அத்தியாயம் 1
Published:Updated:

“கிடைக்க வேண்டியது கிடைச்சே தீரும், அதை யாராலும் தடுத்துவிட முடியாது...!” - சிவாஜி கணேசன்!

Actor Sivaji Ganesan's Exclusive Interview
பிரீமியம் ஸ்டோரி
News
Actor Sivaji Ganesan's Exclusive Interview

“ஐ ஆம் எ மதர்லெஸ் பாய்... இந்திராதான் எனக்கு அம்மா..!” - சிவாஜி கணேசன்

பிரிட்டிஷ் நடிகர் லாரென்ஸ் ஒவியரை ‘நடிகர்களுக்கெல்லாம் நடிகர்’ என்று சொல்வதுண்டு. நடிப்புக் கலையைக் கரைத்துக் குடித்த நிலையில், மற்ற எந்த நடிகர் அல்லது நடிகையின் ரியாக்ஷனும் தேவைப் படாமல், தன்னந்தனியே நின்று உணர்ச்சியூட்டும் முகபாவங்களாலும், வசன உச்சரிப்பாலும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் ஓர் அசாதாரணமான திறமை உள்ளவர் அவர். 

அவருக்கு இணையாக இங்கே சிவாஜியைத்தான் சொல்ல முடியும். நடிப்பு மண்டலத்தில், சிவாஜி ஒரு சூரியன். மற்றவர்கள் இந்தச் சூரியனுக்கு அருகிலோ, தொலைவிலோ சுற்றி வரும் கிரகங்களே.‘சற்று தேவைக்கு அதிகமாக உணர்ச்சிகளைக் காட்டி நடிப்பவர்' என்று சிவாஜியைப் பற்றிக் குறைபடும் விமரிசகர்கள் உண்டு - மைக்கேலேஞ்சலோ உருவாக்கிய டேவிட், மோஸஸ் போன்ற சிற்பங்களில் கூடத்தான் கம்பீரம் சற்று மிகையாக இருக்கிறது! இதைக் குறை என்று சொல்லலாமா! ?நடிப்புத் துறையில் சிவாஜி காலடி எடுத்து வைத்து இன்றோடு (அக்-1) ஐம்பது ஆண்டுகளாகின்றன!  கலையுலகில் ஒரு புதிய சகாப்தம் படைத்த நடிகர் திலகத்தைச் சந்தித்துப் பேட்டி காண வேண்டும் என்கிற ஐடியா ஒரே சமயத்தில் சென்ற வாரம் ஜூனியர் விகடன் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் அத்தனை பேருக்கும் தோன்ற (செப்- 24) டெலிபோனைச் சுழற்றினோம். மறு முனையில் ‘விசாரித்துச் சொல்கிறோம்’ என்றார்கள்.

அரை மணி நேரம் கழித்து. ‘ அண்ணன் இன்று பிற்பகல் 4 மணிக்கு வேலூர் செல்கிறார். இப்போதே வந்தால் (2 மணி) பார்க்கலாம் என்கிறார்... என்று தகவல் வந்தது. பதினைந்து நிமிடத்தில் தி.நகர் பேக் ரோடில் உள்ள சிவாஜி இல்லத்தில் நுழைந்தோம். மெயின் கேட் முழுமையாகத் திறந்திருந்தது. வாட்ச்மேன் யாரையும் காணோம். ‘போர்ட்டிகோ’வில் சாக்லெட் வண்ண ‘பென்ஸ்’ கார்... வராண்டாவில் இருபுறமும் வளைந்து கூர்மையாகக் குனிந்திருக்கும் தந்தங்கள்... உள்ளே வரவேற்பனையின் ஓரத்திலிருந்து எட்டிப் பார்க்கும் (பதப்படுத்தப்பட்ட) ராட்சதப் புலி... உள்ளே சென்று அமர்கிறோம்.

ஐந்து நிமிடம் நிசப்தமாகக் கழிய சுருள் தாடியுடன் இ. காங்கிரஸ் எம்.எல்.ஏ, ராஜசேகரன் வருகிறார். “வந்திருக்கிறதைச் சொல்லிட்டீங்களா?” என்கிறார் சிநேகத்துடன். “யாருமே கண்ணில் படவில்லையே...” என்கிறோம். உள்ளே சென்று சில நிமிடங்களில் திரும்பி வந்து ‘வாங்க’ என்று ஸாடீன் திரைச் சீலைகளை ஒதுக்கி உள் ஹாலுக்கு அழைத்துச் செல்கிறார்.

