Published:Updated:

`மனைவியின் அபூர்வ திறமை, முதல் சந்திப்பு அல்வா, 43 வருட நினைவுகள்!' - பாண்டுவின் கடைசி பேட்டி

நடிகர் பாண்டு தன் மனைவி குமுதாவுடன்
நடிகர் பாண்டு தன் மனைவி குமுதாவுடன்

``43 வருட தாம்பத்தியம் எங்களுடையது. பிசினஸ், சினிமா ரெண்டுலேயும் நான் சக்ஸஸ்ஃபுல்லா இருக்கேன்னா அதுக்கு காரணம் குமுதாதான்’’ என்றவரை, அன்பும் காதலுமாகப் பார்க்கிறார் திருமதி பாண்டு.

`பத்திரமா இருங்க’ என்று சில வாரங்களுக்கு முன்னால் பத்திரிகையாளர்களை மிகுந்த அக்கறையுடன் எச்சரிக்கை செய்த நடிகர் பாண்டு, இப்போது நம்முடன் இல்லை. நடிகர் பாண்டுவும் அவர் மனைவி குமுதாவும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சையெடுத்து வந்தனர். இதில், நடிகர் பாண்டு இன்று அதிகாலை உயிரிழந்துவிட்டார்.

Actor Pandu with his Wife
Actor Pandu with his Wife

சில வாரங்களுக்கு முன்னாள் நடிகர் பாண்டுவின் பேட்டிக்காக அவரிடம் பேசியபோது, ``என்னைப் பல பேர் பல தடவை பேட்டி எடுத்துட்டாங்க. என் மனைவி குமுதா திறமையான ஓவியர். `திலகா’ங்கிற புனைப்பெயர்ல பத்திரிகைகள்ல ஓவியங்கள் வரைஞ்சிட்டு வந்தவர். இப்போ தஞ்சாவூர் பெயின்டிங் வரைஞ்சு பிசினஸும் செய்துட்டு வர்றார். அவங்களை மாதிரி சக்ஸஸ்ஃபுல் பெண்களை அவள் விகடனுக்கு நீங்க பேட்டி எடுக்கலாமே’’ என்றார். `அப்போ ஃபேமிலி இன்டர்வியூ எடுத்துடலாமா சார்’ என்றதும், ``நல்ல விஷயம், நான் ரெடி’’ என்றார். அதுவே, அவரது கடைசி பேட்டியாக இருந்திருக்க வேண்டாம்!

அந்தப் பேட்டி இங்கே...

``நான் ஓவியம் தொடர்பான டாக்டரேட்டை ஃபிரான்ஸில் முடிச்சிட்டு கேப்பிடல் லெட்டர்ஸ் அப்படிங்கிற கம்பெனியை சென்னையில் ஆரம்பிச்சு பிசியா இருந்தேன். குமுதா கதைகளைப் படிச்சிட்டு அதுக்கேத்தபடி படங்கள் வரையுற இல்லஸ்ட்ரேஷன் ஆர்ட்டிஸ்ட். ரொம்ப வேகமா வரைவாங்க. ஓவியங்கள்ல கண்கள் வரையறப்போ, எல்லாரும் பிளாக் கலர்ல வொயிட் கலரை டச் பண்ணுவாங்க. ஆனா, இவங்க டச் பண்ணாமலே அந்த ஏரியாவை அப்படியே வொயிட்ல விடுவாங்க. அது ரொம்ப அபூர்வமான திறமை. அதை நான் இவங்ககிட்ட பார்த்தேன். ராமர் பட்டாபிஷேகம் இவங்களோட தஞ்சாவூர் பெயின்டிங்ல அத்தனை தெய்வீகமா இருக்கும்’’ என்று மனைவியை பெருமிதமாகப் பார்த்தவரிடம், `உங்களுடையது காதல் திருமணமா’ என்றோம். அவருக்கே உரிய சிரிப்பை உதிர்த்தவர் பேச ஆரம்பித்தார்.

நடிகர் பாண்டு தன் மனைவி குமுதாவுடன்
நடிகர் பாண்டு தன் மனைவி குமுதாவுடன்

``எங்களோடது பெத்தவங்க பார்த்து வெச்ச திருமணம்தான். முதல் தடவை அவங்களை ஒரு ஃப்ரெண்ட் வீட்லதான் மீட் பண்ணேன். அது பொண்ணு பார்க்கும் படலம்கிறது எனக்கும் தெரியாது, அவங்களுக்கும் தெரியாது. குமுதாவைப் பார்க்கிறது அதுதான் ஃபர்ஸ்ட் டைம்னாலும் அதுக்கு முன்னாடியே அவங்களோட ஓவியங்களைப் பார்த்திருக்கேன். ஸோ, அவங்களோட பேரைச் சொல்லி என்கிட்ட அறிமுகப்படுத்தினதுமே எனக்கு இவங்க யார்னு தெரிஞ்சுபோச்சு. அப்புறம் இவங்க நல்லா சமைப்பாங்கன்னு சொன்னாங்க’’ என்ற பாண்டுவைத் தொடர்ந்தார் குமுதா.

``திடீர்னு ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போகலாம்னு அப்பா கூப்பிட்டார். நானும் வந்தேன். வந்த இடத்துல ஏதாவது ஸ்வீட் பண்ணேன்னு சொன்னாங்க. நானும் கேரட் அல்வா செஞ்சேன். இவருக்குக் கொடுக்கச் சொன்னாங்க. நானும் கொடுத்தேன். இவரோட ஓவியங்களை நானும் பார்த்திருக்கேன். பாண்டுன்னு சைன் போட்டு பக்கத்துல ஒரு `ஃ’ வைப்பாரு. யாருப்பா இந்த பாண்டுஃ-னு என் அப்பாகிட்ட பல தடவை கேட்டிருக்கேன். கடைசியில அவர்தான் எனக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளைன்னு தெரிஞ்சதும் எனக்கு பயங்கர ஷாக்’’ என்று சிரித்த தன்னுடைய இணையின் பேச்சுக்குள் நுழைந்தார் பாண்டு.

நடிகர் பாண்டு தன் மனைவி குமுதாவுடன்
நடிகர் பாண்டு தன் மனைவி குமுதாவுடன்

``அது ஒண்ணுமில்லீங்க. இவ்ளோ அழகான ஹஸ்பண்டான்னு ஷாக்காயிட்டாங்க. அப்புறம் இன்னொன்னு கவனிச்சீங்களா? என்னைப் பார்த்த மொத தடவையே எனக்கு அல்வா கொடுத்துட்டாங்க’’ என்று வெடித்துச் சிரிக்கிறார் பாண்டு. கணவரின் சிரிப்பில் இணைந்துகொண்டார் குமுதா பாண்டு.

``நான் ஒரு கம்பெனி சக்ஸஸ் ஆகுற அளவுக்கு பேர் வைப்பேன். எதிர் சக்திகள் அந்த கம்பெனியைப் பாதிக்காத மாதிரி லோகோ, எம்ப்ளம் உருவாக்குவேன். பல கம்பெனிகளுக்கு, காலேஜ்களுக்கு நான் டிசைன் பண்ணிக்கொடுத்திருக்கேன். அ.தி.மு.க கொடியும் நான் டிசைன் செஞ்சதுதான். பிரம்ம முகூர்த்த நேரத்துலதான் ஓவியங்கள் வரைவேன். நான் பிசினஸ்ல ஓஹோன்னு இருக்கிறப்போதான் சினிமா வாய்ப்பு வந்துச்சு. சினிமா ஷூட்டிங் போயிட்டா பிசினஸ் பத்தி சிந்திக்க மாட்டேன். பிசினஸ் நேரத்துல சினிமா பத்தி யோசிக்க மாட்டேன்’’ என்கிற நடிகர் பாண்டு, தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்து ஓவியம் வரைந்திருக்கிறார்.

நடிகர் பாண்டு தன் மனைவி குமுதாவுடன்
நடிகர் பாண்டு தன் மனைவி குமுதாவுடன்
கொரோனா தொற்று : நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்... அதிமுக கொடி வடிவமைப்பில் பங்காற்றியவர்!

``43 வருட தாம்பத்தியம் எங்களுடையது. பிசினஸ், சினிமா ரெண்டுலேயும் நான் சக்ஸஸ்ஃபுல்லா இருக்கேன்னா அதுக்கு காரணம் குமுதாதான்’’ என்றவரை, அன்பும் காதலுமாகப் பார்க்கிறார் திருமதி பாண்டு.

அடுத்த கட்டுரைக்கு