
`சிக்ஸர்' படம் குறித்து நடிகர் வைபவ் அவருடைய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
``இயக்குநர் சாச்சியை எனக்கு ரொம்ப நாளா தெரியும். `சிக்ஸர்' படத்தோட ஒன்லைன் கேட்ட போதே சுவாரஸ்யமா இருந்தது. ஆறு மணிக்கு மேலே ஹீரோவுக்கு கண்ணு தெரியாது. இதுதான் படத்தோட ஒன்லைன். திரைக்கதையும் நல்லா வடிவமைச்சிருந்தார். படம் ஹிட் ஆகும்ங்கிற நம்பிக்கை இருந்தது. உடனே இந்தப் படத்துல கமிட் ஆகிட்டேன்'' என 'சிக்ஸர்' கதைக்குள் கமிட்டான கதையைச் சொல்லி, பேச ஆரம்பித்தார் நடிகர் வைபவ்.
காமெடி நடிகர் சதீஷ்கூட நடிச்ச அனுபவம்?

``நானும், அவரும் படம் முழுக்க டிராவல் ஆவோம். நல்ல கெமிஸ்ட்ரி ரெண்டு பேருக்கும் இருந்தது. டயலாக்ஸ் சீட் வெச்சுக்கிட்டு ரெண்டு பேரும் எப்படிப் பேசலாம்னு யோசிப்போம். நிறைய டிஸ்கஷன் எங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருந்தது. திரையில் பார்க்க எங்க கூட்டணி கண்டிப்பா புதுசா, நல்லா இருக்கும்.’’
`ஜிப்ரான்' மியூசிக் பற்றி?

``இந்தப் படத்தோட டெக்னிக்கல் டீம் ரொம்ப ஸ்ட்ராங்கான டீம். ஜிப்ரான் சார் ரொம்ப ஹாப்பியா `சிக்ஸர்' படத்துல கமிட்டானர். `இந்த மாதிரி படத்துலதான் நான் வேலை பார்க்கணும்னு ஆசைப்படுறேன். ஆனா, என்னைத் தேடி த்ரில்லர் மற்றும் சீரியஸான படமா வருதுனு சொன்னார். கமல் சார் படத்துக்கு மியூசிக் பண்ணுனவர் நம்ம படத்துக்கும் மியூசிக் பண்றதை நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டேன்.’’
சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ரெண்டு பேரும் உங்களுக்காக பாட்டு பாடியிருக்காங்களே?
’’சிவகார்த்திகேயனை விஜய் டி.வியிலிருந்து எனக்கு தெரியும். 'கோவா' படத்தோட புரொமோஷன் நேரத்துல சிவகார்த்திகேயன் எங்க நண்பரா ஆகிட்டார். அதுக்குப் பிறகு நானும், அவரும் பொது நிகழ்ச்சிகளில் பாத்துக்கிட்டா பேசுவோம். சிவாகிட்ட, `இந்தப் படத்துல ஒரு பாட்டு இருக்கு பாட முடியுமானு' கேட்டேன். உடனே ஓகே சொல்லிட்டார். சிவா பாட்டுப் பாடும் போது நானும்கூட இருந்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதே மாதிரி அனிருத் பாடுனதும் ரொம்ப சந்தோஷமான விஷயம்தான். என்னோட 'மேயாத மான்' படம் பார்த்துட்டு, பத்து முறை எனக்கு போன் பண்ணியிருப்பார். `ரொம்ப நல்லா பண்ணியிருந்தீங்க. உங்களோட ரசிகனா மாறிட்டேன்’னு சொன்னார். இவங்க ரெண்டு பேரும் பாடுனதுக்கு எங்களோட நட்புதான் காரணம்.’’
`மேயாதமான்' படத்துக்குப் பிறகு, நடிச்சா இனி `ஹீரோ'தான்னு ஏதாவது முடிவு பண்ணியிருக்கீங்களா?

``கண்டிப்பா இல்லை. என் வாழ்க்கையில் முக்கியமான படம் `மேயாதமான்'; அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனா, எனக்கு எப்போதுமே கேமியோ ரோல் பண்றதுல பெரிய விருப்பம் இருந்ததில்லை. என் நண்பர்கள் எடுக்கிற படமா இருக்கும் போது, கண்டிப்பா அதுல என்னோட பங்கு இருக்கும். ஏன்னா, அது எங்க குடும்ப படம் மாதிரி. தமன்னா நடிக்கிற `பெட்ரோமாக்ஸ்' படத்துல கேமியோ ரோல் பண்ணியிருக்கேன். ரொம்ப சின்ன காட்சிதான் தமன்னாகூட வருவேன்.’’
ஆர்.கே.நகர் ரிலீஸ் எப்போது?

``இன்னும் ரெண்டு மாசத்துல `ஆர்.கே.நகர்' படம் ரிலீஸாகிடும். வித்தியாசமான அனுபவத்தை ஆடியன்ஸுக்குக் கொடுக்கும்னு நம்புறேன். சினிமா இப்போ இருக்கிற சூழலில், படத்தோட ரிலீஸ் எப்போ வேணும்னாலும் மாறும். ஆனா, ரெண்டு முறை ரிலீஸ் தேதி அறிவித்த பிறகும், படத்தோட ரிலீஸ் தள்ளிப் போனது கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஆனா, இதுக்கு எதுவும் பண்ண முடியாது.’’
உங்க நண்பர்கள் வட்டாரத்தில் இயக்குநர்கள், ஹீரோக்கள் அதிகம். இதில் யாரிடமாவது உங்க படத்தின் கதையைப் பற்றி டிஸ்கஷன் பண்ணுவீங்களா?
’’நான் ஒரு கதை கேட்ட உடனே, என் நண்பர்களின் அபிப்ராயம் என்னவா இருக்குனு தெரிஞ்சிக்க கேட்பேன். எப்போதும் ஒரு படத்தை பண்ண வேண்டாம்னு அவங்க யாரும் சொன்னதில்லை. எந்தக் கதையா இருந்தாலும் 'நல்லாயிருக்கு மச்சி பண்ணு'னு உத்வேகம்தான் கொடுப்பாங்க.’’
'காட்டேரி' படம் பற்றி?
’’இது ஹாரர் கலந்த காமெடி படம். ஃபேன்டஸி டிராமானு சொல்லலாம். குழந்தைகளுக்காகவே எடுக்கப்பட்ட படம். படத்தோட ஷூட்டிங் ரொம்ப ஜாலியா போச்சு. வரலட்சுமி, சோனம் பாஜ்வா, ஆத்மிகானு படத்துல மூணு ஹீரோயின்ஸ் நடிச்சிருக்காங்க. ரெகுலர் சினிமா பார்மெட்டில் இந்தப் படம் இருக்காது. வேறொரு அனுபவத்தைதான் ஆடியன்ஸூக்குக் கொடுக்கும்.’’
வெங்கட்பிரபுகூட வெப்சீரிஸில் நடிக்கப் போற அனுபவம்?

’’பிரபு எப்போ எந்த கதை எழுதுனாலும் அவரோட மனசுல என்னோட பேர் வந்திரும்னு நினைக்குறேன். இப்போதைக்கு வெப் சீரிஸ் பேச்சுவார்த்தை லெவலில்தான் போயிட்டிருக்கு. அதிகாரபூர்வ அறிவிப்பு சீக்கிரம் வந்திரும். அடுத்ததா கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிற படத்துல ஹீரோவா நடிக்கிறேன். இப்போதைக்கு இதுதான் சொல்ல முடியும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க'' என்கிறார் வைபவ்.