தி ட்வீட் ஒன்றைப் போட, அதற்கு சமூக வலைதளத்தில் பலரும் தங்களது எதிர்ப்பினைப் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து விளக்கம்பெற அவரைத் தொடர்பு கொண்டோம்.

கொரோனா உலகம் முழுக்க எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கியிருக்கும் இந்த நேரத்தில், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்ற பதம் அவசியமானது என்பதைத் தாண்டி ஒவ்வொருவரின் கட்டாயக் கடமை என்ற நிலைக்கு மாறியிருக்கிறது. இது மட்டுமல்லாது கொரோனா குறித்தான தகவல்களும் வதந்திகளும் திசைக்கொன்றாகப் பரவியபடி இருக்கின்றன.

இந்த நிலையில் வணிகவளாகங்கள், கோயில்கள், பீச், மால், திரையரங்குகள் என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலியுறுத்தி திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துகளையும் வேண்டுகோளையும் சமூக வலைதளங்கள் வழியாக மக்களிடையே பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான நடராஜ் ``கடவுள நூறு வருஷமா திட்டினோம்… இன்னைக்குக் கடவுள் கதவை மூடிட்டாரு… என்ன பண்ணுவோம் மனிதர்களே….'' எனக் கொரோனாவோடு ஆன்மிகத்தைத் தொடர்புபடுத்தி ட்வீட் ஒன்றைப் போட, அதற்கு சமூக வலைதளத்தில் பலரும் தங்களது எதிர்ப்பினைப் பதிவு செய்திருந்தனர். இதுகுறித்து விளக்கம்பெற அவரைத் தொடர்பு கொண்டோம்,

``நிலைமை ஓரளவு கட்டுக்குள்ள வர்ற வரைக்கும் 21 நாள்கள் எல்லாரும் தங்களைத் தனிமைப்படுத்தணும்கிறது இந்த அரசுக்கும் நாட்டுக்கும் நாம செய்ற கடமை. ஏன்னா, நம்ம வீட்ல பெரியவங்க, குழந்தைங்க இருக்க மாதிரிதான் பெரும்பாலும் எல்லோர் வீட்லையும் இருப்பாங்க. அப்படி இருக்கும்போது வெளிய போறது சோஷியல் கேதரிங் இதெல்லாத்தையும் தவிர்க்கிறது ரொம்ப முக்கியமான விஷயம்.

ஷூட்டிங் எல்லாம் கேன்சல் பண்ணதால, திரையுலகம் மொத்தமும் வீட்லதான் இருக்கு. இந்தச் சமயத்துல இதுக்கு முன்னாடி நான் பார்க்கணும்னு ஆசைப்பட்ட படங்கள், அமேசான் நெட்ஃபிளிக்ஸ் போன்ற OTT தளங்கள்ல கிடைக்கற வெப் சீரிஸ், டாக்குமென்ட்ரி எல்லாம் பார்த்துட்டிருக்கேன். அதுல இருந்தும் சில விஷயங்களைப் படம் தொடர்பா நான் கத்துக்க முடியுது."

Corona Screening, India
Corona Screening, India
AP / Channi Anand

``அதுமட்டுமில்லாம, நிறைய பேர் நேரம் கிடைக்கல, குடும்பத்தோட இருக்க முடியலைங்கிற மாதிரியான புலம்பல்கள் வெச்சிருந்தாங்க. அவங்க இந்த நேரத்தை உபயோகப்படுத்திக் குடும்பத்தோட நிறைய பேசலாம். பெரியவங்களை நடமாடும் பல்கலைக்கழகம்னு சொல்வேன். அந்த அளவுக்கு அவங்ககிட்ட அனுபவங்களும், கதைகளும் கொட்டிக் கிடக்கு. இதெல்லாம் தாண்டியும் ஆன்மிகத்துலயும் மக்கள் கவனம் செலுத்தலாம். ஏன்னா, ஆன்மிகம் மக்களை நேர்வழிப்படுத்துங்கிறது என்னுடைய பர்சனல் நம்பிக்கை."

``ஆன்மிகத்தை, கொரோனாவோடு தொடர்புபடுத்தி சமீபத்துல நீங்க போட்ட ட்வீட் சர்ச்சையாச்சே?"