உள்ளே கூடைப் பந்து மைதானத்தை விட சற்றுப் பெரிய ஹாலில் சோபாவில் சாய்ந்தவாறு சிவாஜி....

தொலைவில் மந்திரிப் பிரதானிகளுக்குப் போடப்பட்டிருப்பதைப் போல வரிசையாக இருந்த நாற்காலிகளில் சில கட்சிக்காரர்கள் செங்குத்தாக உட்கார்ந்து கொண்டு சிவாஜியையே மரியாதையுடன் பார்த்துக் கொண்டிருக்க...

மொகல் மினியேச்சர்களில் வரையப் பட்டிருக்கும் அக்பர், ஷாஜகான் பாணியில் அமர்ந்திருக்கும் சிவாஜி நம்மை ஏறிட்டுப் பார்த்து தலையசைத்து ‘வாங்க’ சொல்கிறார்.

தப்பான எக்ஸ்பிரஷன் ஒன்றை சிவாஜ காட்டுகிறாரென்றால் அது உள்ளே நுழைந்தவுடன் நம்மை அவர் பார்க்கும் பார்வைதான்!

Actor Sivaji Ganesan's Exclusive Interview
Actor Sivaji Ganesan's Exclusive Interview

ஏகமாக புருவங்கள் நெரிகின்றன. லேசாகச் சிவந்த, செருகிய நிலையில் கண்கள் நம்மை ஏற இறங்கப் பார்க்கின்றன. உள்ளே நுழையும் யாருக்கும் ‘ஏதோ நாம் வந்தது பிடிக்கவில்லையோ! ”என்ற எண்ணம் கூட வரலாம்! ஆனால், உண்மையில், திடீரென்று நெருக்கத்தில் வந்து நிற்கும் ஒரு புதியவரை எச்சரிக்கையோடு எடைபோடும் பார்வை போலும் அது! நிறைய பவுடர் தூவப்பட்ட மார்பு தெரிய அரைக் கை மல் ஜிப்பா... படிய வாரப்பட்ட தலை. முடி கொட்டி இருக்கிறது. ஆனால், வழுக்கை துளி கூட விழவில்லை. கடைசி வரை இப்படி 'உம்' மென்றுதான் இருப்பாரோ என்கிற நம் எண்ணம் பொய்க்கிறது. சில நிமிடங்களில் ‘ரிலாக்ஸ்’ டாகி விட்டார் சிவாஜி.

ஐம்பது ஆண்டுகள் கலைத் துறையில் சாதனை பல படைத்ததற்கு ஜூனியர் வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம் லேசாகப் புன்னகை படர தலையசைத்து வாழ்த்துக்களை ஏற்று, “ஆங்...! ஆயிடுச்சு... அம்பது வருஷம்... ஆறு வயசிருக்கும் போது மதுரை பால கான சபா... ‘52-லேருந்து ஸ்டேஜ்.... அப்புறம் சினிமா... அம்பது வருஷம் ஆயிடுச்சு... டைம் ஃப்ளைஸ்.!" என்கிறார் சிவாஜி ‘பேஸ் வாய்’ஸில். 

“இதுவரை நீங்கள் பல பதில் சொன்ன கேள்விதான்... இருந்தாலும 50 வருஷம் முடிஞ்ச இந்த நிலையில் முடிவா சொல்லுங்க... இதுவரை நீங்கள் நடிச்ச பாத்திரக்ளிலேயே மிகச் சிறந்ததாக எதைக் கருதுகிறீர்கள்?

நெறைய இருக்கு... இருந்தாலும் மறக்க முடியாதது ரெண்டு மூணு.. கப்பலோட்டிய தமிழனா நடிச்சது... ரியல் லைஃப் காரெக்டர். . இமாஜின் பண்ணி நடிக்க வேண்டியிருந்தது. வ. உ. சியோட பிள்ளை சுப்ரமணியம் படத்தைப் பார்த்துட்டு, "எங்கப்பாவை நேரிலே பார்த்த மாதிரி இருந்தது"ன்னு சொன்ன போது எவ்வளவு திருப்தி.! அப்புறம்... பரதன் காரெக்டர்... ராஜாஜி பாராட்டின போது என் ஜன்மமே சாபல்யம் அடைஞ்சு போச்சு.. அப்பர்'ரோல்'லே நடிச்சது. இமாஜினரி காரெக்டர்களிலே 'பாசமலர்’லே அண்ணனா நடிச்சதைச் சொல்லலாம்.” 

“சிசுவேஷன், வசனம் எல்லாத்தையும் டைரக்டர் விளக்கும் போது கண்ணை மூடி கவனமா ஒரே ஒரு முறை கேட்டுட்டு ஒரு சின்னத் தப்புகூடச் செய்யாம ஒரே டேக்கில் கச்சிதமாக நடித்துக் காண்பிக்கிறவர் என்று உங்களைப் புகழ்ந்து சொல்வதுண்டு. . . ஏதாவது படத்தில், ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக நீங்கள் கொஞ்சமாவது 'ஒர்ரி' பண்ணிக் கொண்டதோ, சிரமப்பட்டதோ உண்டா?”

சிவாஜி முகத்தில் லேசான வியப்பு. 'ஊஹூ'ம் என்று தலையசைக்கிறார். 

“சரி, இன்னும் ஏதாவது ஒரு ‘ரோல்’... செய்ய வேண்டியது பாக்கியிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?" 

மறுபடியும் 'ஊஹூம்'. 

"நடிப்பு விஷயத்தில் பல நுணுக்கமான விஷயங்களை இப்படியெல்லாம் காட்ட முடியும் என்று. ஒரு இலக்கணம் மாதிரி. . . முதலில் கற்றுக் கொடுத்தவர்  நீங்கள்தான். , . உங்களால் பாதிக்கப்படாத நடிகரே இல்லையென்று கூறப்படுகிறது...”

கேள்வியை முடிப்பதற்குள் சிவாஜி நம்மை இடைமறித்து, “இதெல்லாம் நீங்களா கற்பனை பண்ணிக்கறது. . . எனக்குக் கொடுக்கிற ரோலை நான் என்னாலே முடிஞ்ச வரை சரியா செய்யறேன். . . அவ்வளவுதான். இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. . .! ” 

Actor Sivaji Ganesan's Exclusive Interview
Actor Sivaji Ganesan's Exclusive Interview

“பின்னே. . . விருப்பப்பட்ட எல்லா ரோலையும் செய்து முடித்து விட்டதாச் சொன்னீங்களே...?! " 

"நான் நடிப்பைச் சொல்றேன்... ஒரு ரோல் செஞ்சாச்சுன்னா அதிலே யாரும் குறையே சொல்லக் கூடாது. . . “சிவாஜி பண்ணியாச்சு.. இந்த ரோலை இதைவிட நன்னா யாராலுமே செய்ய முடியாது. இதுதான் 'அல்டிமேட்'னு எல்லோரும் முடிவா சொல்லிடணும் . . . அதான் சாதனை. . . அது இன்னும் வரலை!" 

“இன்னும் வரலையா..?!”

“வரலை...”

“நீங்க நடிச்ச ரொம்ப மோசமான படங்களைப் பத்திரிகைகள் விமரிசனம் பண்ணும்போதுகூட உங்கள் நடிப்பை மட்டும் 'பிரமாதம்’னுதானே எழுதற வழக்கம்...?" 

