Published:Updated:

``காக்காவை வெச்சு படம் பண்ணணும் தலைவானு சொன்னார்!” - ஜனநாதன் நினைவுகள் பகிரும் பசுபதி

``ஜனா பாதை... மக்கள் பாதை... அவருடைய படங்களிலெல்லாம் சமூக பிரச்னைகளே மேலோங்கி இருக்கும். அவரோடு பணிபுரிந்ததிலும் சரி, நண்பராகப் பயணித்ததிலும் சரி... மறக்க முடியாத பிரமாதமான நினைவுகள் அவை." - பசுபதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 14) அன்று இயற்கையில் கலந்தார் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். அவரோடு திரைப்படத்துறையில் பயணித்தவர்கள் நிறைய பேர். அதில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் பசுபதி. ஜனநாதன் இயக்கிய முதல் படமான `இயற்கை’ படத்தில் பாதிரியாராக நடித்த அவர், இரண்டாம் படமான `ஈ’யில் போராளி வேடம் தாங்கி நடித்திருப்பார். அந்த வேடம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. இதில் அதிகம் தெரியாத விஷயம் இரண்டு பேருமே நெருங்கிய நண்பர்கள். பக்கத்து பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்கள். நண்பரின் இழப்புக்கு மத்தியில் கலங்கிய மனத்துடன் இருந்தவரிடம் பேசினோம்.

எஸ்.பி.ஜனநாதன்
எஸ்.பி.ஜனநாதன்

``1940, 1950-களில் சென்னைக்கு வந்த பெற்றோர்களின் பிள்ளைகள் ஜனா போன்றவர்களும் நானும். சொல்லப்போனால் கிராமத்தையே பார்க்காத ஒரு தலைமுறை. ஆனா, கிராமத்துப் பாசம் மட்டும் எங்களுக்குள் நிறைய இருக்கும். அப்படி கிராமத்து பாசம் விட்டுப் போயிடக்கூடாதுன்னுதான் விவசாயத்தோடு ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள நிலம் வாங்கி விவசாயம் செஞ்சிட்டு வர்றேன். அதே சிந்தனை உடையவர்தான் ஜனநாதனும். அவர் சென்னை மயிலாப்பூரில் வளர்ந்தவர். அவருக்கு சென்னை பாஷை அத்துப்படி.

என்னைப் பார்க்கும்போதெல்லாம் `நானும் நிலம் வாங்கணும் நண்பா...’ என்று சொல்லிக்கிட்டே இருப்பார். அப்படி வாங்கினதுதான் பழனிக்கு அருகில் உள்ள கூட்டுப்பண்ணை. அந்த முயற்சி தோல்வியில் முடிந்தாலும், அவர் விவசாயம் செய்யணுங்கிறதுக்காகத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டோதான் இருந்தார். மண்ணையும் மனுஷனையும் காப்பத்தக்கூடியது விவசாயம். அதுவும் ரசாயன உரங்கள் போடாம சாப்பிடறதுக்கு ஏத்த உணவுப் பொருளை விளைவிக்கணும். அதில் வியாபார நோக்கம் இருக்கக் கூடாது. அந்த விவசாயம்தான் அனைவருக்கும் ஏற்றது என்று சொல்வார். அந்த மாதிரிதான் நான் இயற்கை விவசாயம் செஞ்சிட்டு வர்றேன்.

