``உஷார்... சினிமாவை மட்டும் நம்பி இருந்தால் அவ்வளவுதான்..!’’- சந்தீப் கிஷன்

சினிமாவுல என்ன வேணாலும் நடக்கலாம். இதுவரை நான் 12 படங்கள் சம்பளம் வாங்காமல் நடிச்சிருக்கேன்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார் நடிகர் சந்தீப் கிஷன். தன் நடிப்பில் வெளியாகவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்தும் தயாரிப்பில் இருக்கும் பிரச்னைகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
'கண்ணாடி' பட அனுபவம் எப்படி இருந்தது. ஹாரர் ஜானரை தேர்ந்தெடுத்தது ஏன்?
"எனக்கு ஹாரர் ஜானர் பண்ணணும்னு ஆசையெல்லாம் இல்லை. ஹாரரைத் தாண்டி நிறைய புது விஷயங்கள் படத்துல இருக்கு. அந்த சர்ப்ரைஸிங்கான எலெமென்ட்தான் என்னை படத்துக்குள்ள வரவெச்சது. ரொம்ப அருமையான அனுபவம். நடிப்பு, தயாரிப்பு ரெண்டுலயும் நிறைய கத்துக்கிட்டேன். இந்தப் படத்துல எனக்கு எமோஷனலா பர்ஃபார்ம் பண்ண ஸ்கோப் இருந்தது. இதுவரை நான் நடிச்ச படங்களுக்கும் இந்தப் படத்திற்கும் என்கிட்ட நிறைய வித்தியாசம் இருக்கும். பைலிங்குவலா எடுத்தோம். ரெண்டு மொழிகளுக்கும் என்னைத் தவிர மற்ற நடிகர்கள் எல்லாரும் வெவ்வேற நபர்கள். ரெண்டு மொழிகளிலும் படத்துடைய இரண்டாம் பாதி மாறும்."
இந்தப் படத்துல இயக்குநர் கார்த்திக் நரேன் நடிச்சிருக்காராமே!

"ஆமா. சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கார். ஆனா, முக்கியமான கேரக்டர். இந்தப் படமே 2043ல ஆரம்பிக்கும். அந்த வருஷத்துல நடக்குற சீனுக்கு ரொம்ப கூலா ஜாலியான ஒரு பையன் வேணும்னு இயக்குநர் கார்த்திக் ராஜு சொன்னதும், எனக்கு கார்த்திக் நரேன் ஞாபகம்தான் வந்தது. கேட்டவுடனே ஓகே சொல்லிட்டார். இதுல அவருக்கு ஜோடியா 'குக்கூ' படத்துல நடிச்ச மாளவிகா நாயர் நடிச்சிருக்காங்க."
இந்தப் படத்துடைய தெலுங்கு வெர்ஷன் ரிலீஸாகிடுச்சு. தமிழ்ல ஏன் தாமதமாகுது?
"இந்தப் படத்துடைய தெலுங்கு வெர்ஷனை நான் தயாரிச்சேன். தமிழ்ல 'ஆடை' படத்தை தயாரிச்ச நிறுவனம்தான் தயாரிச்சிருக்காங்க. தமிழைப் பொறுத்தவரை நான் நடிகன் மட்டும்தான். தயாரிப்பாளர்தான் ரிலீஸ் பண்ணணும்."
'தெனாலி ராமகிருஷ்ணா பிஏ.பிஎல்' பட அனுபவம் எப்படி இருந்தது?

"ரொம்ப ரொம்ப ஜாலியான படம். இந்த மாதிரியான படங்களைத்தான் என் பலமா பார்க்கிறேன். ஆனா, நான் சமீபமா பண்ண படங்கள் எல்லாமே ரொம்ப சீரியஸ் மோட்ல இருந்தது. அதனாலதான் என் ஏரியால ஜாலியா ஒரு படம் பண்ணணும்னு பண்ணேன். 'நானும் ரெளடிதான்' மாதிரி ஜாலியா இருக்கும். ஹன்சிகா, வரலட்சுமினு ரெண்டு ஹீரோயின்கள். நானும் ஹன்சிகாவும் வக்கீல்களா நடிச்சிருக்கோம். ஹன்சிகா ரொம்ப ஜாலி டைப். எப்போவும் ஸ்பாட்டை சிரிக்கவெச்சுக்கிட்டு இருக்கிறது ஹன்சிகாதான். அவங்க இருந்தாலே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும். அதே மாதிரி வரலட்சுமியும் நானும் நெருங்கிய நண்பர்கள். ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் மாத்தி மாத்தி கலாய்ச்சுக்குவோம். நம்ம எல்லோருக்கும் வாழ்க்கையில நிறைய பிரச்னைகள் இருக்கு. அதை எல்லாம் மறக்க தியேட்டருக்கு வந்தால் அங்கேயும் மெசேஜ் சொல்லணுமா? இந்தப் படம் பார்த்துட்டு கவலையெல்லாம் மறந்து ஜாலியா வீட்டுக்குப் போகலாம்."
படங்கள் வெளியாவதில் இருக்கிற சவால்களை எப்படிப் பார்க்குறீங்க?
"படம் எடுக்கிறதை விட வெளியாகுறது ரொம்ப சவாலான காரியமா இருக்கு. 'கண்ணாடி' படத்துடைய தயாரிப்பாளர்தான் 'ஆடை' படத்தையும் தயாரிச்சார். அந்தப் படமும் முதல் ஷோ ரிலீஸ் ஆகலை. படங்கள் நல்ல பெயர் வாங்கினாலும், பணம்தான் பெரிய விஷயமா பார்க்கப்படுது. கஷ்டப்பட்டு நடிச்ச ஒரு படம் ரிலீஸாகாமல் இருக்குனா, நம்ம உழைப்புக்கு என்ன மரியாதை? ஒரு சில படங்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தால் பரவாயில்லை. எல்லா படங்களுக்கும் இந்தப் பிரச்னை இருந்தால் அப்போ எங்கேயோ தவறு நடக்குதுனுதானே அர்த்தம். அதைக் கண்டுபிடிச்சு இனி வரும் காலங்களில் இந்தப் பிரச்னைகள் இல்லாத மாதிரி சீனியர் தயாரிப்பாளர்கள் ஒரு முடிவு எடுக்கணும்; எடுப்பாங்கன்னு நம்புறேன்."
நீங்க நடிச்ச 'நரகாசூரன்' படமும் இன்னும் வெளியாகாமல் இருக்கே!

"ஆமா. சில காரணங்களால வெளியாகாமல் இருக்கு. நிச்சயம் ஒரு நாள் ரிலீஸாகும். கெளதம் சார்கிட்ட அடிக்கடி பேசுவேன். ஆனா, படம் ரிலீஸ் பத்தி எதுவும் பேசமாட்டேன். அந்தப் படம் சம்பந்தமா அவரும் அப்செட்லதான் இருப்பார். யார் இதை சரி செய்யணுமோ அவங்கதான் பண்ணணும். ஆனா, இவ்ளோ நாள் ஒரு படம் வெளிவராமல் இருக்குன்னா அதுக்கு நியாயமான காரணம் இருக்கும். சீக்கிரமே அந்தப் படமும் வெளியாகும்னு நம்பிக்கை இருக்கு."
'கசடதபற' படத்துல நிறைய நடிகர்கள் கூட நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?
`` `மாநகரம்' படத்துக்குப் பிறகு, சூப்பரான ஒரு படம் வொர்க் பண்ணியிருக்கேன்னு சந்தோசமா இருக்கு. ரொம்ப திருப்தியா இருக்கு. எனக்கான போர்ஷன் 20 நிமிடம்தான் படத்துல வரும். சிம்புதேவன் சார் இயக்கத்துல நடிச்சதுல நிறைய கத்துக்கிட்டேன். ஏற்கெனவே வேறொரு படத்துக்காக சிம்புதேவன் சாரை மீட் பண்ணேன். ஆனா, இந்தப் படத்துல நடிச்சுட்டேன். அவருக்கு என்ன வேணுங்கிறதை எடுக்கிறதுக்கு முன்னாடி முழுமையா சொல்லிடுவார். எங்களுக்கே தெரியாமல் அவர் எதிர்பார்க்குற விஷயங்களை எடுத்துக்குவார். அவருடைய 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்துக்கு நான் ஃபேன். எனக்கு ஜோடியா பிரியா பவானி ஷங்கர் நடிச்சிருக்காங்க. அருமையான பர்ஃபார்மர். ஷூட்டிங் முடிஞ்ச பிறகுதான் நல்ல நண்பர்கள் ஆனோம். 'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படங்கள் பார்த்துட்டு ஹரீஷ் கல்யாண்கிட்ட போன்ல பேசியிருக்கேன். ஒரு வருடமா எங்களுக்குள்ள நல்ல நட்பு இருந்தது. இந்தப் படத்துல சேர்ந்து வொர்க் பண்ணிட்டோம். நிறைய டெக்னீஷியன்கள் இருக்காங்க. எல்லாரோடும் ஒரே படத்துல வொர்க் பண்றது ரொம்ப வித்தியாசமா இருந்தது. அத்தனை பெரிய டெக்னீஷியன்களையும் சிம்புதேவன் சார் சூப்பரா கையாண்டு வேலை வாங்கினார். நிச்சயம் இந்தப் படம் பேசப்படும்."
உங்களுடைய ரெஸ்டாரன்ட் எப்படி போயிக்கிட்டு இருக்கு?

"சூப்பரா போய்க்கிட்டு இருக்கு. சினிமாவுல என்ன வேணாலும் நடக்கலாம். இதுவரை நான் 12 படங்கள் சம்பளம் வாங்காமல் நடிச்சிருக்கேன். இப்படியான சூழல்ல சினிமாவை மட்டும் நம்பினால் குடும்பத்துல இருக்கிறவங்க நிலைமை என்னாகுறது? அதனாலதான் ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சேன். அதை அப்பா கவனிச்சிக்கிறார். நாலு கிளைகள் இருக்கு. அது மூலமா வர்ற வருமானம் நிரந்தரமா இருக்கு. அப்போதான் பணத்தை எல்லாம் பார்க்காமல் என் கரியருக்காக ஓட முடியும்."
உங்க இயக்குநர்கள் கார்த்திக் நரேன், லோகேஷ் கனகராஜ் ரெண்டு பேரும் ரொம்ப பிஸியா இருக்காங்க. அவங்ககூட தொடர்புல இருக்கீங்களா?
"ரெண்டு பேர்கூடவும் அடிக்கடி பேசுவேன். 'நரகாசூரன்' இயக்குநர் கார்த்திக் நரேன் எனக்கு நெருக்கம். இப்போ அருண் விஜய் சாரை வெச்சு 'மாஃபியா' முடிச்சிட்டார். அந்தப் படம் நிச்சயம் கவனம் பெறும். அதே மாதிரி, 'மாநகரம்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய் சாரை இயக்கப்போறார். அதுவே ரொம்ப சந்தோஷம். 'கைதி' படமே வேற லெவல்ல இருக்கும். அப்போ விஜய் சார் படம் எப்படி இருக்கும்னு எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு. ஆல் தி பெஸ்ட் கார்த்திக் நரேன் மற்றும் லோகேஷ் கனகராஜ்."
நடிகைகளில் யார் உங்களுக்கு க்ளோஸ்?

"நான் எல்லோர்கிட்டேயும் ரொம்ப ஃப்ரெண்ட்லி. குறிப்பா சொல்லணும்னா, ரகுல் ப்ரீத்சிங், ராஷி கண்ணா, ரெஜினா. ரெஜினா எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி."
அடுத்தது என்ன?
"அமேசான் ப்ரைமிற்காக 'எ ஃபேமிலி மேன்'னு ஒரு இந்தி வெப் சீரிஸ் பண்ணியிருக்கேன். 'நரகாசூரன்', 'கண்ணாடி', 'கசடதபற' இந்த மூணு படங்கள் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. இந்தப் படங்கள் ஒவ்வொண்ணா வெளியான பிறகுதான், அடுத்து கமிட் பண்ணணும்."