
சமையலைப் பிடிக்கிற, ரசித்துச் செய்கிற சாதாரணமானவங்கதான் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிறாங்க. நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டுன்னு கலகலப்பா இருக்கும்
பெங்களூரு பிடதி, இப்போது விஜய் சேதுபதி அடிக்கடி வந்து போகும் இடமாகிவிட்டது. கைலாசா அதிபர் ஆசிரமம் இருக்குமிடத்தில் விஜய்சேதுபதிக்கு என்ன வேலை என்கிறீர்களா? வரும் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘மாஸ்டர் செஃப்’ தமிழ் ரியாலிட்டி ஷோவின் ஷூட்டிங் இங்கேதான் நடக்கிறது. பிடதியிலுள்ள இன்னோவேடிஜ் பிலிம் சிட்டியில் மாஸ்டர் செஃப்பின் ஷூட்டிங் செட்டை செய்தியாளர்களுக்குச் சுற்றிக் காட்டிய விஜய் சேதுபதியிடம் கேள்விகளை முன்வைத்தேன்.
``பிஸியான சினிமா ஷெட்யூலுக்கு இடையில் ரியாலிட்டி ஷோவுக்கு எப்படி கால்ஷீட் தர்றீங்க?’’
“முதல்ல தயங்கினது நிஜம்தான். பிறகு புரொடியூசர் சரவண பிரசாத் வந்து என்னிடம் பேசினார். அவருடைய அப்ரோச் பிடிச்சிருந்தது. எப்பவுமே மனசுக்குப் பிடிக்கலைன்னா கோடி ரூபாய் தந்தால்கூட வேலை செய்ய மாட்டேன். ஒரு முக்கியமான விஷயம், இந்த ஷோ பத்தி முதன்முதலாக எனக்குச் சொன்னது விக்னேஷ் சிவன். கால்ஷீட் எப்படித் தர்றேன்கிறது பத்தியெல்லாம் பெருசா யோசிக்கத் தேவையில்லை. ஒரு ஃப்ளோவுல என்னுடைய வேலை அது பாட்டுக்குப் போயிட்டிருக்கு. நான் எதையும் திட்டமிடறதில்லை.”

``சினிமாவில் உச்சத்தில் இருக்கிறபோதே தொடர்ந்து டிவி ஷோ பண்றீங்களே..?’’
“அதனாலென்ன, மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் மீடியா டி.வி. அதில் நிகழ்ச்சி செய்வது தப்பில்லையே?”
``மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி எப்படி இருக்கும்?’’
“சமையலைப் பிடிக்கிற, ரசித்துச் செய்கிற சாதாரணமானவங்கதான் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிறாங்க. நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டுன்னு கலகலப்பா இருக்கும். ஆனால் சமையல்..? அது சீரியஸா இருக்கணும். ஷோ முடியறப்ப டைட்டில் வாங்குறவங்களுக்கு மட்டுமல்ல, கலந்துகிட்ட எல்லோருக்குமே ஒரு புது அனுபவம் கிடைக்கும்னு நம்புறேன். ஷோ செட்டே எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. குட்டிக் குட்டி சில்வர் பாத்திரங்களைக் கொண்டு செய்யப்பட்ட அழகான ஒரு குதிரை சிலை, பாக்குமட்டை மரம் செட்டுகளாலான லைட்டிங் செட்னு வித்தியாசமாகவே அமைச்சிருக்காங்க. எல்லாருக்கும் பிடிக்கும்.”
``பிக்பாஸில் கமல் அரசியல் பேசுவார். நீங்க இந்த ஷோவின் இடையில் உங்களது சினிமா அனுபவங்கள் அல்லது சமையல் தவிர்த்து வேறு எதையும் பேசுவீர்களா?’’
“டைமிங்கா வந்தா பேசுவதில் பிரச்னையில்லை. ஆனா வலியப்போய் எதையாவது திணிச்சோம்னா அது துருத்திட்டு நிற்கும்.”
``ஒரு காலத்தில் நீங்க சென்னையில் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் வேலை பார்த்தீங்கன்னு சொன்னதா ஞாபகம்...’’
“ஆமாம். கோடம்பாக்கத்துல ஒரு ஆறு மாசம் வேலை பார்த்தேன். சாயங்காலம் ஆறு மணியிலிருந்து நைட் 12 மணி வரை வேலை. கலெக்சன் 4,000 ரூபாய் வரை வரும். சாப்பாடு பத்திப் பேசினா என் வாழ்க்கையில நிறைய பேசலாம். அஞ்சு வயசு வரை வீட்டுல வறுமை. பள்ளியில் சத்துணவு சாப்பிட்டிருக்கேன். சில நாள் ராத்திரி சாப்பிடாமல் தூங்கியிருக்கேன். துபாய்ல இருந்தபோது வீட்டுக்குப் பணம் அனுப்பணும்னு கணக்குப் பார்த்து சாப்பிட்டிருக்கேன். அதனால இப்ப சாப்பாட்டை யாராவது வேஸ்ட் செய்றதைப் பார்த்தா கோபம் வருது.”

``ஷூட்டிங் ஏன் பெங்களூரில் நடக்குது?’’
“தயாரிப்பாளர் பெங்களூரில் இருக்கிறார். ஷூட்டிங் செட்டுக்கு வந்து போவது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. கர்நாடகாவுக்கு 98-ல் முதல் தடவை வந்து மைசூரை சுத்திப் பார்த்துட்டுப் போனேன். அடுத்து பத்து வருஷம் கழிச்சு ஒரு கன்னடப் படத்தில் வில்லனுக்கு மகனா கமிட்டாகி நடிக்க வந்தேன். அந்தக் கன்னட டயலாக்கைப் பேசிப் பேசி ஒரு மாசம் ட்ரெய்னிங் எடுத்தேன். இப்பவரை ஞாபகம் இருக்கு. அந்தப் படம் முடிச்சுட்டுக் கிளம்பினேன். அந்த யூனிட் மேனேஜர் வினோத், `கன்னட சினிமாவில் இருந்து கரியரைத் தொடங்கியவர் பெரிய லெவல்ல வருவாங்க’ன்னு என்கிட்ட சொன்னார். பொதுவா இந்த மாதிரி சென்டிமென்டை நம்பற ஆள் இல்லை நான். இருந்தாலும் அவர் சொன்னது மறக்கலை. அதேபோல முதல் தடவை வந்தப்ப கப்பன் பார்க்கையும் சுத்திப் பார்த்தேன். ஜோடி ஜோடியா அதுல உட்கார்ந்திருந்தவங்களைப் பார்த்து காண்டு ஆனேனான்னு ஞாபகம் இல்லை. அதே கப்பன் பார்க்கை இப்ப நான் தங்கியிருக்கிற ஹோட்டல இருந்து ஏரியல் வியூவில் பார்க்குறேன். முதல் தடவை பார்த்தப்ப நான் இப்படிப் பார்ப்பேன்னு நினைச்சாவது பார்த்திருப்பேனா? நினைக்க செமையா இருக்கு.”
`ரிலீஸுக்கு ரெடியா நிறைய படங்கள். பாலிவுட் வரை போயிட்டீங்க. குடும்பத்துக்கு எப்படி நேரம் ஒதுக்கறீங்க?’’
“குடும்பத்தை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். ரொம்பநாள் வெளியிலேயே இருக்கவேண்டியிருந்தா, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவங்களை வரவழைச்சுடுவேன். பொண்டாட்டி, புள்ளையைப் பார்க்காம பேசாம என்னால இருக்க முடியாது.”