Published:Updated:

``நான் இப்போ இளைஞரணித் தலைவர்... எங்க தெரியுமா?!" -`நானும் ரவுடிதான்' ராகுல் தாத்தா

ராகுல் தாத்தா

எம்.ஜி.ஆரின் சமையல்காரராக பல வருடங்கள் அவருடனே இருந்து, ஒரு சில படங்களில் கேமியோ ரோலில் நடித்த உதயபானுதான், இன்றை இளைஞர்களின் ஃபேவரைட்டான ராகுல் தாத்தா.

``நான் இப்போ இளைஞரணித் தலைவர்... எங்க தெரியுமா?!" -`நானும் ரவுடிதான்' ராகுல் தாத்தா

எம்.ஜி.ஆரின் சமையல்காரராக பல வருடங்கள் அவருடனே இருந்து, ஒரு சில படங்களில் கேமியோ ரோலில் நடித்த உதயபானுதான், இன்றை இளைஞர்களின் ஃபேவரைட்டான ராகுல் தாத்தா.

Published:Updated:
ராகுல் தாத்தா

முதிர்ச்சி, வெள்ளை முடி, தாடி, தழுதழுக்கும் குரல்... ஆனாலும் தன் துறுதுறு நடிப்பாலும் குறும்புத்தனத்தாலும் திரையில் பெரிய அப்ளாஸ் அள்ளினார். `நானும் ரெளடிதான்' படம் அவர் வாழ்க்கையையே மாற்றியமைத்தது. கொரோனா காரணமாக கிட்டத்தட்ட 60 நாள்களுக்கு மேலாக சினிமா ஷூட்டிங் இல்லை. இந்த இக்கட்டான சூழலை ராகுல் தாத்தா எப்படிக் கடக்கிறார் எனத் தெரிந்துகொள்ள அவருக்கு போன் அடித்தேன்.

``வணக்கம்பா தம்பி... பத்திரமா இருக்கியா? வீட்ல எல்லோரும் செளக்கியமா?" என்று நலம் விசாரித்தபடி பேசத் தொடங்கினார். இந்த கொரோனா எல்லோரையும் பாடாபடுத்திக்கிட்டு இருக்கான். ரொம்ப டார்ச்சர் பண்றான். நான் நடிச்சு கிட்டத்தட்ட 20 படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கு. சில படங்கள் ரெண்டு நாள், மூணு நாள் ஷூட்டிங் எடுத்து நிக்குது. அந்த கொரோனா பயலை நம்ம ஊரை விட்டு விரட்டியடிச்சாதான் நம்ம எல்லோருக்கும் நல்ல காலம் பிறக்கும். `நானும் ரெளடிதான்' படத்துக்குப் பிறகு, நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. அதனால தினமும் ஏதாவது ஒரு படம் ஷூட்டிங் இருக்கும். அப்படி இல்லைனா, டப்பிங் பேசவாவது கூட்டிட்டுப் போயிடுவாங்க. அப்படி சுத்துக்கிட்டே இருந்தவன், இப்ப வீட்டுக்குள்ளேயே இருக்கிறது கஷ்டமா இருக்குப்பா. ஆனா, என்ன பண்றது மருந்து கண்டுபிடிக்கிற வரை வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்கிறதுதான் நல்லதுனு சொல்றாங்க. அதனால 60 நாளா வீட்டுக்குள்ளேயேதான் இருக்கேன். தேவையில்லாம எங்கேயும் போறதில்லை.

ராகுல் தாத்தா
ராகுல் தாத்தா
GK Photography

மெட்ராஸ்லதான் அதிகமா இருக்குனு சொல்றாங்க. எங்க ஏரியாவுலயே சில பேருக்கு கொரோனா வந்துடுச்சுனா பார்த்துக்கோ. ரஜினி சார்ல இருந்து நிறைய நடிகர்கள் சினிமா தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி கொடுத்து உதவி பண்ணியிருக்காங்க. அதனால ஃபெஃப்சியில இருந்து நமக்கு பணம் கொடுக்கிறாங்க. எங்க நயன்தாராவும் 20 லட்சம் கொடுத்திருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். நடிகர்கள் எல்லாம் நிவாரணம் கொடுக்கலைனா எங்க நிலைமை ரொம்ப மோசமா ஆகியிருக்கும். நிவாரண உதவிகள் கொடுத்த எல்லோருக்கும் மனசார என் நன்றியைச் சொல்லிக்கிறேன்" என்று நெகிழ்ந்தார்.

