Published:Updated:

`அவங்க படுற கஷ்டத்தைப் பார்த்தேன்..!’ -தன் உதவியால் புலம்பெயர் தொழிலாளர்களை நெகிழவைத்த நடிகர் சோனு

சோனு சூட்
சோனு சூட் ( twitter )

``தொழிலாளர்கள் நடந்துசெல்வதை நான் நேரடியாகப் பார்த்தபோது கஷ்டமாக இருந்து. கர்ப்பிணிப் பெண் ஒருவர் நடந்துசெல்வதைப் பார்த்து, இவர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்தேன்” - சோனு

கொரோனா என்னும் நோய்த் தொற்று ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25 -ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கொரோனா பாதிப்புக்கும் சற்றும் குறைவில்லாதது, ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை. வேலை இல்லை... வருமானம் இல்லை... பணி செய்யும் இடத்தில் தங்குவதற்கு வசதியில்லாமல் பல நூறு கிலோ மீட்டர்களை நடந்தே கடக்கத் துணிந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை மிக அதிகம்.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்
AP

அப்படி நடந்துசெல்லும் தொழிலாளர்கள், வழியில் சந்திக்கும் இன்னல்கள் சொல்லித் தீராது. கடைகள் மூடப்பட்டிருப்பதால், உண்ண உணவும் கிடைக்காது. கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் யாரும் உதவ மாட்டார்கள். தன்னார்வலர்கள் சிலர் சாலையில் நின்று தண்ணீர், உணவு முதலிய பொருள்களை வழங்கினர். இப்படி உதவும் நல்லவர்களை மனதில் நினைத்துக் கொண்டு, நம்பிக்கையுடன் நடக்கத் தொடங்கிய பலரும் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், நடந்துவந்த அசதியில் ரயில் தண்டவாளத்தில் படுத்தவர்கள் மீது ரயில் ஏறியது, சாலையில் ஓரமாக அமர்ந்து உணவு உண்டவர்கள்மீது வேகமாக வந்த கார் தாக்கியது என அவர்கள் பட்ட இன்னல்களின் பட்டியல் மிக நீளம். இந்த நிலையில்தான் அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மாநில அரசுகள் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது.

`ஊரடங்கால் ரயில் ஓடாது என நினைத்தார்கள்..' - அவுரங்காபாத் ரயில் விபத்து கொடூரத்தை விளக்கும் போலீஸ்
ரயில் விபத்து
ரயில் விபத்து
Twitter

கொரோனா காலத்தில் திரைத்துறையினர், விளையாட்டுத் துறையினர், தொழிலதிபர்கள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தனர். நேற்று, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்த உதவியால், தொழிலாளர்கள் நெகிழ்ந்து போனார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கித் தவித்த 350 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இரு மாநில அரசாங்கத்திடமும் பேசி, முறையாக அனுமதி பெற்று, தனது சொந்தச் செலவில் 10 பேருந்துகள் மூலம் கர்நாடகா அனுப்பிவைத்தார்.

இவரின் இந்தச் செயல், பல தரப்பு மக்களிடமிருந்து பாராட்டைப் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், 45,000 மக்களுக்கு உணவு, பஞ்சாப்பில் கிராமப் புறத்தில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 1,500 பிபிஇ என்னும் பாதுகாப்பு உபகரணங்கள் எனப் பல உதவிகளைச் செய்துவருகிறார் நடிகர் சோனு சூட். இதை தான் தனியாகச் செய்யவில்லை என்று சொல்லும் சோனு சூட், தனது தோழி ஒருவர் உணவகம் நடத்திவருவதாகவும், அவரது உதவியும் சில இளைஞர்கள் உதவியுடன் இவற்றைச் செய்து முடித்ததாகவும் கூறியுள்ளார்.

