Published:Updated:

Digital Exclusive: `கீர்த்தி சுரேஷ் என் மனசுலயே நிக்குறாங்க!' - ராமராஜன் நேர்காணல்

ராமராஜன்

நான் டிக்கெட் கிழிச்சுக் கொடுக்கிற வேலை பார்த்த தியேட்டர்ல நான் நடிச்ச `கரகாட்டக்காரன்' படம் ரிலீஸாகி 75 நாள் ஓடுச்சு. அந்த தியேட்டர்ல வேற எந்தப் படமும் அவ்ளோ நாள் ஓடுனது இல்ல.

Digital Exclusive: `கீர்த்தி சுரேஷ் என் மனசுலயே நிக்குறாங்க!' - ராமராஜன் நேர்காணல்

நான் டிக்கெட் கிழிச்சுக் கொடுக்கிற வேலை பார்த்த தியேட்டர்ல நான் நடிச்ச `கரகாட்டக்காரன்' படம் ரிலீஸாகி 75 நாள் ஓடுச்சு. அந்த தியேட்டர்ல வேற எந்தப் படமும் அவ்ளோ நாள் ஓடுனது இல்ல.

Published:Updated:
ராமராஜன்
ராமராஜன் ஜெயலலிதாவின் மறைவிற்குபின் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தவர், தற்போது சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

ஒருகாலத்தில் கிராமத்து நாயகனாக கோலோச்சியவர். 2012-ல் `மேதை' படத்திற்குப் பின், சரியாக பத்தாண்டுகள் கழித்து `சாமானியன்' என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவர் தனது 45 வருட சினிமா பயணத்தில் 45வது படத்தைத் தொடுகிறார். சென்னையில் நடந்து வரும் அதன் படப்பிடிப்பில் ராமராஜனைச் சந்தித்தேன். கையில் துப்பாக்கியும், முகத்தில் தாடியுமாக புது லுக்கில் இருந்தவர், ''வந்து ரொம்ப நேரமாச்சா.. என்ன சாப்பிடுறீங்க?'' என அன்பும் அக்கறையுமாக பேசத் தொடங்கினார்.

ஜெயலலிதாவுடன்
ஜெயலலிதாவுடன்

``உங்களோட 45 வருட திரைப் பயணத்தில் வெறும் 45 படம்தானா நடிச்சிருக்கீங்க?"

``நான் பிறந்தது ஒரு சின்ன கிராமம். மத்தபடி நான் படிச்சது, வளர்ந்தது மதுரை பக்கம் உள்ள மேலூர்லதான். அங்க ஒரு தியேட்டர்ல டிக்கெட் கிழிச்சிருக்கேன். கேண்டீன்ல வேலை பார்த்திருக்கேன். ஆல்ரவுண்டரா தியேட்டர்ல இருந்திருக்கேன். அந்த தியேட்டர்ல நான் ஹீரோவா நடிச்ச `கரகாட்டக்காரன்' படம் 75 நாட்கள் ஓடி பெரிய வெற்றியாச்சு. அதுக்கு முன்னாடி வேற எந்தப் படமும் அவ்ளோ நாட்கள் ஓடினதில்ல. அதுல எனக்கு பெரிய பெருமை சார். இன்னொரு பெருமை, நான் தமிழ்நாட்டுல பொறந்து வளர்ந்ததால தமிழ்ல மட்டும்தான் நடிச்சேன். மத்த மொழிகள்ல நடிக்கக் கூப்பிட்டும் நான் போகல. மலையாளத்துல ஐ.வி.சார் நல்ல பழக்கம் அவரும் என்னை கூப்பிட்டிருக்கார். மொழி தெரியாது சார்னு சொல்லிட்டேன். `பரவாயில்ல டப்பிங் பண்ணிக்கலாம்'னாங்க ஆனாலும் நான் போகல! இதுக்கு முன்னாடி நான் நடிச்ச 44 படங்கள்ல 40 படங்கள் தமிழ் நாட்டுல எடுக்கக்கப்பட்ட படங்கள்தான். தமிழன்னு எனக்கு இதுவும் பெருமையா இருக்கும்!

சினிமாவுல நாலே நாலு சீன் வந்து போனாலே போதும்னு நினைச்சுதான் சினிமாவுக்கே வந்தேன். ஒரு சர்வர் ஆகவோ, போஸ்ட்மேன் ஆகவோ, பால்காரனாகவோ நடிச்சாலே போதும் என்கிற ஆசையோட வந்தேன். சென்னைக்கு நான் வந்த முதல் இடம் அமைந்தகரைதான். அங்கே என் தம்பிகள் இருந்தாங்க. அவங்கள தவிர வேற யாரையும் இங்கே எனக்குத் தெரியாது. ஆனால் காலச்சூழலால் 45 படங்கள் நடிச்சிட்டேன். 12 படங்களுக்கு மேல டைரக்ட் பண்ணிட்டேன். உதவி இயக்குநராகவே இராமநாராயணன் சார்கிட்ட 36 படங்கள்ல ஒர்க் பண்ணிட்டேன்.

கங்கை அமரன், இளையராஜா, ராமராஜன்
கங்கை அமரன், இளையராஜா, ராமராஜன்

ஆனா ஒரு விஷயம். ஹீரோவா ஐம்பது படங்கள் நடிச்சிடணும்னு நினைச்சிருந்தேன். இடையே ஏற்பட்ட ஒரு விபத்தால, கொஞ்சம் இடைவெளி ஆகிடுச்சு. அதற்குள் நான் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன்னு தவறான தகவலும் பரவிடுச்சு. அப்படி எங்கேயும் எப்பவும் நான் சொன்னதில்ல. எனக்கு இன்னமும் தாய்க்குலங்கள் ரசிகர்களா இருக்காங்க. அவங்க என்னை குத்தம் சொல்லிடாத வகையில் உள்ள கதாபாத்திரங்கள்ல நடிக்கவே இன்னமும் விரும்புறேன். எத்தனையோ படங்கள் வில்லனாக நடிக்கக் கேட்டும் மறுத்ததுக்கும் அதான் காரணம். 45 வருஷ அனுபவத்தில் வருஷத்துக்கு ஒரு படம் நடிச்சிருக்கேன்னு எண்ணிக்குறேன். என்னைப் பொறுத்தவரை என் கேரியர் திருப்திதான். யுத்தம்னு வரும் போது வெற்றியும் வரும்.. தோல்வியும் வரும். எது வந்தாலும் அதை தாங்கித்தான் போகணும். இன்னொரு விஷயம், அமையறதுதான் அமையும்னு நம்புறேன்.''

'கரகாட்டக்காரன் 2' எதிர்பார்க்கலாமா?

''எப்பவுமே ஒரு படத்தை பார்ட்2 எடுக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல. எடுத்தாச்சு. பார்த்தாச்சு. ஓடியாச்சு. அவ்ளோதான் அதை மறுபடியும் தொடக்கூடாது. `கரகாட்டக்காரன்' படத்துல காமெடி, பாடல்கள், எமோஷனல்னு எல்லாமும் சரிசமமா இருக்கும். கடந்த மூணு வருஷ கொரோனா காலகட்டத்துல எந்த டி.வி. சேனல்லேயும் அந்தப் படத்தை ஒளிப்பரப்பினதா நான் கேள்விபடல. இது பத்தி அண்ணன் கங்கை அமரன்கிட்ட நம்ம கரகாட்டக்காரன்ல ஒரு காமெடி வருமே.. சொப்பனசுந்தரி வச்சிருந்த காரை நாம வச்சிருக்கோம். இப்ப சொப்பன சுந்தரியை யார் வச்சிருக்காங்கனு வர்ற காமெடி போல, இப்ப நம்ம 'கரகாட்டக்காரன்' படத்தை யார் வச்சிருக்கா? ஏன் எந்த டி.வி. சேனல்லேயும் மாட்டேங்குது?" கேட்டேன். அந்தப் படத்தை பார்த்தால், அத்தனை பேரும் மனசு விட்டு சிரிப்பாங்க. கொரோனா பயத்துல இருந்தவங்களுக்கு அந்த படம் பயத்தை விரட்டி, முகத்துல சிரிப்பை வரவழைச்சிக்கும் படமா இருந்திருக்கும். அந்த ஆதங்கமும் உண்டு. அந்த பட சாட்டிலைட் ரைட்ஸ் இப்ப யார்கிட்ட இருக்குதுனு எனக்கும் தெரியல. அமரண்ணனும் தெரியல!''

எம்.ஜி.ஆருடன்..
எம்.ஜி.ஆருடன்..

``இப்ப உள்ள நடிகர்கள்ல யாரெல்லாம் நல்லா நடிக்கிறாங்கன்னு நீங்க நினைக்குறீங்க?"

''எல்லாருமே நல்லா பண்றாங்க. நான் டி.வி.யில தான் பாடல்கள், காமெடிகள் பார்க்குறேன். சினிமாவுல ஹீரோவா வர்றவங்க பல கஷ்டங்கள், அவமானங்கள் எல்லாத்தையும் தாண்டித்தான் அந்த இடத்துல வந்து நிக்கிறாங்க. கஷ்டப்படாமல் யாரும் வந்திருக்க மாட்டாங்க. அதனாலதான் ஒருத்தரோட இடத்தை இன்னொருத்தரால நிரப்பிட முடியாமல் இருக்கு. இங்கே திறமை, உழைப்பு என்பதைத்தாண்டி நேரமும் அமையணும். தலைவர் எம்.ஜி.ஆர்., 'வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்' எனப் பாடினார். அதைப்போல யார் மனசுல நிக்குறாங்க. எந்த பாட்டு மனசுல நிக்குது இதான் முக்கியம். அந்த கால கதாநாயகிகள்ல சரோஜாதேவி, சாவித்ரி, கே.ஆர்.விஜயானு எல்லாருமே மனசுல நின்னாங்க. இப்ப அப்படி கீர்த்தி சுரேஷ் நிற்குறாங்க. என்ன காரணம்?! 'நடிகையர் திலகம்'தான். அதுல அவங்க எப்பேர்ப்பட்ட நடிப்பு! மனோரமா ஆச்சி ஆயிரம் படங்கள் நடிச்சிட்டாங்க. அப்படி பெருமை இப்ப யாருக்கும் இல்ல''