Published:Updated:

`` `பிகில்'ல நீங்க போட்ட டி-ஷர்ட் வேணும்னு விஜய்ணாகிட்ட கேட்டப்போ...!'' - செளந்தர் ராஜா!

விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் `பிகில்'. இப்படத்தில் தான் அணிந்த ஜெர்ஸியை படத்தில் நடித்திருந்த நடிகர் செளந்தர் ராஜாவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார் விஜய். இதுகுறித்து செளந்தர் ராஜாவிடம் பேசினேன்.

விஜய்யுடன் சௌந்தர் ராஜா
விஜய்யுடன் சௌந்தர் ராஜா

``அட்லி சாரின் `தெறி' படத்தில் சின்ன ரோல் பண்ணியிருந்தேன். அதன்பிறகு `பிகில்' படத்தில் வாய்ப்பு வந்தது. `தெறி' படத்தை விடவும் `பிகில்' படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்ணா கூட நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைச்சது. அவரோட தம்பி மாதிரியே 25 நாள்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தேன். படத்துல நிறைய காட்சிகள் அவர்கூட சேர்ந்து நடிச்சேன். ஆனா, எடிட்டிங் வெர்ஷனில் பாதி போயிருச்சு. அவர்கூட திரையில் ஒரு நிமிஷம் வந்தாலும் அது சந்தோஷம்தான். கிட்டத்தட்ட 25 நாள்கள் அவர்கூட ஒண்ணா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தேன். அவர் எப்போதும் பெரிய நடிகர்ங்குற பந்தா வெச்சுக்கிட்டு இருக்க மாட்டார். அவருக்கான ஷாட் முடிஞ்சிட்டாலும் `என்ன நடந்திருக்குனு கவனிப்பார். நிறைய நேரங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்கூட பேசிட்டிருந்திருக்கார். என்னைப் பத்தி குடும்பம் பத்தியெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்குவார்.

ஒரு நண்பர் நம்மகிட்ட பேசுனா எந்தளவுக்கு ஃப்ரீயா பேசுவாரோ அதே மாதிரி பேசினார். `கடைசியா என்ன படம் பார்த்தீங்க, குடும்பத்தோட எந்த இடத்துக்கு அடிக்கடி போவீங்க'னு விசாரிப்பார். நம்ம அவர்கிட்ட ஏதாவது கேள்வி கேட்டாலும் உண்மையா பதில் சொல்லுவார். அவர்கிட்ட நிறைய சமூகப் பணிகள் பத்தியெல்லாம் பேசுவேன். அவர் ஆர்வமா எல்லாத்தையும் கேட்டுக்குவார். நம்ம மேலே அக்கறையா இருப்பார். `பிகில்' படத்தோட ஆடியோ லான்ச் எந்தளவுக்கு பிரமாண்டமா நடந்ததுனு எல்லாருக்கும் தெரியும். மத்த படங்களுடைய ஆடியோ லான்ச்சைக் காட்டிலும் இந்தப் படத்தோட ஆடியோ லான்ச் வித்தியாசமா இருந்தது. விஜய் சார் பாட்டுப் பாடி எல்லாரையும் சந்தோஷப்படுத்தினார்.

செளந்தர் ராஜா
செளந்தர் ராஜா
`` `பிகில்'ல வராத சீன், நயன்தாராவின் பரிசு, கண்ணை மூடி திட்டு வாங்கின விஜய்!" - `பிகில்' அம்ரிதா