``நான் புரட்சித் தலைவர்கிட்ட சமையல் காரரா இருந்தபோதுதான், புரொடக்‌ஷன் யூனியன் ஆரம்பிச்சோம். அதாங்க... சினிமா காரங்களுக்கு கேட்டரிங் சர்வீஸ். அதுக்கான யூனியன். அப்போ நாங்க கொஞ்ச பேர் ஆரம்பிச்ச அந்த புரொடக்‌ஷன் யூனியன் இப்போ பெரிய யூனியன் ஆகிடுச்சு. நாங்க ஆரம்பிக்கும்போது இருந்த பல பேர் இப்போ இல்லை. இந்த யூனியன் ஃபெஃப்சியில ஒரு அமைப்பு. அதனால எங்க புரொக்டக்‌ஷன் யூனியன்ல இருந்தும் எனக்கு கொஞ்சம் பணம் கொடுத்தாங்க. எங்க காலத்துல ஆரம்பிச்ச சங்கங்கிறதுனால நமக்கு அங்க நல்ல மரியாதை இருக்கு" என்றவரிடம், என்னென்ன படங்கள் கைவசம் இருக்கிறது எனக் கேட்டோம்.

ராகுல் தாத்தா
ராகுல் தாத்தா
GK Photography

`` `பேய் மாமா', `படைப்பாளன்', `கேட்காது'னு கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல வெளியாகாம இருக்குப்பா. நிறைய படங்களோட பேர்கூட மறந்துடுச்சு. இன்னும் பெயர் வைக்காத சில படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன். கொரோனா முடிஞ்ச பிறகுதான், ஷூட்டிங்குக்கு கூப்பிடுவாங்க. அதுல இந்த `பேய் மாமா' படம் எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரும். யோகிபாபுவும் நானும்தான் படம் முழுக்க வருவோம். ரெண்டு பேரும் விஜய் ரசிகர் மன்றத்துல இருக்கிறவங்க. நான்தான் மாவட்ட இளைஞரணித் தலைவர். விஜய் போட்ட காஸ்ட்யூம் போட்டுக்கிட்டு, விஜய் பேசின பன்ச் டயலாக் பேசிக்கிட்டு ஊருக்குள்ள அலப்பறை பண்ணிட்டு இருக்கிற மாதிரியான சூப்பர் கேரக்டர் எனக்கு. இதுல எனக்கு சாங், ஃபைட் எல்லாம்கூட இருக்கு. `நானும் ரெளடிதான்' படத்துக்குப் பிறகு, `பேய் மாமா' என்னை எல்லோர்கிட்டயும் கொண்டுபோய் சேர்க்கும்னு நம்புறேன். `சார்லி சாப்ளின்' எடுத்த சக்தி சரவணன் சார்தான் இயக்குநர். இந்தப் படம் எப்போ வெளியாகும்னு காத்துக்கிட்டு இருக்கேன்.

அப்புறம், விக்னேஷ் சிவன் இயக்கத்துல விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கிற `காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்துல நடிக்கக் கூப்பிட்டிருக்காங்க. மறுபடியும், `நானும் ரெளடிதான்' கூட்டணி. விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இல்லைனா நான் இல்லை. அவங்களாலதான் இப்போ நான் சினிமாவுல சம்பாதிச்சிட்டு இருக்கேன். அவங்களுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அதனால எப்பவும் என்னை விடமாட்டாங்க. ராகுல் கேரக்டர் மாதிரி இந்தப் படத்துலயும் விக்னேஷ் சிவன் எனக்கு சூப்பரா ஒரு கேரக்டர் வெச்சிருப்பார். கொரோனா எல்லாம் முடிஞ்ச பிறகுதான், அவங்களைப் பார்க்கணும். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனா, அங்க நிறைய நடிகர்கள் இருப்பாங்க. அவங்களோட ஜாலியா பேசி சிரிச்சுட்டு வருவேன். இப்போ வீட்டுக்குள்ளேயே இருக்கிறது ரொம்ப ஃபீலிங்கா இருக்கு. என்ன பண்றது வேற வழியில்லையே... டி.வி-யில என் தலைவன் எம்.ஜி.ஆர் படம் பார்த்துட்டு இருக்கேன்" என்கிறார் ராகுல் தாத்தா.