கட்டுரைகள்
Published:Updated:

யுவன் என்னை ஏமாத்திட்டார்!

சென்னை - 28
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னை - 28

படத்தில் இருந்த காமெடியைவிட எங்க செட்ல அவ்வளவு காமெடி இருக்கும்.

கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களைத் தன் ஸ்டைலில் வெளியிட்டு சோஷியல் மீடியாவைக் கலகலக்க வைக்கிறார் மிர்ச்சி சிவா. ‘சென்னை - 28’ மூலம் சினிமாவுக்குள் அறிமுகமான இந்த அகில உலக சூப்பர்ஸ்டார் 10 இயர் சேலஞ்சாக சென்னை 28 - 2-லும் நடித்துவிட்டார். அவரிடம் முதல்பட அனுபவம் கேட்டேன்.
சென்னை - 28
சென்னை - 28

“ஆர்.ஜே-வாக இருந்த உங்களுக்கு எப்போது நடிக்கணும்னு ஆசை வந்தது?”

``ஆரம்பத்தில் இருந்தே நடிகனாகணும்னுதான் ஆசை. வாய்ப்பு கிடைக்கிற வரைக்கும் சும்மா இருக்க வேணாம்னுதான் ஆர்.ஜே வேலைக்குப் போனேன். அப்போ இயக்குநர்களோட நட்பு கிடைக்கணும்னு சில படங்களில் ரிச் பாயாகவும்(கூட்டத்துல ஒருத்தனா) நடிச்சிருக்கேன். அதே சமயத்தில்தான் யுவன் சாரும் எனக்கு நண்பரானார். அவர் சொல்லித்தான் ’சென்னை - 28’ படத்துக்கு ஆடிஷன்ல கலந்துக்கலாம்னு போனேன். கார்த்திக் கேரக்டருக்கான ஆடிஷன் போயிட்டு இருந்துச்சு. வந்திருந்த எல்லாருக்கும் ஒரே வசனத்தைக் கொடுத்து பேசச் சொன்னாங்க. கொடுக்கிற வசனத்தோடு நம்மளோட பங்குக்கு ஏதாவது சேர்ப்போம்னு சேர்த்ததுதான், ‘வானமோ நீலம் - நீதான் என் பாலம்’கிற காமெடி கவிதை. அதை நான் பேசுனதும், அங்க இருந்த அசிஸ்டென்ட் டைரக்டர், கேமரா மேன் எல்லாரும், ‘இது பேப்பர்லேயே இல்லையே’ன்னு கேட்டாங்க. ‘இதை நீங்க அப்படியே டைரக்டர்கிட்ட போட்டுக்காட்டுங்க’ன்னு சொன்னேன். அதைப் பார்த்துட்டுத்தான் வெங்கட் பிரபு சார் என்னை ஓகே பண்ணினார். அவர் ஸ்கிரிப்ட்ல எழுதி வெச்சிருந்த கார்த்திக் கேரக்டரோட ஃப்ளேவரில் நான் கமிட்டானதுக்கு அப்புறம் என் ஒரிஜினல் கேரக்டரோடு சில விஷயங்களையும் சேர்த்தார். இப்படி உருவானதுதான் என் நடிப்புப் பயணம்.’’

`` `சென்னை - 28’ படத்தில் கமிட்டானதை உங்க வீட்டில் சொல்லலையாமே..?’’

‘` ‘நம்ம பையன் நடிக்கப்போறான்’னு தெரிஞ்சா எங்க வீட்டில் இருக்கிற எல்லோரும் நிச்சயம் சந்தோஷப்படுவாங்க. ஆனால் அதை ஒரு படத்தில் கமிட்டான உடனே சொல்லாமல், நடிச்சு முடிச்சதும் சொல்லலாம்’னு இருந்தேன். ஆனா, அதுக்குள்ள பேப்பர்ல வந்த செய்தி, போஸ்டர்னு அவங்களே பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டாங்க. படம் பார்த்துட்டு ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. நான் ஆர்.ஜே ஆனபோதும் இப்படித்தான். எங்க வீட்டுல யார்கிட்டேயும் சொல்லவே இல்லை. அவங்களா என் ஷோ கேட்டுட்டு என்கிட்ட கேட்டதும், ‘ஆமா’ன்னு சொன்னேன்.’’

`` `சென்னை - 28’ படத்தோட ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருக்கும்..?’’

‘` ‘சென்னை - 28’ டீமில் டைரக்டர், தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் சார், நடிகர்கள்னு எல்லாருமே புதுசுதான். புதுசா இருந்தனால, இதை அப்படிப் பண்ணணும்; அதை இப்படிப் பண்ணணும்னு எதையுமே பிரஷரா ஏத்திக்காம செட்டே செம ஜாலியா இருந்தோம். ஆனால், நாங்க எதைப் பண்ணினாலும் அதை ஆர்வத்தோடு பண்ணினோம். அப்படி இன்ட்ரஸ்ட் எடுத்துப் பண்ணும்போது, அது நிச்சயம் சக்சஸாகும்னு நம்பினோம். அதுமட்டுமல்லாமல், நாம ஒரு ஜாலியான படம் பண்றோம், அந்தப் படம் எவ்வளவு ஜாலியா இருக்கோ அதே மாதிரிதான் அதுல நடிக்கிறவங்களும் ஜாலியா நடிக்கணும்னு படம் முழுக்கவே என்ஜாய் பண்ணி நடிச்சோம். ஒரு சீன் ஷூட் பண்ணும் போது, அந்த சீனில் இல்லாதவங்க எல்லாரும் ஆஃப் ஸ்கிரீனில் அட்டகாசம் பண்ணிட்டிருப்போம். படத்தில் இருந்த காமெடியைவிட எங்க செட்ல அவ்வளவு காமெடி இருக்கும்.’’

சென்னை - 28
சென்னை - 28

“ `சென்னை - 28’ படத்தில் நடந்த மறக்கமுடியாத சம்பவம் ஒண்ணு சொல்லுங்க?”

“நான் ஆர்.ஜேவா இருந்தப்போ ஒரு நாள் யுவன் சாரோட ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்குப் போயிருந்தேன். அப்போ ஒரு பாட்டு கம்போஸ் பண்ணிட்டிருந்தார். அந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததனால, ‘இந்தப் பாட்டை நான் நடிக்கிற முதல் படத்தில்தான் யூஸ் பண்ணணும். வேற எந்தப் படத்துக்கும் கொடுத்திடாதீங்க’ன்னு, நான் எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்தப்பவே சொன்னேன். அவரும் அந்த ட்யூனை எடுத்து வெச்சுக்கிட்டார். அந்தப் பாட்டு ’சென்னை - 28’ படத்துல வரும்; ஆனா, என் கேரக்டருக்கு வராது. நான் யுவன் சார்கிட்ட, `என்ன சார் இது’ன்னு கேட்டப்போ, ‘‘நான் நடிக்கிற படத்துக்கு வேணும்’னுதானே கேட்டீங்க. என் கேரக்டருக்கு வேணும்னு கேட்கலையே’ன்னு சொல்லிட்டார். அன்னைக்கு நான் சரியா கேட்காததனால எனக்குப் பிடிச்ச, ‘உன் பார்வை மேலே பட்டால்’ பாட்டு அரவிந்துக்குப் போயிடுச்சு. ஆனால், முதல் படத்திலேயே எனக்குப் பெரிய பாக்கியம் கிடைச்சது. எஸ்.பி.பி சாரும் சித்ரா மேடமும் சேர்ந்து பாடின ‘யாரோ... யாருக்குள் இங்கு யாரோ’ பாட்டை என் கேரக்டருக்குக் கொடுத்திருந்தாங்க. பிடிச்ச பாட்டு கிடைக்காத வருத்தத்தை, இந்தப் பாட்டு தீர்த்திடுச்சு.’’

மிர்ச்சி சிவா
மிர்ச்சி சிவா

`` ‘சென்னை - 28’ படத்தோட இரண்டாம் பாகத்தை 10 வருஷம் கழிச்சு எடுக்கும்போது எப்படி இருந்தது..?’’

‘`முதல் பாகம் எடுக்கும்போது ஒரு கேமராவை வெச்சுதான் ஷூட் பண்ணினோம். கேரவன் கிடையாது. இரண்டாம் பாகம் எடுக்கும்போது, டெக்னாலஜி நல்லா வளர்ந்திருச்சு. பல கேமராக்கள் வெச்சு ஷூட் பண்ணினோம். எங்களுக்குத் தனித் தனி கேரவன் கொடுத்திருந்தாங்க. ஆனால், அப்போவும் நாங்க சீன் முடிஞ்சதுக்கு அப்புறம் கேரவனுக்குப் போக மாட்டோம். எல்லாரும் உட்கார்ந்து பேசிட்டிருப்போம். அந்த அளவுக்கு அந்த 40 நாள்களை என்ஜாய் பண்ணினோம். இந்த முறை வெறும் ஜாலி மட்டும் இல்லாமல் அதிகமா எமோஷன்ஸும் இருந்துச்சு. இதுக்கெல்லாம் வெங்கட் பிரபு சாருக்குத்தான் நன்றி சொல்லணும். ஏன்னா, தமிழ் சினிமாவில் ‘வெங்கட் பிரபு ஜானர்’னு சொல்ற அளவுக்கு தனக்குன்னு ஒரு ஸ்டைலில் படம் பண்ணிட்டிருக்கார். அதில் எங்களையும் சேர்த்துக்கிட்டார். ‘சென்னை - 28’ படம் மூலமா நாங்க வெளியில பேசப்பட்டதுக்கு என்ன காரணம்னா, அவர் எழுதி வெச்சிருக்கிற ஸ்கிரிப்ட்டையும் தாண்டி எங்களுக்கு என்ன வரும்; எங்களோட கம்ஃபர்ட் ஜோன் என்னன்னு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா வொர்க் பண்ணி சீன்ஸ் வெப்பார். அதான் எங்களோட வெற்றி.’’