Published:Updated:

``என்ன செய்வேன்... என் அடுத்த படத்துல கிருஷ்ணமூர்த்தி இருந்தாரே!'' - வடிவேலு

வடிவேலுவுடன் கிருஷ்ணமூர்த்தி
வடிவேலுவுடன் கிருஷ்ணமூர்த்தி

"நான்தான் முதன்முதலாக 'தவசி' படத்துல கிருஷ்ணமூர்த்தியை நடிக்க வெச்சேன். அதுக்கப்புறம் ஏகப்பட்ட படத்துல என்கூட நடிச்சிருக்கார். நடிக்கப்போற காட்சியைப் பற்றி டிஸ்கஷன் செய்வோம். அப்போ எவ்வளவு காமெடியான கான்செப்ட் சொன்னாலும், லேசுல ரசிக்க மாட்டார்."

தமிழ் சினிமா உலகில் 100-க்கும் அதிமான படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி `பேய் மாமா' படப்பிடிப்புக்காக குமுளி போயிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். ஆரம்பத்தில் தயாரிப்பு நிர்வாகியாகத் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த கிருஷ்ணமூர்த்தி 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு புரொடக்‌ஷன் மேனேஜராகப் பணியாற்றினார். 'குழந்தை இயேசு' படத்தில் நடிகராக அறிமுகமானவர், 'நாயகன்' படத்தில் அனைவராலும் கவனிக்கப்பட்டார்.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

தனக்கு நெருக்கமானவர் என்பதால், 'நான் கடவுள்' படத்தில் கிருஷ்ணமூர்த்திக்குக் கனமான கதாபாத்திரம் கொடுத்து அழகு பார்த்தார் இயக்குநர் பாலா.

கிருஷ்ணமூர்த்தியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோட்டயம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, இன்று இரவு சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வரப்படும். மறைந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி, சினிமாவில் சண்டைப் பயிற்சியாளராக இருந்தவரின் மகள் மகேஸ்வரியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டவர். இவருக்கு பிரஷாந்த், கெளதம் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

"வடிவேலு சர்ச்சை, `புள்ளிராஜா' விளம்பரம், இழந்த சொத்துகள்..." - கிருஷ்ணமூர்த்தி #RIPKrishnamoorthy

கிருஷ்ணமூர்த்தியின் மரணம் குறித்து குமுளியில் படப்பிடிப்பில் இருந்துவரும் இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திடம் பேசினோம். ''நான் இயக்கிக்கொண்டிருக்கிற 'பேய் மாமா' படத்தில் ஹீரோவாக நடிக்கிற யோகி பாபுவுக்கு, அப்பா வேடத்துல கிருஷ்ணமூர்த்தி நடிச்சுக்கிட்டிருந்தார். குமுளியில் படப்பிடிப்பு நடப்பதால், படத்துல நடிக்கிற எல்லா நடிகர், நடிகைகளுக்கும் ஹோட்டலில் ரூம் போட்டிருந்தோம். அங்கே கிருஷ்ணமூர்த்திக்கும் தனி அறை கொடுத்திருந்தோம். கடந்த 7-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நெஞ்சு வலிப்பதாகக் கத்தியிருக்கார் கிருஷ்ணமூர்த்தி. அவருடைய சத்தத்தைக் கேட்டுப் பக்கத்து அறையில் இருந்தவங்க அவரைக் காரில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுபோயிருக்காங்க. ஆனா, மருத்துவமனைக்குப் போய் சேர்வதற்கு முன்னாடியே அவரோட பல்ஸ் நின்னு போயிடுச்சு'' என்று விளக்கினார்.

வடிவேலுவுடன் கிருஷ்ணமூர்த்தி நடித்த காமெடி காட்சிகள் பலவும் பிரபலமானவை. கிருஷ்ணமூர்த்தியின் திடீர் மரணம் குறித்து நடிகர் வடிவேலுவிடம் கேட்டோம். ''சத்தியமா எனக்கு கிருஷ்ணமூர்த்தி இறந்த விஷயமே தெரியாது! நீங்க இப்போ சொன்ன பிறகுதான் அவர் மாரடைப்பு வந்து காலமாகிட்டார்னு தெரியுது. ரொம்ப ரொம்ப நல்ல மனுஷன். கிருஷ்ணமூர்த்தியோட மனைவி, ரெண்டு பசங்க எல்லோரும் என் வீட்டுக்கு அடிக்கடி வந்து பேசிட்டுப்போவாங்க. அந்தளவுக்கு குடும்ப நண்பர் அவர்.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

இப்போ அவரோட குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியலியே! ஆரம்பத்துல உடம்புக்குக் கொஞ்சம் முடியாமதான் இருந்தார். இடையிலே நல்லா தேறி நடிச்சுக்கிட்டு இருந்தாரே... முதல்ல கிருஷ்ணமூர்த்தி புரொடக்‌ஷன் மேனேஜராக இருந்தார். நான்தான் முதன்முதலாக 'தவசி' படத்துல அவரை நடிக்க வெச்சேன். அதுக்கப்புறம் ஏகப்பட்ட படத்துல என்கூட நடிச்சிருக்கார். 

நாங்க ரெண்டுபேரும் நடிக்கப்போற காட்சியைப் பற்றி ஷூட்டிங்குக்கு முந்தைய நாள் என் ஆபீஸ்ல டிஸ்கஷன் செய்வோம். அப்போ எவ்வளவு காமெடியான கான்செப்ட் சொன்னாலும், லேசுல ரசிக்க மாட்டார். இன்னும் அதில் சுவாரஸ்யம் சேர்க்கணும்னு நினைப்பார். அதுக்கப்புறம் குபீர்னு தரையில உருண்டு உருண்டு சிரிப்பார்.

ஷூட்டிங்கின்போது மாரடைப்பு! - நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

சினிமா ஷூட்டிங்ல என்கூட சேர்ந்து நடிக்கும்போது, 'என்னால தாங்க முடியல வடிவேலு'ன்னு சொல்லி சிரிச்சுக்கிட்டே இருப்பார். இனிமே நான் நடிக்கப்போற படத்துல எல்லாம் அவருக்கும் ஒரு கேரக்டர் உருவாக்கி வெச்சிருக்கேனே... அது அவருக்கும் நல்லாவே தெரியுமே! இப்போ திடுதிப்புன்னு இப்படி ஆயிடுச்சே. முதல்ல 'என்னத்த' கண்ணையா, அப்புறம் சண்முக சுந்தரத்தாம்மாள், செல்லதுரை, இடையில 'அல்வா' வாசு. இதோ, இப்போ கிருஷ்ணமூர்த்தின்னு வரிசையா என் கூட்டணியில இருந்து ஒவ்வொருத்தரா இறந்துபோயிட்டே இருக்காங்க. என் கூட்டணியோட கூடாரம் காலியாகுதே!'' என்று வேதனையாகக் கூறினார் வடிவேலு.

அடுத்த கட்டுரைக்கு