சோனு சூட்
சோனு சூட்
twitter

``தொழிலாளர்கள் நடந்துசெல்வதை நான் நேரடியாகப் பார்த்தபோது கஷ்டமாக இருந்து. கர்ப்பிணிப் பெண் ஒருவர் நடந்து செல்வதைப் பார்த்து, இவர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்தேன். அவர்களுக்காக அதிகாரிகளிடம் பேசினேன். அதிகாரிகளிடம் அனுமதி வாங்கினால்தான் இவர்களால் பயணிக்கவே முடியும். ஆனால், அது தொடர்பாக விஷயங்கள் எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. அதை நாங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, எங்கிருந்து வருகிறார்கள், எங்கு செல்ல வேண்டும், கொரோனா பாதித்த பகுதியிலிருந்து வருகிறார்களா உள்ளிட்ட தகவல்களைப் பெற்று, அவர்களுக்காக முதலில் அனுமதி வாங்கினோம். முதற்கட்டமாக, மகாராஷ்டிராவிலிருந்து கர்நாடகாவுக்கு பேருந்து மூலம் அனுப்பி வைத்தோம்.

எனது தோழியின் உணவகம் மூலம் அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தயார்செய்து கொடுத்தோம். இது, சாதாரண பயணம் போன்று அல்ல. ஒரு பேருந்தில் 50 பேர் இருக்க முடியும் என்றால் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பதால், அந்தப் பேருந்தில் 20 -25 நபர்கள் மட்டுமே பயணிக்க முடியும். அதனால் தான் 300 பயணிகளை அனுப்ப 10 பேருந்துகள் தேவைப்பட்டன. சாதாரணமாக, இந்தப் பேருந்துகளில் 700 நபர்கள் பயணிக்க முடியும்” என்றார்.

சோனு சூட்
சோனு சூட்
twitter

தொடர்ந்து, ``அவர்கள் கிளம்பியதும் நிம்மதியாக வீட்டுக்கு வந்தேன். எனக்கு ஒரு திருப்தி கிடைத்தது. இதேபோன்று ஒடிசா, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநில அரசுகளின் அனுமதிக்காகக் கத்திருக்கிறோம். கிடைத்தால், அடுத்த கட்டமாக மேலும் பல தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் பயணமாவார்கள்” என்றார் மகிழ்ச்சியாக.

களத்தில் பணியாற்றும் சோனு, தனது பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ``மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், மருத்துவப் பணியாளர்கள் என பலரும் முன்னின்று போராடுவது குறித்து அறிந்தபோது ஒரு உற்சாகம் கிடைத்தது. ஒரு நடிகராக எனது பணி இது கிடையாது என எனக்குத் தெரியும். ஆனால், நான் இதைச் செய்வதால், இன்னும் பலர் வெளியே வந்து உதவலாம். அதனால் கூடுதல் உதவிகள் கிடைக்கலாம்.

சோனு சூட்
சோனு சூட்
twitter

நான் எப்போதும் தனிமனித விலகலைக் கடைபிடிக்கிறேன். சானிடைஸர் மூலம் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக்கொள்கிறேன். அவர்களுடன் நான் உரையாடும் போது அவர்கள் நம்பிக்கையுடன் பேசுகிறார்கள். எங்கள் டீம், அனைத்து பேருந்து ஓட்டுநர்களுடனும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்” என்றவர், தனது லாக்டெளன் நாள்கள் குறித்தும் பேசினார்.

``இப்போது இருப்பது முற்றிலும் வேறு மாதியான உலகம். இது மீண்டும் இயங்கும்போது, வேறு மாதிரி இருக்கும். நாம் நமது வேலைகளில் மட்டும் கவனம் செலுத்திவந்தோம். இப்போது அப்படி இல்லை. பலர் சமூக வலைதளங்களில் இயங்குகிறார்கள். சிலர், களத்தில் பிறருக்கு உதவி செய்கிறார்கள். எனது நாள்களைப் பொறுத்த வரை காலையில் எழுந்ததும் அரசாங்கத்தில் அனுமதி வாங்குவது டீமை ஒருங்கிணைப்பது என சில மணி நேரம் செல்லும். இந்தப் பணியில் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறேன். நான் மட்டும் படப்பிடிப்பில் இருந்திருந்தால் இதெல்லாம் சாத்தியமே இல்லை” என்றார்.

சோனு சூட்
சோனு சூட்
twitter

திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டினாலும் இன்று, சூப்பர் ஹீரோவாக அனைவரது மனதிலும் இடம் பிடித்திருக்கிறார், சோனு சூட். சல்யூட்!

News Credit: mumbai mirror

அடுத்த கட்டுரைக்கு