Published:Updated:

``விஜயகாந்த் சார் எனக்கு செம ஸ்பெஷல்... ஏன்னா?'' - ரீல் வில்லன், ரியல் ஹீரோ கதை சொல்லும் சோனு சூட்!

சோனு சூட்
சோனு சூட்

`அருந்ததி' `சந்திரமுகி' `ஒஸ்தி', `தேவி' ஆகிய கோலிவுட் படங்களில் வில்லனாக நடித்தவர் நடிகர் சோனு சூட். சினிமாவில்தான் வில்லன். நிஜ வாழ்க்கையில் ஹீரோ!

சினிமா வில்லன்கள் ரியல் ஹீரோக்களாக இருப்பது உலகுக்குப் புதிதல்ல. அந்தவகையில் `அருந்ததி' `சந்திரமுகி' `ஒஸ்தி', `தேவி' எனப் பல படங்களில் வில்லனாக நடித்த சோனு சூட் கொரோனா காலத்தில் பெரிய ஹீரோவாக மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கிறார். டாக்டர், நர்ஸ், தூய்மைப்பணியாளர்கள் தங்க இடம்கொடுத்து உதவியதோடு, மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவுக்குப் பல தொழிலாளர்களைத் தன் சொந்த செலவில் அனுப்பி வைத்திருக்கிறார். அவரிடம் பேசினேன்.

''லாக்டெளன் ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லாருமே ரொம்ப நிலை குலைஞ்சு போயிருக்காங்க. வாழ்க்கையோட புரிதல், உறவுகளுக்கிடையிலான மகிமை, மனிதத்தன்மை இதெல்லாம் புரிஞ்சிக்க ஒரு வாய்ப்பா இந்த லாக்டெளன் இருக்குனு நம்புறேன். தவிர, குடும்பத்துல இருக்குறவங்களோட நிறைய நேரத்தை இப்ப செலவு பண்ண முடியுது. நிறைய பொறுப்புணர்வை இந்த லாக்டெளன் கொடுத்திருக்கு.''

``மேடம்னு சொல்லாம எந்தப் பொண்ணுகிட்டயும் சிம்பு பேசமாட்டார்..!'' - `விடிவி' கணேஷ்

'' 'சினிமால வில்லன்... ஆனா, நிஜத்துல ஹீரோ'னு மக்கள் உங்களைப் புகழ்றாங்களே?''

சோனு சூட்
சோனு சூட்

''சாதராண மனுஷன் நான். ரொம்பக் கடுமையா உழைக்குறது எப்பவும் பிடிக்கும். இந்த லாக்டெளன் நேரத்துல தொழிலாளர்களுக்காக நிறைய நல்ல விஷயங்களை பண்ணிக்கிட்டு இருக்கேன். என்னோட அம்மாதான் 'நீ ஜெயிக்குறது மட்டும் முக்கியமில்ல. மத்தவங்களுக்கு முடிஞ்சளவுக்கு உதவி செய்யணும்'னு சொல்லுவாங்க. அப்போதான் ஒரு திருப்தி கிடைக்கும். அவங்களை பெருமைப்படுத்துறதுக்காகவே முடிஞ்சளவுக்கு உதவிகள் செஞ்சிட்டு வரேன்.''

''நிறைய தொழிலாளர்கள் ஊருக்குப் போறதுக்கு சொகுசுப் பேருந்து வசதி ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருந்தீங்களே?''

''கஷ்டப்படுற நம்முடைய மக்களுக்கு உதவி செய்றது நம்ம கடமை, நம்ம பொறுப்பு. அதுதான் தர்மமும். இதைத்தான் இப்போ பண்ணிக்கிட்டு இருக்கேன். ஹைவேஸ்ல போகும்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் அவங்களோட சொந்த ஊருக்குக் குழந்தைகளோட நடந்து போய்ட்டு இருந்ததை பார்த்தேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனால அவங்க எல்லாரும் சொந்த ஊருக்கு போறதுக்காக ஏற்பாடுகள் பண்ணலாம்னு தோணுச்சு. இதுக்காக 10 சொகுசுப் பேருந்துகளை ரெடி பண்ணேன். அவங்களுக்குத் தேவையான உணவு பொருள்களும் கொடுத்திருந்தோம். தானேல, கிளம்புறதுக்கு முன்னாடி அவங்க எல்லாரையும் நேர்ல போய் பார்த்தேன். கண்கலங்கி போயிருந்தாங்க. நன்றி சொன்னாங்க. ரொம்ப உணர்வுபூர்வமான சந்திப்பா இருந்தது.

''அரசாங்கம் எந்தளவுக்கு உங்க முயற்சிகளுக்கு உறுதுணையா இருந்தாங்க?''

சொகுசுப் பேருந்துகள்
சொகுசுப் பேருந்துகள்

''அரசு மற்றும் போலீஸ்காரங்களோட ஒத்துழைப்பு இல்லாம இது சாத்தியமாகி இருக்காது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநில அரசுகள் கேட்ட உதவிகளை எல்லாம் பண்ணாங்க. இப்போ, உத்தரப்பிரதேச தொழிலாளர்களை அவங்களோட சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடுகள் பண்ணிக்கிட்டு இருக்கோம். இதுக்காகவும் அரசாங்கத்துகிட்ட பேசியிருக்கோம். என்னால முடிஞ்சளவுக்கு எல்லா மாநிலத்துல இருக்குற தொழிலாளர்களையும் அவங்களோட சொந்த ஊருக்கு அனுப்ப முயற்சிகள் எடுத்துக்கிட்டு இருக்கேன்.

இது மட்டுமல்லாம 'சக்தி அன்னதான திட்டம்' என்னோட பெரிய கனவு. ரொம்ப நாளா பண்ண நினைச்சிக்கிட்டு இருந்த விஷயம். இப்போ இந்த லாக்டெளன்ல ஆரம்பிச்சிருக்கேன். இது மூலமா தினமும் 40,000 டு 50,000 பேர் வரைக்கும் அன்னதானம் பண்ணிக்கிட்டு இருக்கோம். சாப்பாடு இல்லாம கஷ்டப்படுறவங்களுக்கு இது ரொம்ப உதவியா இருக்கு. இந்த அன்னதான திட்டத்தை எங்க அப்பா பேர்ல ஆரம்பிச்சிருக்கேன். நான் மட்டுமல்ல ஒரு பெரிய டீமே சேர்ந்து வேலை செய்றோம்.''

''அரசாங்கத்தோட திட்டங்கள் சரியா ஏழை மக்களுக்குப் போய் சேருதா?''

சோனு சூட்
சோனு சூட்

''மத்திய, மாநில அரசுகள் மக்கள் நல்வாழ்வுக்காகக் கடுமையா உழைச்சிக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா, கவர்மென்ட் எந்த மாதிரியான திட்டம் அறிவிச்சாலும் ஏழ்மை மற்றும் வறுமை நிலையில இருக்குறவங்களுக்கு நேரடியா போய் சேர்ற மாதிரி இருந்தா நல்லாயிருக்கும். முக்கியமா, சிறு குறு தொழிலை சேர்ந்தவங்களுக்கு. எல்லாருடைய வாழ்க்கை முறைக்கும் பணம் முக்கியம். இந்த லாக்டெளன் நேரத்துல பணத்தட்டுப்பாடு எல்லாருக்குமே இருக்கும். நாமலும் முடிஞ்சளவுக்கு மத்தவங்களுக்கு உதவியா இருக்குறது நல்லதுனு தோணுது.''

''டாக்டர், நர்ஸ் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமா மலர்கள் தூவின விஷயத்தை எப்படிப் பார்க்குறீங்க?''

''டாக்டர்ஸ், நர்ஸ், தூய்மைப் பணியாளர்கள்தான் உண்மையான போராளிகள். இவங்க இல்லைன்னா நம்ம யாருமே கிடையாது. இவங்களுக்கு எதிரா புறக்கணிப்பு நடந்துக்கிட்டு இருக்கு. அதனாலதான் இவங்க தங்கி ஓய்வு எடுக்குறதுக்காக என்னோட ஹோட்டலை கொடுத்திருக்கேன். இது அவங்களுக்கு ரொம்ப யூஸ் ஃபுல்லா இருக்கு. அவங்கப் பணிகளைப் பாராட்டி மலர் தூவி வாழ்த்து தெரிவிச்சது நல்ல விஷயம்தான். ஆனா, ப்ராக்டிக்கலா யோசிச்சு, அவங்களுக்குத் தேவையான அடிப்படையான விஷயங்களையும் அரசாங்கம் பூர்த்தி செய்யணும்.''

``அருண், ஆன்மிகம், ஜீவ சமாதின்னு சுத்திக்கிட்டிருப்பார்... விபத்துக்கு முன்னாடி கூட!''- சி.வி.குமார்

''தமிழ்ப் படங்கள்ல திரும்பவும் உங்களைப் பார்க்கலாமா?''

''தமிழ் சினிமா எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அதுவும் குறிப்பா விஜயகாந்த் சார் எனக்கு செம ஸ்பெஷல். 'கள்ளழகர்' படம் மூலமாதான் முதல் முறையா சினிமாவில் நான் அறிமுகமானேன். விஜயகாந்த் சார் கூட நடிச்ச அனுபவம் இன்னும் ஞாபகம் இருக்கு. மனசுக்கு நெருக்கமான துறை தமிழ் சினிமா. இதுல இருந்துதான் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவுக்குப் போனேன். சென்னைல வடபழனி ஏரியாவுலதான் தங்கியிருந்தேன். சென்னையில இருக்குற எல்லா ஏரியாவும் நல்லா தெரியும். எல்லா இடத்துக்கும் போயிருக்கேன். தமிழ் ஆடியன்ஸ் என்னை நல்லா வெல்கம் பண்ணியிருக்காங்க. நன்றிகள் மக்களே. தொடர்ந்து படங்கள் பண்ணுவேன்.''

அடுத்த கட்டுரைக்கு