
அரசியல் பற்றிய கேள்விக்கு நச்சுனு ஒரு பதில் தருகிறார் விஜய்..
வி கவிதாராஜேஸ்வரி, எசனை (பெரம்பலூர்).
* ஆரம்ப காலத்தில் ரொம்பச் சுமாரான அழகுடைய நீங்கள், எந்த நம்பிக்கையில் சினிமாத்துறையில் நுழைந்தீர்கள்.? (தற்போது அழகாகவே இருக்கிறீர்கள்)
ஒரு நடிகனாக வருவேன் என்ற நம்பிக்கையில்! அதுமட்டுமல்ல... கடவுள் ஒரு மனிதனுக்கு வெற்றிகளைக் கொடுக்கும்போது, அதற்குத் தகுந்தாற்போல எல்லாத் தகுதிகளையும் (அழகையும் சேர்த்து) கொடுத்துவிடுகிறார்!
எம்.வி. பாலமுருகன், கடலூர்-2
* நடிகர் அஜீத், 'கார்கிலுக்கு மனித வெடிகுண்டாகச் செல்லத் தயார்’ என்றார். நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்..?
கார்கிலுக்கு நான் நானாகவே செல்லத் தயார். ஏனென்றால், நானே ஒரு வெடிகுண்டுதானே!
'தளுகை’ எஸ்.கே வாலி, த.முருங்கப்பட்டி
* பள்ளி நாட்களில் சைட் அடித்த அனுபவம் உண்டா..?
நிறைய உண்டு. மீண்டும் பள்ளிக்கூடத்துக்கே ஓடிவிடலாம் என்றுகூட நினைக்கிறேன்.

தஞ்சை அருண்,
* விஜய்க்கு விஜய்யிடமே பிடித்த, பிடிக்காத விஷயங்கள் என்னென்ன..?
இரண்டுமே என் பிடிவாதம்.
கே.சஞ்சீவிபாரதி, அவ்வையார்பாளையம்,
* நீண்ட காலம் நண்பர்களாக இருந்து, திடீரெனக் காதலர்களாக மாறிவிடுவது சரியா..?
சரிதான் என்று நினைத்தால் எல்லாமே சரிதான். தப்பு என்று நினைத்தால் எல்லாமே தவறுதான்.
காசி இராஜகோபாலன், தெற்கு வாட்டாக்குடி.
* சிம்ரன் - ரம்பா ஒப்பிடுங்களேன், பார்ப்போம்.? (அட, என்னங்க பயம்)
சிம்ரன் நான்கெழுத்து - ரம்பா மூன்றெழுத்து. Simran from Mumbai-Ramba from Hyderabad! ஓரே ஒரு ஒற்றுமை... இருவருமே தமிழ் இல்லை!
‘கொடை’ த. காமராசு, நாயுடுபுரம்.
* இன்றைய அரசியலில் யாரைப் புத்திசாலியாகக் கருதுகிறீர்கள்.?
தேர்தலில் - எப்படியாவது ஜெயித்து விடவேண்டுமென்று எல்லா கொள்கைகளையும் 99 மறந்துவிட்டு, எப்படியாவது கூட்டு சேர்ந்து, எப்படியோ ஜெயித்துவிடுகிறார்களே... அவர்கள்தான் புத்திசாலிகள்.
புயல் ஹெச். அலி அப்பாஸ், பரங்கிப்பேட்டை
* ‘கனவுத் தொழிற்சாலை’ வாழ்க்கை இனிமையாக இருக்கிறதா..?
கனவு வேறு - வாழ்க்கை வேறு. இரண்டையும் ஒன்றாக்கினால் வாழ்க்கை இனிமையாக இருக்காது. நான் வெவ்வேறாக இருக்கிறேன்.
என். இளங்கோவன், தலைஞாயிறு.
* விஜய் - அஜீத் - பிரசாந்த் காம்பினேஷன் எப்படி இருக்கும்...? உடனே ஒரு கதை சொல்லுங்கள் - ஒரு நல்ல இயக்குநரைப் பிடியுங்கள். நானே தயாரித்து, நடிக்கத் தயார்.
எஸ். சண்முகராஜ், சிதம்பரம்.
* காதலை முதலில் வெளியிட்டது நீங்களா, அவங்களா..?
இருவருமே இல்லை. என் அம்மா!
ச. செந்தில், மணலூர்பேட்டை
* உங்களை ஒரே ஒரு நாள் சென்னை மேயராக நியமித்தால், உங்களின் முதல் பணி என்னவாக இருக்கும்.?
சென்னையைச் சிங்கப்பூராக மாற்ற முயற்சி செய்வேன்.
ஏ.கே. இராமன், திருச்செங்கோடு.
* அரசியல் பக்கம் தலை வைக்காமல், திரையுலகிலேயே புகழ்பெற விரும்புகிறீர்களா? அல்லது அரசியல் சாயம் பூசி, பெயரைக் கெடுத்துக்கொள்ள விரும்புகிறீர்களா..?
உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறதே. என் பெயரைக் கெடுத்துக் கொள்ளமாட்டேன்.
பொன். வீரபாண்டியன், நெய்வேலி-3.
* மனசுக்குள் போட்டுப் புதைத்து வைத்திருக்கும் ஆசைகள் என்று ஏதாவது உண்டா..?
அந்த ஆசைகள் மனதுக்குள்ளேயே புதைந்து போகட்டும்.
- ஜூனியர் விகடன் டீம்
(18.08.1999 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழிலிருந்து...)