Published:Updated:

``அமெரிக்காவுல பண்றதை தமிழ்ல ஏன் பண்ண மாட்டேங்கிறாங்கனு ஏக்கமா இருக்கு!" - சித்தார்த்

`மக்களுடைய சினிமா ரசனை பத்திப் பேச இங்கே யாருமே கிடையாது. ரெண்டு பேர் ஒரு படம் பார்த்தா, அவங்ககிட்ட இருந்து வெவ்வேற கருத்துகள் வரும்.’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``லவ் பண்றவங்களுக்குள்ள வர்ற பிரச்னை, இந்த மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் வித்தியாசமான பதிலுடைய ரொமான்டிக் ஆக்‌ஷன் படம் 'டக்கர்'. ரெண்டு தனித்துவமான கேரக்டர்களுக்கு இடையே நடக்குற கதை. இந்த ஜானர்ல கடைசியா 'உதயம் NH4' பண்ணேன். அதற்குப் பிறகு, இந்தப் படம்தான்" எனப் பேசத் தொடங்கினார் சித்தார்த்.

'டக்கர்' படத்துல உங்களுக்கு என்ன மாதிரியான ரோல்?

``இப்போ இருக்கிற சமூகத்துல காசு சம்பாதிக்கணும், நல்லா வாழ்ந்துகாட்டணும்னு நினைக்கிற லைவ்லியான மிடில் க்ளாஸ் பையன்தான் என்னுடைய ரோல். அவங்களுக்கு இருக்கிற மனநிலை, கோவம் மாதிரிதான் என்னுடைய கேரக்டர் பேசும். ஹீரோயின் மாதிரியே எனக்கும் சில தனித்துவமான கேரக்டர்கள் இருக்கு. எல்லா மிடில் க்ளாஸ் இளைஞர்களும் அவங்க வாழ்க்கையோடு நிச்சயம் இந்தப் படத்தைத் தொடர்புப்படுத்திப் பார்க்குற மாதிரி இருக்கும். இதுவரை நான் பண்ணாத மாதிரி ஆக்‌ஷன் சீக்குவென்ஸ்லாம் இதுல பண்ணியிருக்கேன். அந்த ஆக்‌ஷன்தான் படத்துல என்னுடைய ஸ்பெஷலா இருக்கும்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேற யாரெல்லாம் நடிச்சிருக்காங்க?

யோகிபாபு
யோகிபாபு

``இதுல எனக்கு ஜோடியா திவ்யான்ஷா நடிச்சிருக்காங்க. அவங்களுக்குத் தமிழ்ல இதுதான் முதல் படம். `டக்கர்' முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் என்டர்டெயினர். இதுவரை பார்க்காத யோகிபாபுவை இதுல பார்க்கலாம். அவர் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் விருந்தா இருக்கும். அவங்களோட சேர்த்து யோகி பாபுவுடைய காமெடியைத் தியேட்டர்ல பார்க்க ஆவலா இருக்கேன். படம் முழுக்க வந்து கலாய்ச்சுகிட்டே இருப்பார். அவருடைய வளர்ச்சியைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இவ்வளவு திறமை இருக்கிற ஒருவரை இன்னும் பயன்படுத்தலாமேனு நிறைய முறை நினைச்சிருக்கேன். அவரைத் தவிர, பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் வில்லனா பண்ணியிருக்கார். ஆர்ஜே விக்னேஷ்கூட வொர்க் பண்ணது ரொம்ப ஜாலியா இருந்தது. ஒரு பட்டாளமே படத்துல இருக்கு."

நிறைய புதுப்புது முயற்சிகள் பண்ணியிருக்கீங்க. அதுல சில வெற்றிபெறாம இருக்கலாம். மக்களுடைய சினிமா ரசனையை எப்படி இருக்குனு நினைக்கிறீங்க?

``மக்களுடைய சினிமா ரசனை பத்திப் பேச இங்கே யாருமே கிடையாது. ரெண்டு பேர் ஒரு படம் பார்த்தா, அவங்ககிட்ட இருந்து வெவ்வேற கருத்துகள் வரும். கஷ்டப்பட்டு எடுத்த படம் சரியா போகலைங்கிறதால அது தப்பான படம்னு சொல்ல முடியாது. மக்களும் சில நேரங்கள்ல தப்பு பண்ணுவாங்க. `காவியத் தலைவன்' படத்துக்கு அத்தனை மாநில விருதுகள் கிடைத்தன. ஆனால், அது சரியா போகலைங்கிறதால வசந்தபாலன் நல்ல படத்தை எடுக்காம இருக்க மாட்டார். எல்லா கலைஞர்களும் படத்துக்குப் படம் ஏதாவது வித்தியாசமா பண்ணணும்னு நினைச்சுதான் பண்ணுவாங்க. அதுக்குச் சரியான ரெஸ்பான்ஸ் இல்லைன்னாலும் அடுத்த படம் பண்ணும்போது அந்தத் தேடல் இருந்துகிப்ட்டேதான் இருக்கும். அதுக்கும் வெற்றி தோல்விக்கும் சம்பந்தம் இல்லை."

15 வருட சினிமா பயணத்துல இன்னும் இந்த விஷயத்தை பண்ணலையேன்னு ஏதாவது நினைச்சதுண்டா?

இயக்குநர் கார்த்திக் - சித்தார்த்
இயக்குநர் கார்த்திக் - சித்தார்த்

``நான் ட்ரீம் ரோல்ஸ் பத்தி பேச விரும்பலை. இதுவரைக்கும் பெருசா அப்படி ஒண்ணும் சாதிச்சது இல்லை. இன்னும் நிறைய பண்ணணும். அப்படி எல்லாமே பண்ணிட்டு ஒரு கட்டத்துல, `இதை மிஸ் பண்றேன்'னு சொன்னா சரி. அந்தக் கட்டத்துக்கெல்லாம் நான் இன்னும் வரலை. நமக்கு என்ன கதைகள் வருதோ அதுல சிறந்ததைத் தேர்ந்தெடுத்து பண்றதுதான் இப்போ எனக்கான வேலையா இருக்கு. இதுவரை மூணு படங்கள் தயாரிச்சிருக்கேன். இன்னும் நிறைய படங்கள் தயாரிக்கணும்னு ஆசை இருக்கு. ஒரு தயாரிப்பாளரா இதுவரை யாரும் பண்ணாத விஷயங்களைப் பண்ணணும்னு நினைக்கிறேன்."

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம்னு எல்லா மொழிகள் வெப் சீரிஸிலும் நடிச்சிட்டீங்க. இந்தக் கரியர் உங்களுக்கு திருப்தியா இருக்கா?

``யாராவது என்கிட்ட கதை சொல்ல வந்தா, `இது எந்த மொழிக்காக?'னு கேட்பேன். இந்தக் கேள்வி கேட்குறதுக்கான வாய்ப்பு எத்தனை நடிகர்களுக்குக் கிடைக்கும்னு தெரியலை. இது எனக்குக் கிடைச்ச வரம்னு நினைக்கிறேன். அப்படின்னா எல்லா மொழி மக்களுக்கும் நான் பரிச்சயம்னு அர்த்தம். எனக்குக் கதை பிடிச்சிருந்தா அது எந்த மொழினு பார்க்க மாட்டேன். உடனே ஓகே சொல்லிடுவேன். 5 வருஷத்துல ஒரு இந்தி வெப் சீரிஸ் தவிர, தமிழ்ல மட்டும்தான் கவனம் செலுத்திகிட்டிருக்கேன். இப்போதைக்கு யாராவது கேட்டா, `நான் ஒரு தமிழ் நடிகன். மத்த மொழிகளிலும் நடிச்சிருக்கேன்'னு சொல்வேன் அவ்வளவுதான்."

எல்லா மொழியிலும் நடிச்சிருக்கீங்க. ஆனா, ஏதாவது ஒரு மொழியில மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் உங்களுக்கான மார்க்கெட்டை உருவாக்கி இருக்கலாம்னு நினைக்கிறீங்களா?

சித்தார்த்
சித்தார்த்

``எந்த மொழியா இருந்தாலும் கதை பிடிச்சா நடிச்சிட்டு வருவேன். மார்க்கெட் உருவாகுறது நம்ம கையில இல்லை. படம் நல்லா இருந்தா மக்கள் ரசிப்பாங்க. கதை நல்லா இருக்கா, எனக்கு அதுல நடிக்கிறதுல இஷ்டம் இருக்கானு மட்டும்தான் பார்ப்பேன். மத்தபடி எதையும் யோசிச்சதில்லை. அந்த இடத்துல நான் இருந்தா ஒவ்வொரு இடத்துக்கும் போய் நீங்க சொல்ற அந்தக் கோட்டையைக் கட்டமுடியாது. ஒரு இடத்துல கோட்டையைக் கட்டலாம்னு யோசிச்சிருந்தா 5 மொழிகள்லேயும் நடிக்க முடியாது. ரெண்டுல ஏதாவது ஒண்ணுதான் பண்ண முடியும். தமிழ்ல மட்டும் நடிக்கிறவங்ககிட்ட, `நீங்க பெங்காலில ஏன் நடிக்கலை'னு கேட்க முடியுமா. ஒரு மொழில மட்டும் கோட்டையைக் கட்ட முடியலைன்னு நான் யோசிச்சதும் கிடையாது; வருத்தப்பட்டதும் கிடையாது."

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் மாதிரியான ஆன்லைன் தளங்களுடைய வளர்ச்சியை எப்படிப் பார்க்குறீங்க?

``தமிழ்ல வெப்சீரிஸ் வளர ரொம்ப நேரமாகும். ஏன்னா, இப்போ அந்தத் துறை மோசமான நிலையில இருக்கு. இந்த மாதிரி ஆன்லைன் ப்ளாட்ஃபார்ம்ல அமெரிக்கா நமக்கு எவ்வளவோ முன்னாடி இருக்கான். இப்போதான் இந்தியில இதுக்கான வளர்ச்சி அதிகமாகியிருக்கு. ஆனா, தமிழ்ல இன்னும் அதுக்கான வளர்ச்சி ஆரம்பிக்கவே இல்லைன்னுதான் சொல்வேன். அந்த ஊர்ல எல்லா பெரிய ஹீரோ, ஹீரோயின்களும் வெப் சீரிஸ் பண்ணிகிட்டு இருக்காங்க. இங்க அப்படியில்லை. நான் போன வருஷம் ஒரு இந்தி வெப் சீரிஸ் பண்ணேன். இந்த வருஷம் ஒண்ணு பண்ணப்போறேன். அங்க பெரிய பட்ஜெட் செலவு பண்ணி புதுசுப் புதுசா, அதுவும் சுவாரஸ்யமா பண்ணிக்கிட்டிருக்காங்க. அந்த மாதிரி தமிழ்ல ஏன் பண்ண மாட்டேங்கிறாங்கன்னு ஏக்கமா இருக்கு. மாறப்போகுது, மாறப்போகுதுனு நம்ம பேசுறோமே தவிர, பெருசா ஒரு மாற்றமும் நிகழலை. தமிழ்நாடே சேர்ந்து ஒரு சீரிஸ் பார்த்து கொண்டாடினாதான் இதை சினிமாவோட ஒப்பிட்டு பேச முடியும். இந்நேரம் வெப் சீரிஸ்களுடைய வளர்ச்சி நம்ம ஊர்லயும் அதிகமா இருந்திருக்கணும். ஏன் வரலைங்கிறதுதான் ஆச்சர்யமா இருக்கு."

நடிகர், பாடகர், தயாரிப்பாளர், கதையாசிரியர்னு பன்முகத் திறமையா இருக்கும்போது உங்களுடைய நேரத்தை எப்படி மேனேஜ் பண்றீங்க?

சித்தார்த்
சித்தார்த்

``நான் எப்போவும் வேலை பார்த்துகிட்டே இருக்கிற ஆள் இல்லை. ஆனா, வேலை செய்யும்போது சாப்பிடாம, தூங்காமல் வேலை பார்த்துகிட்டே இருப்பேன். மூணு மாசம் இப்படி வொர்க் பண்ணா அப்புறம் ரெண்டு மாசம் முழுக்க பிரேக் எடுத்துக்குவேன். அப்போதான் மைண்ட் ரிலாக்ஸா இருக்கும். இல்லைனா, உடம்பு தாங்காது. சினிமா உலகத்துல எதுவும் அவங்க கட்டுப்பாட்டுல இருக்காது. குறிப்பா, நடிகனுக்கு சான்ஸே இல்லை. இத்தனை வருஷ பயணத்துல சிஸ்டமாடிக்கா எப்படி வேலை செய்றதுனு பிளான் பண்ண கத்துக்கிட்டேன்."

ஃபிட்னஸ் ரகசியம்?

``இந்த ஜிம், வொர்க் அவுட், டயட் இவையெல்லாம் எனக்கு பெருசா பழக்கம் கிடையாது. ஒரு படத்துக்கு உடம்பை ஏத்தணும்னா, ஜிம் போவேன் அவ்வளவுதான். எனக்கு சாப்பிடுறது ரொம்பப் பிடிக்கும். நிறைய சாப்பிடுவேன். ஆனா, என்னவோ அது என் உடம்புல ஒட்டலை. அதை லக்னுதான் சொல்லணும். வயசாகுது, நம்ம இளமையா இருக்கணும்னு யோசிச்சதே கிடையாது. அப்படி யோசிக்காம இருக்கிறதுனாலதான் இப்படி இருக்கேன்னு நினைக்கிறேன்."

சினிமாவைத் தாண்டி எதுல ஆர்வம்?

``மியூசிக்ல அதிக ஆர்வமுண்டு. நான் சினிமாவுல இல்லைன்னா, இசைத் துறையிலதான் ஏதாவது பண்ணிகிட்டு இருந்திருப்பேன். சாப்பிடுறது ரொம்பப் பிடிக்கும். புதுப்புது இடங்களுக்குப் போகப்பிடிக்கும். வொர்க் இல்லைன்னா யார்கிட்டேயும் சொல்லாமல் கிளம்பி வெவ்வேற நாடுகளுக்குப் போயிடுவேன்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு