Published:Updated:

``லாக்டெளனால வீட்ல சண்டை அதிகமாகிடுச்சு... ஆனா, ஒரு விஷயம் மட்டும் குறைஞ்சிடுச்சு!'' - விஜயலட்சுமி

ஃபெரோஸ் - விஜயலட்சுமி
ஃபெரோஸ் - விஜயலட்சுமி

படங்கள், சீரியல், பிக் பாஸ் என அடுத்தடுத்து தன்னை பிஸியாக வைத்துக்கொண்டிருந்த நடிகை விஜயலட்சுமி, தற்போது பிஸியாக இருப்பது அவரது யூடியூப் சேனலில்தான்.

தன் கணவரும் `பண்டிகை’ படத்தின் இயக்குநருமான ஃபெரோஸின் உதவியோடு யூடியூப் சேனலை தொடங்கினாலும், தற்போது `ஒன் வுமன் ஆர்மி’யாக அந்த சேனலை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரையும் சந்தித்தோம்.

``யூடியூப் சேனல் ஐடியா; அதில் வர வீடியோக்களோட கான்செப்ட், அதில் வொர்க் பண்றது எல்லாமே விஜிதான். அவங்க வொர்க் பண்ணும்போது பக்கத்துல நான் இருந்தால், எதாவது உதவி பண்ணுவேன். அதுமட்டும்தான் என் வேலை’’ எனத் தன்னடக்கத்தோடு ஆரம்பித்த ஃபெரோஸ், ``விஜி, எங்க பையன் நிலன், நான்னு நாங்க மூணு பேரும் ஒரே வீட்டுக்குள்ள எத்தனை நாள் வேணும்னாலும் இருப்போம். நாங்க நார்மல் நாள்களிலேயே அதிகமா வெளியில போறது கிடையாது. தியேட்டருக்குப் போய் படம் பார்ப்போம்; இப்போ வீட்டிலேயே படம் பார்க்குறோம்.

ஃபெரோஸ் - விஜயலட்சுமி
ஃபெரோஸ் - விஜயலட்சுமி

வீட்டிலேயே வொர்க் அவுட் பண்றோம். சேர்ந்து சமையல் பண்றோம். நானே யூடியூப் பார்த்து தனியா சமைக்கவும் கத்துக்கிட்டேன்’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, `முக்கியமான விஷயத்தை விட்டுட்டீயேப்பா’ என்றபடியே ஃபெரோஸை இடைமறித்த விஜயலட்சுமி, ``இந்த லாக்டெளன்ல சண்டைகள் அதிகமாகியிருக்குனு சொல்லலாம். நாங்க அதிகமா சண்டை போட்டதே கிடையாது. ஆனால், இந்த 5 மாத லாக்டெளனில் அதிகமா சண்டை போட்டுக்கிட்டோம். ஆனால், அதுவும் ஜாலியாத்தான் இருந்துச்சு’’ எனத் தங்களது லாக்டெளன் நாள்களை விவரித்தவர்களிடம், ``இந்த லாக்டெளன் உங்களுக்கு கத்துக்கொடுத்த பாடம் என்ன?'' என்று ஃபெரோஸிடம் கேட்டோம்.

``இந்த லாக்டெளன்ல நான் கத்துக்கிட்ட மிகப் பெரிய பாடம் என்னன்னா, நாங்க வாழ்றதுக்கு நிறைய பொருள்கள் தேவையில்லை; இருக்கிறதை வெச்சே சந்தோஷமா வாழலாம்கிறதுதான். நாங்க தேவையில்லாமல் நிறைய பொருள்களை வாங்கிட்டு இருந்திருக்கோம். இந்த லாக்டெளன் சமயத்தில் அது எதுவுமே வாங்க முடியாமல் போகிடுச்சு. இருந்தாலும் நாங்க சந்தோஷமா வாழ்றோம்னு தெரிஞ்சுக்கிட்டேன். இனிமேல் இப்படியே வாழலாம்கிற ஆசையும் வந்திருக்கு'' என ஃபெரோஸ் சொன்னதும், `இவர் எதைச் சொல்றார்னு நான் உங்களுக்கு தெளிவா சொல்றேன், மக்களே’ என விஜயலட்சுமி பேச ஆரம்பித்தார்.

