Published:Updated:

``சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்!'' - குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்

`சினிமாத்துறையில எது எப்படி வேணாலும் நடக்கலாம். நம்ம கையில எதுவும் இல்லை. வெற்றி ஒருத்தரை மாத்துற மாதிரி தோல்வியும் ஒருத்தரை மாத்தும். அந்த வகையில நான் இப்ப நிறைய பக்குவப்பட்டிருக்கேன்.’

சினிமாத்துறை என்பது ராட்சத ராட்டினம்போல. எந்த நேரத்தில் யார் எந்த இடத்தில் இருப்பார்கள் என்பது கணிக்க முடியாதது. இந்தப் பயணத்தில், தனக்கான இடத்தை மீண்டும் பிடிக்க `மகா', `மிருகா' படங்களுடன் கரியரில் கம்பேக் தரக் காத்திருக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்.

`ரோஜாக்கூட்டம்', `ஏப்ரல் மாதத்தில்', `பார்த்திபன் கனவு', `பூ' என ஃபீல் குட் படங்களில் நடித்தவர் ஶ்ரீகாந்த். அவரது அடுத்தடுத்த ப்ளான் குறித்தும் அவர் நடிக்கும் படங்கள் பற்றியும் அவரிடம் பேச நிறைய இருந்தது.

நடிகர் ஶ்ரீகாந்த்
நடிகர் ஶ்ரீகாந்த்

`` 'ரோஜாக்கூட்டம்', `ஏப்ரல் மாதத்தில்'னு என்னோட படங்கள் வந்தப்ப, வெளிய என்னைச் சுத்தி நிறைய லவ் ஸ்டோரிஸ் இருந்தது. சினிமாக்குள்ள வந்த இந்த 18 வருஷங்கள்ல நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்திச்சிருக்கேன். இந்தப் பயணம் இன்னும்கூட சிறப்பா இருந்திருக்கலாமோனு தோணுது. ஆனா, எதுவும் நம்ம கையில இல்லையே. இப்ப மூணு வருஷ இடைவெளிக்கு அப்புறம் நிறைய நல்ல படங்கள் தொடர்ந்து பண்ணிட்டிருக்கேன். நிச்சயமா என்னோட சினிமா கரியர்ல ஒரு நல்ல கம்பேக் இருக்கும்னு நம்பறேன்" எனத் தனது சினிமா பயணம் குறித்தான நினைவுகளுடன் ஆரம்பிக்கிறார் ஶ்ரீகாந்த்.

`ரோஜாக்கூட்டம்' வாய்ப்பு வந்தது எப்படி?

'ரோஜாக்கூட்டம்'
'ரோஜாக்கூட்டம்'

``சசி சார் தன்னோட படத்துல ஒரு புதுமுகத்தை நடிக்க வைக்கணும்னு தேடிட்டிருந்தார். `12B', `காதல் வைரஸ்' மாதிரியான படங்கள்ல நடிக்கறதுக்கான வாய்ப்பு எனக்கு மிஸ் ஆனதால நல்ல வாய்ப்பு வர வரைக்கும் காத்திருக்கலாம்னு விளம்பரங்கள்ல நடிச்சிட்டிருந்தேன். அப்ப ஒரு நாள் சசி சாரை மீட் பண்ணேன். டெஸ்ட் ஷூட் எடுத்துப் பார்த்துட்டு கதைக்கு நான் சரியா வருவேன்னு என்னை முடிவு பண்ணிட்டார். அப்படிதான் `ரோஜாக்கூட்டம்' படத்துக்குள்ள வந்தேன். இந்தப் படத்துல நடிச்ச பூமிகாகூட நல்ல நட்பு உருவானதைத் தாண்டி அண்ணன் - தங்கை உறவு எங்களுக்குள்ள ஏற்பட்டுச்சு."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீங்க அறிமுகமான படத்தையும், உங்களோட செகண்ட் இன்னிங்ஸை மறுபடியும் ஆரம்பிச்சு வெச்ச `பூ' படத்தையும் இயக்கினது சசிதான். உங்களுக்குள்ள இருக்கிற நட்பு பத்திச் சொல்லுங்க?

இயக்குநர் சசி
இயக்குநர் சசி

``சசி சார் ரொம்பவே அமைதி. எந்த விஷயத்திலேயும் ரொம்ப கவனமா இருக்கக்கூடியவர். அவரோட ஒரு படத்துக்குக் குறைந்தது மூணு வருஷம் எடுத்துப்பார். இதுவரைக்கும் ஏழு படங்கள்கிட்டதான் இயக்கியிருப்பார். ஆனா, எல்லாமே தரமான நல்ல படங்கள். என்னோட சில படங்கள் நல்லா போகாம இருந்தப்ப, `என்ன இப்படி முட்டாள்த்தனமா பண்ணிட்டிருக்க'னு திட்டினார். அந்தளவுக்கு என்மேல அக்கறையோட இருப்பார். அந்த மாதிரி ஒரு தருணத்துலதான் `பூ'க்குள்ள கமிட் ஆனேன். ஆனா, அதுல நடிக்க நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு நிறைய பேர் சொன்னாங்க. எல்லாத்தையும் தாண்டி சசி சார் என்மேல நம்பிக்கை வெச்சார். எனக்கு அது ரொம்ப சவலா இருந்தது. 'பூ'ல மொத்தமே 20 நிமிஷம்தான் வருவேன். ஆனா, மொத்த படமும் என்னைச் சுத்திதான் நகரும். என்னோட கரியர்ல ரொம்ப முக்கியமான படம் `பூ'. அதைக் கொடுத்த சசி சாருக்கு நன்றி சொல்லிக்கிறேன்."

சசி, சுதா கொங்கரா, கே.வி.ஆனந்த், ஷங்கர், பார்த்திபன், செல்வராகவன்னு தமிழ் சினிமாவோட முக்கிய இயக்குநர்கள்கூட வேலை பார்த்த அனுபவம்?

நடிகர் ஶ்ரீகாந்த்
நடிகர் ஶ்ரீகாந்த்

`` 'ஆயுத எழுத்து'க்கு டெஸ்ட் ஷூட் போறப்ப சுதா கொங்கரா மணி சார்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தாங்க. அப்ப அவங்களைப் பார்த்துதான் வசனத்தைப் பேசி நடிச்சேன். அப்ப இருந்த என்னோட லுக்கை மனசுல வெச்சிதான் `துரோகி' படத்தை இயக்கினப்ப என்னைக் கூப்பிட்டாங்க. ரொம்ப நல்ல கதைதான். ஆனா, சில காரணங்களால அது சரியா போகல. சுதா ரொம்ப திறமையானவங்க. அதான் அடுத்த படமான `இறுதிச்சுற்று' வெற்றிப் படமா அமைஞ்சிடுச்சு.

கே.வி. ஆனந்த் சார்கூட நான் பண்ண `கனா கண்டேன்' வெற்றிப்படம்தான். ஆனா, ப்ளாக்பஸ்டர் கிடையாது. அவரோட அடுத்த படமான `அயன்' ப்ளாக்பஸ்டர். எவ்ளோ சூப்பரா வேலை பார்த்தாலும் ஆனந்த் சார் அதை வெளில சொல்லவே மாட்டார். அடுத்து, அடுத்துனு விடாமுயற்சியோட வேலை பார்க்கிற ஒருத்தர்.

என்னைப் பொறுத்தவரைக்கு செல்வராகவன் சார் ஒரு நடமாடும் பொக்கிஷம். இது அவரைப் புரிஞ்சிக்கிறவங்களைப் பொருத்தது. பிலாசஃபர், ப்ராக்டிக்கல்னு அவருக்கு ரெண்டு பக்கங்கள் இருக்கு. இசை, பாடல்ல அவருக்கு அபாரமான அறிவு இருக்கும்.''