“என்னத்தை விமரிசனம் பண்றாங்க?. இன்னிக்குக்கூட நான் நடிச்சது சரியில்லை..., எனக்கே தெரியுது. . . நானும் சினிமாவிலே நடிக்க ஆரம்பிச்சு 33 வருஷம் ஆயிடுச்சு. . . எத்தனையோ விமரிசனங்களைப் பார்த்துட்டேன். . . . . . எல்லோருமே கட்டின வீட்டுக்குக் குத்தம் சொல்றாங்களே தவிர, அங்கேயிருக்கிற ஜன்னலை இங்கே வெச்சிருக்கலாம்னு சின்ன 'சஜெஷன்'கூடச் சொல்ல மாட்டேங்கிறாங்க.... ஒரு படத்திலே என் தங்கை விதவையாகிற மாதிரி காட்சின்னு வெச்சுக்கலாம். . . விஷயம் தெரியாம ஊர்லேருந்து வீட்டுக்குத் திரும்பறேன். . . தங்கை வெள்ளைப் புடவைலே இருக்கா..., ஓடிப் போய் கட்டிப் பிடிச்சு அழறேன்.... இந்த ஸின்லே எனக்கு அப்படிப் பண்ணனும்னு தோணிச்சு ...'இவ்வளவு பெரிய ‘ஷாக்'குக்கு சிவாஜி மயக்கமால்லே விழுந்திருக்கணும்’னு எழுதினா அது Constructive Criticism...அதை விட்டுட்டு. . . சும்மா ரிடிகூல் மட்டும் பண்ணா எப்படி...?' 

“நீங்க சொல்றது சில டைரக்டர்கள் சொல்ற கருத்துக்கு நேர் எதிரிடையா இருக்கு...!” 

“என்ன சொல்றாங்க...?” 

“நாங்க எடுத்திருக்கும் படத்தை விமரிசனம் செய்யறதோட நிறுத்திக்குங்க. . . எப்படி எடுத்திருக்கலாம்னு ஐடியா கொடுக்கிறது உங்க வேலையில்லேன்னு...” “ஹோ!. . . முட்டாள்தனமான பேச்சு...!” 

“திரையில் பல்வேறு விதமான காரெக்டர்களைச் செய்வதற்கு முன் இந்த காரெக்டரை இது மாதிரி செய்யலாம்’ என்று எப்படி முடிவெடுக்கிறீர்கள்?”

“கார்லேபோகும்போது காரெக்டர்களை அப்ஸர்வ் பண்றது. . . அதனாலேதான் நான் டிரைவ் பண்றதில்லே...! ”“ஹாங்...!  தெரியும். . . ஆனா, நேரா எதிர்லே போயி இடிச்சுடுவேன்...!” தன்னையே கிண்டல் செய்து கொள்வது போல அருமையான ஒரு எக்ஸ்பிரஷன்! 

“எப்போது பார்த்தாலும் லேசாகக் கண்களை மூடியவாறு ஏதோ சிந்தனையிலிருப்பதைப் போலவே இருக்கிறீர்கள். உங்களைப் பார்த்தால் சுற்றுப்புறங்களை அப்ஸர்வ் செய்கிறவர் மாதிரியே தெரியவில்லையே. . . ?!”

சிவாஜியின் கண்கள் நம்மை ஊடுருவுகின்றன. . . பிறகு லேசான புன்னகையுடன், "நிறைய அப்ஸர்வ் பண்ணுவேன். . . " என்று வலியுறுத்துகிறார். தொடர்ந்து, "நடிக்கறதுங்கறது என்ன?. . . காப்பியடிக்கறதுதானே?... நிறைய காரெக்டருங்களேப் பார்க்கறோம். அப்படியே மனசுலே பதிய வெச்சுக்கிறோம். காப்பியடிக்கறோம்.. . . அவ்வளவுதானே? 'வியட்நாம் வீடு' பத்மநாப அய்யர் காரெக்டர்... பிராமின்ஸ் ஆத்துலேயெல்லாம் இருக்கற காரெக்டர்தானே. . . என்ன நான் சொல்றது?" என்கிறார். (நிறைய மேக்-அப்புடன் பிரபு கடந்து போகிறார்- அப்பாவைப் பார்த்து. “How are you Dadi?” என்று விசாரித்தவாறு. ‘என் பிள்ளை.. பிரபு...’ என்று கூப்பிட்டு அறிமுகம் செய்விக்கிறார் சிவாஜி)

“இன்னொரு விஷயம். . . சாதாரணமா சினிமா நட்சத்திரங்களோட வயசு. . . கொஞ்சம் மர்மமாகவே வைக்கப்படுகிற ஒன்று. நீங்கள் மட்டும் வயசை ஒப்பனா சொல்லிப் பிறந்த நாள் கொண்டாடுகிறீர்களே...?" 

