Published:Updated:

"பிளாட்பார வாழ்க்கை, எம்.ஜி.ஆர் சென்டிமென்ட், வடிவேலுகூட நடிக்கணும்!" - விஜய் கணேஷ்

வே.கிருஷ்ணவேணி

ஹோட்டலில் வேலை பார்த்து சினிமா வாய்ப்பு தேடத் தொடங்கியதிலிருந்து, பல போராட்டங்களுக்குப் பிறகு சினிமாவில் காமெடியனான கதையைச் சொல்கிறார் விஜய் கணேஷ்.

விஜய் கணேஷ்
விஜய் கணேஷ்

'ஜகஜால கில்லாடி', 'நேத்ரா' படங்களில் நடித்த விஜய் கணேஷ் தற்போது 'வெண்ணிலா கபடிகுழு 2' ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார். 'சென்னை வெயில் செம்ம சூடு', 'அம்மிக்கல்லை கொத்தத் தெரியாதவன் தலைபோல அல்லவா இருக்கிறது என் கட்சிகாரரின் தலை', 'குளிர் ஜூரத்தில் கும்மிட்டாய்ங்க' போன்ற வசனங்கள் மூலமாக நமக்குப் பரிச்சயமானவர் விஜய் கணேஷ்.

''இப்போவரைக்கும் சினிமாதான் எனக்கு சோறு போட்டுக்கிட்டு இருக்கு. ஒருவேளை சினிமாவுக்கு வரலைன்னா ஊர்ல விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்திருப்பேன்'' தலையைத் தடவியவாறே காமெடியனாக வலம் வரத் தொடங்கிய கதையைத் தொடங்குகிறார் விஜய் கணேஷ்.

''நான் ஐந்தாம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேன். பாஸா, ஃபெயிலான்னுகூட எனக்குத் தெரியாது. ரொம்ப வருடம் கழிச்சு அந்தப் பள்ளிக்கூடத்தைத் தேடிப்போனப்போதான், அந்த ஸ்கூலே இப்போ இல்லைங்கிற விஷயம் தெரிஞ்சது. அந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்குப் பக்கத்துல இருக்கிற மணமேல்குடி கிராமம். அப்போ கிராமத்து திருவிழாவுல ரதி - மன்மதன் வேஷம் போடுவாங்க.

விஜய் கணேஷ்
விஜய் கணேஷ்

நான்தான் ரதி வேஷம் போடுவேன். படம் பார்க்க தியேட்டருக்குப் போகணும்னா, 48 கிலோ மீட்டர் தாண்டிப் போகணும். அப்படித்தான், 'பட்டாக்கத்தி பைரவன்', 'அன்புக்கு நான் அடிமை', 'ஒருதலை ராகம்' படங்களையெல்லாம் பார்த்தேன். ஒருமுறை படம் பார்த்துட்டு ஊருக்குத் திரும்ப பஸ் கிடைக்கல. பக்கத்துல இருந்த நீலா தியேட்டர்ல 'ஒருதலை ராகம்' ஓடிக்கிட்டு இருக்கவே, அதை நைட் ஷோ பார்த்து அந்த இரவைக் கழித்தேன்.

அந்தப் படத்தில் நடித்த ரவீந்தர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். பிறகு, சினிமா ஆசையில வீட்டுக்குத் தெரியாம சென்னைக்கு ஓடியாந்துட்டேன். எனக்கும் கீழே ஏழெட்டு பேர் (உடன் பிறந்தவர்கள்) இருக்காங்க. எதையும் யோசிக்காம வந்துட்டேன். திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட்ல இறங்குனப்போ, எனக்கு 17 வயசு. அங்கே எங்க ஊர்க்காரர் ஒருவர் ஹோட்டல் வச்சிருந்தார்.

அந்த ஹோட்டல்ல வேலை பார்த்துட்டு, பக்கத்துல இருந்த பிளாட்பாரத்துல படுத்துத் தூங்கிக்கிட்டு இருந்தேன். இப்படியே 3 வருடம் ஓடிடுச்சு. ஒருவர் என்கூடவே பிளாட்பாரத்தில் படுத்துக்கிட்டு கதை எழுதிக்கிட்டிருந்தார். அவருடன் பழகி, ஒரு நாடகத்துல நடிச்சேன். அந்த நாடகம்தான் எனக்கு சினிமா வாய்ப்பு கொடுத்துச்சு'' என்றவர், தொடர்ந்தார்.

''1985-லிருந்து சினிமாவுல நடிக்கிறேன். வி.சேகர்தான் 'உடற்பயிற்சி பண்ணு; உன்னை வில்லன் ஆக்கிடுறேன்'னு சொன்னார். அந்த வாய்ப்பு கிடைக்கல. ஹீரோவும் ஆகமுடியல; வில்லனும் ஆகமுடியல. அந்த நேரத்துலதான், கார்த்திக் சார் நடிச்ச 'வெளிச்சம்' படத்துல ஸ்டூடென்ட்டா நடிச்சேன்.

விஜய் கணேஷ்
விஜய் கணேஷ்

அந்தப் படத்துக்குப் 10 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. ஊருக்குப் போனா, 'அம்மணி அம்மாள் மகன் சினிமாவுல நடிக்கிறான்'னு ஊர் முழுக்கப் பரபரப்பா பேசுனாங்க. அதுக்குப் பிறகு, 'இணைந்த கைகள்' படத்தில் நாசருக்கு உதவியாளரா நடிச்சேன். ரயில்வே ஸ்டேஷன்ல க்ளைமாக்ஸ் எடுத்தாங்க. அப்போ, காட்சிப்படி என்னை சுட்டுடுவாங்க. இந்தப் படத்தை எங்க ஊர் தியேட்டர்ல எங்க அம்மாவும் நானும் பார்த்தோம். க்ளைமாக்ஸ் பார்த்து, 'ஐயோ நான் பெத்த மகனே'னு அலறிட்டாங்க எங்க அம்மா. தியேட்டரே அதிர்ச்சியாகிடுச்சு! பிறகு, 'இதயவாசல்', 'மரிக்கொழுந்து' இப்படிப் பல படங்களில் நடிச்சேன்.

1995-ல் எனக்குக் கல்யாணம் நடந்தது. இடையில பட வாய்ப்புகள் கிடைக்காததுனால, ஒய்.ஜி.மகேந்திரன் சீரியல்களுக்கு மேனேஜரா வேலை பார்த்தேன். அப்போது, என் மீசை பெருசா இருக்குனு 'ஒரு காமெடி கேரக்டருக்கு உன் மீசையை எடுக்கணும்; போய் எடுத்துட்டு வா'னு சொன்னார் ஒய்.ஜி 'சார், தலையில முடி கொட்டிடுச்சு. இதையும் எடுக்கச் சொன்னா எப்படி'ன்னு கேட்டேன். 'இந்தக் காட்சியில நடிக்க வேற ஆளே இல்லை. போய் எடுத்துட்டு வா'னு சொல்லிட்டார்.

விஜய் கணேஷ்
விஜய் கணேஷ்

மனசே இல்லாம மீசையை எடுத்துட்டு, அவர் முன்னாடி நின்னேன். கொஞ்சநேரம் சிரிச்சுக்கிட்டே இருந்தவர். 'உனக்குக் காமெடி முகம்டா! நீ ஏன் மீசை வச்சு எல்லோரையும் மிரட்டிக்கிட்டு இருந்த?'ன்னு சொல்லிட்டு, நடிக்க வச்சார். அந்தக் கேரக்டர் நல்ல ரீச் ஆச்சு. வீட்டுக்குப் போனா பொண்டாட்டி திட்டுவாளேனு வாயைப் பொத்திக்கிட்டே போறேன். 'என்னாச்சுங்க. அடி ஏதும் பட்டுடுச்சா'னு கேட்கிறாங்க. மீசை இல்லாததைப் பார்த்து, கன்னா பின்னானு திட்டு விழுந்தது. இப்போ வரை!" எனச் சொல்லி சிரித்துக் களைத்தவர், காமெடியனான கதையைத் தொடர்ந்தார்.

''அப்போ வடிவேலு, விவேக் ரெண்டுபேரும் பீக்ல இருந்த நேரம். விவேக்கூட நடிக்க நினைச்சேன். விவேக் செம்ம கலரு. நான் அதுக்கு நேரெதிரா இருப்பேன். அதனால, வடிவேலுகூட சேர்ந்தேன். 'புத்தம்புது பூவே' படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். எழில் இயக்கிய 'ராஜா' படத்தில் நடிச்சேன். இப்படி வடிவேலுகூட சேர்ந்து இதுவரை 62 படங்கள், ஒட்டுமொத்தமா 300 படங்களுக்கும்மேல் நடிச்சுட்டேன். விவேக்குடன் நடிக்கணும்ங்கிற ஆசையும், 'காதல் சடுகுடு', 'சந்தோஷ் சுப்ரமணியம்' என நான்கைந்து படங்கள் மூலமாக நிறைவேறிடுச்சு.

விஜய் கணேஷ்
விஜய் கணேஷ்

இன்னொரு விஷயம் தெரியுமா, என் ஒரிஜினல் பெயர் கணேசன். ஹீரோ ஆசையிலதான் 'விஜய்'ங்கிற பெயரைச் சேர்த்துக்கிட்டேன். 'புத்தம்புது பூவே' படத்தில் வடிவேலுவுடன் நடிக்கும்போது, ஷூட்டிங் ஸ்பாட்டே கதினு கிடப்பேன். வடிவேலு வரும்போதெல்லாம், வணக்கம் வைப்பேன். என்னைக் கவனித்த அவர், ஒருநாள் நான் ஓரமா உட்கார்ந்திருந்ததைப் பார்த்துக் கூப்பிட்டார்.

'தம்பி, யாரு நீ'னு கேட்டார். 'விஜய் கணேஷ்'னு சொன்னேன். 'விஜய்லாம் இல்ல; வெறும் கணேஷ்தான் உன் பேரு'னு சொல்லி, 'இந்த சீனை நடி'ன்னு சொன்னார். அதை ஒரே டேக்ல நடிச்சுக் காட்டினேன். அந்தப் படத்துக்குப் பிறகு, உடனே என்னை 'ராஜா' படத்திலும் நடிக்க வச்சார். 'மணிகண்டா', 'எல்லாம் அவன் செயல்', 'மதுர' இப்படிப் பல படங்களில் என்னைச் சேர்த்துக்கிட்டார்.

விஜய் கணேஷ்
விஜய் கணேஷ்

'அன்பு' படத்துக்கு எனக்கு மேக்கப் போடாம, 'தலையும் முகமும் ஒரேமாதிரி இருக்கு. இதுல எங்கே மேக்கப் போடுறது'னு கேட்கிறாங்னு வடிவேலுகிட்ட சொன்னேன். அவர் விழுந்து விழுந்து சிரிச்சார். அந்தக் காமெடியைப் படத்திலும் வச்சோம். 'இளசு புதுசு ரவுசு'ங்கிற படத்தில் பாம்பு சீன் ஒண்ணு வரும். பாம்பாட்டிகிட்ட 'வாயைத் தச்சாச்சா'னு கேட்டேன். 'நல்லா தச்சாச்சுண்ணே'னு சொன்னவன், 'நம்பலைன்னா, பாருங்க'னு பாம்பை எடுத்துக் காட்ட... அது அவனைக் கொத்திடுச்சு. 'பாத்தீங்களாண்ணே'ன்னு அப்படியே சாஞ்சுட்டான்.

வடிவேலு பேக்கப் பண்ணிட்டு ஒரே ஓட்டமா ஓடிட்டார். மதியத்துக்கு மேலதான் வந்தார். பிறகு, பாம்பு கடிச்சவனை ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம். பிரச்னை என்னன்னா, வாயைத் தச்ச பாம்பை வீட்டுல வச்சுட்டு, தைக்காத பாம்பை ஸ்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கான். வடிவேலுகூட கடைசியா 'மம்பட்டியான்' படத்தில் நடிச்சேன். மறுபடியும் அவருடன் இணைந்து நடிக்க ஆசையா இருக்கு" என்பவர், தனது குடும்பம் பற்றிச் சொன்னார்.

''என் மனைவி பெயர் ராஜேஸ்வரி. எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. சினிமாவுக்கு வரலைன்னா இந்நேரம் மாடு ஓட்டிக்கிட்டு, விவசாயம் பண்ணிட்டுத் திரிஞ்சிருப்பேன். எனக்கு எம்.ஜி.ஆர்னா அவ்வளவு பிடிக்கும். எம்.ஜி.ஆர் எப்போவுமே சாப்பிடுற கையில வாட்ச் கட்டியிருப்பார். அதனால, நானும் இப்போவரை அப்படித்தான் வாட்ச் கட்டுறேன்" என்று முடித்தார் விஜய் கணேஷ்.