தமிழ், தெலுங்குனு மாறி மாறி படங்கள் பண்ணிட்டிருக்கீங்களே?

நடிகர் ஶ்ரீகாந்த்
நடிகர் ஶ்ரீகாந்த்

``என்னோட அம்மா கும்பகோணம், அப்பா ஆந்திரா. அதனால, எனக்கு ரெண்டுமே பிரச்னை இல்ல. கும்பகோணம் தீ விபத்துனால என்னோட சில படங்கள் வெளிவராம போயிடுச்சு. அதனால தெலுங்குல சில படங்கள் கமிட்டானேன். ஆரம்பத்துல தமிழ், தெலுங்கு ரெண்டையும் சமாளிச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா, சரி வரல. அதான் ஓய்வு கிடைக்கிறப்ப தெலுங்கு படங்கள் பண்ணிட்டிருக்கேன்."

ஆரம்பகால சினிமாவுக்கு அப்புறம் ரசிகர்களும் குறைஞ்சிட்டாங்க, படங்களும் சரியா போகல. இதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?

நடிகர் ஶ்ரீகாந்த்
நடிகர் ஶ்ரீகாந்த்

``சினிமாத்துறையில எது எப்படி வேணாலும் நடக்கலாம். நம்ம கையில எதுவும் இல்லை. வெற்றி ஒருத்தரை மாத்துற மாதிரி தோல்வியும் ஒருத்தரை மாத்தும். அந்த வகையில நான் இப்ப நிறைய பக்குவப்பட்டிருக்கேன். நல்ல கதை அம்சமுள்ள படங்களா பாத்து தேர்ந்தெடுக்குறேன். ஆர்டிஸ்ட் கையில மட்டும் படத்தோட வெற்றி தோல்வி இல்லை. ஒரு படம் தோல்வியானா நடிகரைச் சொல்வாங்க, வெற்றிபெற்றா எல்லாரையும் கொண்டாடுவாங்க. இதுதான் சினிமா. இனி வர்ற காலங்கள்ல கவனமா இருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்."

மிஷ்கின், வெற்றிமாறன்கூட இருக்கிற நட்பு பத்தி சொல்லுங்க?

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

``கதிர் சார், காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல என்னைப் பார்த்துட்டு `காதல் வைரஸ்' டெஸ்ட் ஷூட்டுக்காக வரச் சொன்னார். டெஸ்ட் முடிஞ்சதும் `இந்தப் பையனைத்தான் செலக்ட் பண்ணியிருக்கோம்'னு மிஷ்கின், வெற்றிமாறன்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினார் கதிர் சார். அப்ப நான் சினிமாத்துறைக்கு புதுசு. ஹைதரபாத்ல படிச்சதால தமிழ் எழுதப் படிக்க எனக்கு வராது. தஸ்த்தாவஸ்கியோட `ஒயிட் நைட்ஸ்' நாவலை மிஷ்கின் சார் வாசிச்சு காட்டுவார், அதை நான் தங்க்லீஷ்ல எழுதி அதே மாடுலேஷன்ல நடிச்சிக் காட்டணும். வேற சில காரணங்களால அந்தப் படத்துல இருந்து வெளில வர்ற மாதிரி ஆகிடுச்சு. அந்த சூழல்லதான் நான் படத்துல வேணுமா, வேண்டாமாகிற விவாதம் வந்தது. அப்ப மிஷ்கின் எனக்கு ஓட்டு போட்டார், வெற்றிமாறன் `உங்களுக்கு நடிக்க வருது. ஆனா, இந்தக் கதைக்கு நீங்க செட்டாக மாட்டீங்க'னு எனக்கு ஓட்டு போடல. அவங்க ரெண்டு பேருமே அறிவுல வேற எக்ஸ்ட்ரீம். நாங்க எல்லாருமே ஒண்ணாதான் கரியரை ஆரம்பிச்சோம். இப்ப அவங்க இருக்க இடம் எனக்குப் பெருமையா இருக்கு."

சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நடிகர்?

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

``விஜய் சேதுபதியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். தன்னோட இமேஜ் பத்தி கவலைப்படாம, எந்தக் கேரக்டரா இருந்தாலும் துணிச்சலா நடிப்பார். எத்தனை படங்கள் பண்ணோம்கிறது முக்கியம் இல்லை. என்ன பண்ணிருக்கோம்னுதான் பேசணும்."

இயக்குநர் பாலசந்தரோட `ஜன்னல்' சீரியல் வாய்ப்பு?

நடிகர் ஶ்ரீகாந்த்
நடிகர் ஶ்ரீகாந்த்

``நான் வாய்ப்பு தேடி பாலசந்தர் சார்கிட்ட போனப்ப, அவர் புரொடக்‌ஷன்ல என்னை ஹீரோவா அறிமுகப்படுத்தறேன்னு சொன்னார். ஆனா, வாய்ப்பு வந்தது என்னவோ அவருடைய `ஜன்னல்' சீரியல்லதான். எனக்கு அதுல உடன்பாடு இல்லைன்னாலும் நடிச்சேன். அதுக்கப்புறம், பாலசந்தர் சார் கிட்ட, `சார், நான் மேற்படிப்புக்காக அமெரிக்கா கிளம்பறேன். சீரியல்லாம் எனக்கு செட் ஆகாது'னு சொன்னேன். `பொறுமையா இருடா. சரியான வாய்ப்பு கண்டிப்பா உன்னைத் தேடி வரும்'னு சொன்னார். அவர்கூட வேலை பார்த்ததை என் பாக்கியமா நினைக்கறேன்."

`நண்பன்' பட அனுபவம்?

'நண்பன்'
'நண்பன்'

``ஷங்கர் சார் ரொம்ப எளிமையானவர். 5 நிமிஷம் வெயிட் பண்ண வெச்சதுக்கே அத்தனை முறை சாரி கேட்டார். அவர்கூட வேலை பார்த்தது என்னோட அதிர்ஷ்டம். அந்தச் சமயத்துல விஜய் சார், ஜீவான்னு எங்க மூணு பேர்க்குள்ள இருந்த நட்பை, வெளில இருந்து யாரும் பிரிக்கக் கூடாதுங்கிறதுல உறுதியா இருந்தோம். வேலைனு வந்துட்டா விஜய் சாரோட டெடிகேஷன் வேற லெவல்ல இருக்கும். அவரோட டான்ஸ் பத்தி சொல்லவே தேவையில்ல. நானும் ஜீவாவும், `ண்ணே... கொஞ்சம் மெதுவா ஆடுங்க. அப்பதான் நாங்களும் உங்களுக்குச் சரியா வரமுடியும்'னு சொன்னதும் சிரிச்சார். எப்பவுமே ஜாலியா இருப்பார். ஜீவா ரியல் லைஃப் வடிவேலு. அவரால செட்டே செம ஜாலியா இருக்கும். படங்களைத் தாண்டி சினிமாத்துறையில என்னோட நண்பர்கள்னா தனுஷ், ஆர்யா."

இப்போ நடிச்சிட்டிருக்க `மஹா', `மிருகா' படங்கள் பத்தி?

'மஹா'
'மஹா'

``வில்லன், ஹீரோன்னு வெவ்வேற ஜானர்ல இந்த ரெண்டு படங்களுமே இருக்கும். க்ரைம் த்ரில்லர் ஜானர்ல `மஹா' படம் இருக்கும். சிம்பு, ஃப்ளாஷ்பேக் போர்ஷன்ல ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வந்திருப்பார். `மிருகா'வும் வேற ஜானர்ல இருக்கும். ரெண்டு படங்களுமே என்னோட கரியர்ல முக்கியமானதா இருக்கும்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு