Published:Updated:

``சிம்பு நினைச்சா மட்டும்தான் அது நடக்கும்..!'' - `கோகோ' ரெடின்

உ. சுதர்சன் காந்தி.
பா.ரமேஷ் கண்ணன்

'கோலமாவு கோகிலா', 'ஏ1', 'ஜாக்பாட்' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ரெடின் தன்னுடைய சினிமா பயணத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

நடிகர் ரெடின்
நடிகர் ரெடின்

'கோலமாவு கோகிலா' படத்தில் டோனி கேரக்டரில் தன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர், ரெடின். அதைத் தொடர்ந்து, சந்தானம் நடித்த 'ஏ1' படத்தில் அதகளம் செய்தார். இப்போது ஜோதிகா நடிக்கும் 'ஜாக்பாட்' படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். தனக்கான சினிமா பயணத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், நடிகர் ரெடின்.

'ஏ1' படத்துக்குள்ள எப்படி வந்தீங்க? சந்தானம் கூட நடிச்ச அனுபவம்?

" 'கோலமாவு கோகிலா' படம் பார்த்துட்டு 'எல்.கே.ஜி' படத்துல எனக்கு ஒரு கேரக்டரை உருவாக்கி நடிக்கக் கூப்பிட்டார், ஆர்ஜே.பாலாஜி. அந்தப் படத்துடைய ஷூட்டிங்ல இருக்கும்போது சந்தானம் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. கலாய்க்கிறதுல அவர் கிங். எப்படிதான் அந்த டைமிங்கை பிடிக்கிறார்னு தெரியாது. சும்மா பேசிக்கிட்டு இருக்கும்போதே நமக்கு தெரியாமல் நம்மளை கலாய்ச்சிடுவார். கூட நடிக்கிறவங்களுக்கு நல்ல ஸ்பேஸ் கொடுத்து நடிக்க வைப்பார். ஸ்கிரீன்ல அவர் எப்படியோ அதுதான் அவரோட நிஜ கேரக்டரும்."

'லிட்டில் ஃபோல்க்ஸ்' டான்ஸ் குரூப்ல ஆடிக்கிட்டு இருந்த நீங்க சினிமாவுல நடிப்பீங்கனு எதிர்பார்த்தீங்களா?

நடிகர் ரெடின்
நடிகர் ரெடின்

"காலேஜ் படிக்கும்போது டான்ஸ் கத்துக்கிட்டேன். அந்த டான்ஸ் குரூப்ல மாஸ்க் போட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்தேன். சினிமாவுக்கு வந்து படங்கள் நடிப்பேன்னு கொஞ்சம் கூட நினைக்கலை. 'வேட்டை மன்னன்' படமே எனக்கு ஷாக்தான். நெல்சன் சார் ஒருநாள் எனக்கு போன் பண்ணி ஆபீஸ் வரச் சொன்னார். 'இந்த மாதிரி ஒரு கேரக்டர் இருக்கு. நீ நடிக்கிறீயா?'னு கேட்டார். 'சொல்லிக்கொடுத்தா பண்றேன்'னு சொன்னேன். அப்படிதான் அவர்கூட பயணிக்க ஆரம்பிச்சேன். அந்தப் படத்துல நடிச்சது பிடிச்சுப்போக 'கோலமாவு கோகிலா' படத்துல டோனி கேரக்டர் கொடுத்தார். இப்போ என் நிஜ பெயரைவிட டோனினு சொன்னாதான் எல்லோருக்கும் தெரியுது."

'வேட்டை மன்னன்' டிராப் ஆகிடுச்சுன்னு சொன்னவுடன் எப்படி இருந்தது?

சிம்பு
சிம்பு

"ரொம்ப ரொம்ப வருத்தமா இருந்தது. என்னுடைய முதல் படம்; என் டைரக்டருக்கும் முதல் படம். முதல் படமே டிராப்னா எவ்ளோ கஷ்டமா இருக்கும்? அதுல எனக்கு ரொம்ப முக்கியமான கேரக்டர். ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்திக்கிட்டு இருந்தேன். படத்துல நடிக்க ஆரம்பிச்சவுடனே ஆபீஸுக்கு நான் வர்றது குறைஞ்சுடுச்சு. நான் சினிமாவுல நடிக்கிறேன்னு எல்லோருக்கும் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. அவங்க எல்லாம் படம் எப்போ ரிலீஸ்னு கேட்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும். எனக்கே இப்படினா டைரக்டரை நினைச்சுப் பாருங்க."

அந்தப் படம் மறுபடியும் வர்றதுக்கு ஏதாவது வாய்ப்பு இருக்குமா?