வில்லன், கேரக்டர் ரோல்னு கிட்டத்தட்ட முப்பது படங்கள் வரைக்கும் பண்ணிட்டேன். `பிகில்' படத்தோட ஆடியோ லான்ச்சின் போது நம்மல மேடைக்குக் கூப்பிட மாட்டாங்களா, ஏதாவது பேச வாய்ப்பு கொடுத்துற மாட்டாங்களானு ஏங்கிட்டிருந்தேன். நிகழ்ச்சியே முடியப் போகுது எனக்கான வாய்ப்பு வரல. என்னைப் பத்தி யாரும் பேசவும் இல்லை. வருத்தமா இருந்தது. அப்போ, `செளந்தர் நம்ம போற தூரம் இன்னும் இருக்கு. பெருசா பண்ணணும். அப்போதான் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும்' என எனக்கு நானே தன்னம்பிக்கை வார்த்தைகளைக் கொடுத்துட்டு உட்கார்ந்திருந்தேன். அப்போ விஜய் அண்ணா பேசிட்டிருந்ததைக் கண் இமைக்காமல் பார்த்துக்கிட்டிருந்தேன். படத்துல நடிச்சவங்க பேரெல்லாம் சொல்லிட்டு வந்தார். நம்ம பேரை சொல்ல மாட்டாரானு ஏங்கிட்டிருந்தேன். ஒவ்வொரு ஃபுட்பால் பிளேயர் பத்தியும் பேசுனார். என்னைப் பத்தி சொல்லல. அப்புறம் ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி சார் பத்தி சொல்லிட்டு நிறுத்தினார். எனக்கு ஏமாற்றமா இருந்தது. ஆனா. அதுக்குப்பிறகுதான், `இந்தப் படத்துல ஒரு நல்ல நண்பனைச் சந்திச்சேன். அவர் பேர் செளந்தர் பாண்டியன்'னு சொன்னார். எனக்கு சந்தேகமா இருந்தது. ஏன்னா, என் பேர் செளந்தர் ராஜா. அவர் செளந்தர் பாண்டியன்'னு சொல்றார்னு நினைச்சிட்டிருந்தேன். அதுக்கு அப்புறம் `அவர் எப்போதும் என்கிட்ட மண்ணையும் மக்களையும் பத்தி சொல்லிட்டிருப்பார்'னு சொன்னவுடனே நம்மளை பத்திதான் சொல்றார்னு புரிஞ்சிக்கிட்டேன்.

அவ்வளவு சந்தோஷமா ஃபீல் பண்ணுனேன். எந்தவொரு கலைஞனுக்கும் பணத்தையும் தாண்டி பாராட்டும் அங்கீகாரமும்தான் முக்கியம். ஒரு மாஸ் ஹீரோ அவருக்கான மேடையில் என்னைப் பத்தி ஒரு வார்த்தை சொல்றது பெரிய விஷயம். இந்த விழா முடிஞ்சு மூணு நாள் முழுக்க சந்தோஷத்திலேயே இருந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்குறப்போ நம்ம பேசுன விஷயங்களை அவர் மேடையில் சொன்னது வேற லெவல். அதே மாதிரி மக்கள் சிந்தனையுடன் இருக்குற நடிகர், மனிதர் விஜய்ணா. இப்போ அவர் பண்ணிட்டிருக்குற படங்களில் மக்கள் பிரச்னைகளை பத்திதான் பேசுறார். என் படங்களுக்கு பேனர் அடிக்குறதை விட சமூகப் பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கனு சொல்லிட்டிருக்கார்.

செளந்தர் ராஜா
செளந்தர் ராஜா

அவருக்கும் எனக்கும் நல்ல பாசம், அன்பு இருந்தது. அவர் என்னைப் பார்த்த விதமே வித்தியாசமானதுதான். அந்த நம்பிக்கையில் அவர்கிட்ட `பிகில்' டி-ஷர்ட் வேணும்னு கேட்டிருந்தேன். சிரிச்சவர்... அப்போ பெருசா பதில் எதுவும் சொல்லல. ஆனா, படத்தோட ஷூட்டிங் முடிஞ்சவுடனே ஞாபகமா கொடுத்துட்டார். நான் லண்டனில் வேறொரு படத்தோட ஷூட்டிங்கில் இருந்ததனால் என்னோட மனைவி போய் வாங்கிட்டு வந்தாங்க. அப்பா, அம்மா வைக்குற பேர் நம்மலை சுத்தியிருக்குறவங்களுக்கு மட்டும் தெரியும். அந்தப் பேர் ஒரு கோடி பேருக்கு தெரியும்னுனா அதுக்கு நம்ம கடுமையா உழைக்கணும். அதுக்காகத்தான் உழைச்சிட்டிருக்கேன்.

இதுக்கு விஜய்ணா மாதிரி ஒருத்தர் ஆதரவா இருக்குறது பெரிய பாராட்டு'' என்றவரிடம் ``விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தால் நீங்கள் உறுப்பினரா சேர்வீர்களா?'' எனக் கேட்டால்,. 'இந்த மண்ணும், மக்களும் எந்த மாதிரியான ஆட்கள்னு தெரிஞ்சிக்கிட்டு, இங்கே எதை விதைத்தால் என்ன விளையும்னு தெரிஞ்சி இருக்குற ஆட்கள் அரசியலுக்கு வரணும்னு நினைப்பேன். அந்த வழியில் நானொரு அரசியல் கட்சியில் இருக்கேன். ரொம்ப ரொம்ப சின்ன புள்ளி நான். கண்டிப்பா சமூக சிந்தனையில் இருக்குற எல்லாரும் அரசியலுக்கு வரணும். அதில் விஜய்ணாவும் வரணும்' என்கிறார் சக்தி செளந்தர்ராஜா.