Published:Updated:

`தமிழகம் முதல் தெலங்கானா வரை..!’ - நடிகர் விஜய் 1.3 கோடி ரூபாய் நிதியுதவி #Corona

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

தனது ரசிகர் மன்றம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரண நிதி வழங்கவும் ஒரு குறிப்பிட்ட தொகையை விஜய் ஒதுக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். நாட்டு மக்கள் அனைவரும் மிகப்பெரிய பொருளாதார சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில் மத்திய அரசும் மாநில அரசுகளும் நிவாரணத்துக்காக நன்கொடை அளிக்க விரும்புவர்கள் அளிக்கலாம் என மக்களிடம் கோரிக்கை வைத்தனர்.

நரேந்திர மோடி - எடப்பாடி பழனிசாமி
நரேந்திர மோடி - எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசு சார்பில் PMCARES எனப் புதிதாகக் கணக்கு தொடங்கப்பட்டு அதற்கு மக்கள் நிதி அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. பல தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், சினிமா விளையாட்டு பிரபலங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை தங்களால் முடிந்த தொகையை இந்தக் கணக்குகளில் நன்கொடையாக அளித்து வந்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை: நடிகர் அஜித் 1.25 கோடி ரூபாய் நிதியுதவி #Corona #NowAtVikatan

தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் பலரும் தங்களால் முடிந்த தொகையை பிரதமர் நிவாரண நிதிக்கும் முதல்வரின் நிவாரண நிதிக்கும், திரைப்படத்துறையின் ஃபெஃப்சி தொழிலாளார் அமைப்புக்கும் வழங்கி வந்தனர். கடந்த 7-ம் தேதி, நடிகர் அஜித் குமார், பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும் முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், ஃபெஃப்சி அமைப்புக்கு 25 லட்சம் ரூபாயும் என 1.25 கோடி ரூபாய் வழங்கினார்.

விஜய்
விஜய்

இந்த நிலையில் நடிகர் விஜய்யும் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக நிவாரண நிதி அறிவித்திருக்கிறார். அதில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கியுள்ள நடிகர் விஜய், ஃபெஃப்சி அமைப்புக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

மேலும், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சமும், கர்நாடக, ஆந்திர, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில முதல்வர் நிவாரண நிதிக்குத் தலா 5 லட்சம் ரூபாய் என மொத்தம் 1.3 கோடி ரூபாய் வழங்குகிறார். இது தவிர்த்து தனது ரசிகர் மன்றம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரண நிதி வழங்கவும் ஒரு குறிப்பிட்ட தொகையை விஜய் ஒதுக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு