Published:Updated:

`` `மாஸ்டர்' ஓப்பனிங்ல விஜய்யின் ஒரு நிமிஷக் கொண்டாட்டம்... !" - பிரேம்

பிரேம்
பிரேம்

`நேபாளி', `உன்னைப் போல் ஒருவன்', `விக்ரம் வேதா' போன்ற படங்களில் நடித்திருந்த பிரேம், விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் `மாஸ்டர்' படத்தில் நடித்தது குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``4-வது படிச்சிட்டிருக்கும்போதே எனக்கு சினிமா மேல லவ் இருந்தது. இந்தக் காதலுக்குக் காரணம் கமல் சார். அவரோட படங்கள் பார்த்துட்டு ஸ்கூல்ல நடக்குற டிராமா, டான்ஸ்னு எல்லாத்துலயும் கலந்துக்குவேன். `உன்னைப் போல் ஒருவன்' படத்துல கமல் சார்கூட சேர்ந்து நடிச்சதைப் பெரிய பொக்கிஷம்னு சொல்வேன். முக்கியமா சினிமாவோட லெஜண்ட்களான மோகன்லால் மற்றும் வெங்கடேஷ்கூட நடிக்கிற வாய்ப்பை கமல் சார்தான் ஏற்படுத்திக் கொடுத்தார். ஷூட்டிங் ஸ்பாட்டுல அவரை `வாவ்'னு பார்த்துட்டு இருப்பேன்'' என்ற நடிகர் பிரேம், சினிமாவில் தான் கடந்து வந்த பாதைகளை பகிர்ந்துகொண்டார்.

பிரேம்
பிரேம்

``சினிமால வாய்ப்பு தேடிக்கிட்டிருந்த காலத்துல பாரதிராஜா சாரோட `கிழக்குச் சீமையிலே' படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அதுவும் ஆடிஷன்ல கலந்துகிட்டதுக்கபுறம்தான் கிடைச்சது. படத்தோட ஷூட்டிங்கும் ஆரம்பிச்சிடுச்சு. அப்ப எனக்கு கல்யாணமாகி மூணு வயசுல குழந்தை இருந்தது. அந்த சமயத்துல, என்னைப் பார்க்க வீட்டுல இருந்து மனைவி, மாமனார் எல்லாரும் வத்தலகுண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தாங்க. வந்தவங்களை மதுரை வரைக்கும் கொண்டுபோய் விட்டுட்டு வர்றதுக்காக போயிருந்தேன். ஏன்னா, அன்னைக்கு எனக்கு ஷூட்டிங் இல்லை. இதைப் பார்த்த சில பேர் `பிரேம் வெளிய ஊர் சுத்திட்டு வர்றார்'னு இயக்குநர்கிட்ட சொல்லிட்டாங்க. உடனே, டைரக்டர் கூப்பிட்டு, `ஒழுக்கம்தான் எனக்கு முக்கியம், `Get out'னு சொல்லிட்டார்.''

`` `நீ முதல் படத்துலே இவ்வளவு மோசமா இருந்தா எப்படி'னு சொல்லி போகச் சொல்லிட்டார். அழுது கெஞ்சி கதறிப் பார்த்தேன். அவரோட கால்லகூட விழுந்துட்டேன். நான் சொன்ன எதுவும் அவருக்குக் கேட்கல. அதுக்கப்புறம் தேனில அண்ணா வீட்டுக்குப் போயிட்டேன். அங்க போனதுக்குக் காரணமே தற்கொலை பண்ணிட்டு செத்துடலாம்னுதான். ஆனா, என்னோட மைண்ட் வாய்ஸ் புரிஞ்ச மணி அண்ணா, என்னை சென்னைக்கு அனுப்பி வெச்சார். அதுல இருந்து வெளில வர்றதுக்கு சில மாதங்கள் தேவைப்பட்டது. இந்த இடைவெளியில இயக்குநரும் படம் முடிச்சிட்டு வந்திருந்தார். ஒரு குடும்ப நிகழ்ச்சில அவரைச் சந்திச்சப்ப நடந்ததைச் சொன்னேன். `ஸாரி டா தெரியாம பண்ணிட்டேன்'னு சொன்னார். எப்படினாலும் இழந்தது இழந்ததுதான். நடுவுல நிறைய கஷ்டங்கள் பார்த்ததுக்குப் பிறகு ஏவி.எம் சரவணனின் சீரியல்ல நடிக்க வாய்ப்பு வந்தது. ஒருநாள் சம்பளம் 500 ரூபாய்னு சீரியல் வாழ்க்கை ஆரம்பிச்சது. தொடர்ந்து `கங்கா யமுனா சரஸ்வதி', `அண்ணாமலை'னு நிறைய நல்ல சீரியல்ல நடிச்சு தவிர்க்க முடியாத முகமாக டிவி சேனல்கள்ல இருந்தேன்.''