பசுபதி
பசுபதி

அவரும் நானும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர் வடசேரி, நான் திருமங்கலக்கோட்டை. பக்கத்து பக்கத்து ஊர்கள். அவருடைய முதல் படத்துக்கே என்னை அணுகினார். `இயற்கை’ என்கிற படம். நான் `தூள்' படம் பண்ணிட்டு இருந்தேன். முடியை நீளமா வளர்த்திருந்தேன். பாதிரியார் கேரக்டர் என்று சொன்னார். `முடி நீளமா இருக்கிறதே?’ என்றேன். `பாதிரியார்னா ஷேவ் பண்ணி, கட்டிங் பண்ணி நீட்டா இருக்கணுமா என்னா? நீ ஜடையோடவே வந்து நடி தலைவா’ என்றார். அதே தோற்றத்துலதான் அந்தப் படத்துல வருவேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரை எல்லோரும் கம்யூனிஸ்ட், போராளி என்று சொல்வார்கள். ஒரு போராளி கம்யூனிஸ்ட்டாதான் இருக்கணும் என்று அவசியமில்லை. மக்கள் மேல அன்பு உள்ள எல்லாருமே போராட்டக்காரர்கள்தாம். அப்படியொரு போராளியா அவருடைய இரண்டாவது படமான `ஈ’ படத்தில் என்னை காட்டியிருப்பார். அதில் சேகுவாரா அணியும் தொப்பி மாடலில் என்னுடைய கேரக்டருக்கும் தொப்பி போட்டுவிட்டார். அந்தப் தொப்பி முன்பு ஜனநாதனும் அணிந்திருந்தார். நெல்லை மணி என்கிற அந்தப் போராட்ட கேரக்டர் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது, படமும் 100 நாள்கள் ஓடி பேர் வாங்கியது.

பொதுவுடைமை என்கிற புறம்போக்கு
பொதுவுடைமை என்கிற புறம்போக்கு

`இயற்கைக்கு முன்னாடி அறிவியல் ஒரு விஷயமே கிடையாது. ஏன்னா, இயற்கைக்கு மேல ஒண்ண நாம படைக்க முடியாது’ என்பார். அறிவியல் என்பது ஊறுகாய் மாதிரிதான் இருக்க வேண்டுமே ஒழிய, அது நம்மை ஆளக்கூடியதா இருக்கக் கூடாது. மருத்துவ அறிவியல் அப்பாவி மக்களை எப்படியெல்லாம் சிதைச்சிட்டு இருக்கு என்பதை ஈ படத்தில் காட்டியிருப்பார். நம்முடைய இயற்கையான வாழ்வை தொந்தரவு செய்கிற எல்லாமே தவிர்க்க வேண்டியவைதான். அதுதான் இயற்கையின் தத்துவம். அவரும் நானும் இப்படி நிறைய பேசியிருக்கிறோம். `மாற்றலாம் தலைவா... நிறைய மாற்றலாம்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

ஒருமுறை என் வீட்டுக்கு வந்தார். அப்போது எங்க வீட்டில் ஒரு காக்கா வளர்த்துக்கொண்டிருந்தோம். அந்தக் காக்கா எங்க வீட்டுக்குள்ளேயும் வீட்டைச் சுற்றியும் வந்துகொண்டிருக்கும். எங்க தோள்களிலெல்லாம்கூட வந்து உக்காந்துக்கும். அவர் வந்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய மடி மீது வந்து உக்காந்துக்குச்சு. அந்தக் காக்காவைப் பார்த்துட்டு `காக்காவை மையமா வெச்சு ஒரு படம் பண்ணணும் தலைவா... இந்தக் காக்காவுக்கு பயிற்சி கொடுங்க’ என்று சொன்னார். `அதெல்லாம் வேணாம் தலைவா, இந்தக் காக்கா ஏதோ உடம்பு சரியில்லாம எங்க வீட்டுல சுத்திகிட்டு இருக்கு. நாளைக்கே உடம்பு சரியாயிட்டா ஓடிப் போயிடும்’ என்று சொன்னேன். அவர் வீட்டுக்குப் போயிட்டும் போன் பண்ணி இந்தக் காக்காவைப் பற்றி பேசிக்கிட்டே இருந்தார். `இத வெச்சு ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணணும்’ என்று சொல்லிட்டே இருந்தார்.

பேராண்மை
பேராண்மை
`இயற்கைக்கு எதிரான எதையும் வெறுக்கிறேன்!' - இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் பசுமை பக்கங்கள்

அந்த அளவுக்கு மனுசனுங்க மாதிரி, மற்ற உயிர்களிடத்திலும் அன்பு செலுத்திட்டு இருந்தார். சமீபத்துல ஓ.டி.டில ஒரு படம் பார்த்தேன். ஒரு பறவை, ஒரு வீட்டுக்குள் நுழையும். அந்த வீட்டில் பல பிரச்னைகள் இருக்கும். ஆனா, அந்தப் பறவை இருக்கும்வரை வீட்டில் இருப்பவர்களெல்லாம் அந்தப் பறவையை விரட்டுவதிலும், திட்டுவதிலுமே கவனமாக இருப்பாங்க. அந்தப் பறவை வீட்டைவிட்டு பறந்து செல்லும்போது அந்த வீட்டிலுள்ள பிரச்னைகளெல்லாம் காணாமல் போயிருக்கும். இந்தக் கதையை ஜனாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். என்னை ஹீரோவா வெச்சு ஒரு கதை பண்ணணும்னு சொல்லிகிட்டே இருந்தார். `நேரம் வரும்போது நடக்கும் தலைவா விடுங்க’ என்று சொல்வேன்.

நிறைய விவசாயத்தைப் பத்தி பேசுவார். நம்முடைய விவசாயம் என்ன மாதிரி சுரண்டல்களுக்கெல்லாம் ஆளாகியிருக்கு என்பார். விவசாயிகள் பிரச்னை, ஏழை எளிய மக்கள் எப்படியெல்லாம் சுரண்டல்களுக்கு உள்ளாகிறாங்க என்று பேசிக்கிட்டே இருப்பார். சுயலாபத்துக்காக, அதுவும் உடனடித் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் கண்டுபிடிப்புகள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளே அல்ல. அது திருட்டுத்தனம். சுரண்டலின், ஊழலின் இன்னொரு வடிவம் என்பார். அதுதான் அவருடைய படத்திலும் பிரதிபலித்தது. அவர் எடுத்தவையெல்லாம மக்கள் சினிமா. நிறைய பேரு மக்கள் சினிமா எடுத்திருக்காங்க, ஆனா, இவரைப்போல கருத்தளவில் வலிமையா எடுத்தவங்க மிகக் குறைவு.

எப்போதுமே இயற்கையை நேசிக்கிறவங்க சாப்பாட்டு விஷயத்தில் ரொம்ப கவனமா இருப்பாங்க. ஆனா, ஜனநாதன் மக்களுக்கான நல்ல சிந்தனை சாப்பாடு போடணுங்கிற நோக்கத்துல அவரை சரியா கவனிச்சுக்காம விட்டுட்டார்.

எப்போதும் சிந்தனை... சிந்தனை... சிந்தனை என்றே இருந்துவிட்டார். மக்களுக்கு அந்நியப்பட்டு ஒரு விஷயத்த அவர் செஞ்சதில்ல. அதை அவர் படங்கள பார்த்தாலே தெரியும். எல்லோரிடமும் அன்பாக இருப்பார். அந்த அன்புதான் அவரிடத்தில் ஓர் அடக்கத்தையும் எளிமையையும் கொண்டு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஈ
Vikatan

எங்களுக்கெல்லாம் ஒரு முன்னத்தி ஏர்... அவருடைய முதல் படம் இயற்கை காதலை மையப்படுத்தியது. அதை அவருடைய அடையாளத்துக்காக எடுத்தார். ஆனால், அதற்குப் பிறகு எடுத்த ஈ, பேராண்மை, பொதுவுடைமை என்கிற புறம்போக்கு இப்போ ரிலீஸுக்குக் காத்திருக்கும் `லாபம்’ உள்ளிட்ட படங்கள் எல்லாம் மக்கள் பிரச்னையை மையப்படுத்திய படங்கள். அதில் வெற்றியும் பெற்றார்.

ஜனா பாதை... மக்கள் பாதை... அவருடைய படங்களிலெல்லாம் சமூக பிரச்னைகளே மேலோங்கி இருக்கும். அவரோடு பணிபுரிந்ததிலும் சரி, நண்பராகப் பயணித்ததிலும் சரி... மறக்க முடியாத பிரமாதமான நினைவுகள் அவை. அவர் அடிக்கடி ஒன்றைச் சொல்வார். `இயற்கைக்கு எதிரான எதையும் நான் வெறுக்கிறேன். எதையேனும் அழித்து நீ வாழத் துடிப்பது இயற்கைக்கு எதிரானது’ இதுதான் அவர் மரணம் சொல்லும் செய்தி” என்றார் கனக்கும் நெஞ்சோடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு