Published:Updated:

"ஹீரோ இமேஜைக் கலைக்க விருப்பமில்லை!" - வாய்ப்புகளை மறுக்கும் ராமராஜன்

'மக்கள் என்னை ஒரு ஹீரோவாகத்தான் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். அந்த இமேஜைக் கலைக்க எனக்கு விருப்பம் இல்லை' என்பது ராமராஜனின் எண்ணமாக இருக்கிறது. இருப்பினும், எதிர்காலத்தில் அவரது முடிவில் மாற்றங்கள் ஏற்படுமா என்பதை இனிதான் பார்க்க வேண்டும்.

நடிகர் ராமராஜன்
நடிகர் ராமராஜன்

ராமராஜன், கனகா இருவரும் இணைந்து நடித்து 1989-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம், 'கரகாட்டக்காரன்'. கங்கை அமரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது. கவுண்டமணி, செந்தில் காம்பினேஷன் மற்றும் கோவை சரளாவின் காமெடிகள் இப்போதுவரை டிரெண்டில் இடம்பிடிக்கின்றன. முக்கியமாக, வாழைப்பழக் காமெடியை 30 வருடங்கள் கழித்தும் இன்னும் ரசிக்கிறார்கள்.

ராமராஜன்
ராமராஜன்

இப்படி 30 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படம் கோடிக்கணக்கில் வசூலைக் குவித்தது. அப்போது மதுரை திரையரங்குகளில் ஒரு வருடம் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, அதிக அளவு லாபத்தைக் கொடுத்த படமான 'கரகாட்டக்காரன்' கங்கை அமரன் வாழ்க்கையில் முக்கியமான படம்.

இந்நிலையில், கங்கை அமரன் 'கரகாட்டக்காரன் 2' எடுக்கவிருப்பதாகவும், அதற்காக 'கரகாட்டக்காரன்' படத்தில் நடித்த நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலானோருக்குப் பேரன், பேத்தி இருக்கும் நிலையில், அவர்களை மையப்படுத்தியே 'கரகாட்டக்காரன் 2' கதை நகரும் என்கிறார்கள். முக்கியமாக, இப்படத்தில் அப்பா கேரக்டரில் நடிக்க ராமராஜனிடம் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கவுண்டமணி, செந்தில்
கவுண்டமணி, செந்தில்

தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாகத் திகழ்ந்தவர் ராமராஜன். அதனால், திரையில் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் 'மக்கள் நாயகன்.' 2001-ல் ராமராஜன் இயக்கி ஹீரோவாகவும் அபிதா ஹீரோயினாகவும் நடித்த படம் 'சீறிவரும் காளை'. பிறகு, 11 ஆண்டுகள் கழித்து அவரது 'மேதை' என்ற படம் வெளியானது. நீண்ட நாள்கள் கிடப்பிலிருந்த படம் இது.

இதுவே அவர் கடைசியாக நடித்த படம். 2012-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் பள்ளி ஆசிரியராக நடித்திருந்தார் ராமராஜன். அவருடைய ரீ-என்ட்ரிக்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கு 'எல்.கே.ஜி' படம் ஒரு வாய்ப்பாக இருந்திருக்க வேண்டியது. 'எல்.கே.ஜி' படத்தில் ஜே.கே.ரித்தீஷ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கக் கேட்டது, ராமராஜனைத்தான். ஆனால், அவர் தனக்கு அதில் நடிக்க விருப்பமில்லை எனச் சொல்லி, மறுத்துவிட்டார்.

ராமராஜன்
ராமராஜன்

இதுகுறித்து, ராமராஜன் உறவினர்கள் வட்டாரத்தில் பேசினோம். ''மக்களால் 'அடுத்த எம்.ஜி.ஆர்' என அழைக்கப்பட்டவர் ராமராஜன். எம்.ஜி.ஆரின் பாணியையே அவர் பின்பற்றி வந்தார். காதல், சண்டைக் காட்சிகள் என இருந்தாலும், பெரும்பாலும் சமூகத்துக்குக் கருத்து சொல்பவையாகவே அவருடைய படங்கள் இருக்கும். 

மக்களுக்கான பிரச்னைகளைத் தீர்ப்பது, நாட்டின் நன்மைக்கான பணிகள் எனப் பல விஷயங்கள் அவரது படங்களில் இருக்கும். அதற்காக அவர் அதிகம் மெனக்கெடுவார். அப்படியிருக்க, தற்போது பலபேர் அவரிடம் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடர்ந்து கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், அவரோ நடித்தால் ஹீரோ ரோலில்தான் நடிப்பேன் என்று உறுதியாக இருக்கிறார். படத்தைத் தயாரிக்கும் ஐடியாவும் சொல்லியிருக்கிறார்கள் சிலர். அதிலும் அவருக்கு உடன்பாடு இல்லை. 

ராமராஜன்
ராமராஜன்

'மக்கள் என்னை ஒரு ஹீரோவாகத்தான் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். அந்த இமேஜைக் கலைக்க எனக்கு விருப்பம் இல்லை' என்பது அவரது எண்ணமாக இருக்கிறது. இருப்பினும், எதிர்காலத்தில் அவரது முடிவில் மாற்றங்கள் ஏற்படுமா என்பதை இனிதான் பார்க்க வேண்டும். மற்றபடி, தன்னுடைய பிள்ளைகள், பேரக் குழந்தைகள் எனக் கிடைக்கும் நேரத்தைச் சந்தோஷமாக செலவிட்டு வருகிறார் ராமராஜன்" என்கிறார்கள்.

ராமராஜன் ரீ-என்ட்ரிக்கு ரசிகர்கள் வெயிட்டிங்!