Published:Updated:

``12-ல ஒண்ணு லேடி கெட்டப்; அப்போ VP, பிரேம்ஜி, வைபவ் பண்ண சேட்டை இருக்கே...'' - `கோவா' ரவிகாந்த்

Ravikanth getups in 'Goa' movie
Ravikanth getups in 'Goa' movie

"ரஜினி சார் படம் பார்த்தப்போ, `இந்தக் கேரக்டரை இப்படி முடிக்காதீங்க. இது ஏன்னு தெரியாமலேயே முடியட்டும்’னு சொன்னார். அதனால, அந்த சீனை எடுத்துட்டாங்க." - `கோவா' ரவிகாந்த்

`கோவா’ படம் பார்த்தவர்களுக்கு, ஒரு நடிகர் மட்டும் வெவ்வேறான கெட்டப்களில் படம் முழுக்க வந்திருந்தது கண்டிப்பாக ஞாபகத்தில் இருக்கும். ஆனால், அவர் மொத்தம் எத்தனை கெட்டப்களில் வந்தார் என்கிற எண்ணிக்கை மட்டும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. படத்தின் முதல் காட்சியில் தொடங்கி க்ளைமேக்ஸ் வரை மொத்தம் 12 கெட்டப்களில் வந்திருக்கிறார் அந்த நடிகர். அவர்தான் நடிகர் ரவிகாந்த். `கோவா’ படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகியிருக்கும் இந்த நேரத்தில், அவரை சந்தித்துப் பேசினோம்.

``உதயநிதிக்கும் எனக்கும் ஆரம்பத்துல மிஸ்மேட்ச் ஆச்சு; அது ஏன்னா..." - `சைக்கோ' கதை சொல்லும் மிஷ்கின்

ஒரே படத்தில் 12 கெட்டப்களில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

ரவிகாந்த்
ரவிகாந்த்

"வெங்கட் பிரபுவோட `சரோஜா’ படத்துல இருந்து டிராவல் பண்ணிட்டிருக்கேன். `கோவா’ படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, `ப்ரோ... இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர்ல நீங்க நடிக்கப்போறீங்க. நாளைக்கு ஷூட்டிங் வந்துடுங்க’ன்னு சொன்னார். அங்க போனா, கல்யாண புரோகிதர் கெட்டப் போட்டுவிட்டாங்க. ஒரே ஒரு டயலாக்தான் கொடுத்தாங்க. `சரி, சின்ன ரோல்தான் போல’னு நினைச்சுக்கிட்டேன். அடுத்த நாளே வெங்கட் பிரபு ஆபீஸ்ல இருந்து ஒருத்தர் வந்து, என் பாஸ்போர்ட்டை வாங்கிட்டுப் போனார். அதுக்கு அடுத்த நாள், கோவாவுக்கு டிக்கெட் வந்துச்சு. `எப்பா... கோவாவுக்கு எதுக்குப்பா பாஸ்போர்ட் கேட்டீங்க’ன்னு கேட்டா, `எதுவா இருந்தாலும் வெங்கட் பிரபுதான் சொல்வார்’னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. அடுத்த நாள் கோவாவுக்கு போனா, எனக்கு லேடி கெட்டப் போட்டுவிட்டாங்க. `ப்ரோ... நீங்க யார்கிட்டயும் பேசாதீங்க. பேசுனா நீங்க ஆம்பளைனு தெரிஞ்சிடும். லேடியாவே மெயின்டெயின் பண்ணிக்கோங்க’ன்னு வெங்கட் சொல்லிட்டுப் போயிட்டார். நான் ஆம்பளைனு அங்க இருந்த வெங்கட், பிரேம்ஜி, வைபவுக்குத்தான் தெரியும். இவங்க மூணு பேரும் அப்பப்போ வந்து எனக்கு முத்தம் கொடுத்துட்டுப் போனாங்க. அதைப் பார்த்தவங்க, `மூணு பேரு வந்து முத்தம் கொடுத்துட்டுப் போறாங்க, பேசாம இருக்கா பாரு’னு பேசிக்கிட்டது எனக்கே கேட்டுச்சு."

"லேடி கெட்டப்போட ஷூட்டிங் முடிஞ்சதுக்கு அப்பறம் வெங்கட் என்னைக் கூப்பிட்டு, `ப்ரோ, இந்தப் படத்தில் நீங்க 12 கேரக்டர்ல நடிக்கப்போறீங்க’ன்னு சொன்னார். `எப்பா... தசாவதாரம் படத்திலேயே கமல் 10 கெட்டப்தானே போட்டார். எனக்கு என்னப்பா 12’னு கேட்டா, `எல்லாம் ஒரு ஃபன்னுக்குதான். அடுத்து நாம மலேசியா போறோம். அதுக்குத்தான் உங்களோட பாஸ்போர்ட் கேட்டேன்’னு சொன்னார். மலேசியாவுலதான் படத்தோட பாதி போர்ஷன் எடுத்தோம்.

வாத்தியார், லாரி டிரைவர், போலீஸ், ஃபாரினர், பஞ்சாயத்துத் தலைவர், பைலட், கசினோ மேனேஜர், ஜோக்கர், சர்ச் ஃபாதர், பார்ட்டி ஆர்கனைசர்னு மொத்தம் 12 கெட்டப் பண்ணுனேன்."
ரவிகாந்த்

பஞ்சாயத்தை வேடிக்கை பார்க்கிற கேரக்டர்ல ஆரம்பிச்சு, பஞ்சாயத்துத் தலைவரா என்னோட கேரக்டரும் சேர்த்து படமும் அப்படித்தான் முடியும். க்ளைமேக்ஸ்ல என் கேரக்டர், `அந்தப் பசங்க மேல தப்பு இல்லப்பா. நாங்க அவங்களை ஃபாலோ பண்ணிட்டுத்தான் இருந்தோம்’னு சொல்லிட்டு, எங்க கெட்டப்பை பஞ்சாயத்துல கலைக்கிற மாதிரிதான் முடியும். ஆனா, ரஜினி சார் படம் பார்த்தப்போ, `இந்தக் கேரக்டரை இப்படி முடிக்காதீங்க. இது ஏன்னு தெரியாமலேயே முடியட்டும்’னு சொன்னார். அதனால, அந்த சீனை எடுத்துட்டாங்க. `கோவா’ படம் ரிலீஸானப்போ நிறைய பேர் நோட் பண்ணி என்கிட்ட சொல்லியிருக்காங்க. ஆனா, 12 கேரக்டரையும் நோட் பண்ணி சொன்னது இல்லை. 7, 8 கேரக்டரை நோட் பண்ணி சொல்லியிருக்காங்க. அதுவும், சென்னையைவிட வெளியூர்கள்ல என்னைப் பார்க்கிறவங்க, இப்போவரைக்கும் `கோவா’ படத்தைப் பத்திப் பேசுவாங்க. நான் 12 கெட்டப்ல வர்ற மாதிரி, என்கூடவே வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் பிச்சுமணியும் வெவ்வேறான கெட்டப்களில் வருவார்.’’

`கோவா’வுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்க..?

ரவிகாந்த சாருஹாசன் மற்றும் கங்கை அமரனுடன்...
ரவிகாந்த சாருஹாசன் மற்றும் கங்கை அமரனுடன்...

