Published:Updated:

`பராசக்தி ஒன்று போதும்..!'- சென்னை நாடக விழாவில் நெகிழ்ந்த நடிகர் ராஜேஷ்

அமெரிக்கச் சுதந்திரப் போர் நடைபெறும்போது ஆளுகிறவனும் வெள்ளைக்காரன், போராடுகிறவனும் வெள்ளைக்காரன். எல்லாம் ஒரே ஜாதிதான் என்றெல்லாம் பேசினார்கள்.

நடிகர் ராஜேஷ்
நடிகர் ராஜேஷ்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் சென்னை கேரள சமாஜம் இணைந்து நடத்தும் தென்னிந்திய மக்கள் நாடக விழா சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கேரள சமாஜம் அரங்கில் கடந்த அக்டோபர் 2 முதல் 6 வரை நடைபெற்றது. ஐந்து மொழிகளில் 500 கலைஞர்கள் 32 முற்போக்கு நாடகங்களை அரங்கேற்றினர். விழாவின் இறுதி நாளான நேற்று நிறைவு விழா நடைபெற்றது. நிறைவு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ராஜேஷ் "ஒரே மொழி ஒரே நாடு என்பதெல்லாம் எனக்கு வியப்பாக இருக்கிறது. அமெரிக்கச் சுதந்திரப் போர் நடைபெறும்போது ஆளுகிறவனும் வெள்ளைக்காரன், போராடுகிறவனும் வெள்ளைக்காரன். எல்லாம் ஒரே ஜாதிதான் என்றெல்லாம் பேசினார்கள். எல்லாரும் வெள்ளைக்காரன் தான். Caucasoid race என்பது அதன் பெயர். இரண்டு உலகப்போரிலும் ஈடுபட்ட நாடுகள் எல்லாமே கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவைதான். எனவே, மொழி ஒரு மனிதனை இணைக்காது. மதம் ஒரு மனிதனை இணைக்காது. இனம் ஒரு மனிதனை இணைக்காது.

சென்னை நாடக விழா
சென்னை நாடக விழா

ஐரோப்பா ஒரு கண்டம், பல நாடுகள். இந்தியா பல நாடுகள், ஒரு நாடு. வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் சிறப்பு. என்ன சொன்னாலும் மனிதர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதன்பிறகு மறந்துவிடுவார்கள். அவர்களுடைய தேவை வரும்போது தான் இறங்குவார்கள். முதல் உலக மகா யுத்தத்திற்கு முன் ரஷ்யாவில் அப்படி நடந்தது. இரண்டாம் உலகப்போரில் பத்திற்கும் மேற்பட்ட நாடுகள் சுதந்திரமடைந்தது. பின்னர் உலகின் 84 நாடுகள் சுதந்திரமடைந்தது. ஏதாவது ஒரு தேவை முன் நின்று நடத்தவேண்டியிருக்கிறது. பேசுவதற்கே பயமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் எல்லாருமே பெர்நாட்ஷாவும் சர்ச்சிலாகவும் ஆகிவிடுகிறார்கள். கருத்துச் சுதந்திரம் மக்கள் பங்கேற்கக் கூடியது. வரவேற்கக் கூடியது. ஆனால், ஒரே நையாண்டியும் கிண்டலுமாகச் சமுதாயம் போய்க்கொண்டிருக்கும்போது கருத்துகள் சொல்லி நடக்கும் நாடக விழா என்பது பாராட்டிற்குரியது.

மாசேதுங் சொல்லுவார், எப்படிப்பட்ட இலக்கியங்கள் படைக்கப்பட்டாலும் அது மனிதக் குல முன்னேற்றத்திற்குத்தான் பயன்பட வேண்டும். இல்லையென்றால் நூலகத்தில் வைத்து அழகு பார்க்கலாமே ஒழிய மக்கள் நன்மைக்கு ஒரு காலமும் உதவாது என்பார். மக்களுக்கான நாடகத்தை அரங்கேற்றிய கலைஞர்களுக்கு நன்றியும் வணக்கமும். இப்பொழுது நாம் செய்வதையெல்லாம் 1946ல் சிவாஜி செய்திருக்கிறார். பராசக்தி ஒன்று போதும். அவ்வளவு முற்போக்கு கருத்துகள் பராசக்தியில் உள்ளது. மாவோ சொல்லுவார், காலகட்டத்தில் போய் விமர்சிக்க வேண்டும்.

நடிகர் ராஜேஷ்
நடிகர் ராஜேஷ்

இப்போது பராசக்தி சாதாரணமாகத் தெரியலாம். அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய முற்போக்கு படைப்பாகப் பராசக்தி இருந்தது" என்று வாழ்த்திப் பேசினார். விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப் பாண்டியன், விழாக்குழு தலைவர் ரோகினி, தமுஎகசவின் கௌரவத் தலைவர் ச. தமிழ் செல்வன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, சிகரம் ச. செந்தில்நாதன், நாடகவியலாளர்கள் பிரளயன், பாரதி மணி ஆகியோரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.