நடிகர் ரெடின்
நடிகர் ரெடின்

"அது ஒரு கேங்ஸ்டர் கதை. சிம்பு சார் அந்தப் படத்துல வேற மாதிரி இருப்பார். செட்டே பயங்கரமா இருக்கும். மறுபடியும் வர்றதுக்கு வாய்ப்பு ரொம்ப ரொம்பக் குறைவு. இந்தப் படம் வெளியாகணும்னு சிம்பு நினைக்கணும். அவர் நினைச்சா முடியும்."

உங்களுடைய ஈவென்ட் மேனேஜ்மென்ட் வேலைகள் பத்திச் சொல்லுங்க...

"நான் முதல்ல டான்ஸரா இருந்தேன். அப்புறம் டான்ஸ் ஸ்கூல் வெச்சிருந்தேன். டான்ஸ் ஷோ நிறைய பண்ணேன். அதோடு சேர்ந்து ஈவென்ட் மேனேஜ்மென்ட்டும் பண்ணிட்டு இருந்தேன். சென்னையில இருக்கிற நிறைய கல்லூரிகள், கார்ப்பரேட் கம்பெனிளுக்கு நிறைய ஈவென்ட்ஸ் நடத்தியிருக்கேன். அதுல எனக்கு இறையன்பு ஐ.ஏ.எஸ் சார் பழக்கமானார். அவர் மூலமா அரசு பொருட்காட்சி, கண்காட்சினு நிறைய பண்ணியிருக்கேன்."

'அவள் வருவாளா' படத்துல அஜித் கூட டான்ஸ் ஆடியிருப்பீங்க. அந்த அனுபவம்?

நடிகர் ரெடின்
நடிகர் ரெடின்

"அந்த ஒரு படத்துல அவர்கூட வொர்க் பண்ணேன். அந்தப் பாடல் ராஜசேகர் மாஸ்டர்தான் கோரியோ பண்ணார். டான்ஸர்களை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். எங்களோடதான் சாப்பிடுவார். இடையில அவரை ஒரே ஒரு முறை சந்திச்சேன். ஈவென்ட் மேனேஜ்மென்ட்ல ஒரு ஷோ நடத்தினோம். அதுக்கு மால்குடி சுபா மேடத்தை பார்க்க திருவான்மியூர்ல இருக்கிற அவங்க வீட்டுக்குப் போனேன். காலிங் பெல்லை அடிச்சேன். அஜித் சார் வந்து கதவைத் திறந்தார். 'நீ இங்கே என்ன பண்ற?'னு கேட்டார். மால்குடி சுபா மேடமை பார்க்க வந்தேன்னு சொன்னபோது, 'அவங்க பக்கத்து வீட்ல குடியிருக்காங்க. நீ வா'னு கூப்பிட்டு அந்த ஷோ பத்தி கேட்டு தெரிஞ்சுக்கிட்டார். அதுக்குப் பிறகு, அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கலை."

'கோலமாவு கோகிலா' படத்துல நயன்தாரா, 'ஜாக்பாட்'ல ஜோதிகா... ஹீரோயின்கள்கூட காமெடி பண்றது எப்படி இருக்கு?

நயன்தாரா
நயன்தாரா

" 'கோலமாவு கோகிலா' படத்துல எங்களுக்குதான் காமெடி போர்ஷன் இருக்கும். நயன்தாரா மேடம் சீரியஸாதான் இருப்பாங்க. ஆனா, 'ஜாக்பாட்' படத்துல ஜோதிகா மேடம் நிறைய காமெடி பண்ணியிருக்காங்க. அந்தப் படத்துக்கு அவங்க நிறைய ஹார்டு வொர்க் பண்ணாங்க. மூணு மணி நேரம் மழையில நினைஞ்சு ஃபைட் பண்ணாங்க. எனக்கும் அவங்களுக்குமான காட்சிகள் ரொம்ப குறைவுதான். நான் ஆனந்தராஜ் சார் டீம்ல வருவேன்."

உங்களுக்கான பயணம் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகர் ரெடின்
நடிகர் ரெடின்

"சென்னை வெள்ளம்தான் எனக்கு வாழ்க்கையைப் பத்தின புரிதலை தந்தது. அதுக்கு முன்னாடி நான் வேற மாதிரி இருந்தேன். ஆனா, அந்த வெள்ளத்தால் நான் நிறைய இழந்துட்டேன். அதனால இனி வரும் வாழ்க்கையில போதுமான அளவு சம்பாதிச்சுட்டு என்னால முடிஞ்ச உதவிகளை இல்லாதவங்களுக்கு செய்யணும்; அவ்ளோதான்."

அடுத்து என்ன படம்?

"எங்க இயக்குநர் நெல்சன் இயக்கத்துல சிவகார்த்திகேயன் சார் நடிக்கிற படத்துல நடிக்கிறேன். மத்தபடி எந்தப் படத்தையும் கமிட் பண்ணலை."