சினிமா
Published:Updated:

‘ஏன் பிரபல ஹீரோயின்களுடன் நடிப்பதில்லை?’ - மனம் திறக்கும் சந்தானம்

சபாபதி படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
News
சபாபதி படத்தில்

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ல கதாநாயகனா ஆரம்பிச்ச பயணம், இப்பவரை தொடர்றது சந்தோஷம்தான். ஆனாலும் ஹீரோ வானதால இன்னிக்கு வரை போராடிட்டி ருக்கேன்

“காமெடியனா இருக்கும்போது, மத்த படங்கள்ல நான் ஊறுகாய், கூட்டு, பொரியல் மாதிரி சைடு டிஷ்ஷா மட்டுமே இருந்தேன். ஆனா, இப்ப ஃபுல் மீல்ஸே நான்தான்னு ஆனதால, முழுக் கவனமும் என்மேல இருக்கும். அதனால் ஒவ்வொரு விஷயத்தையும் பாத்துப் பாத்து பண்ண வேண்டியிருக்கு'' - தன் அக்மார்க் சிரிப்பில் கலகலக்கிறார் சந்தானம்.

``எப்படி வந்திருக்கு `சபாபதி’?’’

“நிறைவா வந்திருக்கு. தீபாவளி முடிஞ்சு, நவம்பர்லேயே தியேட்டர் ரிலீஸுக்குக் கொண்டு வர்றோம். இதுவரை நான் ஹீரோவா பண்ணின படங்கள்ல கவுண்ட்டர் கொடுத்துக் கலாய்க்கற சந்தானமாதான் பண்ணியிருப்பேன். ‘சபாபதி’ல ஸ்லாப்டிக் காமெடி அதிகம் பண்ணியிருக்கேன். இது ஒரு ஃபேன்டசி கலந்த திகில் கதை. ஆனா, பேய்ப்படம் கிடையாது.

எனக்குப் படத்தில் திக்கித் திக்கிப் பேசும் கேரக்டர். ரன்வீர் கபூர் ‘பர்ஃபீ’னு ஒரு படம் பண்ணியிருப்பார். அதைப் போல ஒரு சவால் நிறைஞ்ச ரோல். நானும் இதை ஒரு சவாலா எடுத்துப் பண்ணியிருக்கேன். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பார்த்தா கேரக்டருக்குப் பிறகு நான் ரொம்ப விரும்பிப் பண்ணின படமா வந்திருக்கு. ப்ரீத்தி ஷர்மா, ஹீரோயின், எம்.எஸ்.பாஸ்கர் சாருக்கும் இதுவரை பண்ணாத ஒரு கேரக்டர். தவிர சாயாஜி ஷிண்டே, லக்கி ராஜா, வம்சி, லொள்ளுசபா சுவாமிநாதன், மதுரை முத்து, மாறன்னு நிறையபேர் நடிச்சி ருக்காங்க. ‘குக்கு வித் கோமாளி’யில கலக்கின புகழை இதுல நடிகரா அறிமுகப்படுத்துறோம். ‘ஈரம்’ அறிவழகன் சாரோட சீடர் ஆர்.சீனிவாச ராவ் இயக்கியிருக்கார். பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு, சாம் சி.எஸ்ஸின் இசை, லியோ பாலின் எடிட்டிங் எல்லாமே ஃபேன்டசிக்கு பலமா வந்திருக்கு. என்னோட ஆரம்பகால நண்பர் சி.ரமேஷ்குமார் தயாரிக்கிறார். ஸ்கூல் படிக்கும்போதிருந்தே அவர் எனக்குப் பழக்கம். அடுத்து, ‘மேயாத மான்’ ரத்னகுமார் இயக்கத்துல ஒரு படம் ஷூட் போயிட்டிருக்கு. தெலுங்கு ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ ரீமேக் தவிர இன்னொரு படமும் ஷூட் போயிட்டிருக்கு.’’

‘ஏன் பிரபல ஹீரோயின்களுடன் நடிப்பதில்லை?’ - மனம் திறக்கும் சந்தானம்
‘ஏன் பிரபல ஹீரோயின்களுடன் நடிப்பதில்லை?’ - மனம் திறக்கும் சந்தானம்

``ஒவ்வொரு படத்திலும் புது இயக்குநர்கள், புது ஹீரோயின்னு கூட்டணி சேர்றீங்களே?’’

``புது இயக்குநர்கள் நிறைய பேர் என்கிட்ட கதை சொல்றாங்க. ஏற்கெனவே ஹிட் கொடுத்துப் பெயர் வாங்கின இயக்குநர்களின் படங்கள் பண்ணும்போது, அதுல எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். அறிமுக இயக்குநர்னா அப்படியில்ல. ரசிகர்கள்கிட்ட எதிர்பார்ப்பு இருக்காது. புது இயக்குநர் சந்தானத்தை வச்சு, எப்படிப் பண்ணியிருக்கார்னு தான் நினைச்சு வருவாங்க. கதாநாயகிகளைப் பொருத்தவரை, புதுமுகங்கள் தான் செட் ஆகுறாங்க. பிரபல ஹீரோயின்கள் சில பேரு, `சந்தானம் காமெடியனா இருந்து ஹீரோ ஆனவர். ஸோ, அவரோட நடிச்சா நம்ம மார்க்கெட் வேல்யூ என்னாகுறது?'ன்னு தயக்கம் காட்டுறாங்க. அப்படி நினைக்கறவங்கள வற்புறுத்தி, எங்க படத்துல நடிக்க வைக்க விரும்பல. அவங்களா கதை பிடிச்சு நடிக்க வந்தால், ஓகே. இல்லேனா, கதைக்கு எப்படி ஆட்கள் தேவையோ, அப்படி முகங்களா தேடிக் கண்டுபிடிச்சுக்கலாம்னு நினைக்கறோம். இன்னொரு விஷயம், இதுவரை நான் பண்ணின படங்கள்ல ஒரு பெரிய ஹீரோயின் பண்ற மாதிரி பெரிய கேரக்டரா எதுவும் செட் ஆகல!”

‘ஏன் பிரபல ஹீரோயின்களுடன் நடிப்பதில்லை?’ - மனம் திறக்கும் சந்தானம்
‘ஏன் பிரபல ஹீரோயின்களுடன் நடிப்பதில்லை?’ - மனம் திறக்கும் சந்தானம்

``கதாநாயகனா கையில காசு பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா?’’

“நான் காமெடியனா வரும்போது, ராக்கெட் ஸ்பீடுல மேல வந்துட்டேன். அதுக்கு முன்னாடியே விஜய் டி.வி-ல ரெண்டு வருஷம் செமத்தியா ட்ரெயின் ஆகி வந்ததால, எப்படிப் பேசினா சிரிப்பாங்க, என்ன சொன்னா சிரிப்பாங்கன்னு தெரிஞ்சு வச்சிருந்தேன். சினிமா ஈஸியா இருந்துச்சு. ஆனா, ஹீரோ ஆனது எனக்குப் புது விஷயம். காமெடியனா மத்த ஹீரோக்களோடு நடிக்கும் போது, மத்த ஹீரோக்கள் மாதிரி ஃபிட்னஸ், அது இதுன்னு அவங்களப் பாத்துக் கத்துக்கிட்டேனே தவிர, அவங்கள மாதிரி கதை எப்படி செலக்ட் பண்ணணும், சக்சஸ் எப்படிக் கொடுக்கணும் என்பதைக் கத்துக்கல.

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ல கதாநாயகனா ஆரம்பிச்ச பயணம், இப்பவரை தொடர்றது சந்தோஷம்தான். ஆனாலும் ஹீரோ வானதால இன்னிக்கு வரை போராடிட்டி ருக்கேன். அந்தப் போராட்டம் இப்ப வரைக்குமே குறையல. ஒவ்வொரு படமுமே ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுத்திருக்கு. ஒரு ஸ்கிரிப்டை எப்படி செலக்ட் பண்ணணும்னு கஷ்டப்பட்டுத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். நான் செலக்ட் பண்ற ஸ்கிப்ட்ஸ் மினிமம் கேரண்டியா போறது கடவுள் ஆசீர்வாதம். ஒரு படத்தை சரியான நேரத்துல ரிலீஸ் பண்றது ரொம்ப அவசியம்னு உணரவே எனக்கு எட்டு வருஷம் தேவைப்பட்டுச்சு. `டிக்கிலோனா’ வரை பத்துப் படங்கள் நடிச்சிட்டேன். அதுல ‘சக்கப்போடு போடுராஜா’, ‘இனிமே இப்படித்தான்’ மட்டும்தான் ஆவரேஜா போச்சு. மத்ததெல்லாம் ஹிட் கேட்டகிரிதான்.

இதுக்கப்புறம்தான் என் மார்க்கெட் வேல்யூவை உயர்த்தணும். மார்க்கெட் வேல்யூ உயரும் போதுதான் சம்பளம் அதிகரிக்கும். அப்பத்தான் கையில காசு புரளும். இதுவரை நான் பண்ணின பிசினஸ் எல்லாம் கைமாத்தி விடுற மாதிரிதான். இங்க இருக்கறத அங்கே கொடுத்துட்டு ‘எட்டணா, நாலணா’ மாதிரிதான் லாபம் வந்திருக்கும். காமெடியனா இருக்கும் போது நூறு காமெடியன்கள் இருந்தாலும், டாப் டென் பட்டியலுக்குள் இருக்கணும்னு நினைச்சு இருந்தேன். அதே மாதிரிதான். என்னைச் சுத்தி நூறு ஹீரோக்கள் இருக்காங்க. ஆனா, டாப் டென் பட்டியலுக்குள் நானும் வந்திடணும்னு ஓடிட்டிருக்கேன்.”

‘ஏன் பிரபல ஹீரோயின்களுடன் நடிப்பதில்லை?’ - மனம் திறக்கும் சந்தானம்
‘ஏன் பிரபல ஹீரோயின்களுடன் நடிப்பதில்லை?’ - மனம் திறக்கும் சந்தானம்

``உங்க காமெடிகளில் உருவக்கேலி இருக்கு... மாற்றுத்திறனாளிகளை நீங்க புண்படுத்துறீங்க... இப்படி விமர்சனங்கள் வருதே... இதை எப்படி எடுத்துக்குறீங்க?’’

``ஒரு படம் டைட்டில் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே, ‘இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் கேரக் டர்களும் கற்பனையே’ன்னு வரும். ஒரு இயக்குநர் அவரோட கற்பனைத் திறனில் ஒரு கதையை, கேரக்டரை உருவாக்குறார். அதனால் எல்லாத்தையும் நிஜம்னு நினைச்சுட்டு இப்படிப் பார்க்கிறது சரியில்லை. இன்னொரு விஷயம், படம் பார்க்க வர்றவங்களும் ‘இன்னிக்கு நாம சந்தானம் படத்துக்குப் போறோம். அவர் அறிவுரைகள் சொல்வார். ஸோ, நோட்ஸ் எல்லாம் எடுத்துக்க வேண்டியிருக்கும், பேப்பரும் பேனாவும் கொண்டு போவோம்’ என்கிற மைண்ட்செட்லேயா வர்றாங்க? இல்லையே! ரெண்டு மணிநேரம் சிரிச்சுட்டு, கவலைகளை மறந்துட்டு வரலாமே என்கிற எண்ணத்தோடுதான் ஜாலியா வருவாங்க. சினிமாவுக்கு வெளியே நான் அப்படிப் பேசுறேன்னா அது தப்பு.

உதாரணமா, ‘சிறுத்தை’ல காட்டுப்பூச்சியா திருடனா பண்ணினேன். அதுக்காக எல்லாரையும் நான் திருடவா சொல்லியிருப்பேன்?! அது ஒரு இயக்குநரின் கற்பனையில் உருவான ஒரு கேரக்டர். குறுக்கு வழியில லைக்கோ, வியூஸோ வாங்கிப் பெரிய ஆளாகிடணும்னு நினைக்கறவங்க, பிரபலங்களைத் தரக்குறைவா பேசணும்னு நினைச்சுப் பண்றாங்க. அவங்கள நான் கவனத்துல எடுத்துக்க வேண்டியதில்ல. ‘டிக்கிலோனா’ ஹிட் ஆனதால சில யூடியூபர்ஸ் அப்படிப் பேசியிருக்காங்க. ‘பிஸ்கோத்து’ல அநாதை ஆசிரமம் பத்தி நல்ல விஷயம் பேசியிருப்பேன். அதை யாரும் பாராட்டலியே? ஏன்னா, அது ஹிட் ஆகல. இயக்குநர்கள் தங்களோட கேரக்டர்கள் எப்படி இருக்கணும்னு நினைக்கிறாங்களோ, அதைச் செய்யறதுதான் நடிகர்கள் வேலை. அந்தக் கற்பனையைத் தடை பண்ணினா, அதுல காமெடி வராது; கதையும் வராது.”