`` `மாஸ்டர்' ஓப்பனிங்ல விஜய்யின் ஒரு நிமிஷக் கொண்டாட்டம்... !" - பிரேம்

``இருந்தும் சினிமால ஹீரோ ஆசைவிடவே இல்ல. இந்த நேரத்துல ஹீரோவா நடிக்க ஒரு போன் கால் வந்தது. என்னால நம்பவே முடியல. `பெரிய ஆளோட படம் நீங்கதான் ஹீரோவா நடிக்கணும்'னு சொல்லிட்டுப் போனை வெச்சிட்டாங்க. அடுத்த நாள் அங்க போனதுக்கப்புறம்தான் தெரிஞ்சது கலைஞர் ஐயா கதை, வசனம் எழுதுற படத்துக்கு நடிக்கக் கூப்பிட்டிருக்காங்கனு. `உங்க சீரியல் பார்த்துட்டு கலைஞர் ஐயாவே உங்களை ஹீரோவா கமிட் பண்ணச் சொன்னார்'னு சொன்னாங்க. அதிர்ச்சி தாங்கல. படத்தோட பூஜை ஏவி.எம் ஸ்டூடியோவுல மிக பிரமாண்டமா நடந்தது. கலைஞர் ஐயா, முத்துராமன் சார், பாலசந்தர் சார், பாரதிராஜா சார் எல்லாருமே வந்திருந்தாங்க. அங்கதான் முதல்முறையா ஐயாவை நேர்ல பார்த்தேன். மேடையில ஐயா உட்கார்ந்திருக்கார். நான் கீழே இருந்தேன். அங்கே இருந்தவங்ககிட்ட `இந்தப் பையனை நான்தான் செலக்ட் பண்ணுனேன்'னு சொன்னார். பெருமையா இருந்தது.''

``எனக்கு ஜோடியா மீனா நடிச்சிருந்தாங்க. அவங்க நல்லா டான்ஸ் ஆடுவாங்க. நான் என் போக்குல ஆடிக்கிட்டிருப்பேன். கொஞ்சம்கூட டான்ஸ் ஆட வராது. இப்படியே வாழ்க்கை போயிட்டிருந்த நேரத்துல சீரியலை விட்டு விலகி முழுசா சினிமாவுக்கு முயற்சி பண்ண ஆரம்பிச்சேன். எத்தனையோ பேரை நேர்ல சந்திச்சாலும் எனக்கான வாய்ப்பு கிடைக்கவே இல்ல. அப்போ `ஜோடி நம்பர் ஒன்' வாய்ப்பு வந்தது. ரியாலிட்டி ஷோ பத்தி யாருக்கும் அப்ப தெரியாதனால முதல்ல கலந்துக்க யோசிச்சேன். அப்ப, `ஒவ்வொரு எபிசோட்டுக்கும் சம்பளம் தருவாங்க'னு சொன்ன உடனே சம்மதம் சொல்லிட்டேன். ஏன்னா, அப்ப பொருளாதரா சூழல் கொஞ்சம் சரியில்லாம இருந்தது. இந்த நிகழ்ச்சிதான் எனக்கும் டான்ஸ் தெரியும்னு என்னை நம்ப வெச்சது. ஆடியன்ஸுக்கு மத்தியில என் பெயர் நல்ல ரீச் ஆனது. அதுக்கப்புறம் தொடர்ந்து சில படங்கள் பண்ணிட்டிருந்தேன். அப்ப எனக்கு கொஞ்சம் திருப்புமுனையைக் கொடுத்த படம்தான் `விக்ரம் வேதா'. இந்தப் படம் மூலமாதான் எனக்கு `மாஸ்டர்' படத்தோட வாய்ப்பும் வந்தது."

`` `மாஸ்டர்' ஓப்பனிங்ல விஜய்யின் ஒரு நிமிஷக் கொண்டாட்டம்... !" - பிரேம்
விஜய்க்கு டிப்ரஷன்?! - `மாஸ்டர்' போஸ்டர்கள் சொல்லும் சீக்ரெட்ஸ் என்ன?

``சத்யம் தியேட்டர்ல `விக்ரம் வேதா' பார்த்துட்டு வெளில வந்தப்ப போன் கால் வந்தது. `படம் பார்த்தேன் பிரேம், உங்க நடிப்பு செம'னு சொன்னாங்க. `சார் யார்'னு கேட்டேன். `இயக்குநர் லோகேஷ் கனகராஜ்'னு சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. `மாநகரம்' படமும் ரிலீஸாகி சூப்பரா ஓடிக்கிட்டிருந்தது. அப்புறம் தொடர்ந்து அவர்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன். ஒருநாள் யதார்த்தமா சந்திச்சப்ப, `உங்க படத்துல எப்போ வாய்ப்பு தரப் போறீங்க'னு கேட்டேன். `சொன்னா நம்ப மாட்டீங்க பிரேம். உங்களை மனசுல வெச்சுதான் ஒரு கதை எழுதிக்கிட்டிருக்கேன். ஆனா, கொஞ்சம் க்ரே ஷேட் இருக்கு. `விக்ரம் வேதா' மாதிரி ஆகிடும். அதனால நீங்க பண்ண வேண்டாம்'னு சொல்லிட்டார். அப்புறம்தான் தெரிய வந்தது `கைதி' படத்துல நரேஷ் கேரக்டர் பத்திச் சொல்லியிருக்கார்னு. தொடர்ந்து அவர்கூட தொடர்புல இருந்தேன். அப்ப விஜய் படத்துல நடிக்க வாய்ப்பு கொடுத்தார். `கேமியோ ரோல்தான் பண்ணப் போறீங்க பரவாயில்லயா'னு கேட்டார்."

CAA, ஐ.டி ரெய்டு, `விஜய் 65'... `மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவின் ஸ்கெட்ச்!

`` `தளபதி படத்துல சின்ன ரோலா இருந்தாலும் ஓகே'னு கமிட்டாகிட்டேன். வேற எந்தப் படமா இருந்தாலும் கேமியோ ரோலுக்கு ஓகே சொல்லியிருக்க மாட்டேன். டெல்லி ஷூட்டிங்ல என் போர்ஷன் இருந்தது. தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அங்கதான் இருந்தாங்க. விஜய் சாரோட டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப டேக் வாங்காம உடனே மாஸ்டர் சொல்றதைப் புரிஞ்சிட்டு உடனே ஆடி முடிச்சிடுவார். அவரோட இன்ட்ரோ பாட்டு வேற லெவல்ல இருக்கும். இந்தப் பாட்டுல ஒரு நிமிஷம் தொடர்ந்து ஆடியிருப்பார். இதுவரைக்கும் பார்க்காத தளபதியை இதுல பார்ப்பீங்க. முக்கியமா லோகேஷ் டைரக்‌ஷன் ஸ்டைல் வேற மாதிரி இருந்தது. ரொம்ப சைலன்ட்டா பேசுறார். ஸ்பாட்டே அமைதியா இருக்கும். எல்லாரும் அவங்க அவங்க வேலையைப் பார்த்துட்டிருப்பாங்க. ஃப்ரீடைம்ல நிறைய பேசிக்கிட்டிருப்பார். முக்கியமா ஷட்டில் காக் ரொம்ப நல்லா விளையாடுவார். ரெண்டு பேரும் சேர்ந்துதான் விளையாடுவோம். `மாஸ்டர்' அனுபவம் மறக்க முடியாத ஒண்ணு'' என்கிறார் நடிகர் பிரேம்.

அடுத்த கட்டுரைக்கு