"அதுவா. . . ஏன்னு சொல்றேன். அதுக்குக் காரணம் காமராஜ்தான். . . அவருக்குத் தொண்டனா ஆனதிலேருந்து இப்படி. கட்சிக்குப் புள்ளைங்களையெல்லாம் ஒண்ணு சேர்க்க வேண்டியிருந்தது. . . நம்ம தமிழ் மக்கள்கிட்டே சும்மா ஒரு காரணமும் இல்லாம "கெட் - டுகெதர்"னெல்லாம் சொன்னா எடுபடாது. . . பண்டிகை, கல்யாணம், சஷ்டியப்த பூர்த்தி, பிறந்த நாள்னு சொன்னாத்தான் மதிச்சு ஒண்ணா கூடுவாங்க... ஸோ... என் பிறந்த நாளைக் கொண்டாட ஆரம்பிச்சேன். . . வயசைக் காட்டிக் கூப்பிட்டாத்தான் பிள்ளைங்க மரியாதை தருவாங்க. . . அன்பா வருவாங்க. கரெக்ட் சைகாலஜி... அக்ரீட்...? புள்ளைங்க வரவர, கட்சிக்கு சிவாஜி ரசிகர் மன்றம்கிற பேர்லே  தொண்டர்களைக் கடகடன்னு பிரிண்ட் பண்ணி அனுப்பிக்கிட்டேயிருக்கேன்... 'I am a Printing press who prints volunteers'-"பெருமையோடு சொல்லிக் கொள்கிறார் நடிகர் திலகம். 

Actor Sivaji Ganesan's Exclusive Interview
Actor Sivaji Ganesan's Exclusive Interview

“இப்போது இருக்கிற சூழ்நிலையில் ஒரு வழியாக முழு நேர அரசியலில் குதிக்க முடிவு செய்து விட்டாற் போலத் தெரிகிறதே. . .?! ”

“இனிமே என்ன குதிக்கிறது... எப்பவோ குதிச்சாச்சு. . . பட் ஐ டோண்ட் வாண்ட் டு லீவ் மை புரொஃபெஷன். . . நம்ம பிள்ளைங்க எனக்குக் கிடைச்சதே சினிமா மூலமாத்தானே..!" 

“அரசியலில் ரொம்ப இயங்கவேண்டிய சூழ்நிலை வரலாமே. . . புரொஃபெஷன்?!” 

“வந்தா படங்களைக் குறைச்சுக்கறேன். . . பத்து படத்துக்குப் பதிலா அஞ்சு படத்திலே நடிச்சுட்டுப் போறேன். அஞ்சு படத்துக்கே அந்தத் துட்டை வாங்கினாப் போச்சு...!” --- லேசாக முகத்தைத் திருப்பிக் கண்ணைச் சிமிட்டிவிட்டு ‘கடகட’வென்று சிரிக்கிறார். பிறகு ‘டக்’கென்று சிரிப்பை நிறுத்தி விட்டு, நம்மைச் சற்று அருகில் சைகையால் அழைத்து, “நான் இது மாதிரி தமாஷா ஏதாவது சொன்னா ‘பிராக்கெட்’லே 'தாமஷ்’னு போடுங்க... ஏன்னா நம்ம ஜனங்களுக்கு ஸென்ஸ் ஆஃப் யூமர் குறைச்சாலிகிகிட்டு வருது...

"எப்படிச் சொல்றீங்க....?' 

"எப்படியா . . ? நான் முன்னே கெய்ரோ போன சமயத்திலேயே குறைய ஆரம்பிச்சுடுச்சு. . . கெய்ரோலே இருந்த போது அவனவன் ஏதேதோ பாஷைலே பேசிக்கிட்டிருந்தான். . . அப்ப நானும் சீனாலேருந்து வந்த ஒரு நடிகையும் ஏதோ எங்களுக்குத் தெரிஞ்ச அரை குறை இங்கிலீஷ்லே பேசிக்கிட்டிருந்தோம். அந்த அம்மா ரொம்ப அழகு. . . ஊருக்கு வந்து சேர்ந்தப்புறம் ‘குமுதம்’ பத்திரிகைக்கு ஒரு பேட்டி குடுத்தேன். அதுலே எனக்குக் கல்யாணமாகாம இருந்தா அவளைத்தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டிருப்பேன்னு சும்மா தமாஷுக்குத்தான் - சொல்லியிருந்தேன். . அவ்வளவுதான். போட்டானுங்களே பத்தாயிரம் லெட்டர். . . 'புள்ளே குட்டியெல்லாம் எடுத்துட்டு, சிவாஜியா இப்படிச் சொல்றது?’ன்னு... ஏதோ எல்லோரும் ரொம்ப ஒழுங்கு. . . நான் மட்டும்தான் கெட்டுப் போயிட்ட மாதிரி. . .!”

“ஒரு மாபெரும் படை உங்க பின்னாலே நீங்க சொல்றபடி கேட்டு நடக்கத் தயாரா இருக்கு.... அப்படியிருந்தும் கட்சியிலே நீங்கள் ஒதுக்கப்படுவதால் உங்களுக்கு வருத்தம் ஏற்படவில்லையா. . . ஆர் யூ ஹர்ட்?" 

சிவாஜி சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கண்களை மூடிக் கொள்கிறார். ஒரு நிமிடம் மெளனம். பிறகு நம்மை ஏறிட்டு நோக்கி, 'ஹர்ட்?. . . யெஸ் வெரி மச்... ஆனா, வருத்தத்தை (மார்பின் மேல் கை வைத்து) உள்ளுக்குள்ளேயே அமுக்கிடுவேன். . . மனசு புண்பட்டா அதை வெளியிலே காண்பிச்சிக்கக் கூடாது. . . அது வீக்னஸ்!" 

“இப்படியிருந்தும் ஒருங்கிணைந்த கமிட்டி கீழே எல்லோரோடையும் சுற்றுப் பயணம் செய்ய நீங்க ஒப்புக் கிட்டது...?" 

உதட்டைப் பிதுக்கியவாறு லேசான சோக பாவத்துடன் சிவாஜி நிமிர்கிறார். தன் மடியில் இருந்த (ஆரஞ்சு, பச்சை பார்டர் போட்ட) துண்டை இரு கைகளாலும் எடுத்துப் பிரித்து உதறித் தன் மார்பின் மீது போட்டுக் கொள்கிறார், பிறகு நம்மைப் பார்த்து, “தெரிஞ்சோ தெரியாமலோ இந்தத் துண்டை என் மேலே போட்டாச்சு. . . சாகற வரைக்கும் இது இங்கேதான் இருக்கும்... யெஸ். நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கறேன் . . . எதுக்கு. . . ? கட்சிக்காகத்தான்! எத்தனையோ அவமதிப்பையெல்லாம் தாண்டியாச்சு. . . ஒருத் தருக்குக் கிடைக்க வேண்டியதை எத்தனை நாளுக்குத் தடுத்துட முடியும். . . ? கிடைக்க வேண்டியது கிடைச்சே தீரும்... அண்ணாவே சொன்னாரே. . .'பராசக்தி’ படம் வரலேன்னா என்ன. . . ? ஒரு வருஷம் கழிச்சு கணேசன் வந்திருப்பான். . . அதை யாராலும் தடுத்துவிட முடியாது"ன்னு. இங்கே காங்கிரஸைப் பொறுத்தவரை எங்க பிள்ளைங்க ஓட்டுதான் Deciding Factor... பலத்தைக் காட்டினோமே. . . சென்னையிலே. . . கும்பகோணத்திலே. . . ஈரோடுலே. . . கோயமுத்தூர்லே. . . " 

"இவ்வளவு இருந்தும் உங்களுக்கு முழு மரியாதை தராமல் இருக்கும் நிலை ஏன்? பிரதமருக்கு இதைப் பற்றியெல்லாம் தெரியாதா?”

"இங்க நடக்கறது எதுவும் அந்த அம்மாவுக்குத் தெரியாது. . . நான் என்ன செய்ய முடியும் . . .? எனக்கு புரொஃபெஷன்னு இருக்கு. . . நாள் பூராவும் அம்மாவோட என்னாலே இருக்க முடியலை. . . மத்தவங்களாலே முடியுது. ஏதாவது சொல்லி மிஸ்வீட் பண்ணிட றாங்க. . . பல தடவை, பிற்பாடு நான் அம்மாவைச் சந்திக்கற போது 'முதல்லேயே என்னிடம் இதைச் சொல்வியிருக்கக் கூடாதா கணேசன்... எனக்கு இது தெரியவே தெரியாதே!'ன்னு ஆச்சரியமா கேட்பாங்க . . . என்ன செய்யறது? அம்மாவுக்கு என் மேலே நிறைய பிரியமுண்டு. . . எனக்குத் தாயில்லை. . . ஐ ஆம் எ மதர்லெஸ் பாய்... இந்திராதான் இனிமே எனக்கு அம்மா மாதிரி. . . அவங்க என்னை நிக்கச் சொன்னா நிப்பேன். . . உட்காரச் சொன்னா உட்காருவேன். . . ! "

Actor Sivaji Ganesan's Exclusive Interview
Actor Sivaji Ganesan's Exclusive Interview

“உங்க ரசிகர்கள் இதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டுப் பொறுமையாக இருக்காங்களா?" 

"பொறுமை இழக்கவும் செய்யறாங்க. . . சில சமயம் அவமதிப்புக்களைத் தாங்கிக்க முடியாம 'அண்ணே...!'ன்னு கதறிடறாங்க. . . அதுவும் கோபத்தோட இல்லை. . . வருத்தத்தோட. . . '(கோபத்தோடும், வருத்தத்தோடும் அண்ணே! எப்படிச் சொல்வதென்று நடித்துக் காட்டுகிறார்.) 

"இது போன்ற சமயத்திலே அவங்களை எப்படிச் சமாளிப்பீங்க?" 

“நம்ம பிள்ளைங்க ரொம்ப நல்ல பிள்ளேங்க . . . கபடு, சூது கிடையாது. . 'ஆறுதல் சினமே . . .'ன்னு (ராகத்துடன.) கையை உயர்த்திப் பொறுமையாக இருக்கச் சொல்வேன். . . உடனே அடக்கமாயிடுவாங்க. . . பின் ட்ராப் சைலண்ட் ஆயிடுவாங்க. . . .” 

“ஒரு வழியா நீங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையை ஏற்று நடத்தும் சூழ்நிலை வந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே?!" 

“ஹூம்!' என்கிறார் சிவாஜி அசுவா ரசியமா பிறகு தோள்களை ஒருமுறை குலுக்கி விட்டு, "ஐ வாண்ட் டு பி தி கிங் மேக்கர். . . நாட் தி கிங். . . கடைசிவரை சாதாரணத் தொண்டனா இருக்க நான் ரெடி. . . முன்னைவிட மக்கள் என் மேலே அதிகம் அன்பு காட்டறாங்க. . . ஆரம்பத்துலே என்னைப் படத்துலே பார்த்து ரசிச்சவங்க எல்லாரும் கல்யாணம் ஆகி குழந்தை குட்டியெல்லாம் பெத்தாச்சு. . . அது ஒரு ஜெனரேஷன். . . இப்ப இருக்கிற ஜென ரேஷனும் என் படங்களைப் பார்க்கறாங்க. . . 'அட இவன் நல்லவன். . . நல்லாவும் நடிக்கறான்’னு அப்ரிஷேட் பண்றாங்க . . . கார்லே போறேன். . . பஸ் வந்து பக்கத்துலே நிக்குது. பஸ்லேருந்து குனிஞ்சு கும்பிடறாங்க. சைக்கிள் ரிக்ஷாவிலே போறவங்க பக்கத்துலே வண்டியை நிறுத்தி அன்போடு கும்பிடறாங்க. . . ஏதோ. . . இப்படியே இருந்துட்டுப் போனாப் போறும்..” 

"தமிழ்நாட்டிலே தி.மு.க... இல்லா விட்டால் அ. இ. அ. தி. மு. க-ன்னு மாத்தி மாத்தி காங்கிரஸ் கூட்டுச் சேர்நதைப் பத்தி உங்க கருத்து என்ன?”

“பெரிய தப்புதாங்கறது என் சொந்தக் கருத்து. . . மைண்ட் யூ - சொந்தக் கருத்து. . . எப்பவும் சொந்தக் கால்லேதான் நிக்கணும். . . உங்க கால்லே நான் நிக்கணும்னு நினைச்சா எப்படி உருப்பட முடியும்?. பத்து சீட் கிடைச்சாலும் போதும். தனியா நின்னு ஜெயித்து, உழைத்து முன்னுக்கு வரணும். . . ஆனா, எத்தனையோ காரணங்க . . . மேலிடம் முடிவெடுக்குது. . . கருத்து வேறுபாடு இருந்தாலும் அதுக்குக் கட்டுப்பட்டாகணும். . . காந்திஜி ஒரு முடிவு எடுத்த பிறகு நேரு அதுக்குக் கட்டுப்படலையா. . . அது மாதிரிதான்..!” ஒருவர் அருகில் வந்து குனிந்து வாய் பொத்தி ஊருக்குப் போக வேண்டும் என்பதை நினைவூட்ட,சிவாஜி எழுந்து கொள்கிறார், அரைக்கை ஜிப்பாவைக் கழட்டி விட்டு, இன்னொருவர் ஏந்திக் கொண்டிருந்த காலர் வைத்த கதர்ச் சட்டையை எடுத்து அணிந்து கொள்ள. ஒருவர் சிவாஜிக்கு மடிப்பாக வேட்டி கட்டிவிட, பின்னொருவர் 'பர்ஃப்யூ'மை பல்யமாக முதுகில் ஸ்ப்ரே செய்கிறார். சட்டையின் ஒரு ஒரத்தில் மிகப் பெரிய மனிதர்களுக்கே உரிய ஒரு குட்டி கிழிசல். தலையைப் படிய வாரிக் கொண்டு எதிரில் இருந்த பெரிய நிலைக் கண்ணாடி முன்பு ஒரு நிமிடம் தன்னைப் பார்த்துக் கொள்கிறார் சிவாஜி. பிறகு வாசலுக்கு ராஜ நடை! 

"ஒரு கேள்வி. . . கொஞ்சம் பர்ஸனல்...” என்கிறோம்.

கேளுங்க! ” என்கிறார் நடந்து கொண்டே.

“பாடி வெயிட்டை முன்பு ஒரு முறை கச்சிதமாகக் குறைத்துக் காட்டினீர்கள்.  மறுபடி இப்போது நிறைய வெயிட் போட்டு விட்டீர்களே. . "You have just let go... why?'" 

“ஏஜ்... ஏஜ்...!” என்று பதில் வருகிறது. தொடர்ந்து, “பராசக்தி படத்துலே ரொம்ப ஒல்லியா இருந்தேன் . . . எல்லோரும் வெயிட் போடணும்னு சொன்னாங்க. . . வெயிட் போட்டேன். . . அப்புறம் வெயிட் ரொம்ப அதிகமாயிடுச்சு. . . குறைச்சேன். இப்ப ஏஜ் இருக்கற காரெக்டர் ரோல்தான் நிறைய செய்யறேன். . . சரிதான் போறும்ணு அப்படியே விட்டுட்டேன்...” சொல்லிவிட்டு ஸ்டைலாகத் திரும்பி கண்ணைச் சிமிட்டியவாறு, “இனிமே நான் வெயிட்டைக் குறைச்சா நம்ம பிரபு குண்டாயிருக்கற மாதிரி தோணும்! ” என்று தமாஷாகச் சொல்லிவிட்டு ‘ஹோ’வென்று சிரிக்கிறார். மற்றவர்கள் ஜாக்கிரதையாகப் புன்னகைக்கிறார்கள்.

வாசலில் நிறைய பேர்... எழுந்து நிற்கிறார்கள்... சிலர் காலில் விழுந்து சிவாஜியின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறார்கள். முதுகைத் தட்டிக் கொடுத்து “நல்லாருக்கியா?” என்கிறார்.

சிறு கூட்டம் பின்தொடர படிகளில் இறங்கி சாக்லெட் பென்ஸ் காரைக் கடந்து, கொடிக் கம்பி மூக்கொடு இருக்கும் வெள்ளை அம்பாஸடரில் சிவாஜி ஏறிக்கொள்ள, ஏக காலத்தில் மற்ற கதவுகளைத் திறந்து கொண்டு சிவாஜி மன்ற ‘வலது கரங்கள்’ காருக்குள் தாவி ஏறுகிறார்கள். கார் வேகமாகக் கிளம்புகிறது.

- மதன் 

வண்ணப்படங்கள் - யோகா

(03.10.1984 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழிலிருந்து...)