Election bannerElection banner
Published:Updated:

பார்ட்டிக்கு வந்த விஜய்... சர்ப்ரைஸ் தரப்போகும் இயக்குநர்!

விஜய்
விஜய்

பல மாதங்கள் கழித்து ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்டிருக்கிறார் நடிகர் விஜய் !

ஏப்ரல் 9... 'மாஸ்டர்' படம் ரிலீஸ் என விஜய் உட்பட எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால், அதற்குள் லாக்டெளன் வந்து எல்லாவற்றையும் திருப்பிப்போட்டது. 2020 தீபாவளி சமயத்தில் 'மாஸ்டர்' வெளியாகி விஜய்யின் அடுத்தப் படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் இருந்திருக்க வேண்டியது. ஆனால், 'மாஸ்டர்' டீசரையே அன்றுதான் பார்க்க முடிந்தது. இந்த இடைப்பட்ட மாதங்களில் நடிகர் விஜய்யின் முக்கிய நடவடிக்கைகள் என்ன, அடுத்தப் படம் குறித்த குழப்பங்கள், அப்டேட்கள் என்ன?

'மாஸ்டர்' திரைப்படத்தில் தனக்கான பகுதியை முடித்துவிட்டு விஜய் பதிவிட்ட நெய்வேலி செல்ஃபிதான் விஜய் பற்றி கடைசியாக வெளியான அப்டேட். வழக்கமாக ஒரு படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் வெளிநாடு ட்ரிப் செல்வது வழக்கம். ஆனால், இந்தமுறை செல்லவில்லை. அதற்கு தகுந்தவாறு லாக்டெளனும் வந்துவிட்டது. ஆதலால், ஷூட்டிங் முடிந்ததிலிருந்து நடிகர் விஜய் தனது அலுவலகம் தாண்டி வெளியே எங்கேயும் வரவில்லை. வெளி நபர்கள் யாரையும் அவர் சந்திக்கவுமில்லை. சில நாள்களுக்கு முன்பு, பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்
'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்

லாக்டெளனில் 'மாஸ்டர்' திரைப்படத்தின் தயாரிப்பாளரும் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோவை மட்டும் சந்தித்து வந்தார். பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாவதாக இருந்த சமயத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை ஒருமுறை சந்தித்திருக்கிறார். அதன்பின், நடிகர் மகேஷ்பாபு கிரீன் இந்தியா சேலஞ்சிற்கு விஜய்யை நாமினேட் செய்தபோது, கையில் மரக்கன்று வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் அந்த வார வைரல் மெட்டீரியலானது.

இதற்கு பிறகு, தாமரைப்பாக்கத்தில் நடைபெற்ற மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார். சமீபமாக, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலரை நேரில் சந்தித்து வாழ்த்துகூறியதோடு அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்தார். 'மாஸ்டர்' ஸ்டைலில் அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம்தான் டாக் ஆஃப் சோஷியல் மீடியாவாக இருந்தது.

விஜய்
விஜய்

இதற்கிடையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் குறித்த சில சலசலப்புகள் நிகழ்ந்தன. இந்நிலையில், தனது காஸ்ட்யூம் டிசைனர் பல்லவி சிங்கின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூன்று மணி நேரம் இருந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் நெல்சனும் கலந்துகொண்டார். ஏற்கெனவே, விஜய்யின் 65-வது படத்தை இயக்க நெல்சனுக்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் இருவரும் இருந்ததால் அந்தத் தகவல் உறுதியென சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, இயக்குநர் நெல்சன் சிவகார்த்திகேயனை இயக்கி வரும் 'டாக்டர்' படத்திற்கும் பல்லவி சிங்தான் காஸ்ட்யூம் டிசைனர் என்பது தெரியவந்தது. தவிர, மூன்று இயக்குநர்களின் பெயர்கள் அந்த லிஸ்ட்டில் இருக்கின்றன. ஆனால், விஜய் இன்னும் யாரையும் டிக் செய்யவில்லை என்கிறார்கள். நெல்சன், எஸ்.ஜே.சூர்யா என இரண்டு இயக்குநர்களின் பெயர்கள் தெரியும். அந்த மூன்றாவது இயக்குநர் யார் என்பதுதான் சஸ்பென்ஸாக இருக்கிறது. அதற்குள் விஜய்க்கு ஜோடி தீபிகா படுகோன், வில்லன் பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாம் இந்தப் படத்தில் இருக்கின்றனர் என்ற தகவலெல்லாம் வெளியாகின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு