Published:Updated:

"ரித்தீஷ் இருந்திருந்தா, அலையவிடாம ஜெயிக்க வெச்சிருப்பார்!" - ஐசரி கணேஷ்

எம்.குணா

நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டிடும் ஐசரி கணேஷ், தான் போட்டியிடுவதற்கான காரணத்தையும் முந்தைய நிர்வாகம் மீது தனக்கிருந்த அதிருப்தியையும் சொல்கிறார்.

ஐசரி கணேஷ்
ஐசரி கணேஷ்

நடிகர் சங்கக் கட்டடத்தில் என்ன பிரச்னை?

"முதலில் நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான 18 கிரவுண்டு இடத்தை மீட்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தினோம். நடிகர் சங்க நிலத்தின் பத்திரம் சத்தியம் சினிமாஸ் கைவசம் இருந்தது. அதனைத் திரும்பப்பெற 2 கோடியே 10 லட்சம் வேண்டும் என்றனர். அப்போது, மொத்தப் பணத்தையும் நானே தருகிறேன், சங்கத்தில் பணம் சேர்ந்த பிறகு என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்று நான் சொன்னபோது நாசரும், விஷாலும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டனர். பிறகு சென்னை தாஜ் ஹோட்டலில் நடந்த சந்திப்பில் நாசர், சரத்குமார், சத்யம் சினிமாஸ் நிர்வாகிகள் சிலர் உள்ளிட்ட சிலருடன் நானும் கலந்துகொண்டேன். அப்போது சரத்குமார், நாசரை நம்பாமல் என்னை கையெழுத்து போடச் சொல்லி நடிகர் சங்க நிலப் பத்திரத்தை வாங்கச் சொன்னார்; நானும் வாங்கினேன். நிலம் எங்கள் கைக்கு வந்துவிட்டது. அடுத்து, கட்டடம் கட்ட அனுமதி பெறவேண்டும். நாசர், விஷால் ஷூட்டிங்கிற்குச் சென்றுவிட்டனர். நான் 25 கல்லூரிகளை நடத்துபவன். அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு, நான்தான் அலைந்தேன். இதுவரை 100 கட்டடம் கட்டியிருப்பேன், ஒருமுறைகூட சி.எம்.டி.ஏ வாசலை மிதித்ததில்லை. ஆனால், நடிகர் சங்கக் கட்டடத்துக்காக ஆறுமாத காலமாகப் பலமுறை அலைந்து, திரிந்து அனுமதி பெற்றுக்கொடுத்தேன். அதுமட்டுமில்லை, நடிகர் சங்கத்தைச் சுற்றி இருக்கிற குடியிருப்புவாசிகள் தொடர்ந்த வழக்கையும் நான்தான் சமாளித்தேன்.

சங்க கட்டட நிதிக்காக, சென்னை சேப்பாக்கத்தில் நட்சத்திரக் கிரிக்கெட் நடத்த அனுமதி கேட்டனர். கிடைக்கவில்லையென என்னிடம் வந்தார்கள். இந்தியா சிமெண்ட் அதிபருக்கு ஒரே ஒரு போன் செய்தேன். பராமரிப்புத் தொகையைத் தவிர, இலவசமாக நடத்திக்கொள்ள சொன்னார். கட்டடம் கட்டுவதற்குப் பூமி பூஜை போடும்போது நாசர், குட்டி பத்மினியிடம் 'இந்தக் கட்டடம் பணம் இல்லை என்கிற ஒரு காரணத்துக்காக எப்போதும் நிற்காது' என உறுதிமொழி கொடுத்துவிட்டுத்தான் முதல் செங்கல்லை எடுத்துக் கொடுத்தேன். நட்சத்திரக் கிரிக்கெட் மூலமாகக் கிடைத்த பணத்தை வைத்து, கட்டட வேலையைத் தொடங்கினோம். இடையில் தடைபட்டபோது, சங்கக் கட்டடத்தில் கட்டப்படும் கல்யாண மண்டபத்துக்கு என் அப்பா ஐசரிவேலன் பெயரை வையுங்கள் என்று சொல்லி, ஒரு கோடி ரூபாய் நன்கொடையாகக் கொடுத்தேன். மலேசியாவில் நட்சத்திரக் கிரிக்கெட் நடத்தி, நிதி திரட்டினர். கடந்த ஒரு வருடமாக நாசர், விஷால், கார்த்தி எல்லோரும் பிஸியாக இருப்பதால் யாரும் நடிகர் சங்கம் பக்கமே எட்டிப்பார்ப்பதில்லை. செயற்குழு கமிட்டி மீட்டிங்கிற்குக்கூட வரவில்லை. இந்நேரம் கட்டடம் கட்டி, திறப்பு விழா நடத்தியிருக்க வேண்டும்; செய்யவில்லை. நிதி இல்லாததால், மீண்டும் வேலைகளில் தேக்கம் ஏற்பட்டது. அப்போது என் நண்பர் ஏ.சி.சண்முகத்திடம் பேசி, 3 கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தேன். பிறகு, நண்பர் சத்தியமூர்த்தியிடம் 2 கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்தேன். இப்போது தேர்தல் அறிவித்த பிறகு, கார்த்தி ஒரு கோடியும், விஷால் 25 லட்சமும் தருவதாக அறிவித்திருக்கிறார்கள்.

நடிகர் சங்கம்
நடிகர் சங்கம்
நாசர், ஐசரி கணேஷ், கார்த்தி

ஜே.கே.ரித்தீஷ் இறந்தது பேரிழப்பு!

கடந்தமுறை நடிகர் சங்கத் தேர்தல் நடப்பதற்கு முன்பு நாசர், விஷால் என்னைத் தேடி வந்தனர். 'சரத்குமார், ராதாரவி கட்டுப்பாட்டில் நீண்டகாலமாக நடிகர் சங்கம் இருக்கிறது. அதனால், இந்தமுறை நீங்கள் எங்களை ஆதரிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டனர். விஷால் வேண்டுகோளை ஏற்று, பாண்டவர் அணிக்கு ஆதரவு கொடுத்தேன். நாசர், விஷால் அணி ஜெயித்தது. இப்போது, அவர்களை எதிர்த்துத் தேர்தலில் நிற்பதற்குக் காரணம், பாண்டவர் அணியின் செயற்குழு உறுப்பினர்களில் இருந்து உதயா, நிதின் சத்யா, சிவகாமி, குட்டி பத்மினி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் என்னைச் சந்தித்து, 'நீங்கதான் சங்கத்துக்கு நிறைய பணத்தை செலவு செஞ்சீங்க. நல்ல பெயரை மட்டும் அவங்க வாங்கிட்டுப் போயிடறாங்க. அதனால, இந்தமுறை நீங்களே தேர்தலில் நில்லுங்கள்' என்று கேட்டதால்தான். ஏற்கெனவே பலமுறை என்னை தேர்தலில் நிற்கச் சொல்லி மறைந்த ரித்திஷ் சொன்னபோது, நான் மறுத்துவிட்டேன். இப்போது மட்டும் ரித்தீஷ் உயிரோடு இருந்திருந்தால், என்னை அறையைவிட்டே வெளியே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, அவரே என்னை வெற்றிபெற வைத்திருப்பார். அவர் மறைவு, எனக்குப் பேரிழப்பு!

"ரித்தீஷ் இருந்திருந்தா, அலையவிடாம ஜெயிக்க வெச்சிருப்பார்!" - ஐசரி கணேஷ்
ஐசரி கணேஷ்

நாடக நடிகர்களுக்குப் பணம் கொடுக்கிறேனா?!

தலைவர் பதவிக்கு யாரை நிறுத்தலாம் என்று ஆலோசித்து, ஆறு நடிகர்களைத் தேர்வு செய்திருந்தோம். எல்லோரும் ஏற்றுக்கொண்டது, பாக்யராஜ் பெயரைத்தான். திடீரென்று இருபது பேர் அவரது ஆபீஸுக்குப் போனாம். 'தலைவர் பதவிக்கு நீங்கதான் நிற்கணும்!' எனச் சொன்னவுடன், ஆடிப் போய்விட்டார். 'நான் சிலரிடம் ஆலோசனை செய்துவிட்டுச் சொல்கிறேன்' என்று சொன்னவர், மறுநாள் சம்மதம் தெரிவித்தார். எங்கள் அணியில் பொருளாளர் பதவிக்கு யாரை நிறுத்துவது என்று ஆலோசித்துக்கொண்டிருந்தபோது, கமிட்டி உறுப்பினருக்குப் போட்டியிடும் காயத்ரி ரகுராமுக்குக் கையெழுத்துப்போட பிரசாந்த் வந்தார், பொருளாளர் பதவிக்கு அவரை நிறுத்தினோம். நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், 'நானும் நாடக நடிகர்தான். எங்கேயாவது வெளியூரில் கஷ்டப்படும் நாடக நடிகரைப் பார்த்தால் சாப்பாடு செலவுக்கு நூறு, இருநூறு கொடுப்பேன்' என்று பாக்யராஜ் சார் யதார்த்தமாகச் சொன்னதைத் திரித்துப் பேசுகின்றனர். விஜயகாந்த் நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்த காலத்தில் இருந்தே 150 நாடக நடிகர்களுக்கு மாதம் தலா 1,000 ரூபாய் கொடுத்து வருகிறேன். நான் மட்டுமல்ல, என் நண்பர் ஏ.சி.சண்முகம் 150 பேருக்கும், ஜேப்பியார் கல்லூரி சார்பாக 100 நாடகக் கலைஞர்களுக்கும் உதவித்தொகை கொடுத்து வருகிறோம்.

ஐசரி கணேஷ்
ஐசரி கணேஷ்

'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்னாச்சு?!

பாலிவுட் கதாசிரியர் கே.சுபாஷ் கதை எழுத, பிரபுதேவா இயக்குவதாக 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தைத் துவங்கினேன். இப்படம் வெளியாகியிருந்தால், சங்கக் கட்டடம் ஆறு மாதத்துக்கு முன்பே திறக்கப்பட்டிருக்கும். கஷ்டப்பட்டு திரைக்கதையை உருவாக்கினார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஆறு பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. படம் ரெடியாகி பிசினஸ் ஆன பிறகு விஷால், கார்த்தி இருவருக்கும் சம்பளம் எனவும், படத்தின் மூலம் கிடைக்கிற லாபத்தைக் கட்டடத்திற்காகத் தருகிறேன் எனவும் சொன்னேன். ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்தது. அதில், கார்த்தி ஒருநாள் கலந்துகொண்டார்; விஷால் ஒருநாள்கூட வரவே இல்லை. அதற்குப் பிறகு, விஷால் ஒரு ஸாரிகூட கேட்கவில்லை.

கருப்பு ராஜா வெள்ளை ராஜா
கருப்பு ராஜா வெள்ளை ராஜா

பாண்டவர் அணி செய்த பாதகம்

நாசர், விஷால் அணியில் உள்ளே என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால், என்னை அழைத்துப் பயன்படுத்திக்கொள்வார்கள். இப்போதுதான் ஒவ்வொரு விஷயமாக வெளியே வருகிறது. அதையெல்லாம் கேட்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. உதாரணமாக, நேற்று சின்னத்திரைக் கலைஞர்களைச் சந்தித்தேன். 'கடந்த தேர்தல்ல எங்களையும் நடிகர் சங்கத்துல ஆயுள்கால உறுப்பினராக சேர்த்துக்கோங்க. ஒரு லட்சம் ரூபாய் என்பது, எங்களுக்கு அதிகம். அதைக் குறைச்சுக்கோங்கனு கேட்டோம், யாரும் கண்டுக்கல'னு அவங்க சொன்னாங்க. கடந்த தேர்தலில் பாண்டவர் அணிக்கு எதிராக வேலை பார்த்த நடிகர் சங்க உறுப்பினர்கள் 350 நபர்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது, மன்னிக்கமுடியாத குற்றம்; அது பாண்டவர் அணி செய்த பாகதம். பலபேர் மன்னிப்புக் கடிதம் கொடுத்தும், அவர்களை அழைத்துப் பேசவே இல்லை. நாசர், விஷாலுக்கு வேண்டிய 300 நபர்களைப் புதிதாகச் சேர்த்துள்ளனர். நாமக்கலில் உள்ள ஆயுள்கால உறுப்பினர் 50 பேரை நீக்கிவிட்டனர். நடிகர் சங்கத்தில் மொத்தம் 3,120 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில், சினிமா நடிகர்கள் 300 பேர் மட்டுமே; மீதமுள்ள அனைவரும் நாடக நடிகர்களே! என் அப்பா ஐசரிவேலன் ஒரு நாடக நடிகர். நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும் மேடையிலேயே உயிரிழந்தார். கடந்த 32 ஆண்டுகளாக நாடக நடிகர்களோடு நெருங்கிப் பழகுபவன் நான். அவர்கள் அனைவரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள். மும்பையில் இருக்கும் ரஜினி சாருக்குப் போன் செய்து, தேர்தலில் நான் நிற்பதைச் சொன்னேன். வாழ்த்துக்கள் சொன்னார்.