கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த `வெந்து தணிந்தது காடு' படம் கடந்து வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சிம்பு, இப்படம் குறித்தும் படத்தின் வெற்றி குறித்தும் மகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

இது பற்றிப் பேசிய அவர், "இது ஒரு எக்ஸ்ப்ரிமென்டலான படம். இதில் வழக்கமான ஹீரோ பில்டப்கள் இல்லை. இதனால் இந்தப் படத்தை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் இப்போது இப்படத்திற்கான வரவேற்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்த்தது பத்திரிகையாளர்களான நீங்கள்தான்.
இப்படத்தை நல்லபடியாகத் தயாரித்து ரிலீஸ் செய்ததற்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சாருக்கு ரொம்பவும் நன்றி. இந்தப் படம் நல்ல இருக்கு என்று நல்ல தகவல்களைக் கேட்கும் போது என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், இதற்குமுன் அவ்வளவு வலிகளைச் சந்தித்து இருக்கிறேன். சினிமா படத்தில் வரும் ஹீரோவைப் போல மொத்தமாகத் தோல்வியடைந்து தெருவுக்கு வந்து, அதன்பின் மெதுமெதுவாக மீண்டு வந்து வெற்றி பெறுவதுபோல் நான் இப்போது வெற்றி பெற்றிருக்கிறேன். இயக்குநர் கெளதம் உடன் 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' என இரண்டு படங்கள் பண்ணி இருக்கிறேன்.

இந்தப் படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். இப்படத்தில் நிறைய சிங்கிள் ஷாட் காட்சிகள் இருக்கின்றன. படத்தின் மேக்கிங் வீடியோவை மக்களுக்குப் போட்டுக் காண்பித்தால் அவர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறன். வழக்கமான கமர்சியல் படம் என்றால் இதுதான் பண்ண வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால் இப்படம் அப்படி இல்லை என்பதால் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
இப்படத்திற்கு என்னால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்திருக்கிறேன். நிறையப் படங்கள் நான் பண்ணியிருந்தாலும், இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பிற்காக நிறைய பாராட்டுகள் வந்திருக்கின்றன. அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதற்காக அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைத் தருகிறது. புதிதாக நிறையப் படங்கள் பண்ணவேண்டும் என்று ஊக்கமளிக்கிறது.
ரஹ்மான் சார் பத்தி சொல்லவேண்டும் என்றால், அவர் இவ்வளவு உயரத்திற்குப் போன பிறகும் புதிய இசையமைப்பாளர் போல இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 'மறக்குமா நெஞ்சம்' பாட்டு வந்ததும் இந்தப் பாட்டு கண்டிப்பா ஹிட் ஆகும் என்று தெரியும். ஆனால் என்னுடைய பேவரைட் `மல்லி பூ...' பாட்டுதான். சூட்டிங் பண்ணும்போதே இயக்குநர் கௌதம் கிட்ட சொன்னேன், 'இந்தப் பாட்டு தியேட்டரில் வரும்போது நல்ல வரவேற்பு இருக்கும்' என்று உறுதியாகச் சொன்னேன். அதே போல நடந்தது. அதற்குக் காரணம் ரஹ்மான் சார்தான்" என்று கூறினார்.
இப்படம் வழக்கமான படங்கள் போல் இல்லை. ஒருவேளை ரசிகர்கள் முதல் நாளே இப்படத்தைப் பார்த்து படத்தின் ஓட்டம் மெதுவாக இருக்கு, புரியவில்லை, இது ஒரு ஆர்ட் பிலிம் மாதிரி இருக்கு அப்படின்னு நிறைய நெகட்டிவ் விமர்சனங்களைக் கொடுத்திருக்கலாம். ஆனால் நான் பார்த்த அளவிற்கு 80% பேர் பாசிட்டிவாக படம் நல்லா இருக்கு என்றுதான் சொன்னார்கள். 'தமிழில் நல்ல படம் கொடுக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள்' என்று எங்களின் உழைப்பைப் பார்த்து நீங்கள் அங்கீகாரம் கொடுத்திருக்கிறீர்கள். அதற்கு அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

மேலும், "படத்தின் இரண்டாம் பாகம் தாயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த முதல் பாகத்தை எல்லோரும் கேங்ஸ்டர் படமென்று சொல்கிறார்கள். இது கேங்ஸ்டர் படமல்ல ஒரு சாதாரண மனிதன் எப்படி கேங்ஸ்டர் ஆகிறார் என்பதைப் பற்றியப் படம். கேங்ஸ்டர் கதை படத்தின் இரண்டாம் பக்கத்தில்தான் இருக்கிறது" என்று கூறினார்.