"என் மாமா எஸ்.என்.நாராயணன் ஒரு பத்திரிகையாளர். அவரோட தினமும் வாக்கிங் போறதுக்கு ரஜினி சார், கமல் சார், சாருஹாசன்னு பல பிரபலங்கள் வருவாங்க. அப்படித்தான் எனக்கு சாருஹாசன் சார் பழக்கமானார். சாருஹாசன் சார்தான் என்னோட காட் ஃபாதர்னு சொல்லலாம். நான் 6-வது படிக்கும் போதே, `நீ படிச்சு ஒண்ணும் பண்ணப்போறதில்லை. போய் இசையைக் கத்துக்கோ’னு சொல்லி என்னை மியூசிக் க்ளாஸில் சேர்க்கச் சொன்னார். நானும் க்ளாஸ் போய் சவுண்டு இன்ஜினீயர் ஆனேன். அதுல கொஞ்ச நாள் வேலைபார்த்தேன். நான் வேலைபார்த்த கம்பெனியை மூடுனதுக்கு அப்பறம், `வேலையில்லை’னு அவர் முன்னாடி போய் நின்னேன். `நீ நடி’னு சொல்லி என்னை கே.பாலசந்தர் சார்கிட்ட அனுப்பி வெச்சார்."

"கே.பாலசந்தர் சார் இயக்கிய `மனதில் உறுதி வேண்டும்’ படத்துல நடிச்சேன். முதல் படத்துலேயே எனக்கு 13 சீன் கொடுத்தார். அந்தப் படத்துக்கு அப்பறம், அவர் இயக்கிய பல சீரியல்கள்ல நடிச்சேன். `மனதில் உறுதி வேண்டும்’ படத்துல நடிக்கும்போதே எஸ்.பி.பி என்கிட்ட, `உன் வாய்ஸ் கமல் வாய்ஸ் மாதிரியே இருக்கு. நீ பாடலாமே’னு சொன்னார். கமல் பாடிய பாடல்களை மட்டும் இசைக் கச்சேரிகள்ல பாட ஆரம்பிச்சேன்.

Ravikanth with K. Balachander
Ravikanth with K. Balachander

அந்தச் சமயத்துலதான் கங்கை அமரன் சார் நல்லா பழக்கமானார். அமர் சாரோட பல கச்சேரிகள்ல நான் பாடியிருக்கேன். அவரோட கச்சேரியில எப்பவுமே பத்து பாடல்கள் பாடி முடிச்சதும், மிமிக்ரி கலைஞர்களை வெச்சு பர்ஃபாம் பண்ணச் சொல்வாங்க. பல ஷோக்களுக்கு இதையே பண்ணிட்டு இருந்தனால, அந்த பேட்டர்னை மாத்தலாம்னு, ஒவ்வொரு கச்சேரிக்கும் வர்ற பாடகர்களை வெச்சே ஒரு காமெடி ஸ்கிரிப்ட் எழுதி, அவர்களையே நடிக்க வைக்கலாம்னு சொன்னேன். அந்த ஸ்கிரிப்ட்டையும் நான்தான் எழுதினேன். அதுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சது. அமர் சாரோட பல வருஷமா கச்சேரிகள்ல பாடுறதால, வெங்கட் பிரபுவை சின்ன வயசுல இருந்தே தெரியும். அந்தப் பழக்கம்தான் இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்திட்டு இருக்கு.’’

இப்போ எந்தெந்தப் படங்களில் நடிச்சிட்டு இருக்கீங்க..?

"விஷாலோட `சக்ரா’ படத்துல நடிச்சிட்டிருக்கேன். `மாநாடு’ படத்துல எனக்கு ஒரு ரோல் இருக்குனு வெங்கட் பிரபு சொல்லியிருக்கார். அந்தப் படத்தோட ஷூட்டிங்கும் சீக்கிரம் ஆரம்பிச்சிடும். அதுபோக, மலையாளம், கன்னடதுல சில சீரியல்கள்ல நடிச்சிட்டிருக்கேன். இப்படியே நல்லபடியா வாழ்க்கை போயிட்டிருக்கு.’’

ரஜினி, கமல், விஜய், அஜித்... எல்லா பர்னிச்சரையும் உடைத்த வெங்கட் பிரபுவின் `கோவா'! - #10YearsOfGoa
பின் செல்ல