Published:Updated:

``டீமே கழிவுநீர்ல இருந்தப்போ பயமா இருந்தது!" - `விசாரணை' சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி ( Vikatan / Balaji.G )

`விசாரணை' வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில், படத்தில் முத்துவேல் கதாபாத்திரத்தில் நடித்த சமுத்திரக்கனி, தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

```நேத்துதான் இந்தப் படத்துல கமிட்டாகி நடிச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ள 5 வருஷம் ஆகிடுச்சு. படத்துல எல்லாரும் கஷ்டப்பட்டு நடிச்சாங்க. அதே சமயம், ரொம்ப சந்தோஷமாவும் வேலைபார்த்த படம் `விசாரணை'. இந்தப் படத்தை பெரிய மேஜிக்னு சொல்லலாம். இதுல நடிச்ச எங்க எல்லாருக்கும் கிடைச்ச பாராட்டுக்குக் காரணம், வெற்றிமாறன் சார். கிளைமாக்ஸ் காட்சி எடுக்குறப்போ, மொத்த யூனிட்டும் கழிவுநீர்ல இருந்து ரொம்ப கஷ்டப்பட்டாங்க. கேமராமேன், இயக்குநர், நடிகர்கள்னு எல்லாரும் கஷ்டப்பட்டோம். கழிவுநீர்ல நின்னுட்டு இருக்குறப்போ யாருக்கு என்ன ஆகுமோங்கிற பயம் இருந்தது. ஒரு நல்ல விஷயத்தை படம் பிடிச்சிட்டிருக்கோம்; யாருக்கும் எதுவும் ஆகாதுனு நம்பிக்கை இருந்தது. இந்த விஷயம்தான் எங்க எல்லாரையும் படத்துல இருந்து கடத்தி வந்ததுனு சொல்லலாம்."

``படத்தோட ஷூட்டிங் பெரும்பாலும் ஆந்திராவுலதான் நடந்தது. போலீஸ் ஸ்டேஷன் முழுக்க செட்தான். சில இடங்கள்ல மட்டும் ஆந்திராவுல ஷூட் நடத்தினோம். வெற்றி, படத்தோட கதையை என்கிட்ட முழுசா சொல்லலை. ஒருநாள் நைட் வெற்றிகிட்ட இருந்து போன் வந்தது. `எங்க இருக்கீங்கன்னு' கேட்டார். ஆபீஸ்ல இருக்கேன்னு சொல்லிட்டு நேரா போய் பார்த்தேன். 15 நிமிடம் படத்தைப் பத்தி சொன்னார். `லாக்கப்'னு ஒரு புத்தகத்தைப் படமா எடுக்குறேன். `இந்தப் புத்தகத்தை நீங்க படிக்காதீங்க. படிச்சா உங்களுக்கு குழப்பம் வந்துடும். நான் ஸ்க்ரிப்ட் எழுதி வெச்சிருக்கேன்'னு சொன்னார். உடனே ஷூட்டிங் போகலாம் சார்னு சொல்லிட்டேன். ஏன்னா, இந்த விஷயத்தைப் பதிவு பண்ணணும்னு தோணுச்சு. படம் பத்தி சொல்லும்போதெல்லாம் `விசாரணை'னு பெயரைச் சொல்லிக்கிட்டே இருப்பார். படத்துக்கும் அதையே டைட்டிலா வெச்சிட்டார். பெரும்பாலான ஷூட்டிங் இரவு நேரங்கள்லதான் நடந்தது. என்னோட கால்ஷீட் மட்டும் 30 நாள்கள் இருந்தது. பகலே தெரியாம, வெளியில நடக்குற எந்த விஷயமும் தெரியாமதான் மொத்த யூனிட்டும் இருந்தது. படத்தோட ஷூட்டிங் முடிச்சதுக்குப் பிறகு, பெரிய மன உளைச்சல் ஏற்பட்டுச்சு. மனசுக்குள்ள ஏதோ ஒரு விஷயம் இறுக்கிப் பிடிச்சிக்கிட்டே இருந்தது. இதுல இருந்து வெளியே வர்றதுக்கு ரொம்ப நாளாச்சு."

வெற்றிமாறனுடன் சமுத்திரக்கனி
வெற்றிமாறனுடன் சமுத்திரக்கனி

``ஏன்னா, சில படங்கள் நம்ம ஆழ்மனசுல இறங்கிடும். முத்துவேல் கதாபாத்திரத்துல நான் வாழ்ந்துட்டிருந்தேன். தினேஷ், பாண்டியாவே இன்னொரு பக்கம் இருந்தார். அதுவும் தினேஷ் பட்ட கஷ்டத்துக்கு அளவே இல்லை. பசங்க நாலு பேருமே நிறைய கஷ்டப்பட்டாங்க. எல்லாருமே அந்ததந்த கேரக்டருக்குள்ளயே இருந்தோம். ஷூட்டிங் ஸ்பாட்டுல சிரிக்கக்கூட மாட்டோம். கதையோட ஓட்டத்துலயேதான் எல்லாரும் இருந்தோம்."

``அதேமாதிரி, எடிட்டர் கிஷோரோட மரணம் எதிர்பாராத ஒண்ணு. எடிட்டிங் பண்ணிட்டு இருக்கும்போது சிரிச்சிட்டு கீழே விழுந்துட்டார்னு சொன்னாங்க. அப்புறம் அவர் உயிர் போயிடுச்சு. இதெல்லாம் ஒரு மாதிரி மனசை இறுக்கிடுச்சு. தேசியவிருது வாங்குறதுக்காக டெல்லிக்குப் போயிருந்தப்போ கிஷோருடைய அப்பா, அம்மா கூட வந்திருந்தாங்க. இந்த இழப்புக்கெல்லாம் ஈடே கிடையாது. வெற்றிமாறனுக்கு ஒரு கையே இழந்த மாதிரி இருக்குனு சொன்னார். இயற்கையை எதிர்த்துக்கிட்டு நம்மனால எதுவும் பண்ண முடியாது. கிஷோர்கூட பேசிப் பழகுற வாய்ப்பு எனக்குக் கிடைச்சதில்லை. பாக்குறப்போ சிரிப்பார். அவ்வளவுதான்."

தினேஷ்
தினேஷ்
``கைக்கட்டை கழட்றதுக்கு தூக்குலே இருக்கலாம்னு முடிவு பண்ணேன்!" - `விசாரணை' கிஷோர்

``இந்தப் படம் ரிலீஸுக்குப் பிறகும் `லாக்கப்' நாவலைப் படிக்கணும்னு தோணலை. அதுக்குக் காரணம், `விசாரணை' படத்தின் மேல இருந்த பிரம்மிப்பு அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன். இந்தப் படத்தைத்தான் நாவல்னு நினைச்சிட்டே இருக்கேன். படத்தோட ஒரு தயாரிப்பாளரான தனுஷ் போன் பண்ணி, `பிரமாதமா நடிச்சிருக்கீங்க'ன்னு சொன்னார். இந்தப் படம் நிறைய கத்துக்கொடுத்திருக்கு. எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாம, மொத்த டீமோட உழைப்புதான் படத்தை ஆஸ்கர் வரை கொண்டுபோயிருக்கு. கண்ணை மூடிக்கிட்டு உழைப்பை மட்டும் எடுத்துட்டு போயிட்டிருந்தா, அதுக்கான பலனை இயற்கை நமக்குக் கொடுக்கும்" என்று முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு