சினிமா
பேட்டிகள்
ஆன்மிகம்
கட்டுரைகள்
Published:Updated:

“என் படங்கள்ல காமெடி நிச்சயம் இருக்கணும்!”

சிவகார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவகார்த்திகேயன்

சினிமா

சிவகார்த்திகேயன்... இந்தப் பெயருக்கு விசில் சத்தங்களும் ஆரவாரங்களும் திரையரங்குகளைத் தெறிக்கவிடுகின்றன. மற்ற நடிகர்கள் எல்லோரும் வெள்ளித்திரையில் அறிமுகமாகி, மக்களுக்குப் பிடித்தமானவர்களாக மாறுவர். ஆனால் சிவா, வெள்ளித்திரைக்கு அறிமுகமாகும்போதே மக்கள் செல்வாக்குடன்தான் இருந்தார். கலகலப்பான தொகுப்பாளராக மட்டுமே நமக்குத் தெரிந்தவருக்கு இன்று நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்று பல முகங்கள். தனக்கான மார்க்கெட்டை எங்கேயோ தூக்கி நிறுத்திவிட்டு, மக்களை மகிழ்விக்க இவர் ஓடுகிற ஓட்டம் இவரையும் இவரைச் சுற்றி இருப்பவர்களையும் இவரின் ரசிகர்களையும் பாசிட்டிவிட்டியுடன் வைத்திருக்கிறது.

விகடன் அலுவலகத்தில் உள்ள ஸ்டூடியோவைத் திறந்துவைக்க வந்தவரைத் தாரை தப்பட்டையுடன் வரவேற்றது விகடன். வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ காரில், நீல நிறச்சட்டை, அவருக்கே உரிய புன்சிரிப்புடன் வந்திறங்கினார். புதிய ஸ்டூடியோவைத் திறந்துவைத்துவிட்டு, அலுவலகத்தைச் சுற்றிப் பார்த்து முடித்தவுடன், புதிய ஸ்டூடியோவில் முதல் பேட்டி சிவகார்த்திகேயனுடன். அவருடன் நடந்த உரையாடலில் இருந்து...

“என் படங்கள்ல காமெடி நிச்சயம் இருக்கணும்!”

``எவ்வளவு பிஸியா இருந்தாலும் உங்களுக்கு வர்ற மெசேஜ்களுக்கும் அழைப்புகளுக்கும் ரிப்ளை பண்ணிடுறீங்க... யாருடைய பர்ஃபாமென்ஸ் பிடிச்சிருந்தாலும் உடனே அவங்களுக்கு வாழ்த்து சொல்லிடுறீங்க... எப்படி நேரம் கிடைக்குது?''

``நான் அந்த மாதிரி பாராட்டுகளுக்கு ஏங்கிக்கிட்டே இருந்திருக்கேன். இன்னமும் அதுக்காகத்தான் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். நாம செய்யுற வேலைக்குப் பணம் கிடைக்குது. அதெல்லாம் ஓகே. ஆனா, அதைத் தாண்டி நாம செய்யுற வேலைக்கு ஒரு திருப்தியான பலன் கிடைக்குதுன்னா, அது பாராட்டும் அங்கீகாரமும்தான். நான் எதிர்பார்க்கிற மாதிரிதான் எல்லோரும் எதிர்பார்ப்பாங்க. அதனால, கிடைக்கிற நேரத்துல நம்ம கண்ணுல ஏதாவது பட்டு அது பிடிச்சுடுச்சுனா, உடனே சம்பந்தப்பட்டவங்களை ரீச் பண்ணி என் வாழ்த்தையும் பாராட்டையும் உடனே சொல்லிடுறேன்.''

“என் படங்கள்ல காமெடி நிச்சயம் இருக்கணும்!”

``ஒரு படம் கமிட்டாகும்போது கதையைக் கவனிப்பீங்களா... இல்ல, உங்க கதாபாத்திரத்தைக் கவனிப்பீங்களா?''

``ஒரு ஸ்கிரிப்ட் கேட்டவுடனே `இதுக்குள்ள நாம என்னவா இருக்கோம்' அப்படிங்கிறதுதான் முதல் கேள்வி. அது ஓகே ஆனதுக்குப் பிறகு, நமக்குத் தேவையான எண்டர்டெயின்மென்ட் ஃபேக்டர்ஸ் கதையில இருக்கான்னு பார்ப்பேன். முக்கியமா, காமெடி இருக்கான்னு பார்ப்பேன். அது நிச்சயம் இருக்கணும். எனக்கு வர்ற கதைகள்ல இருந்து எது எனக்கு செட்டாகும்னு தோணுதோ, அதை ஓகே சொல்லிடுவேன். சில நேரங்கள்ல, `அது மாதிரி பண்ணி ரொம்ப நாளாச்சு'ன்னு ஒரு கதைக்கு ஓகே சொல்லுவோம். `இது மாதிரி இப்போதானே பண்ணினோம்'னு சில கதைகளை வேண்டாம்னு முடிவெடுப்போம். இப்படித்தான் நான் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.''

``இதுவரை நீங்க ரீமேக் படங்களே பண்ணுனது இல்லை. ரீமேக் படங்கள் பத்தி உங்களுடைய பார்வை என்ன?''

``ரீமேக் படங்கள் பண்றதுக்கான வாய்ப்பு ஆரம்பத்துல இருந்தே வந்திருக்கு. எனக்கு அதுல நடிக்க ஒரு பயம் இருக்கு. இப்போ இருக்கிற டிஜிட்டல், ஓ.டி.டி சூழல்ல, எல்லோரும் எல்லா மொழிப் படங்களையும் பார்த்திடுறாங்க. அதே கதையில நாம நடிக்கிறப்போ ஒரிஜினல் வெர்ஷன்ல இருக்கிற மாதிரியே நடிக்கணுமா... இல்ல, வேற மாதிரி மாத்தி நடிக்கணுமான்னு தோணும். `பிரேமம்' தமிழில் ரீமேக் பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. என்னைப் பொறுத்தவரை `பிரேமம்' ஒரு வழக்கமான படம் இல்ல. அது ஒரு வாழ்க்கை; மேஜிக். அதை ரீகிரியேட் பண்ண முடியாது. நான் நோ சொல்லிக்கிட்டே இருந்தேன். ஆனா, நான் பண்ணுனா நல்லாருக்கும்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. உடனே, நான் `அல்போன்ஸ் புத்ரனே இதை டைரக்ட் பண்ணுனா பண்றேன்'னு சொல்லிட்டேன். அல்போன்ஸே லைனுக்கு வந்து, `ப்ரதர்... நான் நிறைய தமிழ்ப் படங்கள்ல வர்ற விஷயங்களைப் பார்த்து இன்ஸ்பயராகிதான் இதைப் பண்ணினேன். நான் தமிழில் ரசிச்ச படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவேயில்லை, நல்லாருக்கு. அது ஏன் நல்லாருக்குன்னு யோசிச்சு, அந்த மேஜிக்கை கிரியேட் பண்ணதான் முயற்சி பண்ணினேன். அதனால, அது வொர்க்கவுட்டாச்சு'ன்னு சொன்னார். இதை அப்படியே எல்லோர்கிட்டேயும் சொல்லிட்டேன். 'பிரேமம்' மாதிரி ஒரு படத்தைத் தொட்டா அது தப்பா இருக்கும். சமீபத்துல `அலா வைகுந்தபுரமுலோ', இன்னும் ரெண்டு மூணு இந்திப் படங்களின் தமிழ் ரீமேக்ல நடிக்கக் கேட்டாங்க. நான் நோ சொல்லிட்டேன். எனக்கு ரீமேக் படங்கள்ல நடிக்க சின்ன பயமும் நிறைய தயக்கமும் இருக்கு.''

“என் படங்கள்ல காமெடி நிச்சயம் இருக்கணும்!”

``உங்க மகள் ஆராதனாவும் நீங்களும் பாடின `வாயாடி பெத்தப்புள்ள' பாடல் செம வைரல். அதுக்குப் பிறகு, திரும்பவும் நீங்க ரெண்டு பேரும் பாடுறதை எப்போ எதிர்பார்க்கலாம்?''

``ஆராதனா முறையா கத்துக்கிட்டுதான் அடுத்து பாடணும்னு எல்லோரும் விருப்பப்பட்டோம். அதனால, சங்கீதம் கத்துக்கிட்டிருந்தாங்க. இடையில லாக்டௌன் எல்லாம் வந்து பெரிய இடைவெளி விழுந்திடுச்சு. இப்போ மீண்டும் கத்துக்கிட்டிருக்காங்க. அவங்களுக்குக் கத்துக்கொடுக்கிறதுக்கான ஏற்பாடுகளைப் பண்றதுதான் நம்ம வேலை. அவங்களுக்கு உண்மையில இதுல ஆர்வம் வந்து பாடணும்னு சொன்னாங்கன்னா, பாடட்டும். `கனா' படத்துல பாடுனது, அருண்ராஜா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடணும்னு கேட்டதனால பாடினது. நம்மளைச் சுத்தி என்ன நடக்குதுன்னுகூட ஆராதனாவுக்குத் தெரியாது. நாங்க பாடு பாடுன்னெல்லாம் சொல்லலை. ஆராதனாவா எப்போ பாடுனாங்களோ, அதை ரெக்கார்டு பண்ணிக்கிட்டாங்க. ஆராதனாவா பாடுறதுல எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுறாங்களோ, அப்போதான் அடுத்த பாடல்.''

“என் படங்கள்ல காமெடி நிச்சயம் இருக்கணும்!”

``உங்க அப்பாவே மகனா வந்து பிறந்திருக்கார்னு ரொம்ப நெகிழ்ச்சியா ட்வீட் பண்ணியிருந்தீங்க. குகன்தாஸ் எப்படி இருக்கார்?''

``பிறந்து ஒரு மணி நேரம்தான் ஆகியிருக்கும். நான் போய் தூக்கினவுடன் அவன் என் கை விரலைப் பிடிச்சுக்கிட்டான். அந்த நிமிஷம் `இது அப்பாதான்'னு தோணுச்சு. அதைத்தான் அப்படியே சோஷியல் மீடியாவுல பதிவு பண்ணியிருந்தேன். நான் அப்படியே அவன் பண்றதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கேன். ஆர்த்திதான் போராடிக்கிட்டிருக்காங்க. எப்போ அழுறான், எப்போ தூங்குறான்னு அவங்களால கணிக்க முடியலை. நான் ஷூட்ல இருப்பேன். காலையில மூணு மணிக்கு மெசேஜ் வரும். என்னன்னு கேட்டா, `அவன் தூங்கவே மாட்டேங்கிறான், வேடிக்கை பார்த்துக்கிட்டே இருக்கான்'னு சொல்லுவாங்க. `என்ஜாய் பண்ணுங்க'ன்னு சொல்லிடுவேன். இதெல்லாம் நல்ல மெமரீஸ்தானே!''

“என் படங்கள்ல காமெடி நிச்சயம் இருக்கணும்!”

``உங்க மகள் ஆராதனா தன்னுடைய தம்பியை எப்படிப் பார்த்துக்கிறாங்க?''

``ரெண்டு பசங்களோ அல்லது ரெண்டு பொண்ணுங்களோ இருக்கும்போது கிடைக்கிற ஃபீலிங்கைவிட, ஒரு பொண்ணு ஒரு பையன் இருக்கிறப்போ கிடைக்கிறது சூப்பர் ஃபீலிங். குறிப்பா, அக்கா - தம்பி. எனக்கு அக்கா இருக்கிறதனால, என்னால நல்லாவே உணர முடியும். அக்கான்னா சின்ன பயம் இருக்கும். அக்கா இருக்கிறது பசங்களுக்கு ரொம்ப நல்லது. எனக்கு மாதிரியே இவனுக்கும் அமைஞ்சிருக்கு. ஆராதனா `தம்பி... தம்பி...'ன்னு பார்த்துக்குறா. எப்பவும் பார்த்துக்குவாள்னு நினைக்கிறேன்.''

``ஆராதனா, குகன்தாஸ்னு உங்க குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறதுக்கு முன்னாடி ஒரு தேடல் இருந்திருக்கும். அதைப் பத்திச் சொல்லுங்க?''

``ஆராதனாவுக்குப் பெயர் வைக்க நிறைய சாய்சஸ் வெச்சிருந்தோம். ஆனா, எதுவும் முழுத் திருப்தியா இல்லை. என் மனைவி ஆர்த்தி ஒரு பெயர் சொன்னாங்க. `ம்ம்... நல்லாருக்கு'ன்னு சொல்லிக்கிட்டே நான் மனசுக்குள்ள வேற பெயர்களை யோசிச்சுக்கிட்டிருந்தேன். சரி, ஆர்த்திக்கு `ஆ', சிவகார்த்திகேயனுக்கு `சி', என் அப்பா அம்மா தாஸ் - ராஜியில இருந்து `தா', `ரா', ஆர்த்தி அம்மா அப்பா மனோகர் - மாலதியில இருந்து `ம'னு குடும்பத்துல இருக்கிற நபர்களுடைய பெயரின் முதல் எழுத்தை எல்லாம் போட்டு `அந்நியன்' படத்துல வர்ற `கபீம் குபாம்', `குபாம் கபீம்' மாதிரி எழுத்துகளை மாற்றி மாற்றிப் போட்டு முயற்சி பண்ணிப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அதுல ஆராதா...ன்னு வந்துச்சு. உடனே, `ஆராதனா'ன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா, யார்கிட்டயும் சொல்லலை. பெயர் வைக்கிற அன்னிக்கு, குழந்தைக்குப் பெயர் வைங்கன்னு சொல்லும்போது, குழந்தையைத் தூக்கி `ஆராதனா... ஆராதனா... ஆராதனா...'ன்னு சொல்லிட்டேன். ஆர்த்தி வைக்கலாம்னு இருந்த பெயரை வைக்கலை. இப்படித்தான் ஆராதனாவுக்குப் பெயர் வெச்சோம். இப்போ மகன் பிறந்தவுடன், நான் ஆர்த்திகிட்ட `பொண்ணுக்கு நான் பெயர் வெச்சுட்டேன். இப்போ நீ என்ன பெயர் சொல்றியோ, அதையே பையனுக்கு வெச்சிடலாம்'னு சொல்லிட்டேன். முருகன் பெயர் வைக்கணும்ங்கிறதனால `குகன்'னு வெச்சாங்க. அப்பாவே மீண்டும் பிறந்திருக்கிற மாதிரி உணர்ந்ததனால, அவர் பெயரையும் சேர்த்து `குகன்தாஸ்'னு வெச்சிட்டோம்.''

“என் படங்கள்ல காமெடி நிச்சயம் இருக்கணும்!”

``உங்களுடைய படம் ரிலீஸாகிற நாள், வீடு எப்படி இருக்கும். நீங்க என்ன மனநிலையில இருப்பீங்க?''

``நான் ரொம்ப டென்ஷனா இருப்பேன். இப்போதான் கொஞ்சம் பெட்டராகி இருக்கு. என்ன பண்ணியிருக்கோமோ அதை மக்கள்கிட்ட காட்டுறோம். அது பிடிச்சிருக்குன்னா, சூப்பர். இல்லை, அதுல ஏதாவது குறைகள் இருந்ததுன்னா, அதைச் சரிபண்ணிட்டு வேலை செய்யணும் அப்படிங்கிற விஷயம் புரியும். ஆனா, அந்தச் சமயத்துல மனசு ஏத்துக்காது. என் படம் ரிலீஸாகுறதுக்கு ரெண்டு மூணு நாள் முன்னாடி காய்ச்சல் எல்லாம் வந்திருக்கு. என் படம் ரிலீஸாகுதுன்னா, மனைவி ஆர்த்தி புது ஷர்ட் வாங்கிக்கொடுத்திடுவாங்க. `மெரினா'ல இருந்து இப்போ வரை அவங்க வாங்கிக்கொடுத்த புது ஷர்ட்டைப் போட்டுக்கிட்டுதான் முதல் நாள் தியேட்டருக்குப் போவேன்!''