கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“நடிகன்னா தினமும் நடிக்க வேண்டியதில்லை!”

பசுபதி
பிரீமியம் ஸ்டோரி
News
பசுபதி

அது ஒரு பழைய நகரம். அதுதான் ஒரிஜினல் மெட்ராஸ். அங்கே ஒவ்வொரு தெரு உருவானதற்கும் ஓராயிரம் கதை இருக்கு.

குழந்தை இயேசுவாக ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸில் பசுபதி அசத்தியிருக்கிறார். நவீன நாடகம், திரைப்படம், வெப்சீரிஸ் என எல்லாக் களங்களிலும் தன்னை அழுத்தமாய் நிறுவும் பசுபதியிடம் பேசினேன்.

“வண்ணாரப்பேட்டையிலதான் பிறந்து வளர்ந்தேன். சும்மா சுத்திக்கிட்டே இருந்தேன். பத்தாவதுக்கு மேலே படிப்பு ஏறவே மாட்டேங்குது. 16 வயசு வரைக்கும் இங்கேதான். ஒரே பாட்டும் இசையும் பறையுமா இங்கே வாழ்க்கையே வேறவிதமாய் இருக்கும். அடிக்கிற பறை காது வழியா புகுந்து மனசுக்குள்ள நுழையும். வெளியே வந்து இரண்டு குத்து குத்தி ஆட்டம் போட்டாதான் அடங்கும். எதுக்கோ அல்லயன்ஸ் பிரான்ஸ் வந்தவன் அங்கே தெருக்கூத்து, நவீன நாடகம் கத்துக் கொடுக்கறதைப் பார்த்திட்டு ‘என்னையும் சேர்த்துக்கிறீங்களா’ன்னு கேட்டேன். சரின்னு சொன்னதும் அந்த ஜோதியில் கலந்திட்டேன். அதுக்கப்புறம் அதுவே சினிமாவுக்கு வரக் காரணமா இருந்தது.”

“நடிகன்னா தினமும் நடிக்க வேண்டியதில்லை!”

`` ‘சார்பட்டா பரம்பரை’யில் உங்கள் கேரக்டர் குறித்து அதிக எதிர்பார்ப்பிருக்கிறதே?’’

“மறுபடியும் வடசென்னைதான். அது ஒரு பழைய நகரம். அதுதான் ஒரிஜினல் மெட்ராஸ். அங்கே ஒவ்வொரு தெரு உருவானதற்கும் ஓராயிரம் கதை இருக்கு. அவங்களை இதுவரை சினிமா கேலி செய்து பழகியிருக்கு. அவங்க பேசுகிற மொழிகூட கிண்டலுக்கு ஆளாகுது. அவங்களைக் கொடூரமாகச் சித்திரிக்கிறோம், பயன்படுத்திக்கிட்டு ஒதுக்கி வைக்கிறோம். நானே அங்கே திரியும்போது தியாகராஜா கல்லூரி பக்கம், கல் மண்டபம்னு எல்லா இடத்திலும் பாக்ஸிங் பார்த்திருக்கேன். பாக்ஸர்களை வடசென்னை மக்கள் கொண்டாடுவாங்க. நான் வேடிக்கை பார்த்தவங்க மாதிரி நானே நடிக்கற வாய்ப்பு கிடைக்கிறது முக்கியமான விஷயம்தானே?”

“நடிகன்னா தினமும் நடிக்க வேண்டியதில்லை!”

``அதிகமா படங்கள் நடிக்கிறதில்லையே, ஏன்?’’

“நானே தேர்ந்தெடுத்ததுதான் இந்த இடைவெளி. இரண்டு விஷயங்கள் இருக்கு. ஒண்ணு, சும்மாயிருக்காமல் அடுத்தடுத்து படம் நடிச்சுக்கிட்டே இருக்கணும். இல்லைன்னா பிடிச்சதை மட்டும் தேர்ந்தெடுத்துப் பண்ணணும். நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். எனக்குப் பிடிக்கலைன்னா நடிக்க மாட்டேன். நடிகன்னா தினமும் நடிச்சுக்கிட்டு இருக்கிறதுன்னு அர்த்தம் இல்லை. இப்பக்கூட இந்திரா சுப்பிரமணியன்னு ஓர் இளைஞர் ‘நவம்பர் ஸ்டோரி’ன்னு வெப் சீரிஸுக்குக் கதை சொன்னார். அவ்வளவு ஃப்ரஷ் டீம். உடனே சரி சொல்லிட்டு ஷூட்டிங் ஸ்பாட் போயிட்டேன். எதுவும் பிடிச்சாத்தான் செய்யறதுன்னு வழக்கம் ஆயிடுச்சு. இப்பப் பாருங்க, அந்த சீரிஸ் பெரிய ஹிட்டு.

ஹீரோ, காமெடி, வில்லன்ங்கிற மாதிரி நடிப்பை இங்கே பிரிச்சு வச்சுட்டாங்க. நடிகன்னா இந்த மாதிரி வகையெல்லாம் பிரிக்க வேண்டாம். வடிவேலு சிறந்த காமெடி நடிகர்னு ஊரே அறியும். ஆனால் அவருக்கு படு சீரியஸ் ரோல் கொடுத்தால் பின்னி எடுத்துவிடுவார். நாமே சார்லி சாப்ளின்னா காமெடி நடிகராக மட்டுமே பார்க்கிறோம். அவர் ஒரு பிரெஞ்சு படத்தில் வில்லனாக அப்படியே உருமாறி நடிச்சிருப்பார். சிலருக்கு அவங்களோட ஒரு பக்கம் பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகி அதுவே பிரபலம் ஆகிவிடுகிறது. பணம் வேணும்தான். ஆனால், நான் அதைத் தேடிப் போறது கிடையாது. நல்ல உழைப்புக்குப் பின்னாடி அதுவே தேடிட்டு வருகிற இடங்கள் அமையும்னு நம்புறேன்.”

“நடிகன்னா தினமும் நடிக்க வேண்டியதில்லை!”

``சென்னையை விட்டுத் தள்ளிப் போயிட்டீங்க..?’’

“சிட்டியில பறவைகளின் சத்தமே கேட்க முடியல. நல்ல உணவிற்கான வழி தெரியவில்லை. நாமே கொஞ்சம் நிலத்தை வாங்கிப் போட்டு விவசாயம் செய்து பார்த்தால் என்னன்னு தோணுச்சு. நெல் பயிரிட்டு அதைச் சாப்பிட, சந்தோஷம் அதிகமாகியது. வரும்போது தங்கிப் பார்க்க ஒரு வீடு கட்டினால் என்னன்னு நினைக்க அதையும் கட்டியாச்சு. வந்து போக கஷ்டமா இருக்கேன்னு இங்கேயே தங்கிட்டோம். ஷூட்டிங் போக வயல் வரப்புக்குள்ளே இறங்கிக் கிடக்கிறேன். பொழுதைக் கழிக்கிறேன். நான் ஷூட்டிங் போகும்போது மனைவி வயலைப் பார்த்துக்கறாங்க. வேங்கை, வில்வம், வேம்பு, மகோகனின்னு மரங்கள் வளர்க்கிறோம். உரம் இல்லாத உணவு, காய்கறி, பெட்ரோல் வாசனை கலக்காத காத்துன்னு ஆரோக்கியமான வாழ்க்கை. நிம்மதியா இருக்கு.”