விஜயலட்சுமி - ஃபெரோஸ் - நிலன்
விஜயலட்சுமி - ஃபெரோஸ் - நிலன்

``ஃபெரோஸால ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் பண்ணி சாப்பிடாம இருக்கவே முடியாது. அடிக்கடி எதாவது ஆர்டர் பண்ணி சாப்பிட்டுட்டு இருப்பார். ஆனால், இந்த லாக்டெளன் ஆரம்பத்தில் அந்த வசதி எதுவும் இல்லாததால, வீட்டிலேயே சமைச்சு, சாப்பிட்டு பழகிட்டார். இப்போ ஃபெரோஸுக்கு ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் போட மனசே வர மாட்டேங்குது’’ என விஜயலட்சுமி சொன்னதும், ``ஆமாங்க. நான் பெரிய ஃபுட்டி. லாக்டெளனுக்கு முன்னாடி அதிகமா ஆர்டர் பண்ணி சாப்பிட்டிருக்கேன். இந்த லாக்டெளன்ல வீட்டு சாப்பாடு அதிகமா சாப்பிட்டு, சாப்பிட்டு விஜி சாப்பாட்டுக்கு அடிமையாகிட்டேன். அடுத்து, எனக்கு ஆன்லைனில் ஆர்டர் போடவே தோணலை. நான் சாப்பாடு விஷயத்துக்காக மட்டும் சொல்லலை. வெளிய ஷாப்பிங் போறது; தேவையில்லாத பொருள்களை வாங்குறதுனு எல்லாமே இந்தச் சமயத்தில் குறைஞ்சிருக்கு. இதையே இனிமேலும் ஃபாலோ பண்ணலாம்னு இருக்கேன்’’ என்ற ஃபெரோஸிடம், ``உங்களோட முதல் படம் ரிலீஸாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் இரண்டாவது படத்தை ஆரம்பிக்காதது ஏன்?'’ எனக் கேட்டோம்.

`` `பண்டிகை’ படத்தை முடிச்சவுடனே அடுத்த படத்தை ஆரம்பிக்கிறதுக்கு என்கிட்ட கதை இல்லை. எந்த மாதிரியான ஒரு கதையை எழுதலாம்கிற பிளானிங்லேயே ஆறு மாசம் ஓடிடுச்சு. இப்போ ரெண்டு கதைகள் ரெடியா இருக்கு. அதுல ஒரு கதையை ஓடிடி-யில வெப் சீரிஸாவும் இன்னொரு கதையை படமாகவும் எடுக்கப்போறேன். முதலில் வெப் சீரிஸுக்கான ஷூட்டிங் போகலாம்னு இருக்கோம். அதுக்காக லொகேஷன் பார்க்க ஆரம்பிக்கணும். மலையும் மலை சார்ந்த இடமும்தான் இந்த வெப் சீரிஸுக்கான கதையும் களமும்.

Pandigai movie making still
Pandigai movie making still

அதுக்கான வேலைகளை சீக்கிரம் ஆரம்பிக்கிறதுக்கு ரெடியா இருக்கோம். அடுத்தடுத்து படங்கள் பண்ணணும்; அதிகமா படங்கள் பண்ணணும்கிற எந்த விஷயத்தையும் எனக்குள்ள வெச்சுக்கலை. எனக்கு பிடிச்சதைப் பண்ணணும்கிறதுதான் என் நோக்கம். இப்போ விஜி ஆரம்பிச்சிருக்கிற யூடியூப் சேனலில், குழந்தைகளுக்காக அனிமேஷனில் ஒரு சிறுகதை பண்ணிட்டு இருக்கேன்’’ என ஃபெரோஸ் சொன்னதும், ``உங்க பையன் நிலன் பிறந்ததற்குப் பின் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது'’ எனக் கேட்டோம்.

``நிலன் பிறக்குறதுக்கு முன்னாடி விஜியை மட்டும் பார்த்துக்கிட்டேன்; இப்போ இவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிறேன். அப்படித்தான் விஜியும் எங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிறாங்க’’ என ஃபெரோஸ் சிம்பிளாக முடிக்க, அவரைத் தொடர்ந்த விஜயலட்சுமி, ``ஃபெரோஸைப் பொறுத்தவரைக்கும் நிலனுக்காக என்னையும்; எனக்காக நிலனையும் விட்டுக்கொடுத்ததே இல்லை. நிலன் சில சமயம் சில சேட்டைகள் பண்ணும்போது, நானும் நிலன்கிட்ட கோபத்தைக் காட்டியிருக்கேன். ஆனால், அந்தச் சமயத்திலேயும் ஃபெரோஸ் எப்போதும் போல நிலன்கிட்ட பேசி அவனை கூல் பண்ணுவார்.

Feroz - Vijayalakshmi
Feroz - Vijayalakshmi

குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் கணவர் மேல வெச்சிருக்கிற பாசம் குறைஞ்சு, குழந்தை மேலதான் பெண்கள் அதிக அன்பா இருப்பாங்கனு நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கேன். ஆனால், என் வாழ்க்கையில் அப்படி நடக்கவேயில்லை. ஃபெரோஸை பெரிய நிலன்னும் நிலனை குட்டி ஃபெரோஸ்னும் அடிக்கடி சொல்லுவேன். அப்படித்தான் அவங்களைப் பார்த்துக்கிறேன்’’ என்றதும், ``உங்களுக்குள் காதல் மலர்ந்த தருணத்தைப் பற்றிச் சொன்னால்தான், இந்தப் பேட்டி முழுமையடையும்'' என்று சொன்னதும், விஜியைப் பார்த்து சிரித்துக்கொண்டு பேச ஆரம்பித்தார் ஃபெரோஸ்.

``என் ஃபிரெண்டோட ஃபிரெண்ட்தான் விஜி. ஒரு பர்த்டே பார்ட்டியிலதான் முதல்முறை பார்த்துக்கிட்டோம். விஜியைப் பார்த்தவுடனே எனக்கு பிடிச்சிருந்தது. அதுக்கப்புறம் பேசி, பழகி ஒரு நாள் என் காதலை சொல்லிடலாம்னு முடிவு பண்ணி விஜியோட தங்கச்சி நிரஞ்சனிகிட்ட, `இன்னைக்கு நைட் 7 மணிக்கு உங்க அக்காகிட்ட ப்ரபோஸ் பண்ணலாம்னு இருக்கேன்’னு சொன்னேன். `இதை விஜிகிட்ட சொல்லிடாத’னு சொல்லியும், விஜிகிட்ட நிரஞ்சனி சொல்லிட்டாங்க. விஜி என் போனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்திருக்காங்க. 7.30 மணியானதும் நிரஞ்சனி எனக்கு போன் பண்ணி, `விஜி உங்க போனுக்காகத்தான் வெயிட் பண்ணுறா. சீக்கிரம் அவளுக்கு போன் பண்ணி ப்ரபோஸ் பண்ணுங்க’னு சொன்னாங்க’’ என்ற ஃபெரோஸிடம், ``அதுக்கப்புறம் நடந்ததை நான் சொல்றேன்'' எனப் பேச ஆரம்பித்தார் விஜயலட்சுமி.

 Vijayalakshmi - Feroz
Vijayalakshmi - Feroz

``ஃபெரோஸ் என்கிட்ட போன்ல பேசிட்டு இருந்தப்போ, பின்னாடி `என்ன சொல்லப் போகிறாய்’ பாட்டு ஓடிட்டு இருந்துச்சு. குறியீடு வெச்சுக்கிட்டே காதலை சொன்னார். அவர் சொன்னதுக்கு நான் ஓகே சொல்லாமல், நான் சொல்லணும்னு நினைச்ச சில கண்டிஷன்களைச் சொன்னேன். டைம்பாஸுக்கு லவ் பண்றது எனக்குப் பிடிக்காது. நான் யாரை காதலிக்கிறேனோ, அவரைத்தான் கல்யாணமும் பண்ணிப்பேன். உனக்கு என் மேல லவ் ஸ்ட்ராங்கா இருந்தால்தான் நாம லவ் பண்ண முடியும்னு சொன்னேன். அதுக்கு ஃபெரோஸும், `உன்ன கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணுனதுக்கு அப்புறம்தான் உன்கிட்ட காதலையே சொல்ல வந்தேன்’னு சொன்னார். அடுத்த கண்டிஷனா, ஃபெரோஸ் முஸ்லிம்கிறதால என்னை மதம் மாற சொல்லக்கூடாதுனு சொன்னேன். அதுக்கு ஃபெரோஸும், `நீ விஜயலட்சுமியாத்தான் இருக்கணும்’னு சொல்லிட்டார். அப்புறம், அடிக்கடி அவுட்டிங் வர மாட்டேன்; அப்படி இப்படினு என்கிட்ட இருந்த சில கண்டிஷனை சொன்னேன். அதுக்கு ஃபெரோஸும் ஓகே சொன்னதுக்கு அப்புறம்தான், எங்க காதல் பயணம் ஆரம்பிச்சது. இப்போ வரைக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் எங்க வாழ்க்கை சந்தோஷமா போயிட்டு இருக்கு’’ என விஜயலட்சுமி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ``அம்மா'' என்ற நிலனின் குரலைக் கேட்டதும், ``எங்க பையன் எழுந்துட்டான்; இனிமேல் எங்களுக்கு நோ ரெஸ்ட்'' என நிலனுடன் விளையாடச் சென்றார்கள் ஃபெரோஸும் விஜயலட்சுமியும்.

அடுத்த கட்டுரைக்கு