சர்ச்சைக்குரிய ட்வீட்
சர்ச்சைக்குரிய ட்வீட்

``சில பேருக்கு நான் சொல்ல வர்றதோட அர்த்தம் புரியல. அதுதான் என்னால சொல்லமுடியும். கடவுள் பக்தி இல்லாததுதான் இயற்கைக்கு எதிரான சில விஷயங்கள் நடந்துவிடுகிறது என்பது என்னுடைய கணிப்பு, நம்பிக்கை. அதுக்காக நான் மத்தவங்களோட கருத்தை எந்த விதத்துலயும் தப்புனு சொல்லமாட்டேன். என்னோட நம்பிக்கை எதுவோ, அதைத்தான் வெளிப்படுத்தினேன்.

அதேமாதிரி, கொரோனா தொடர்பா நிறைய விஷயங்களும் இப்ப போயிட்டிருக்கு. அசைவம் சாப்பிடற தால விலங்குகள்கிட்ட இருந்து பரவுது என்றும் லேப்ல இருந்து பரவுது என்றும் செய்திகள் வந்துட்டிருக்கு. இது உண்மையாவும் இருக்கலாம், வதந்தியாவும் இருக்கலாம். உண்மைனு நிரூபிக்கப்படாத வரை அதுலருந்து விலகி இருக்கறதுதான் நல்லது. அதனாலதான் அசைவம் சாப்பிட வேண்டாம்னும் குறிப்பிட்டேன். இதெல்லாம் தாண்டி நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கு. அதைக் கும்பிடறதால, இது சரியாகிடும்கிறது என்னோட நம்பிக்கை. அந்த நம்பிக்கையை மத்தவங்களுக்குச் சொன்னேனே தவிர திணிக்கல. ஆனா, இதுக்கு நிறைய எதிர்வினைகள் எனக்கு வந்துட்டிருக்கு. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்ங்கிற மனநிலையிலதான் இப்ப நான் இருக்கேன். மத்தபடி இதுல பேசறதுக்கு ஒண்ணும் இல்லை.

இந்த உலகமே ஒரு பதற்றமான சூழ்நிலையில இயங்கிட்டிருக்கு. ராணுவத்துல வேலை செய்றது எப்படி ஒரு மரியாதைக்குரிய விஷயமோ அதுமாதிரிதான் நாம இப்போ தனிமைப்படுத்திட்டு வீட்ல இருக்கறதும் சமூகத்துக்கு நாம செய்ற கடமை. இந்த 21 நாள்கள் மட்டும் போதுமா, நிலைமை அதுக்குள்ள சரியாகிடுமானு கேட்டா அதுக்கு எனக்குப் பதில் தெரியல. ஆனா, ஒரு விஷயம் அரசாங்கம் சொல்லுதுனா நிறைய முறை யோசிச்சு, அதுக்கான சாத்தியக்கூறுகளை எல்லாம் ஆராய்ந்துதான் நடவடிக்கை எடுப்பாங்க. அதனால, இந்த விஷயத்தை ஆராயிறதை விட்டுட்டு ஆதரிப்போம். அதையும் மீறி எதாவது நடந்தா கேள்வி கேட்போம். தினமும் உலகம் முழுக்கப் பல லட்சம் பேர் கொரோனாவால இறந்துட்டதா தகவல் வந்துட்டிருக்கு. அதனால இந்த 21 நாள்கள் தனிமைப்படுத்தி இருப்போம். நோயை வெல்வோம்."

``இந்தச் சமயத்துல படங்கள் ரீ-ரிலீஸ், ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு இதையெல்லாம் எப்படிப் பார்க்கறீங்க?"

நட்டி
நட்டி

``படங்கள் ரீ-ரிலீஸ் பண்றது, ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு, OTT தளத்துல ரிலீஸ் செய்யலாங்கிற மாதிரியான டாக் இப்ப போயிட்டிருக்கு. அதுவும் சில படங்கள் எல்லாம் வந்த சில நாட்கள்லே கொரோனாவால முடங்கியிருச்சு. தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர்கள் சங்கம், வினியோகிஸ்தர்கள் சங்கம் எல்லாம் சேர்ந்து இதுக்கான சரியான வழிமுறைகளைச் செய்வாங்கனு நம்புறேன். ஏன்னா, ஒவ்வொருவருக்கும் இதனால, தொழில் ரீதியா எவ்வளவு நஷ்டம் ஆகியிருக்கும்னு அவளுக்கும் புரியும். அதனால, நல்ல முடிவையே எதிர் பார்ப்போம்."

அடுத்த கட்டுரைக்கு